இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1282



தினைத்துணையும் ஊடாமை வேண்டும் பனைத்துணையும்
காமம் நிறைய வரின்

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1282)

பொழிப்பு (மு வரதராசன்): காமம் பனையளவாக நிறைய வரும்போது காதலரோடு தினையளவாகச் சிறிதேனும் ஊடல் கொள்ளாமல் இருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின்.
இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) காமம் பனைத்துணையும் நிறைய வரின் - மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்; தினைத்துணையும் ஊடாமை வேண்டும் - அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.
('பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு.)

சி இலக்குவனார் உரை: மகளிர்க்குக் காதல் உணர்ச்சி பனையளவினும் மிகுதியாக உண்டாமாயின், அவரால் தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமம் பனைத்துணையும் நிறைய வரின் தினைத்துணையும் ஊடாமை வேண்டும்.

பதவுரை: தினை-தினைப் பயிர்; துணையும்-அளவும்; ஊடாமை-பிணாங்காமை; வேண்டும்-விரும்பப்படும்; பனை-பனைமரம்; துணையும்-அளவும்; காமம்-காதல்; நிறைய-மிக; வரின்-வந்தால்.


தினைத்துணையும் ஊடாமை வேண்டும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்;
பரிப்பெருமாள்: நெஞ்சே! நீ தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்;
பரிதி: தினையத்தனையும் ஊடுதல் ஒண்ணாது;
காலிங்கர்: தோழீ! ஒரு தினை அளவு ஆயினும் காதலரோடு ஊடாமை வேண்டும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) அவரால், தம் காதலரோடு தினையளவும் ஊடுதல் செய்யாமை வேண்டப்படும்.

'தினையளவும் ஊடாதொழிதல் வேண்டும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தினையளவுகூட ஊடுதல் ஆகாது', 'தினையளவு காதலரோடு ஊடாதிருத்தல் வேண்டும்', 'தினையளவு கூடப் பிணங்காமல் புணரவேண்டுமென்று ஆசை உண்டாகிறது', 'தினையளவு கூடப் பிணங்காமையே விரும்பப்படும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தினையளவு கூட பிணங்குதல் ஆகாது என்பது இப்பகுதியின் பொருள்.

பனைத்துணையும் காமம் நிறைய வரின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பனை யளவினும் மிகக் காமநுகர்ச்சி வருமாயின்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: பனை யளவினும் மிக்க காமநுகர்ச்சி வருமாயின்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஊடநினைத்த நெஞ்சிற்குத் தலைமகள் கூறியது. இதுவும் ஒரு கூற்று.
பரிதி: பனையத்தனை இன்பம் வருமாகின் என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்து எனின் பனை அளவு நிறைந்த காம இன்பம் வருமிடத்து என்றவாறு.
பரிமேலழகர்: மகளிர்க்குக் காமம் பனையளவினும் மிக உண்டாமாயின்.
பரிமேலழகர் குறிப்புரை: 'பனைத்துணையும்' என்புழி, ஐந்தனுருபு விகாரத்தால் தொக்கது. ஊடின் வருத்தமிகும் எனப் பிறர்க்கும் உறுதி கூறுவான் போன்று, தன் விதுப்புக் கூறியவாறு. [விதுப்பு - புணர்ச்சிக்கண்ணே விரைதல்]

'பனை அளவு நிறைந்த காம இன்பம் வருமிடத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பனையளவு காமவேட்கை பெருகுமாயின்', 'மகளிர்க்குக் காமம் பனையளவிலும் மிகுதியாகத் தோன்றுமாயின்', 'பனைபோல் (நீண்ட நாள் பிரிவால் வளர்ந்து விட்ட) காமமெல்லாம் இப்போது சேர்ந்து வருவதால்', 'காமமானது பனையளவினும் மிக உண்டாயின்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் தினையளவும் ஊடுதல்ஆகாது என்பது பாடலின் பொருள்.
ஏன் ஊடுதல்ஆகாது எனச் சொல்லப்படுகிறது?

