அவளிடம் அவன் திரும்ப வருகிறான். பிரிவு அவர்களின் கூடலைப் புதியதாக்குகிறது. இது புறஅடக்கம். ஆனால் உள் உணர்ச்சிகள் எல்லை மீறுகின்றன. இந்தக் கட்டுப்பாடு, மனித இயல்பின் அறியாமையை மேலும் அழகுள்ளதாக்குகின்றது. அவளது காதல், புன்னகையின் பின்னால் மொட்டுக்குள் மறைந்திருக்கும் மணத்தைப் போன்று மறைந்து கண்கள்மூலம் வெளிப்படுகின்றது. அவள் காதலின் வலியிலிருந்து விடுதலை பெறக் கெஞ்சுகிறாள்.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்
கடமை காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்து திரும்பி வந்துள்ள கணவன் குறிப்புக்கள் மூலம் தலைவியின் அழகைப் பாராட்டுகிறான். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவியும் அவனுடன் குறிப்புக்கள் மூலம் பேசுகிறாள். புன்னகை, வளையல்ஒலி, தோள், தாள், கண் இவற்றின்வழி காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். தலைவன் இக்குறிப்புகளை வாசித்து இன்புறுகிறான். தன் காமநோயினைத் தீர்க்குமாறு, மனைவி, வாய்ச்சொற்கள் இல்லாமல், கண்களால் இறைஞ்சுவதை பெண்மைக்கு பெண்மை சேர்ப்பதுபோல உள்ளது என்று அவன் கூறுகின்றான்.
குறிப்பறிவுறுத்தல்
குறிப்பறிவுறுத்தல் அதிகாரம் காதலர்கள் தம் உள்ளக் குறிப்பைப் புறத்தே உடம்பில் தோன்றும் மெய்ப்பாடுகளால் ஒருவர்க்கொருவர் அறியுமாறு செய்தலைச் சொல்கிறது.
பணி காரணமாகப் பிரிந்து சென்றிருந்த தலைமகன், நீண்ட நாட்களுக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். இன்னும் மனைவியை நெருங்கித் தனிமையில் சந்திக்க இயலவில்லை. ஆனாலும் இருவரும் தங்கள் மனத்தில் எழுந்த உணர்வுகளை எண்ணங்களை, வாய்ச்சொற்களே இல்லாமல் குறிப்புக்களால் அறிவுறுத்திக் கொள்கின்றனர்.
முதலில் தலைவன் அவள் உள்ளத்தில் உள்ள கருத்தோட்டங்களைப் புரிந்துகொண்டவனாகி அவள் அழகையும் சுவைக்கின்ற பகுதி உள்ளது.
அடுத்து தலைவி பற்றியது. காதலன் திரும்பி வந்தது அவளுக்குப் பெரும் ஆறுதல் அளிப்பதுதான்; அவர்கள் கூடி இன்பம் துய்க்கத்தான் போகிறார்கள். ஆனாலும் அவன் மறுபடியும் அன்பற்று பிரிந்து விடுவானோ என்ற அடிப்படையற்ற அச்சம் அவளுக்குத் தோன்றிவிடுகிறது. அந்த பய மனநிலையில் அவன் பிரிந்துவிட்டான் என்பது போலக் கலக்கமுற்று, அவளது தோள் மெலிந்தது; வளை கழன்றது; உடலில் பசலை படர்ந்தது என எண்ணத் தொடங்கிவிட்டாள். இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் இன்னொருமுறை அவன் அவளை விட்டு நீங்குவதை அவளால் தாங்கமுடியாது என உணர்கிறாள். இவ்விதமான உள்ளக் குமுறல்களையும் தலைவி குறிப்புக்களால் தலைவனுக்கு அறிவுறுத்துவதாகப் பாடல்கள் உள்ளன. மறுபடியும் வரும் தலைவன் பகுதியில் தலைவி தொடிநோக்கி, தோள்நோக்கி, பின் அடி நோக்குவதை - பிரியின் உடன்வருவேன் என்று அவள் சொல்வதை அறிந்து கொள்கிறான். இறுதியாக மனைவி தன் காதல் விருப்பத்தைக் கண்கள் வழி குறிப்பால் உணர்த்துவதை மிகவும் பாராட்டி மகிழ்கிறான்.
குறிப்பறிவுறுத்தல் - சில புரிதல்கள்
கணவன் - மனைவி இடை குறிப்பறிவுறுத்தல் ஏன்?
களவியலிலுள்ள குறிப்புஅறிதல் அதிகாரம் ஒருவரையொருவர் முன்பின் அறியாதவர்களாக இருந்தவர்கள், பொதுஇடங்களில், மற்றவர் குறிப்பை-உள்ளக் கிடக்கையை அறிதல் பற்றிச் சொல்லியது.
