இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1281



உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு

(அதிகாரம்:புணர்ச்சிவிதும்பல் குறள் எண்:1281)

பொழிப்பு (மு வரதராசன்): நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகைத் தன்மையும் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.

மணக்குடவர் உரை: காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும் களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு.
கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.

பரிமேலழகர் உரை: (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) உள்ளக்களித்தலும் - நினைந்த துணையானே களிப்பெய்தலும்; காண மகிழ்தலும் - கண்ட துணையானே மகிழ்வெய்தலும்; கள்ளுக்கு இல் காமத்திற்கு உண்டு - கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.
(களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நினைக்கவும் காணவும் மகிழ்ச்சி தருதல் கள்ளுக்கு இல்லை; காமத்திற்கு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு.

பதவுரை:
உள்ள-நினைக்க; களித்தலும்-உள்ளங் கிளர்தலும், வெறியூட்டுதலும், போதையூட்டுவதும்; காண-பார்க்க; மகிழ்தலும்-மகிழ்ச்சியடைதலும்; கள்ளுக்கு-கள்ளுண்பாக்கு; இல்-இல்லை; காமத்திற்கு-காதலின்பம் துய்ப்பார்க்கு, காதலர்க்கு, காமம் உடையார்க்கு; உண்டு-உளது.


உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும்;
பரிப்பெருமாள்: காதலரை நினைத்த அளவிலே களிப்புறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும்;
பரிதி: உள்ளத்தில் களிப்பதும் காண மகிழ்ச்சி கொடுப்பதும்;
காலிங்கர்: தம்மால் காதலிக்கப்பட்டாரை நினைக்கவே களித்தலும், காணவே மகிழ்தலும்;
பரிமேலழகர்: (பிரிதற்குறிப்பினன் ஆகியானொடு நீ புலவாமைக்குக் காரணம் யாது? என, நகையாடிய தோழிக்குத் தலைமகள் சொல்லியது.) நினைந்த துணையானே களிப்பெய்தலும்கண்ட துணையானே மகிழ்வெய்தலும்;

'காதலரை நினைத்த அளவிலே களிப்புப் பெறுதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி பெறுதலும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கரின் 'தம்மால் காதலிக்கப்பட்டாரை நினைக்கவே களித்தலும், காணவே மகிழ்தலும்' என்ற உரை தலைமகன் -தலைமகள் இருவர் கூற்றாகக் கருத வைக்கிறது.

இன்றைய ஆசிரியர்கள் 'நினைத்த அளவிலே களிப்படைதலும், கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும்', 'நினைக்கும்போதே வெறிமூட்டும் குணமும் பார்த்த உடனே மன மகிழ்ச்சியூட்டும் குணமும்', 'நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட வளவிலே மகிழ்ச்சியடைதலும்', 'நினைப்பதனால் களிப்பு அடைதலும், கண்டதனால் மகிழ்ச்சி அடைதலும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நினைத்த உடனேயே களிப்புப் பெறுதலும் பார்த்த பொழுதே மகிழ்ச்சி அடைதலும் என்பது இப்பகுதியின் பொருள்.

கள்ளுக்குஇல் காமத்திற்கு உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு.
மணக்குடவர் குறிப்புரை: கள்ளிற்கு உண்ணக்களித்தலும் மகிழ்தலுமுண்டு: காமத்திற்கு உள்ளக் களித்தலும் காண மகிழ்தலுமுண்டு என்றவாறு.
பரிப்பெருமாள்: களித்தலையும் மகிழ்தலையும் தனக்கு இயல்பாகவுடைய கள்ளிற்கு இல்லை: காமத்திற்கு உண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகனைக் கண்ணுற்ற இடத்துப் புலவியைக் கருதின தலைமகள் புணர்வு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு தன்னுள்ளே வியந்து கூறியது.
பரிதி: கள்ளுக்கு இல்லை; காமத்துக்கு உண்டு.
காலிங்கர்: கள்ளுக்கு இல்லை காமத்திற்கு உண்டு என்று பலவற்றானும் கள்ளோடு காமம் மகிழ்ந்து உரைக்கின்றமையின், ஒருவர்க்கு இரண்டன் திறத்தினும் துற்றவிடத்து இன்பமே என்பது துணிந்த பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: களித்தல் - உணர்வழியாதது. மகிழ்தல் - அஃதழிந்தது, இவ்விரண்டும் உண்டுழியல்லது இன்மையின் 'கள்ளுக்கு இல' என்றாள். 'உண்டு' என்பது இறுதி விளக்கு. 'அப்பெற்றித்தாய காமம் உடையான் புலத்தல் யாண்டையது' என்பதாம். [இவ்விரண்டும் - களித்தலும் மகிழ்தலும்; இறுதி விளக்கு - இது விளக்கணியின் வகை; அப்பெற்றித்தாய - உள்ளக் களித்தலும் காண மகிழதலும் உடையது ஆகிய; புலத்தல் யாண்டையது - பிணங்குதல் எவ்வாறு?]

