இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1288இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக்
கள்ளற்றே கள்வநின் மார்பு

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1288)

பொழிப்பு (மு வரதராசன்): கள்வ! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும் கள்ளுண்டு களித்தவர்க்கு மேன்மேலும் விருப்பம் தரும் கள்ளைப் போன்றது உன் மார்பு.

மணக்குடவர் உரை: பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும் மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) கள்வ - வஞ்சக; களித்தார்க்கு இளித்தக்க இன்னா செயினும் கள் அற்றே - தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும் அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும்; நின் மார்பு - எங்கட்கு நின் மார்பு.
(அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின. 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)

சி இலக்குவனார் உரை: ஏமாற்றுபவனே, தன்னை உண்டு களித்தார்க்கு இழிவு தரத்தக்க, இன்னாதவற்றைச் செய்தாலும் அவரால் விரும்பப்படுவதாய கள் போலும் நின் மார்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு.

பதவுரை:
இளித்தக்க-இழிவு தரத் தக்க; இன்னா-துன்பம் தருவனவற்றை; செயினும்-செய்தாலும்; களித்தார்க்கு-உண்டு மகிழ்ந்தவர்க்கு; கள்ளற்றே-கள் போன்றதே; கள்வ-வஞ்சகா! நின் மார்பு-உன் மார்பு.


இளித்தக்க இன்னா செயினும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்;
பரிப்பெருமாள்: பிறரால் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்;
பரிதி: நீ என்னை எத்தனை பிணக்குச் செய்யினும்;
காலிங்கர்: நீ எமக்கு இளிவு ஆவதற்குத் தக்க இன்னாதனவற்றைச் செய்யினும் நின்னைப் பிழைத்து ஒழுகேன் யான்;
பரிமேலழகர்: (தலைமகள் புணர்ச்சி விதுப்பு அறிந்த தோழி, தலைமகற்குச் சொல்லியது.) தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும்;
பரிமேலழகர் குறிப்புரை: அவ்வின்னாதன நாணின்மை, நிறையின்மை ஒழுக்கமின்மை, உணர்வின்மை என்றிவை முதலாயின.

'பிறர் இகழத்தக்க இன்னாமையை நீ எமக்குச் செய்யவும்' என்று மற்றவர்கள் தலைவனுக்கு ஏற்றிக் கூற பரிமேலழகர் 'தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றைச் செயினும்' எனக் கள்ளுக்கேற்றி இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'இழிவான துன்பங்கள் செய்யினும்', 'வஞ்சக! இழிவு வரத்தக்க துன்பங்களைச் செய்தாலும்', '(பிறர்) இகழத்தக்க துன்பங்களை உண்டாக்குவதானாலும்', 'இழிவு வரத்தக்க கெடுதிகள் எவ்வளவு செய்தாலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழிவு வரத்தக்க இன்னாதவற்றைச் செய்தாலும் என்பது இப்பகுதியின் பொருள்.

களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மதுவுண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் அதனை யுண்ணல்வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
மணக்குடவர் குறிப்புரை: இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: அதுகண்டு களித்தார்க்கு அதனாலுள்ள குற்றத்தினைக்கண்டு வைத்தும் உண்டல் வேட்கை நிகழுமாறுபோலப் புணர்வு வேட்கையைத் தாராநின்றது, வஞ்சகா! நின் மார்பு.
பரிப்பெருமாள் குறிப்புரை: நிந்தொழில் மார்பும் உடைத்தாயிற்று என்றது. இது புலவிக்குறிப்பு நீங்கின தலைமகள் தலைமகற்குச் சொல்லியது.
பரிதி: உன் மார்பு கண்டளவில் குற்றமறிந்து கூடுதற்கு இடமாயிற்று. ஆதலால் என்மனம் களிப்பதற்குக் கள் ஒக்கும் கள்ளா உன் மார்பு என்றவாறு.
காலிங்கர்: நினது சூளுறவு எடுத்து உரைக்கும் வஞ்சனையை உணர்ந்து பின்னும் நின் மார்பு எமக்கு எத்தன்மைத்தோ எனின், சில காலம் கள்ளுண்டு களித்தவர்க்குப் பின்னும் அக்கள் அவர்க்கு எத்தன்மைத்து, மற்று அத்தன்மைத்து. காலிங்கர் குறிப்புரை: எனவே இது அவன் தவறியது நோக்காதது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: வஞ்சக; அவரால் மேன்மேல் விரும்பப்படுவதாய கள்ளுப் போலும் எங்கட்கு நின் மார்பு.
பரிமேலழகர் குறிப்புரை: 'எங்கட்கு நாணின்மை முதலியவற்றைச் செய்யுமாயினும், எங்களால் மேன்மேல் விரும்பப் படா நின்றது' என்பதாம். 'கள்வ' என்றதும், அது நோக்கி.)

