இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1286காணுங்கால் காணேன் தவறாய காணாக்கால்
காணேன் தவறுஅல் லவை

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1286)

பொழிப்பு (மு வரதராசன்): காதலரை யான் காணும்போது (அவருடைய செயல்களில்) தவறானவற்றைக் காண்பதில்லை.அவரைக் காணாத போது தவறு அல்லாத நன்மைகளைக் காண்பதில்லை.

மணக்குடவர் உரை: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காணுங்கால் தவறாய காணேன் - கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்; காணாக்கால் தவறல்லவை காணேன் - காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
(செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: என் காதலரை யான் காணும்பொழுது அவர் செய்த தவறான செயல்களைக் காண மாட்டேன். அவரைக் காணாத பொழுது தவறான செயல்களையே யன்றி மற்றவற்றை காண மாட்டேன்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காணுங்கால் தவறாய காணேன் காணாக்கால் தவறு அல்லவை காணேன்.

பதவுரை:
காணுங்கால்-பார்க்கும்போது; காணேன்-தெரிவதில்லை; தவறாய-தவறான செயல்களை; காணாக்கால்-நேரில் பார்க்காவிட்டால்; காணேன்-அறிய மாட்டேன்; தவறு அல்லவை-தவறு அல்லாதவற்றை.


காணுங்கால் காணேன் தவறாய:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்;
பரிப்பெருமாள்: அவனைக்கண்டபொழுது அவன் குற்றமாயினயாவும் காணேன்:
பரிதி: நாயகரைக் கண்டால் குற்றம் காணேன்;
காலிங்கர்: கேளாய் தோழீ! பல சொல்லி என்? யான் அவரைக் காணும் காலத்துக் காணேன் தன் தவறாவன;
பரிமேலழகர்: (இதுவும் அது.) கொண்கனை யான் காணும் பொழுது அவன் தவறாயவற்றைக் காண்கின்றிலேன்;
பரிமேலழகர் குறிப்புரை: செயப்படுபொருள் அதிகாரத்தான் வந்தது. [செயப்படு பொருள்-கொண்கனை]

'கொண்கனைக் கண்டபொழுது அவன் தவறாயவற்றைக் காணேன்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காணும்போது அவர் பிழையைக் காண்பதில்லை', 'காதலரைப் பார்த்துக் கொண்டே இருந்தால் அவரிடத்தில் எந்தக் குற்றமும் இருப்பதாகத் தெரிவதில்லை', 'தலைவனைக் காணுங்கால் குற்றமானவை யொன்றையும் நான் அறியேன்', 'காதலன் நேரில் காணும்பொழுது அவன் தவறுகளைக் காண்கின்றேன் இல்லை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

காணாக்கால் காணேன் தவறு அல்லவை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
பரிப்பெருமாள்: அவனைக்காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறிய சொற்கேட்டுக் 'கண்டகாலத்து மறக்குமாறு போலக் காணாத காலத்திலும் மறப்பது நன்று' என்று நகைக்குறிபினால் கூறிய தோழிக்குச் சொல்லியது.
பரிதி: காணாக்கால் குற்றம் காண்பேன்; இது என்ன மாயமோ என்றவாறு.
காலிங்கர்: மற்று இனி யான் அவரைக் காணாக்காலும் காணேன் மற்று அவர் தவறல்லன; காலிங்கர் குறிப்புரை: எனவே நாள்தோறும் காணாக்கால் ஆற்றமையும் கண்ட இடத்து வழிபாடும் கற்புடை மகளிர்தம் கடன் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: காணாத பொழுது அவையேயல்லாது பிறவற்றைக் காண்கின்றிலேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'முன்பு நான் நின்னொடு சொல்லிய தவறுகள் இதுபொழுது காணாமையின் புலந்திலேன்', என்பதாம்.

'காணாத காலத்து அவன் குற்றமல்லாதன யாவும் காணேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காணாதபோது பிழைதவிர வேறு காண்பதில்லை', '(ஆனால்) அவரைக் பார்க்காவிட்டால் அவரிடம் குற்றங்களைத் தவிர வேறொன்றும் எனக்குத் தெரிவதில்லை', 'அவனைக் காணாதபோது குற்றமல்லாதவற்றை அறியேன். (அவர் குற்றமே காண்டேன்.)', 'காணாதபொழுது தவறுகளைத் தவிரப் பிறவற்றைக் காணவில்லை' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

பார்க்காதபோது தவறற்றவற்றை அறிய மாட்டேன் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கணவனை நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை; பார்க்காதபோது தவறற்றவற்றை அறிய முடியவில்லை என்பது பாடலின் பொருள்.
இக்குறள் கூறும் செய்தி என்ன?

