இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1289மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்

(அதிகாரம்:புணர்ச்சி விதும்பல் குறள் எண்:1289)

பொழிப்பு (மு வரதராசன்): காமம் மலரைவிட மென்மை உடையதாகும்; அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவர் சிலரே.மணக்குடவர் உரை: எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.

பரிமேலழகர் உரை: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) காமம் மலரினும் மெல்லிது - காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர் - அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
(தொட்ட துணையானே மனச்செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது. குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லிது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன்.)

வ சுப மாணிக்கம் உரை: காம உணர்வு மலரைவிட மென்மையானது; அதன் பக்குவம் அறிந்து துய்ப்பார் மிகச்சிலரே.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் மலரினும் மெல்லிது; அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்.

பதவுரை:
பதவுரை: மலரினும்-மலரைக் காட்டிலும்; மெல்லிது-மென்மையானது; காமம்-காதல் இன்பம்; சிலர்-சிலரே; அதன்-அதனை; செவ்வி-துய்க்கும் பக்குவ நிலை; தலைப்படுவார்-பெறுவார்.


மலரினும் மெல்லிது காமம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்;
பரிப்பெருமாள்: எல்லாவற்றினும் மெல்லிதாகிய பூவினும் மெல்லிதாயிருக்கும் காமம்;
காலிங்கர்: கேளாய் தோழி! உலகத்து வண்டாவது மலர் சிதையாமல் மதுவை அருந்துவதுபோல மற்று அதன் செவ்வி அறிந்து கைக்கொள்ளும் மக்களும் உலகத்துப் பலர் உளர் எனினும்;
பரிமேலழகர்: (உணர்ப்புவயின் வாரா ஊடற்கண் தலைமகன் சொல்லியது.) காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்;
பரிமேலழகர் குறிப்புரை: தொட்ட துணையானே மனச்செவ்வி அழிவதாய மலர் எல்லாவற்றினும் மெல்லியது என்பது விளக்கலின், உம்மை சிறப்பின்கண் வந்தது.

'காம இன்பம் மலரினும் மெல்லியதாயிருக்கும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காம இன்பம் மலரைவிட மென்மையானது', 'காம இன்பம் என்பது மலரைவிட நுட்பமானது', 'காமஇன்பம் பூவைப்பார்க்கிலும் மென்மையுடையது', 'காதல் மலரைவிட மென்மைத்தன்மை வாய்த்தது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காமம் மலரைவிட மென்மையானது என்பது இப்பகுதியின் பொருள்.

சிலர் அதன் செவ்வி தலைப்படுவார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது.
பரிப்பெருமாள்: அதனது செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு "பின்பு ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்பும்" என்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் கூறியது.
காலிங்கர்: மற்று அக்காமமாகின்ற அதன் செவ்வி சிதையாமல் சென்று தலைப்படுவர் அதனினும் சிலர் காண்.
காலிங்கர் குறிப்புரை: நீ என்னை முனிய வேண்டா என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் மெல்லியதாதலை யறிந்து அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்.
பரிமேலழகர் குறிப்புரை: குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுதலின், 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்றும், அவற்றுள் யாதானும் ஒன்றனாற் சிறிது வேறுபடினும் வாடுதலின், 'மலரினும் மெல்லிது' என்றும் கூறினான். 'குறிப்பு ஒவ்வாமையின் யான் அது பெறுகின்றிலேன்' என்பதாம். தலைமகள் ஊடல் தீர்வது பயன். [குறிப்பு - புணரக் கருதுதல்; வேட்கை - புணர்ச்சி விருப்பம்; வாடுதலின் - சுருங்கிப் போதலால்]

'அதன் செவ்வியைப் பெறுவார் உலகத்துச் சிலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அதன் மென்மையறிந்து பக்குவமாக இன்பம் துய்ப்பவர் சிலரே', 'ஆனால் அந்த நுட்பத்தைத் தக்க காலமறிந்த அனுபவிக்கிறவர்கள் உலகத்தில் சிலரே', 'சிலர்தான் அதன் நயத்தில் கைவந்தவராவர்', '(அங்ஙனம் மென்மையாய் இருப்பதை அறிந்து) அதன் தக்க பருவத்தை அடைவார் சிலரே' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பக்குவம் அறிந்து அதனைத் துய்ப்பவர் சிலரே என்பது இப்பகுதியின் பொருள்.


நிறையுரை:
காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைத் துய்ப்பவர் சிலரே என்பது பாடலின் பொருள்.
'செவ்வி' என்பதன் பொருள் என்ன?

பொருந்திய காலம் அறிந்து காமத்தைத் துய்க்க.