'கள்ளுண்டு களித்தவர்க்குப் பின்னும் அக்கள் உண்ணல்வேட்கை நிகழுமாறுபோல வஞ்சகா! நின் மார்பு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள்வனே! நின்மார்பு குடியர்க்குக் கள் போன்றது', 'கள்ளுண்டு களிப்படைந்தவர்க்கு அவரால் மேன்மேலும் விரும்பப்படும் கள்ளைப்போல, நீ குறைபாடுகள் உடையை ஆனாலும் உன் மார்பு மேன்மேலும் எங்களால் விரும்பப்படுகின்றது', 'திருடரே! குடிப்பழக்கமுள்ளவர்களுக்குக் கள் எப்படியோ அப்படி எனக்கு உம்முடைய மார்பு', 'கள்வனே! கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல நின் மார்பானது எனக்கு மேலும்மேலும் விருப்பத்தைத் தருகின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள்வனே! கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கள்வனே! இளித்தக்க இன்னா செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது பாடலின் பொருள்.
'இளித்தக்க இன்னா' குறிப்பன எவை?

கள் உண்டதன் விளைவாகக் குடியர்கள் இழிவாக நடந்துகொள்வர். பின்னும் கள்ளை மேலும் விரும்பி அடுத்த முறையும் அருந்துவர். அதுபோல நீ எனக்கு இழிவு வருமாறு நடந்து கொண்டாலும் உன்னைக் கண்டவுடன் வெறுப்பு மாறி உன் மார்பைத் தழுவிக் கிடப்பதையே விரும்புகிறேன்.
தொழில் காரணமாகச் சென்றிருந்த தலைவன் இல்லம் திரும்பி வந்துவிட்டான். பிரிவால் துயருற்றிருந்த தலைவி அவன் வருகை அறிந்து கண்ணுக்கு மைதீட்டி, கைநிறைய வளையணிந்து, பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள். அவனைக் கண்டவுடன் மிக்க மகிழ்ச்சி அடைகிறாள். அவனைத் தனிமையில் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள். பிரிவு காலத்தில், கணவன் செய்த கொடுமைகளுக்காக அவனைத் திட்டிக் கொண்டே இருந்தாள். பலநாள் தன்னைப் பிரிந்து எப்படி ஆற்றி இருக்க முடிந்தது என்பதற்காகவும் அவன் மீது சினம் கொண்டாள். அவன் வந்தால் அவனுடன் நன்றாகச் சண்டை போடவேண்டுமென்று உறுதி பூண்டாள். ஆனால் கணவனை நேரில் கண்டதும் எல்லாம் மறந்து போய்விட்டது. அவனது தவறுகள் ஒன்றுமே அவளுக்குத் தெரியவில்லை. அவனுடன் கூடினாலும் அதற்கு முன் ஊடவேண்டும் என்று வஞ்சினம் கொண்டிருந்தவள் அதையும் கைவிட்டாள். காம வெள்ளத்தில் ஊடுதல் அடித்துச் சென்றுவிடும் என்ற உணர்வைப் பெறுகிறாள். புலவிக்குறிப்பு நீங்கியது.
பிரிவிற்குப் பின் வந்த அவனை இப்பொழுது மிக நெருக்கமாகச் சந்திக்கிறாள். அவளது இயற்கை நாணும் எங்கோ மறைந்து விட்டது. நேராகச் சென்று அவன் மார்பை இறுகத் தழுவிச் சொல்கிறாள்: 'கள்ளானது உண்பவர்க்கு களிப்பைத் தரும். அந்தக் களிப்பில் இழிவான செயல்கள் செய்து புகழ் இழப்பர். ஆனாலும் மீண்டும் கள் அருந்தவே செய்வர். அதுபோல், உன் பிரிவால் எனக்கு இகழ்வு நேர்ந்தாலும், உன்னைப் பார்த்தபின் அத்துன்பங்கள் எல்லாம் மறைந்து திரும்பத் திரும்ப உன் மார்பைத் தழுவவே தோன்றுகிறது எனக்கு',

தனக்கு இழிவு வரக்கூடியவனவற்றைச் செய்தாலும், அவளால் மேன்மேலும் விருப்பமுண்டாகுமாறு மாயம் செய்ய வல்லவன் என்பதால் 'கள்வ' எனத் தன் காதலனைக் கொஞ்சலாக விளிக்கிறாள் தலைவி.
தலைவனது நெருக்கத்தில் கருத்தூன்றிய தலைவிக்கு, தலைவன் செய்த தவறும் பழியும் நினைவிற்கு வரவில்லை என்பது கருத்து.