தலைவியின் ஊடுவதா வேண்டாவா என்ற உள்ளப்போராட்டம் இந்த நேரத்தில் எதுக்கு?

பனையளவு பெரிதாகக் காமம் நிறைந்து வரும்பொழுது, காதலரோடு தினையளவுகூட ஊடிப் பிணங்காமல் இருத்தல் வேண்டும்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்த தலைவன் இல்லம் திரும்பியுள்ளான். பிரிவை ஆற்ற முடியாதிருந்த தலைவி காதல் கணவர் வருகையால் சிறப்பாகத் தன்னை அழகுபடுத்தி- கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் -இல்லத்துள் வலம் வருகிறாள். இன்னும் இவர்கள் நெருங்கித் தனிமையில் சந்தித்துக்கொள்ள முடியாதிருக்கிறது. ஆனாலும் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள்; குறிப்புகளால் பேசிக் கொள்கின்றனர். காதலுடையாரை நினைப்பதனாலும் களிப்பு அடைகிறதே; அவரைக் காணும்போது பெருமகிழ்ச்சி உண்டாகிறதே என எண்ணி இன்பமாய் இருக்கிறாள் தலைமகள்.

இக்காட்சி:
பிரிந்து சென்றிருந்த கணவரை நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளாள் மனைவி; அவளது காம உணர்வுகளும் மிகுந்து தோன்றுகின்றன. அவர் வரும்பொழுது எப்படி நடந்துகொள்வது என்பதை முன்னமே கற்பனை செய்து பார்த்து வைத்திருந்தாள். வள்ளுவரின் தலைவி ஊடிக் கூடுவதே மிகுந்த இன்பம் தருவது என்ற கருத்துக் கொண்டவள். கண்போற் சிறந்தவர் வந்தால் ஊடுவேனோ? தழுவுவேனோ? அல்லது நேரடியாக இரண்டறக் கலந்து விடுவேனோ? என நிகழ்வுகளைக் காட்சிகளாகப் படைத்துத் துய்த்துக் கொண்டிருந்தவள்தான். இப்பொழுது அவர் வந்துவிட்டார். இன்னும் சிறுது நேரத்தில் அவளைக் கூடப்போகிறார். கூடுவதற்கு முன் அவனுடன் சிறு சண்டை போட்டால் என்ன? என எண்ணுகிறாள். ஆனால் உடனே அவள் அறிவுக்கு இன்னொன்றும் புலப்படுகிறது. ஊடல் விளையாட்டு பிழைத்துவிட்டால் அது காமஇன்பப்பயனை இழக்கச் செய்யும் என்பதோடல்லாமல் வேறு பெரும் தீங்கு விளைவிக்கவும் கூடும். எனவே இது ஊடுதற்கான நேரமல்ல; ஒரு சிறுதும் பிணங்கல் வேண்டாம் என நெஞ்சை நோக்கிக் கூறுகிறாள்.

இப்பாடலிலுள்ள பனையும் தினையும் அளவுப் பெயர்கள். பனை மிகுதியையும் தினை குறைவையும் அறிவிக்கிறது. பார்த்த அளவிலேயே வேறுபாடு புலனாகக்கூடியதாக உள்ள இந்த இணை பொருள்கள் அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் ஆளப்பட்டன. பனையளவு மிகுதியாகக் காதல் நிரம்பி வருமானால் அப்பொழுதில் தினையளவு கூடப் பிணங்குதல் இல்லாமல் இருத்தல் வேண்டும் எனச் சொல்லப்படுகிறது. தினை-பனை ஒப்புமை அறத்துப் பால், பொருட்பால், இன்பத்துப் பால் என முப்பாலிலும் வருகிறது. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார் (செய்ந்நன்றியறிதல், குறள் எண்:104 பொருள்: தினையளவு நன்மை செய்தாலும் அதனைப் பனையளவு பெரிய நன்மையாகக் கருதுவர் 'உதவியின் பயனை அறியக்கூடியவர்கள்), தினைத்துணையாம் குற்றம் வரினும் பனைத்துணையாக் கொள்வர் பழிநாணு வார் (குற்றங்கடிதல் 433 பொருள்: தினை அளவு குற்றம் வருவதாயினும் அதனைப் பனைமரம் அளவு பெரிதாகக் கொள்வர் பழிக்கு வெட்கப்படுவர்) ஆகியன இவ்வொப்புமை ஆளப்பட்ட மற்ற இரண்டு இடங்கள்.