மலரைக் காட்டிலும் காமம் மிக மென்மையானது; அதன் தன்மை அறிந்து, அதனை நுகரக் கூடியவர்கள் சிலரே யாவர்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவில் சென்றிருந்த கணவன் இல்லம் வந்துவிட்டான். கண்ணுக்கு மையெழுதி, நல்லணி பூண்டு, கைநிறைய வளைஏந்தி, சிரித்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவி அவனை நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பார்த்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். இருவரும் இன்னும் நெருங்கிக் கொள்ளமுடியாதிருக்கிறது. கணவரைப் பார்த்ததிலிருந்து காமம் நெஞ்சில் நிறைந்திருந்தாலும் அவனுடன் ஊடாதிருக்க வேண்டும் என எண்ணிக்கொள்கிறாள். அவள் கண்கள் அவன் செல்லும் பக்கமெல்லாம் சென்று சுழன்று கொண்டிருக்கின்றன. இவ்வளவு காலம் தன்னைப் பிரிவுத் துன்பத்தில் ஆழ்த்தியதற்காக அவனுடன் சிறுசண்டையிட வேண்டும் ஒருபுறம் நினைக்க இன்னொரு பக்கம் மனமோ அவனைக் கூடவேண்டும் என்றே விரும்புகிறது. கண்களுக்கு மை தீட்டும்போது அருகில் இருப்பதால் எழுதுகோல் கண்களுக்கு தெரிவதில்லை; அது போன்று தலைவன் தொலைவில் இருக்கும்போது அவன் பிரிந்து சென்ற குற்றமே பெரிதாகத் தெரிந்தது; ஆனால், அவனை நேரில் பார்த்தபின்னால் அவனது குறைபாடு எதுவும் தோன்றவேயில்லையாம். தம்மை இழுத்துக்கொண்டு செல்லும் என்பதை அறிந்தும் பாய்ந்து செல்லும் நீரில் குதிப்பார்போல இப்பொழுது தானிருக்கும் நிலையில் தனது ஊடல் உதவாது என்பதை உணர்கிறாள். என்னதான் இழிவான துன்பத்தைச் செய்தாலும் கள்ளுண்டவர்க்கு கள் மேலும் களிப்பு தருவது போல, அவன் பிரிந்துசென்று துன்பம் தந்திருந்தாலும், இப்பொழுது நேரில் வந்திருக்கும் அவனது மார்பு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றதாம் அவளுக்கு.

இக்காட்சி:
காமஇன்பத்தை மென்மையாகவும், விழிப்புடனும், பொறுப்புடனும் கையாளுக என்ற நல்லுரை கூறும் செய்யுள், அதன் செம்மையைத் தெரிந்து மேற்கொள்பவர்கள் சிலரே எனவும் கூறுகிறது இது.
காமம் என்பது காதலர் இருவர் உள்ளமும் பிணக்கு சிறுதும் இன்றி ஒன்றிய நிலையில் அன்பு கொண்டு தழுவி வாழும் இன்பநிலையைக் குறித்தது. காமஇன்ப உணர்வு மிக மென்மையானது. அது உயிரைத் தளிர்க்கச் செய்யும் என்று உறுதோ றுயிர் தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள் (புணர்ச்சி மகிழ்தல் 1106 பொருள்: பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்) என்று பிறிதோரிடத்தில் வள்ளுவர் கூறியுள்ளார்
கலவியல் உணர்வுகளை மலரைப்போல மென்மையாகக் கையாளவேண்டும் என்கிறது இப்பாடல். இன்று உளவியல் அறிஞர்களும் இதையே வலியுறுத்துகின்றனர். சிக்மண்ட் ஃபிராய்டின் உளப்பகுப்பு ஆய்வுகள் மனித நடத்தையின் வினோதங்களுக்குக் காரணம் கலவியல் மன எழுச்சிகளே என்று கூறுகின்றன. ஆணும் பெண்ணும் உளப்பூர்வமான ஒத்துழைப்போடு காமஇன்பத்தில் ஈடுபடும்போது சிக்கல் தோன்றுவதில்லை. மற்ற உயிரினங்களின் காமம் காதல் சார்ந்து இருக்க வேண்டியதில்லை. ஆனால் மாந்தர்தம் கொள்ளும் காமம் காதலுணர்வின் உச்சத்தில் முடிவது; உயர்வானது. ஐம்புலன்களாலும் உணர்ந்து உயிரே போற்றக்கூடிய காதலுணர்வின் உச்சகட்ட வெளிப்பாடாக அமைவது. கலவியில் ஈடுபடுவோர் ஒருவரை ஒருவர் உள்ளத்தால் காயப் படுத்தாது ஒருவர் மற்றொருவரில் இணைந்து தன்னை மற்றவருக்கு முழுவதுமாக அளித்து அந்த அர்ப்பணிப்பில் தன்னை இழப்பதே இந்த காதலுணர்வால் விளையும் உயர்ந்த காமத்தின் சிறப்பு. அந்த உணர்வு மலரினும் மெல்லிது.