கள்ளுண்டார்க்கு இல்லை, காமம் உடையார்க்கு உண்டு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். காலிங்கர் 'ஒருவர்க்கு இரண்டன் திறத்தினும் துற்றவிடத்து இன்பமே என்பது துணிந்த பொருள்' எனக் கூட்டி உரை பகர்ந்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'கள் உண்டவர்க்கு இல்லை; ஆனால் காமமுடையார்க்கு உண்டு', 'கள்ளுக்கு இல்லை. ஆனால் காமத்துக்கு உண்டு', 'கள்ளினால் ஏற்படுவதில்லை; காமத்தினால் ஏற்படுவதே', 'கள் உண்டார்க்கு இல்லை. காதல் உடையார்க்கு உண்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கள் உண்பார்க்கு இல்லை; காதல் கொண்டவர்க்கு உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நினைத்த உடனேயே களிப்புப் பெறுதலும் பார்த்த பொழுதே மகிழ்ச்சி அடைதலும், கள் உண்பார்க்கு இல்லை; காதல் கொண்டவர்க்கு உண்டு என்பது பாடலின் பொருள்.
காதல்இன்பம் ஏன் கள்ளுடன் ஒப்பிடப்பட்டது?

உள்ளுதோறும் அகம் களிப்படைகிறது; கண்டால் கழிபேருவகை உண்டாகிறது; கள்ளினும் காமம் இனிது.

காதலரை நினைக்கும்போதும் காணும்போதும் களிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். ஆனால் கள்ளுக்கு அந்தத் தன்மைகள் இல்லை.
காட்சிப் பின்புலம்:
கடமை காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்த கணவன் திரும்பி வந்துள்ளான். பிரிவைத் தாங்க முடியாதிருந்த தலைவி காதலன் வருகையால் சிறப்பாகத் தன்னை அழகுபடுத்தி- கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் -இல்லத்துள் வலம் வருகிறாள். உற்றார் உறவினர் சுற்றி இருந்ததால் இன்னும் இவர்கள் நெருங்கித் தனிமையில் சந்திக்கவில்லை. ஆனாலும் இருவரும் ஒருவரையொருவர் நேரில் பார்த்ததில் மிகுந்த மகிழ்ச்சியில் திளைக்கிறார்கள். இருவரும் குறிப்புகளால் பேசிக் கொள்கின்றனர். தலைவி தன் காதல்நோயினைத் தீர்க்குமாறு கண்களால் இறைஞ்சி நிற்கிறாள்.

இக்காட்சி:
தலைவனும் தலைவியும் புணர்ச்சியில் ஈடுபட ஒருவரை ஒருவர் முந்தும் நிலையில் காமஉணர்வு மிகுந்து காணப்படுகின்றனர். பிரிந்திருந்த காலத்தில் ஒருவரையொருவர் நினைத்துக் கொண்டு களிப்படைந்தனர். இப்பொழுது காதலிக்கப்பட்டாரை நேரில் கண்டதால் மகிழ்ச்சி நிறைந்த நிலையில் காணப்படுகின்றனர். அப்பொழுது அவர்கள் எண்ணுகின்றனர்: 'கள் உண்டால் மட்டுமே வெறியுண்டாக்கும். ஆனால் காம உணர்வானது காதல் கொண்டவரை நினைத்தவுடன் வெறியும், கண்டவுடன் மகிழ்வும் அளிக்கும்.'

'இது தலைமகனைக் கண்ணுற்ற இடத்துப் புலவியைக் கருதின தலைமகள் புணர்வு வேட்கையால் சென்ற நெஞ்சினைக் கண்டு தன்னுள்ளே வியந்து கூறியது' என்று பரிப்பெருமாள் துறை வகுத்தார். காதலரிருவரும் தங்களுக்குள் இவ்வாறு எண்ணிக் கொள்கிறார்கள் என்பது பொருத்தமாகும்.

காதல்இன்பம் ஏன் கள்ளுடன் ஒப்பிடப்பட்டது?