கணவன் என் அருகில் நெருங்கி இருக்கும்போது அவனது தவறுகள் எதுவுமே கருத்தில் படுவதில்லை. ஆனால் அவன் விலகிச் சென்றவுடன் தவறல்லாதவை எதுவுமே எனக்குத் தெரிவதில்லை; எல்லாமே தவறாகப் படுகின்றன.
கடமை காரணமாக தொலைவி சென்றிருந்த கணவன் திரும்பி இல்லம் வந்துவிட்டான். அவன் பிரிந்து சென்றதைத் தலைவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அந்த நாளீலிருந்து இன்றுவரை துயரத்தில் ஆழ்ந்த வாழ்க்கையே நடாத்தினாள், அவன் குறிப்பிட்டுச் சென்ற காலம் இல்லம் திரும்பாதது, போன இடத்திலிருந்து செய்தி ஏதும் அனுப்பாதது போன்ற வருத்தங்களும் அவன் மீது இருந்தன. பணி முடிந்து இன்று அவள் கண்முன்னேதான் இருக்கிறான். அவன் வருவதறிந்து தலைவி தன்னை நன்கு அழகுசெய்து கொண்டிருக்கிறாள். காதலனைத் தனிமையில் சந்திக்கும் வேளையை எதிர்நோக்கி இருக்கிறாள்.
காதலனை நேரில் பார்த்ததும் பெருமகிழ்ச்சி அடைகிறாள் தலைவி. அவனுடன் ஊடல் கொள்ள வேண்டும் என்றிருந்த எண்ணமும் மறைகிறது. அப்பொழுது அவள் சொல்கிறாள்: 'தலைவர் அருகில் இல்லாதபோது அவருடைய குற்றங்களே எனக்குத் தெரிகின்றன. அவர் அருகில் வந்து விட்டாலோ அவருடைய தவறுகள் நினைவிலே நிற்பதில்லை.

இக்குறள் கூறும் செய்தி என்ன?

இக்குறளுக்கு உரை வரைந்த பரிதி 'நாயகரைக் கண்டால் குற்றம் காணேன்; காணாக்கால் குற்றம் காண்பேன்; இது என்ன மாயமோ' என்றார். ஆம்! இது ஒரு மாய நிலைதான். அருகில் இருந்தால் நல்லவன். விலகிப்போனால் கொடுமைக்காரன் என்பது தலைவியின் மனநிலை.
காலிங்கர் 'நாள்தோறும் காணாக்கால் ஆற்றமையும் கண்ட இடத்து வழிபாடும் கற்புடை மகளிர்தம் கடன் என்பது பொருள்' என உரைக்கிறார்.
'என் காதலர் என்னுடன் இருந்து கொண்டேயிருந்தால் அவர் என்ன குற்றம் செய்தாலும் அது குற்றமாகவே தோன்றுவதில்லை. ஆனால் அவர் என்னை விட்டுப் பிரிந்து போனால் அவர் செய்யும் எல்லாமும் குற்றமாகவே எனக்குப் படுகிறது' என்று தலைவி சொல்வது அவளது தீராத காதல் அன்பையே காட்டுகிறது. தன் கண்பார்வையில் இருந்து ஒருபொழுதும் கணவன் விலகக் கூடாது என்று தலைவி விரும்புகிறாள். காதல் பெருக்கத்துடன் அவள் இவ்வாறு கூறுவதில் நீண்ட பிரிவிலிருந்து வந்துள்ளவனச் சென்று விரைவில் சேர வேண்டும் என்ற ஆசையும் வெளிப்படுகிறது.
காதலர் சேய்மையில் இருக்கும்போது அவர் செய்த குற்றங்கள் நினைவில் மேலோங்கி அவருடன் ஊடல் கொள்ள வேண்டுமென்று விரும்புவதும், காணும்படி அருகில் வந்துவிட்டாலோ அவரிடம் குற்றமிருப்பதாக நினைக்க முடியாமல் அவருடன் கூடி உறவாடுவதும் மகளிர் இயல்பு என்பது இக்குறள் தரும் செய்தி.

கணவனை நேரில் பார்க்கும்போது தவறுகள் தென்படுவதில்லை; பார்க்காதபோது தவறற்றவற்றை அறிய முடியவில்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என் அருகில் இல்லாமலிருப்பதுதான் கணவன் செய்யும் குற்றம் என்னும் புணர்ச்சிவிதும்பல் பாடல்.

பொழிப்பு

கணவரைக் காணும்போது அவர் தவறுகளைக் காண்பதில்லை; காணாதபோது தவறன்றி வேறுஎதுவும் தெரிவதில்லை.