'அஃறிணை உயிர்களின் காதல் கல்லாக்காமம், இயற்கைவீறு; மொழிபேசும் மக்களினத்தின் காதலோ நினைவில் இனித்து, அறிவில் விளங்கிக் -கல்வியில் வளர்வது’ என்பார் வ சுப மாணிக்கம். காதலுணர்வின்றி அமையும் காமமானது வெறும் உடல் சார்ந்தது. இவ்வாறு கலவி கொள்வார் எதிர் பாலினரின் ஒப்புதலையோ அல்லது அவரது காதலுணர்வையோ பொருட்படுத்துவதில்லை. தனது நலனையும் இன்பத்தையும் மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படுவர். இந்நிலை மிகவும் கொடுமையானது. நமது வாழ்வின் மேன்மையை சிதைக்க வல்லது. காதலுணர்வால் விளையும் காமம் மட்டுமே அதாவது எதிர் பாலினரை வருத்தாது அவரது இணக்கத்துடன் விளையும் காமம் மட்டுமே போற்றத் தகுந்தது. இத்துணை அழகுடன் விளையும் இன்பத்தில் மட்டுமே ஒருவன் தன்னை இழந்து, அந்த இழப்பில் இன்பமும் காண்கிறான். செவ்வி தலைப்படுதல் முறையும் இதுவே. ஐதே காமம் (குறுந்தொகை 217 பொருள்: காமஉணர்வு நுண்ணியது) என்கிறது சங்கப்பாடல்.

வண்டு மலரின் இதழ்மேல் இருந்தோ சுற்றிப் பறந்தோ தேன் சுரக்கும் காலம் அறிந்து அந்த இதழ் கூட மடியாமல் அதை நுகரும். அதுபோல காம இன்பத்தை அதன் காலம் இடம் பக்குவம் முதலியன அறிந்து செவ்வி தப்பாமல் துய்க்கவேண்டும். அப்படி செவ்வியறிந்து அனுபவிக்கும் திறனும் வாய்ப்பும் சிலருக்கே அமைந்துள்ளன. காதலுடன் கூடிய காமம் மலரைவிட மென்மையானது, நுட்பமானது, நளினமானது. அதன் தன்மையை அறிந்தவரே காமத்தின் முழுச் சுவையினையும் முழுப்பயனையும் நுகர்வர் என்பது இக்குறளின் உட்கருத்து.
மிகவும் நுண்ணியதாகிய காம இன்பத்தை, பெரும்பான்மையான மனிதர்கள் முரட்டுத்தனமான முறைகளில் அனுபவிக்க முயன்று அதன் செவ்வியை இழக்கிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டித் தவறான காம நுகர்ச்சிகளைத் தவிர்க்கச் சொல்லுவது இப்பாடல். காமத்தின் செவ்வி தலைப்படாத மக்கள் பலராக உள்ளனர் எனவும் சொல்கிறார் வள்ளுவர்.

தலைமகள் தன் நெஞ்சிற்குக் கூறியதாக மணக்குடவரும் தலைவியிடம் தலைவன் கூறியதாகப் பரிப்பெருமாளும் தலைவன் தோழிக்குக் கூறியதாகக் காலிங்கரும் தலைமகன் தன் நெஞ்சிற்குக் கூறியதாகப் பரிமேலழகரும் தலைவன் தோழிக்குக் கூறியதாகப் பழைய உரைகாரரும் உரை பகன்றுள்ளனர். இவை அனைத்துமே பொருந்தக்கூடியவைதான் என்றாலும் இக்குறளை வள்ளுவர் கூற்றாகக் கொள்வதே சிறப்புடைத்து. நெடிது பிரிந்திருந்த கணவன் திரும்பி வந்துள்ள நேரம் என்பதால், அதிகாரம் நோக்கி, 'ஊடிக்கொள்வதற்கு இது நேரமல்ல; கூடும் நேரமிது' என்ற புணர்ச்சிவிதும்பலின் கூற்றாகக் கொள்வது பொருத்தம் என்றாலும் இதை ஆசிரியர் மொழிந்ததாகக் கொள்வதில் குற்றமில்லை.

'செவ்வி' என்பதன் பொருள் என்ன?