காமத்தையும் கள்ளையும் ஒப்பிட்டுரைத்தல் வள்ளுவருக்குப் பிடித்த ஒன்று. கள்ளுண்டலைக் கைவிடுமாறு அறிவுரை புகலும் வள்ளுவர் கள்ளையே உவமையாகக் கூறுகிறார் இங்கு. கள்ளுண்பதால் கிடைக்கும் இன்பத்தைச் சொல்லி அதைவிட காதலின்பம் இனியது என்று ஒப்பிட்டுக் காட்டும் வகையில் இன்னும் நான்கு குறட்பாக்கள் காமத்துப்பாலில் உள்ளன. உண்டார்கண் அல்லது அடுநறாக் காமம்போல் கண்டார் மகிழ்செய்தல் இன்று (தகை அணங்கு உறுத்தல் 1090 பொருள்: கள் உண்டார்க்கு மகிழ்ச்சியைத் தருமே அல்லாது, காதலுற்றார் போல், பார்த்தாலே மகிழ்ச்சியைத் தருவது இல்லை), களித்தொறும் கள்ளுண்டல் வேட்டற்றால் காமம் வெளிப்படுந் தோறும் இனிது (அலர் அறிவுறுத்தல் 1145 பொருள்: மகிழ மகிழ கள்ளுண்டலை விரும்புமாறு போல, காமம் அலராகும் தோறும் இனிதாகின்றது), உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது (நினைந்தவர்புலம்பல் 1201 பொருள்: காதலிக்கப்பட்டவரை நினைத்தாலுமே அது நீங்காத பெரு மகிழ்ச்சியை அளிப்பதலால் கள்ளினும் காதல் இன்பம் இனிமையானது), இளித்தக்க இன்னா செயினும் களித்தார்க்குக் கள்ளற்றே கள்வநின் மார்பு (புணர்ச்சிவிதும்பல் குறள் எண்: 1288 பொருள்: கள்வனே! இளித்தக்க இன்னா செய்தாலும் கள்ளுண்டவர்க்குக் கள்ளைப் போல, எனக்கு மேன்மேலும் தழுவும் விருப்பத்தைத் தருகின்றது உனது மார்பானது).
காதலின்பம் கள்போன்ற வெறி தருவது. அதாவது கள். காமம் இவை இரண்டும் மயக்க இன்பம் தருவனவாம். கள் உண்டால் மட்டுமே வெறி உண்டாக்கும். ஆனால், காதல் நினைத்தாலும், கண்டாலும் அறிவை மயக்கி இன்பம் தருவதால் கள்ளினும் இனிதாகும் என இங்கு சொல்லப்படுகிறது.
கள்ளும் காதலும் அவற்றை உடையவர்களுக்கு தடை எதுவும் ஏற்பட்டாலும் மீண்டும் மீண்டும் அவற்றை விரும்புகின்ற வெறியையுண்டாக்குவன. கள் குடித்த பிறகுதான் வெறியுண்டாக்கும். ஆனால் காமம் நினைக்கும் போதே கிளர்ச்சியுண்டாக்கும். மேலும் காமம் கண்டவுடன் உவகை கொள்ளவைக்கும்; அத்தன்மையும் கள்ளுக்கு இல்லை. கள்ளுண்ணும் வழக்கமுடையார் கள் என்பதை நினைத்தவுடனோ அல்லது கள்ளைக் கண்டவுடனோ மகிழ்ச்சியடைவது இல்லை என்கிறது இப்பாடல். இந்நாட்களில் கள் குடியரை ஈர்ப்பதற்காக சிறப்பு/அருகிய படிவம் (Special/Limited editions) என்ற பெயரில் நல்ல புதிய புதிய வடிவமைப்போடு கண்ணாடி/கனிமப் பொருள்களான புட்டிகளில் நிரப்பப்பட்டு கள் விற்பனைக்கு வருகின்றது. அவற்றையும் பார்த்தாலோ கள்ளுண்பார் களிப்படைதல் இல்லை.
ஆனால், காதல் கொண்டுள்ளார் காதலுக்குரியாரை நினைத்தாலும் கண்டாலும் மயக்கம் கொண்டு உள்ளக் கிளர்ச்சி உறுவர். கள்ளிற்கு உண்ணக்களித்தலுண்டு: காமத்திற்கு உள்ளுத்தோறும் களித்தலும் காணுந்தோறும் மகிழ்தலுமுண்டு என இன்பப் போதை தரும் கள்ளும் காதலும் ஒப்பிடப்பட்டு கள்ளினும் காதல் இனியது என்று மீண்டும் கூறப்பட்டது. நினைப்பதாலும் காண்பதாலும் இன்பம் பயக்கும் காமம் கொண்ட காதலர் கூடுவதால் இன்னும் பேருவகை உண்டாகும்; இருவர்க்கும் கூடுதற்கு விரைவு உண்டாகிறது என்பது கருத்து.

நினைத்த உடனேயே களிப்புப் பெறுதலும் பார்த்த பொழுதே மகிழ்ச்சி அடைதலும், கள் உண்பார்க்கு இல்லை; காதல் கொண்டவர்க்கு உண்டு என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவினின்று கூடிய காதலர் களிப்படைந்தனர், மகிழ்செய்தனர், புணர்ச்சிவிதும்பல் உற்றனர்.

பொழிப்பு

நினைக்கக் களிப்பும் காண மகிழ்ச்சியும் தருதல் கள்ளுக்கு இல்லை; காதலுக்கு உண்டு