இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1287



உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1287)

பொழிப்பு (மு வரதராசன்): வெள்ளம் இழுத்துச் செல்வதை அறிந்திருந்தும் ஓடும் நீரில் பாய்கின்றவரைப் போல், பயன்படாமை அறிந்திருந்தும் ஊடல் கொள்வதால் பயன் என்ன?

மணக்குடவர் உரை: தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?
இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல - தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல; பொய்த்தல் அறிந்து புலந்து என்? - புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்?
('பாய்பவர்' என்பது ஆகுபெயர். பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க.)

சி இலக்குவனார் உரை: தம்மை இழுத்துக்கொண்டு போகும் என்பதை அறிந்தும் ஓடுகின்ற நீரில் பாய்வார் செயல்போல, புலவி, முடிவு போகாமை அறிந்து வைத்தும் காதலனோடு ஊடல்கொண்டு அடைவது என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
உய்த்தல் அறிந்து புனல் பாய்பவரே போல் பொய்த்தல் அறிந்து புலந்து என்.

பதவுரை: உய்த்தல்-கொண்டுபோதல், இழுத்துக் கொண்டு செல்லுதல்; அறிந்து-தெரிந்து; புனல்-நீர்; பாய்பவரே-குதிப்பவரே; போல்-போன்று; பொய்த்தல்-தவறிப் போதல்; அறிந்து-தெரிந்து; என்-என்னத்துக்கு; புலந்து-ஊடல் கொண்டு.


உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், புனலுள் பாய்பவரைப் போல;
பரிப்பெருமாள்: ஈர்ப்பதனையறிந்து வைத்தும், புனல் பாய்பவரைப் போல;
பரிதி: உய்த்தல் அறிந்தும் புனல் பாய்பவரைப் போல;
காலிங்கர்: ஈர்த்துக் கொண்டு போதலை அறிந்து வைத்துப் பின்னும் புனலுள் பாய்வம் என்னும் அறிவுக்கேடர் போல்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து ஒழுகுகின்ற புனலுட் பாய்வார் செயல் போல;
பரிமேலழகர் குறிப்புரை: 'பாய்பவர்' என்பது ஆகுபெயர்.

'ஈர்த்துக் கொண்டு போதலை அறிந்து வைத்தும் புனலுள் பாய்பவரைப் போல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம்மை இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதனை அறிந்தும் ஆற்று நீரில் பாய்ந்து திளைப்பார் போல', 'கரையேற்றிவிட ஆள் இருப்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு (முழுகி இறந்து போகிறேன் என்று மருட்டி கிணற்றிலோ ஆற்றிலோ) தண்ணீரில் குதிப்பவர்களைப் போல', 'தம்மை ஆற்றுநீர் இழுத்துக்கொண்டு போமென்பதையறிந்து நீருட் குதிப்பார் போல', 'தம்மை இழுத்துக்கொண்டு போகும் என்பதை அறிந்தும் ஓடுகின்ற நீரில் பாய்வார் செயல்போல', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதனை அறிந்தும் நீரில் பாய்வார் போல் என்பது இப்பகுதியின் பொருள்.

பொய்த்தல் அறிந்தென் புலந்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சு பொய்ப்படுதல் அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
பரிப்பெருமாள்: நெஞ்சு பொய்ப்படுவதனை அறிந்து வைத்தும் புலக்கின்றது ஏதுக்கு?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது புலவிக்குறிப்பு நீங்குவாள் தன்னுள்ளே சொல்லியது.
பரிதி: நாயகர் பொய்யாசை என்றறிந்தும் கூடினேன் என்றவாறு.
காலிங்கர்: புலவியின் கண் நில்லாமை அறிந்துவைத்து ஊடுவது என் செய்ய என்றவாறு.
பரிமேலழகர்: புலவி முடிவு போகாமை அறிந்து வைத்துக் கொண்கனோடு புலந்து பெறுவது என்?
பரிமேலழகர் குறிப்புரை: பொய்த்தல் - புரைபடுதல், புலந்தாலும் பயனில்லை என்பதாம். 'பொய்த்தல் அறிந்தேன்' என்பது பாடமாயின், 'உய்த்தலறிய ஓடும் நீருட் பாய்வார் முடிவறியப் பண்டொருகாற் புலந்து முடியாமை அறிந்தேன், இனி அது செயற்பாற்றன்று என' உரைக்க. [முடிவறிய- பிணக்கினது முடிவை அறியுமாறு; பண்டு ஒருகால் - முன்னர் ஒருமுறை; செயற்பாற்று அன்று - செய்யத்தக்கது அன்று]