'செவ்வி' என்ற சொல்லுக்கு நல்ல பயன், பக்குவம், பக்குவகாலம், மென்மை, தக்க காலம், சரியான பக்குவம், ஏற்ற காலம், நயம், நுட்பம், நலன், காலத்தையும் இடத்தையும் குறிப்பது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

மணக்குடவர் 'இது தலைமகன் புணர்ச்சிக் குறிப்புக்கண்டு பின் ஊடிக்கொள்ளலாம்: இப்பொழுது ஊடுவையாயின் இக்காமஞ் செவ்வி தப்புமென்று புணர்ச்சி வேட்கையால் தலைமகள் நெஞ்சொடு கூறியது' எனச் சிறப்புரையில் கூறினார்.
காலிங்கர் 'உலகத்து வண்டாவது மலர் சிதையாமல் மதுவை அருந்துவதுபோல காமத்தின் செவ்வி அறிந்து அதனைக் கைக்கொள்ளவேண்டும்' என்ற பொருளில் சிறப்பான ஒரு விளக்கம் அளித்தார்.
பரிமேலழகர் 'குறிப்பும், வேட்கையும், நுகர்ச்சியும், இன்பமும் ஒரு காலத்தின்கண்ணே ஒத்து நுகர்தற்குரியார் இருவர், அதற்கு ஏற்ற இடனும் காலமும் உபகரணங்களும் பெற்றுக் கூடி நுகர வேண்டுமாதலால் 'அதன் செவ்வி தலைப்படுவார் சிலர்' என்று இதனை விளக்கினார்.
'‘செவ்வி’ என்றால் பக்குவம். காலம், இடம், நிலை, தன்மை, படிநிலை, ஆகியவற்றிற்கேற்ப ஒழுகும் பக்குவம். காமத்தின் கூறுகளான காதல், ஊடல், உணர்தல், புணர்தல் ஆகிய அனைத்திலுமே மென்மையும் பக்குவமும் இன்றியமையாதவை. இதனை உணர்ந்து ஒழுகுதலே செவ்வி தலைப்படுதல்' என்றார் கு ச ஆனந்தன்.
செவ்வி என்பதற்கு அழகு, காலம், பருவம், தகுதி, ஏற்ற சமயம், காட்சி, வாசனை, தன்மை என்பதோடு புதுமை என்றும் பொருள் உண்டு. காமம் பயிலும் காதலர் இருவருக்கும் ஒவ்வொரு நாளும் புதியதாக, புதுப்புதுச்சுவை அனுபவிப்பதாக இருக்கும். இது ஆணிடமோ, பெண்ணிடமோ இருக்கும் உள்ளார்ந்த குணமாகவோ அல்லது, அன்பு மிகுதியாலே ஒருவர் மற்றவரிடத்தில் காணும் புதுமையாகக் கூட இருக்கலாம். ஒவ்வொருமுறையும் காதலின்பத்தின் புதிய பரிமாணத்தை, சுவையைக் கண்டதும் இருவரும் அவர்களது அறியாமையைத் தெரிந்துகொள்வர். இதை அறிதொறும் அறியாமை கண்டற்றால்....... (புணர்ச்சி மகிழ்தல், குறள் எண்: 1110 பொருள்: ஒரு பொருளை அறிய அறிய கற்பவன் அறியாமை புலப்படுவது போல... ) என்பார் வள்ளுவர் மற்றோர் இடத்தில்.
செவ்வி உண்டாகாவிட்டால், ஆண்-பெண் இருவரிடையே நிகழ்வது விலங்குப் புணர்ச்சியாகவோ, விலைப் புணர்ச்சியாகவோ, வன்புணர்ச்சியாகவோ, பொருந்தாப் புணர்ச்சியாகவோ முடிந்துவிடும்; பசியால் வாடிக்காய்ந்த மாடு எப்படிக் கம்பிலே விழுந்து, விழுந்து உண்ணுமோ அதுபோலக் காம இன்பம் விரைவாகத் துய்க்க ஆசைப் பட்டால் அது மகிழ்ச்சி அளிக்காது. இருதரப்பிலும் அனுபவித்து, இருவரும் மற்றவரின் முழுத் துய்ப்புக்கு முயன்று, ஈடுகொடுத்து, மற்றவருக்கு ஆட்பட்டு, ஆட்படுத்திய 'செவ்வி' கொண்ட இன்ப நுகர்வாக இருக்காது. இடமும், காலமும், நுட்பமும் அறிந்து அந்த இன்பத்தைத் துய்க்கவேண்டும். இவ்விதம் காமந்துய்க்கும் போது செவ்வி தலைப்படுதல் இன்றியமையாதது.

'செவ்வி' என்ற சொல்லுக்கு ஏற்றகாலம் என்பது பொருத்தமான பொருள்.

காமம் மலரைவிட மென்மையானது; பக்குவம் அறிந்து அதனைத் துய்ப்பவர் சிலரே என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

புணர்ச்சி விதும்பலில் காமநலன் கெடாமல் காத்துக்கொள்ள வேண்டும்.

பொழிப்பு

காமம் மலரைவிட மென்மையானது. சிலரே அதன் சிறப்பான பயன்களைப் பெறுவர்.