இப்பாடலைப் பரிமேலழகர் தலைவி தோழிக்குக் கூறியதாகவும், மணக்குடவர் தலைவி நெஞ்சிற்குக் கூறியதாகவும் கொள்வர். குறட்கருத்து இருபாலருக்குமாகவே இருப்பினும், ஊடுதல் என்பது பொதுவாகக் காதற்தலைவிக்கே பொருந்தும், எனவே காதலி தன் நெஞ்சிற்குக் கூறியதாகவும் அதனைப் பொது நீதியாக எல்லா மகளிர்க்கும் பொருந்த உரைக்கின்றாள் எனக் கொள்வது சிறக்கும்.

ஏன் ஊடுதல்ஆகாது எனச் சொல்லப்படுகிறது?

தலைமகனும் தலைமகளும் நீண்ட நாள் பிரிந்திருந்ததால் பனையளவு காமம் நிறைந்தவர்களாக இருப்பர். சேர்க்கை இனியதாகும் பொருட்டு தலைவி காதலருடன் ஊட எண்ணுவதுண்டு. ஆனால் இங்கு காதல் விருப்பம் மிக்குள்ளபோது தலைவி காதலருடன் தினைப்பயிர் அளவுக்குக்கூட ஊடுதல் கூடாது என்று தனக்குத் தானே முடிவு செய்து கொள்ளுகின்றாள். ஏன்?
ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியார் பெற்ற பயன் (புணர்ச்சிமகிழ்தல் 1109 பொருள்: ஊடலும், உணர்தலும், புணர்தலும் காதல் வாழ்வு கொண்டோர் பெற்ற பயன்கள்) என்று முன்னர் சொல்லப்பட்டது. ஊடல் வேண்டாம் என்றதையும் ஒருவகை உணர்தலாகக் கொள்ளலாம். பொய்யான சிறிய சண்டைகூட காமஇன்ப உணர்வுகள் மிகுந்துள்ள நேரத்தில் நுகர்ச்சிக்கு இடையூறாக அமைந்து அது வெறுப்பையும் உண்டாக்கிக் காதலனைக் கூட முடியாமலும் செய்யலாம். உள்ளத்தில் பொங்கி வரும் பனையளவான காதல் உணர்வுகள் இந்நிலையிலேயே நீடிக்க வேண்டுமானால் ஊடல் ஆகாது. அந்தச் சமயத்தில் அவள் ஊடினால் புணர்ச்சி தடைப் பட்டு அது இருவருக்குமே அளவிறந்த துன்பம் தரும். எனவே காமம் மிகுந்திருக்கும் வேளை ஊடவேண்டாம் என்று நினைக்கிறாள்.
காதலரைக் கூடுவதற்கு அவள் மனம் விரைகின்றது என்பது பிணங்கல் வேண்டாம் என்பதற்கான மற்றொரு காரணம்.

காதல் உணர்ச்சி பனையளவினும் மிகத் தோன்றுமாயின் தினையளவு கூட பிணங்குதல் ஆகாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பணிமுடித்து வந்துள்ள கணவருடன் ஊடி நிறைஇன்பத்தைக் கெடுக்க வேண்டாம் என்ற உணர்தலுடன் புணர்ச்சிவிதும்பல் உற்றாள் தலைவி.

பொழிப்பு

பனையளவிலும் மிகக் காதல் பெருகுமாயின், தினையளவுகூட காதலரோடு ஊடுதல் கூடாது