'புலவியின் கண் நில்லாமை அறிந்துவைத்து ஊடுவது என் செய்ய' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரிடம் புலத்தல் நிறைவேறாமல் பொய்த்தல் அறிந்தும் புலவியால் பயன் என்ன?', '(என் மனம் என்னைப் பிணங்கிவிடாது ஆனால் என் பிணக்கம் பொய்யாகிவிடும் என்பதைத் தெரிந்து கொண்டே நான் பிணங்குவதால் என்ன பயன்?', 'பிணக்கம் பொய்யாவதை யறிந்து பிணங்கிணாற் பயன் என்ன?', 'புலவி, முடிவு போகாமை அறிந்து வைத்தும் காதலனோடு ஊடல்கொண்டு அடைவது என்ன?' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பொய்த்துப் போய்விடும் என்பதை அறிந்தே ஊடல் கொள்வது என்னத்துக்கு? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
உய்த்தல் அறிந்து நீரில் குதிப்பவர் போல் பொய்த்துப் போய்விடும் என்பதை அறிந்தே ஊடல் கொள்வது என்னத்துக்கு? என்பது பாடலின் பொருள்.
'உய்த்தல் அறிந்து' குறிப்பது என்ன?

காமக் கடும்புனல் நீந்திக் கரைகாண இயலாத தலைவியால் ஊடல்விளையாட்டை எவ்வளவு நேரம் கொண்டு செல்ல முடியும்?

ஈர்த்துக் கொண்டு போய்விடும் என்பதை அறிந்தே விரைந்து ஓடுகின்ற நீர் இருக்கும் இடத்தில் குதிப்பவர் போல, ஒரு கணம் கூட நிற்காது எனத் தெரிந்தும் காதலரிடம் ஊடல் கொள்ள நினைப்பது எதற்காக? எனத் தலைவி தனக்குத்தானே கேட்டுக்கொள்கிறாள்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக அயல் சென்றிருந்த கணவர் நீண்ட நாட்களுக்குப் பின் திரும்பி வந்திருக்கிறார். பிரிவுக் காலத்தில் துயருற்றிருந்த தலைவி இப்பொழுது பெரு மகிழ்ச்சியுடன் காணப்படுகிறாள். பல காலம் அவரைப் பார்க்காமலிருந்ததால் அவர் மீதுள்ள அன்பும் காதலும் இன்னும் பெருகிப் பொங்குகிறது. அவர் வருகை அறிந்து தன்னை நன்கு அழகுபடுத்திக்கொண்டாள்.
காதல் கணவரை நினைப்பதனாலும் களிப்பு உண்டானது; அவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறது என எண்ணி இன்புறுகிறாள் தலைமகள்; காம உணர்வு பனையளவினும் மிகுதியாகத் தோன்றினால் தினையளவும் ஊடாமை வேண்டும் என்ற எண்ணமும் அவளிடம் மேலிடுகிறது; அவர் வந்ததிலிருந்து அவர் விருப்பப்படியே எல்லாம் செய்து என்னை இகழ்கின்றாரெனினும் அவரைக் பார்க்காது என் கண்கள் அமைவதில்லை; அவருடன் ஊடல் கொள்ளவே விரும்புகிறேன். ஆனால் அதை மறந்து என் மனம் அவரைக் கூட நினைக்கிறதே; கணவர் தொலைவில் இருக்கும்போது அவர் பிரிந்து சென்ற குற்றமே பெரிதாகத் தெரிந்தது, இப்பொழுது அவரை நேரில் பார்த்தபின் அவரது தவறுகளைக் காண்கின்கின்றேனில்லை;
இத்தகைய எண்ண ஓட்டங்களுடன் அவள் அவரைக் கூடும் வேளைக்காகக் காத்திருக்கிறாள்.

