இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1290கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல்
என்னினும் தான்விதுப் புற்று

(அதிகாரம்:புணர்ச்சி விதும்பல் குறள் எண்:1290)

பொழிப்பு (மு வரதராசன்): கண்பார்வையின் அளவில் பிணங்கி, என்னைவிடத் தான் விரைந்து தழுவுதலை விரும்பி, (பிணங்கிய நிலையையும் மறந்து) கலங்கிவிட்டாள்.

மணக்குடவர் உரை: கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள், புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
இது தலைமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கண்ணின் துனித்தே - காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி; புல்லுதல் என்னினும் தான் விதுப்பு உற்றுக் கலங்கினாள் - புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.
(கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.)

வ சுப மாணிக்கம் உரை: தழுவுதற்கு என்னைவிடத் தான் துடிதுடித்துக் கண்ணால் ஊடிக் கலங்கினாள்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கண்ணின் துனித்தே கலங்கினாள் புல்லுதல் என்னினும் தான் விதுப்புற்று.

பதவுரை:
கண்ணின்-கண்களால்; துனித்தே-ஊடியே; கலங்கினாள்-கலக்கமுற்றாள்; புல்லுதல்-தழுவுதல்; என்னினும்-என்னைவிட; தான் விதுப்புற்று-தான் விரைந்து அடைய-.


கண்ணின் துனித்தே கலங்கினாள்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள்;
பரிப்பெருமாள்: கண்ணாலே புலந்து அதனையும் முடிய நிறுத்தாது கலக்கமுற்றாள்;
பரிதி: நாயகரைப் புணரவருகையில் கண்ணும் மனமும் கலங்கினாள்.
காலிங்கர்: நெஞ்சமே! கண்ணினால் துனி செய்து ஊடி நெஞ்சினால் கலக்கம் உற்றாள்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி;
பரிமேலழகர் குறிப்புரை: கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.

'கண்ணாலே புலந்தும் அதனையும் ஊடி நிறுத்தாது கலக்கமுற்றாள்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் மாறுபாடாக 'காதலி முன்னொரு ஞான்று புல்லல் விதுப்பினாற் சென்ற என்னொடு தன் கண் மாத்திரத்தான் ஊடி' என உரை வரைந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கண்ணினாலே ஊடலைப் புலப்படுத்தி', 'வருத்தம் தோன்றக் கண் கலங்கினாள்', 'கண்ணினால் மாத்திரமே பிணங்கி', 'பார்வையால் ஊடலுற்று கலங்கினாள்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பார்வையால் ஊடலைக் காட்டிக் கலங்கி நின்றாள் என்பது இப்பகுதியின் பொருள்.

புல்லுதல் என்னினும் தான்விதுப் புற்று:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகளூடற் குறிப்புப் புணர்வுவேட்டல் கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
பரிப்பெருமாள்: புணர்தலை என்னினும் மிகத் தான் விரைதலானே.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஊடற் குறிப்பு நீங்கிப் புணர விரைவது கண்டு தலைமகன் தன்னுள்ளே சொல்லியது.
பரிதி: புல்லும்போது நாயகரினும் அதிக மோகமாய்த் தானும் இன்பம் பெற்று நாயகருக்கு இன்பம் அளித்தாள் என்றவாறு.
காலிங்கர்: நம்மினும் சாலத் தான் முயங்குதல் விருப்பம் உற்றாள். அது என்ன பேறோதான் என்றவாறு.
பரிமேலழகர்: புல்லுதலை என்னினும் தான் விதும்பலால் அது தன்னையும் அப்பொழுதே மறந்து கூடிவிட்டாள்; அதனால் யான் இத்தன்மையேனாகவும் விதுப்பின்றி ஊடி நிற்கின்ற இவள் அவளல்லள்.
பரிமேலழகர் குறிப்புரை: கண் மாத்திரத்தான் ஊடல் - சொல் நிகழ்ச்சியின்றி அது சிவந்த துணையே யாதல். 'அவளாயின் இங்ஙனம் ஊடற்கண் நீடாள்' என்பது பயன்.

'புணர்தலை/முயங்குதலை என்னினும் மிகத் தான் விரைதலானே' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'முயங்குதலில் என்னைவிட மிகுதியும் விரைந்து அதனை விழைந்து பின் அவ்வூடலையும் மறந்து கலங்கினாள்', 'தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் அவள் விரைவுள்ளவளாகி', 'தழுவுதலில் என்னினும் விரைவுடைமையால், பிணங்கி நின்ற நிலையில் நில்லாது அவள் கலங்கினாள். (தழுவக் கருதினாள் என்பது கருத்து.)', 'தழுவுதற்கு என்னைவிட மிக விரைந்து ' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் மிக விரைந்து என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் மிக விரைந்து, கண்ணின் துனித்தே கலங்கி நின்றாள் என்பது பாடலின் பொருள்.
'கண்ணின் துனித்தே' குறிப்பது என்ன?