குறிப்பறிவுறுத்தல் அதிகாரம். கற்பியலில் அதாவது மணவினை முடிந்து இல்லறவாழ்வில் ஈடுபட்டுள்ள கணவன் மனைவி இவர்களிடை உள்ள காதல் உறவு பற்றிய பகுப்பில் உள்ளது. பிறர் கருதியதனை அவர் வாயால் கூறாமல் குறிப்புக்கள் மூலம் வெளிப்படுத்துவது குறிப்பறிவுறுத்தல் ஆகும். தமது இல்லத்தில் ஒன்றாக உறையும் இவர்களிடை குறிப்புக்கள் மூலம் பேசவேண்டிய தேவை என்ன? இல்லத்தில் பெற்றோர் மற்றும் சுற்றம் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். அவர்கள் முன்னிலையில் இவர்கள் எப்படி வெளிப்படையாகக் காதல் எண்ணங்களைப் பகிர முடியும்? நெருங்கித் தனித்துப் பேசும் வேளை அவர்களுக்கு இன்னும் உண்டாகவில்லை. எனவே குறிப்புக்கள் மூலம் பேசினர் எனலாம்.
உடன்போதல்-கற்பியலுக்கு ஏற்குமா?
தொடிநோக்கி.... என்னும் குறள் எண் 1279 உடன்போக்கைக் குறிப்பதாக உரையாசிரியர்களும் ஆய்வாளர்களும் கொள்கின்றனர். உடன்போக்கு என்றதால் இது களவியலுக்குரியது என்ற முடிவுக்கும் வருகின்றனர். ஏனெனில் கற்பினுள் உடன்போக்கு நிகழ்தல் இல்லை எனப் பல புலவர்கள் கூறி வருகின்றனர். களவியல் என்று உரை செய்தவர்கள் களவுக்காலத்தில் வரைவிடைவைத்து (அதாவது பின்பு வந்து திருமணம் செய்வதாகக் கூறிப்) பிரிய எண்ணிய தலைவன் கருத்துக்கு உடன்படாது உடன்போக எண்ணிய தலைவியின் செயலே இக்குறளில் கூறப்பட்டது என்று கூறி தலைவன் பிரியின் தன் தொடி கழலும் தோள் மெலியும் என எண்ணி அவற்றை நோக்கி அவ்வாறு நிகழாமல் அவன் செல்லுங்கால் உடன் நடத்தல் வேண்டும் என்னும் குறிப்புடன் தன்னடியையும் நோக்கினாளாம் என்பர்.
ஆனால் திருமணமாகிய கற்பியல் வாழ்விலும் உடன் போகுதல் உண்டு என்பார் வ சுப மாணிக்கம். மேலும் அவர் 'தலைவியர் களவிலும் கற்பிலும் உடன்போக்கை நாடுபவர்களாகப் புலவரின் பல பாடல்கள் காட்டுகின்றன. தலைவர்களும் அத்தகைய துணைப்போக்கினை ஒருவாறு உடன்படக் காண்கிறோம்' எனவும் கூறியுள்ளார்.
உடன்போக்கு என்றால் உடன் செல்லுதல் என்று பொருள். இப்பாடலில் 'தலைவனின்றி என்னால் ஆற்றியிருக்க முடியாது; பிரியின் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்று மனைவி வேண்டுகிறாள். அவ்வளவுதான். அவள் உடன் சென்றாள் என்று சொல்லப்படவில்லை. மேலும் தொழில் காரணமாகத் தலைவன் அயல் செல்லும்போது மனைவி உடன் செல்லும் வழக்கம் அன்றைக்கும் இல்லை இன்றைக்கும் கிடையாது.
குறளின் காமத்துப்பால் கோவைகளைப் போலக் காதற் கதையைத் தொடர்ச்சியாகக் கூறுவதில்லை என்றாலும், அதிகாரங்களின் வைப்பு ஓர் ஒழுங்குமுறையைப் பின்பற்றவே செய்கிறது என்பதை மறுக்க முடியாது. களவியலுக்குரியனவும் கற்பியலுக்குரியனவுமான பாடல்கள் மாறிமாறிக் கலந்து வந்துள்ளதாகக் காமத்துப்பால் அதிகாரங்களைக் கொள்வது குழப்பங்களுக்கே வழிவகுக்கும். எனவே உடன்போக்கு போன்றவற்றைக் களவு வாழ்வில்மட்டும்தான் நடக்கும் எனக் கொள்ளத் தேவையில்லை. இவ்வதிகாரப் பாடல்கள் அனைத்தும் கற்பியலுக்கு உரியதாக ஏற்பதில் குறையேதும் இல்லை.
இவ்வதிகாரத்துப் பாடல்கள் தலைமகன், தலைமகள், தோழி என்றிவர்கள் ஒருவர் குறிப்பினை ஒருவர்க்கு அறிவுறுத்தல் எனச் சொல்லி இவர்கள் கூற்றுவழி மொழிவதாக உரையாசிரியர்கள் உரை செய்தனர். ஆனால் தலைவனும் தலைவியும் சொற்கள் இல்லாமல் வெறும் குறிப்புகளினாலே பேசினார்கள் என்று கொண்டால் பாடல்கள் படிப்பதற்கும், படிப்போர் தம் மனத்திரையில் காட்சிகளைக் காண்பதற்கும், சுவையானதாக இருக்கும்.