கள்ளும் அவனது மார்பு தழுவதலும், வேட்கையும் இன்பமும் தரும் தன்மையன எனச் சொல்கிறாள் தலைமகள். களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது (அலர் அறிவுறுத்தல், குறள் எண்: 1145 பொருள்: மகிழ மகிழ கள்ளுண்டலை விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது), என்றும் உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (நினைந்தவர்புலம்பல், குறள் எண்: 1201 பொருள்: காதலிக்கப்பட்டவரை நினைத்தாலுமே அது நீங்காத பெரு மகிழ்ச்சியை அளிப்பதலால் கள்ளினும் காதல் இன்பம் இனிமையானது) என்றும் கள் தரும் இன்பத்தை முன்னர் குறள் கூறியது.

'இளித்தக்க இன்னா' குறிப்பன எவை?

'இளித்தக்க இன்னா' என்பதற்குப் பிறர் இகழத்தக்க இன்னாமை, பிறரால் இகழத்தக்க இன்னாமை, நீ என்னை எத்தனை பிணக்குச் செய்யினும், எமக்கு இளிவு ஆவதற்குத் தக்க இன்னாதன, தன்னை உண்டவர்க்கு இளிவரவைத் தரத்தக்க இன்னாதவை, தன்னை உண்டு களித்தார்க்கு இளிவரத்தக்க இன்னாதவற்றை, இழிவான துன்பங்கள், இழிவு வரத்தக்க துன்பங்கள் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

தலைவி தலைவன் மீது அளவு கடந்த காதல் கொண்டவள். அவன் தொழில் காரணமாகத்தான் பிரிந்து சென்றான். அவளிடம் விடைபெற்றுத்தான் போனான், எனினும் அப்பிரிவை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவன் திரும்பி வந்தபின் கூடும்நேரம் இத்தருணத்தில் காதலன் 'இளித்தக்க இன்னா' செய்யினும் அதாவது இழிவு வரத்தக்க துன்பங்கள் செய்தாலும் அவன் மார்பு எப்பொழுது அவளுக்கு இன்பம் தருவதுதான் என்று காமமிகுதியில் கூறுகின்றாள். அவள் துன்பங்கள் என்று கூறியது மென்மைப் பொருளில்தான். பிரிந்தவழி அருள் செய்யாமல் தன்னைத் தனியாக விட்டுத் தவிக்க வைத்தது, காலம் தாழ்த்து திரும்பி வந்தது, எந்தச் செய்தியும் அனுப்பாதது போன்றவற்றிற்காக அவளது தோழியரும் பிறரும் அவளை எள்ளி நகையாடி மனம் புண்படச் செய்ததையும், நாணம் (இழிவாவவற்றை செய்தலை விலக்குவது), நிறை (மனத்தே அடக்கத்தக்கனவற்றை வேட்கை மிகுதியால் அடக்க மாட்டாது வாய்விடுதல்) இவற்றை இழந்ததையும், சோர்வடைதலையும் துன்பங்கள் என்கிறாள். அவள் இவ்வாறு கூறுவது அவளது அன்புமிகுதியையே காட்டுகின்றது. காதலன் இளித்தக்க இன்னா செய்யினும் அவனை வெறுக்காது அவனை மேலும் மேலும் விரும்புகிறாள்.

கள்வனே! இழிவு வரத்தக்க இன்னாதவற்றைச் செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புணர்ச்சிவிதும்பல் உற்ற தலைமகளுக்குத் தன் காதலன் மார்பை மீண்டும் மீண்டும் தழுவுத் தோன்றுகிறதாம்.

பொழிப்பு

வஞ்சக! இழிவு வரத்தக்கவற்றைச் செய்தாலும் கள்ளுண்டு களிப்படைந்தவர்க்கு கள் மேன்மேலும் விரும்பப்படுவது போல, நீ எனக்குத் துன்பங்கள் உண்டாகச் செய்தாலும் உன் மார்பு மேன்மேலும் எனக்குக் களிப்புண்டாக்குகிறது.