'பார்வையால் தன் மனவருத்தத்தைக் காட்டித் தழுவிக் கொள்வதில் என்னை விட விரைவு காட்டினாள் என் மனைவி' எனத் தலைவன் சொல்கிறான். உணர்ச்சி நிரம்பிய பரபரப்பான நிகழ்வு ஒன்று இங்கு காட்டப்படுகிறது.
நீண்ட காலப் பிரிவிற் சென்ற தலைமகன் திரும்பி வந்துவிட்டான். பிரிவுக் காலத்தில் மிகுந்த துன்பத்துடன் காணப்பட்ட தலைவி இப்பொழுது களிப்பு மிகுந்த நிலையில் இருக்கிறாள். அவன் வருகை அறிந்து கண்ணுக்கு மைதீட்டி, மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் இல்லத்துள் வலம் வருகிறாள். நெடிய காலம் அவனைப் பார்க்காமலிருந்ததால் அவன் மீதுள்ள அன்பும் காதலும் மேலும் பெருகியது. வீட்டினுள் மற்றவர்களும் இருந்த சூழலில் கணவன் மனைவி இருவரும் இன்னும் தனிமையில் சந்திக்க முடியாதிருக்கின்றனர். அச்சந்திப்புக்காககக் காத்திருக்கின்றனர். தன்னைத் தனிமையில் தவிக்க விட்டுத் சென்று துன்ப வாழ்வு தந்ததால் காதலன் மேல் சினத்திலும் இருந்தாள் தலைவி. அதனால் அவன் வந்தால் அவனுடன் சண்டை போடவேண்டும் என்று கருதியிருந்தாள். அதே நேரத்தில் இன்னும் சற்று நேரத்தில் அவனைக் கூடப் போகிறோம் என்ற உணர்வும் அவளுக்கு இப்பொழுது மேலோங்குகிறது. ஒரு புறம் ஊட வேண்டும் என்ற எண்ணம்; மறுபுறம் கணவன் அருகில் சென்று அவனை எப்போது கட்டி யணைக்கப் போகிறேனோ என்ற துடிதுடிப்பு இவ்விரண்டிற்கும் இடையில் என்ன செய்வது என்று அறியாது அவள் கண்கள் கலங்கத் தொடங்கின. அவளது இவ்விரண்டு நிலைகளையும் கண்ட தலைமகன் 'என்மீதுள்ள வருத்தத்தையும் காட்டி என்னைவிட விரைவு காட்டி வேட்கையுடன் தழுவிக் கொள்ள அவள் முந்துகிறாள்' என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொள்கிறான்.

'கண்ணின் துனித்தே' குறிப்பது என்ன?

'கண்ணின் துனித்தே' என்ற தொடர்க்குக் கண்ணாலே புலந்தும், கண்ணினால் துனி செய்து ஊடி, கண் மாத்திரத்தான் ஊடி, கண்பார்வையின் அளவில் பிணங்கி, கண்ணால் சிவந்துகாட்டி ஊடி, கண்ணால் ஊடி, கண்ணினாலே ஊடலைப் புலப்படுத்தி, கண்ணால் பிணங்கி, கண்ணினால் மாத்திரமே பிணங்கி, பார்வையால் ஊடலுற்று, கண்ணால் மட்டும் ஊடி, கண்ணினால் சிறு துளி விட்டு என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

'கண்ணின் துனித்தே' என்றதற்கு கண்ணால் சிவந்து காட்டி ஊடினாள் என்று பரிமேலழகர் விளக்கம் தந்தார். சொல் நிகழ்ச்சி யின்றி கண்ணால் சிவந்து காட்டி தன் வருத்தத்தைத் தெரிவித்தாள் தலைவி. ‘கண்ணிற் றுளித்தே’ என்று பழைய உரை பாடம் கொண்டு கண்ணினால் துளிவிட்டு அதாவது கண்ணின் நீர் ஓர் ஓரத்தில் துளித்து இருக்கக் கலங்கிநின்றாள் எனப் பொருள் கூறும். இதுவும் சிறந்ததே.

தழுவிக் கொள்ள என்னைக் காட்டிலும் மிக விரைந்து, பார்வையால் ஊடலைக் காட்டிக் கலங்கி நின்றாள் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புணர்ச்சி விதும்பலில் கணவனைத் தழுவிக்கொள்ள பரபரத்து காணப்படுகிறாள் தலைவி.

பொழிப்பு

தன் பார்வையால் ஊடிக் கலங்கினாள்; தழுவுதற்கு என்னைவிட அவள் விரைவு காட்டினாள்.