இக்காட்சி:
பிரிந்து சென்று துன்பம் தந்ததால் தலைவர் மேல் சினத்தில் இருந்தாள் மனைவி. 'அவர் வரட்டும்! என்னைத் தனிமையில் தவிக்க விட்டுச் சென்ற கொடுமைபற்றி நன்றாகக் கேட்கத்தான் போகிறேன்' எனக் கணவருடன் சண்டை போடவேண்டும் என்ற கருத்தோடு இருக்கிறாள் அவள். அதே நேரம் அவளது உள்ளுணர்வு இன்னொன்றையும் நினைவூட்டுகின்றது: 'வெள்ளத்தின் ஆற்றலை அறிந்தும் அதில் பாய நினைப்பவர் போல் இருக்கிறது நீ ஊட நினைப்பது. ஈர்க்கும் வெள்ள நீரைப் பாய்பவரால் தடுத்து நிறுத்த இயலாது. அதுபோல நீ ஊடி நின்றாலும் உன்னிடம் இப்போதுள்ள கடலன்ன காமம் உன் ஊடல் செயலை ஒருகணத்தில் சுழற்றி அடித்துக் கொண்டுபோய்விடும் என்பதை உணராதிருக்கிறாயே'. தனது ஊடல் பொய்த்துவிடும் என்பது தெரிந்தும் பின் ஊடி என்னத்துக்கு? என்று அவளது தெளிவுற்ற மனம் சொல்கிறது. பொய்த்தல் என்பது தொடங்கிய ஊடல், நீடிக்காமல் கூடலாகிப் பொய்ப்படுதலைச் சொல்வது. பிரிவாற்றாது, காதல்தலைவர்பால் தாம் கொண்ட சினமானது, அவரை அண்மையில் கண்டதும் தோற்றுப்போகும் என்றும் அறிந்தும் ஏன் பொய்யாக ஊடல் கொள்ளவேண்டும் என்று தன்னையே வினவிக்கொள்கிறாள் தலைவி.

கணவரை நேரில் பார்த்ததிலிருந்து ஊடவேண்டும் என்ற எண்ணமெல்லாம் மறைந்து கொண்டே வருகிறது தலைவிக்கு. அவர் மீது இருந்த வருத்தம் போய்விட்டது. அவரை நெருக்கமாகப் பார்த்ததும் அவள் மனத்தில் புணர்ச்சி விருப்பம் மேலிட அதை நாடிச்செல்வதாயிற்று. பொய்யாகப் புலந்தாலும் அந்த ஊடலும் பொய்த்து கணவருடன் கூடிவிடுவாள். இதனால் இப்பொழுது புலவிக் குறிப்பு நீங்கினாளாக உள்ளாள். அவருடன் சென்று எப்பொழுது சேருவோம் என்பதைத் தவிர வேறு எந்த எண்ணமும் அவள் உள்ளத்தில் இப்பொழுது இல்லை.

'உய்த்தல் அறிந்து' குறிப்பது என்ன?

'உய்த்தல் அறிந்து' என்ற தொடர்க்குத் தம்மை ஈர்ப்ப அதனையறிந்து வைத்தும், ஈர்ப்பதனையறிந்து வைத்தும், உய்த்தல் அறிந்தும், ஈர்த்துக் கொண்டு போதலை அறிந்து வைத்து, தம்மை ஈர்த்துக் கொண்டு போதல் அறிந்துவைத்து, தம்மை வெள்ளம் இழுத்துக்கொண்டு போய்விடும் என்பதை அறிந்துவைத்தும், கரைசேர்த்தலை அறிந்து, தம்மை இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதனை அறிந்தும், கரையேற்றிவிட ஆள் இருப்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு, தம்மை இழுத்துக் கொண்டு போய்விடும் என்பதை அறிந்து கொண்டு, தம்மை ஆற்றுநீர் இழுத்துக்கொண்டு போமென்பதையறிந்து, தம்மை இழுத்துக்கொண்டு போகும் என்பதை அறிந்தும், தம்மை யிழுத்துக்கொண்டு போகுமென்பதை அறிந்திருந்தும், ஆற்றில் இறங்குபவர் அதன் இழுப்புத் தன்மையை உணர்ந்து இறங்குவது போல என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

உய்த்தல் அறிந்து என்ற தொடர் ஈர்த்துக் கொண்டு போதலை அறிந்து எனப்பொருள்படும். இழுத்துக்கொண்டு போதல் என்றதால் குறள் சொல்லும் பாய்பவர் விரைந்து செல்லும் நீரில் அல்லது வெள்ளநீரில் குதிப்பவர் ஆவார். தம்முள் பாய்வரை இப்புனல் எங்கு கொண்டு சேர்க்கும்? வெள்ளநீராக இருந்தால் இழுத்துச் சென்றுவிடும்; நீர் குறைவாக இடத்தில் பாய்ந்தால் கரைசேர்க்கும்; காப்பாற்றப்பட்டு கரை சேர்க்கப்படலாம்; விரைந்து செல்லும் நீரிலும் நீந்தி விளையாடி இன்புறலாம்; வெள்ளம் இழுத்துக்கிட்டுப் போயிடும் என்பது தெரிந்தும் அதில் பாய்ந்து நீந்தி விளையாடும் தீரச்செயல் சிலர்க்கு இன்பம் பயக்கும்.
நீர் குறைவாக இருக்கும் இடம் தெரிந்தே அவ்விடத்தே பாய்ந்தால் உடல் காயம் உண்டாகலாம்; அதில் மகிழ்ச்சி இராது. இக்கருத்தை மனதில் கொண்டுதான் வ சுப மாணிக்கம் 'கரைசேர்த்தலை அறிந்து நீரில் பாய்வதுபோல் பொய் என்று தெரிந்தும் ஊடிப் பயன் என்ன?' என உரை வரைந்தார் போலும். நாமக்கல் இராமலிங்கம் 'கரையேற்றிவிட ஆள் இருப்பதை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு' எனக் கூறினார். இவர் உய்த்தல் என்பதற்கு தப்பித்தல் எனப் பொருள் கொள்கிறார். அ கு ஆதித்தனார் 'நீர் இழுத்துச் செல்வதை அறிந்தும் புனல் பாய்ந்து ஆடி இன்புறுவார் போலத் தலைவன் பொய் கூறியதை அறிந்தும் புலந்தொதுக்காது கூடி இன்புறுவேன்' எனத் தலைவி சொல்வதாக உரை கூறினார்.

குறளின் பிற்பகுதி 'புலவி முடிவு போகாமை அறிந்து கொண்கனோடு புலந்து பெறுவது என்?' எனத் தலைவி கேட்பதாக உள்ளது.
குறள் நடை 'உய்த்தல் அறிந்து' என்பதற்குப் பொங்கியோடும் ஆற்று நீரில் குதிப்பவரை வெள்ள நீர் ஈர்த்துக் கொண்டு போதலை அறிந்து என்ற பொருள் தருகிறது. எனவே காமம் மிகுந்த நிலையில் தலைவனுடன் ஊடினால் அது தொடக்கத்திலேயே அடிபட்டுப் போகும் என்பதை அறிந்துவைத்தும் என்பது குறட்கருத்தாகிறது. வெள்ளத்துள் பாய்ந்து கெடுபவரைப் போல், அறிந்து கொண்டே பொய்யாகப் பிணங்கி அடைவது என்ன? எனக் கேட்டுத் தலைவி கூடலுக்கு முன் ஊடல் என்ற தன் கொள்கையிலிருந்து பின்வாங்குகிறாள். பரிமேலழகர் 'முன்பு ஒருமுறை புலந்து முடியாமை அறிந்தேன்; இனி அது செய்யத்தக்கது அன்று' என இதை விளக்கினார்.

இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதனை அறிந்தும் வெள்ளநீரில் பாய்வார் போல், ஒரு கணம் கூட நிற்காது எனத் தெரிந்தும் காதலரிடம் ஊடல் கொள்ள நினைப்பது எதற்காக? என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புணர்ச்சிவிதும்பல் கொண்ட காதலி இந்நேரத்தில் ஊடல் உதவாது என்பதை உணர்ந்தாள்.

பொழிப்பு

இழுத்துக்கொண்டு சென்றுவிடும் என்பதனை அறிந்தும் வெள்ள நீரில் குதிப்பவர் போலக் காதலரிடம் புலத்தல் நிற்காது என்று தெரிந்து ஊடுவது என்னத்துக்கு?