இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1276பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி
அன்பின்மை சூழ்வது உடைத்து

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1276)

பொழிப்பு (மு வரதராசன்): பெரிதும் அன்பு செய்து விரும்புமாறு கூடுதல், அரிதாகிய பிரிவைச் செய்து பிறகு அன்பில்லாமல் கைவிட எண்ணுகின்ற குறிப்பை உடையதாகும்.

மணக்குடவர் உரை: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல், யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து.
இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) பெரிது ஆற்றிப் பெட்பக்கலத்தல் - காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி; அரிது ஆற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து - இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
(பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.)

வ சுப மாணிக்கம்: உரை: மிக அன்பு காட்டி ஆசையாகக் கூடுவதில் பிரியும் கொடுமைக் குறிப்பு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல் அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து.

பதவுரை:
பெரிது ஆற்றி- மிகவும் ஆறுதலைச் செய்து; பெட்ப-மகிழ; கலத்தல்-கூடுதல்; அரிது ஆற்றி - அரியதைச் செய்து; அன்பின்மை-அன்பற்ற செயலைச் செய்வதற்கு; சூழ்வது உடைத்து- எண்ணுவதை உடையது.


பெரிதாற்றிப் பெட்பக் கலத்தல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாகாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல்;
பரிப்பெருமாள்: ஊடினகாலத்து அதன் அளவின்றி மிகவுமாற்றிப் புணருங்காலத்து முன்புபோலாது மேன்மேலும் விரும்புமாறு புணர்தல்;
பரிதி: பெரிதான துயரத்தை ஆற்றி மிகவும் களிப்புடன் கூடுதல்;
காலிங்கர்: தோழீ! மிகவும் என் ஊடலைத் தீர்த்து யான் விரும்ப இப்பொழுது புணர்ந்த புணர்ச்சியானது;
பரிமேலழகர்: (தலைமகன் குறிப்பறிந்த தலைமகள், அதனை அது தெளிவிக்கச் சென்ற தோழிக்கு அறிவுறுத்தது.) காதலர் வந்து தம் பிரிவினானாய துன்பத்தினை மிகவும் ஆற்றி நாம் மகிழும் வண்ணம் கலக்கின்ற கலவி;

'பெரிதான துயரத்தை ஆற்றி மிகவும் களிப்புடன் கூடுதல்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிவால் எய்திய துன்பத்தைக் காதலர் வந்து மிகவும் ஆற்றி விரும்பியபடி கூடிய முயக்கம்', '(நான் நெடுநாள் பிரிந்து விட்டதால்) மிகுந்த துன்பங்களைச் சகித்துக்கொண்டிருந்து (அந்த வருத்தத்தால் முன்போல்) ஆசையோடு தழுவிக்கொள்ளல்', 'தலைவர் தமது பிரிவாலான துன்பத்தை மிகவுமாற்றி நாம் மகிழும்வண்ணம் கூடுவது', 'மிகுதியான அன்பினைச் செய்து விரும்புமாறு கூடுதல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

அரிதாற்றி அன்பின்மை சூழ்வது உடைத்து:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மையை யெண்ணுவதொரு பிரிவுடைத்து.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரியலுற்ற தலைமகனது குறிப்பறிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: யான் அரிதாக ஆற்றியிருந்து தம்மன்பின்மை யெண்ணுவதொரு பிரிவையுடைத்து.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது பிரியலுற்ற தலைமகன் குறிப்பு அறிந்தமை தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பரிதி: நாயகர் பிரியும் குறி என்று அறிக என்றவாறு.
காலிங்கர்: நாம் பின்பு அரிதாக ஆற்ற அன்பின்மையால் வரும் பிரிவினைச் செய்வது ஒன்று உண்டு என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அன்பின்மை என்றது அவர் பிரிவினைக் குறித்தது என்றது.
பரிமேலழகர்: இருந்தவாற்றான் மேலும் அத்துன்பத்தினை அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து.
பரிமேலழகர் குறிப்புரை: பிரிதற் குறிப்பினாற் செய்கின்றதாகலான் முடிவில் இன்னாதாகா நின்றது என்பதாம்.

'அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினையும் தன்மையுடைத்து' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'யான் அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினைக்கும் தன்மை உடையது', '(இவள் இப்படி நிற்பது) என்னுடைய அன்பில்லாமையே இடித்துக் கூறுவது போன்ற தன்மையுடையதாக இருக்கிறது', 'நாம் மீண்டும் அரிய அத்துன்பத்தைப் பொறுத்திருந்து அவரது அன்பின்மையைக் கருதுதற் கேதுவாய் குறிப்புடையது', 'பொறுக்க முடியாததனைச் செய்து அன்பின்மையை நினைக்கும் தன்மையை உடையது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல், அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது என்பது பாடலின் பொருள்.
இப்பாடலில் என்ன குறிப்பு உள்ளது?

பிரிவில் இருந்து திரும்பி வந்திருக்கிற காதலன் பெரும் ஆறுதலைத் தந்தான்; கூடி மகிழப் போகிறோம்; 'அரிய துன்பத்தை பொறுத்துக் கொண்ட எனக்கு இது மறுபடியும் அவர் பிரிந்து செல்வதற்கான குறிப்புத்தானோ என எண்ணத் தோன்றுகிறது' என்கிறாள் தலைவி.
நெடுநாள் பிரிவில் பணி காரணமாகச் சென்ற தலைவன் திரும்பவும் இல்லம் சேர்ந்து விட்டான். அவன் வந்ததில் தலைவி உவகை மிகக் கொண்டாள். அவனுடன் கூடி இருக்கப்போவதை எண்ணி மகிழ்ந்து கொண்டிருக்கிறாள். கண்ணுக்கு மை எழுதி, மணிமாலை அணிந்து கைநிறைய வளை பூண்டு, புன்னகை பூத்து பெண்மைப் பொலிவுடன் நிற்கிறாள். இவ்வளவு காலம் பிரிந்திருந்த துன்பத்திற்குப் பிறகு பெரிய ஆறுதலாய் கணவன் கண்முன் உள்ளான். அவனுடன் கூடி உவகை கொள்ளப் போகிறாள். இச்சமயத்தில் அப்பேதை நெஞ்சம் இன்னொன்றையும் நினைத்துப் பார்க்கிறது - இந்த இன்பம் இப்படியே இருக்கவேண்டுமே. இருக்குமா? அவர் வந்து உடன் இருப்பது நிலைத்து இருக்கவேண்டுமே. நிலைக்குமா? நமக்குத் தண்ணளி செய்யாமல் அவர் மீண்டும் பிரிந்து செல்வாரா? இவ்வாறாகத் தலைவனோடு கூடி இன்பத்தை நுகர நினைக்கும்போது தலைவியின் மனமானது, இவ்வளவுநாள் ஆற்றியிருந்த கொடுமையான பிரிவுத் துன்பத்தை எண்ணிப்பார்க்கிறது.

இப்பாடலில் என்ன குறிப்பு உள்ளது?

நீண்ட தொலைவு சென்றிருந்த தலைமகன் கடமை முடிந்து திரும்பி வந்துள்ளான். இவ்வளவு காலப் பிரிவுத்துயர் நீங்குமாறு இப்பொழுது அவள் எதிரே உள்ளான். இது அவளுக்குப் பெரும் ஆறுதலாய் உள்ளது. பின்பும் அன்புடன் கூடிக் கலப்பார் என்பதும் அவள் அறிந்ததே. ஆனாலும் என்ன? மீண்டும் பிரியப் போகிறாரோ என்று காதலி கவலையுறுகிறாள். பாடலிலுள்ள 'அன்பின்மை' என்றது பொறுத்தற்கு அரிய, அன்பில்லாத, பிரியும் கொடுமையைக் குறிப்பதாய் உள்ளது. பிரியக் கருதும் அன்பின்மையே இக்குறளில் உள்ள குறிப்பு.

மிகுதியான ஆறுதலைச் செய்து மகிழுமாறு கூடுதல், அரிய துன்பத்தைப் பொறுத்து அவரது அன்பின்மையை எண்ணும் தன்மையை உடையது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

என்னக் கூடுவது மறுபடியும் பிரிதலுக்கான குறிப்பறிவுறுத்தல் ஆக இருக்குமோ என்று தலைவி ஐயுறுகிறாள்.

பொழிப்பு

மிகவும் ஆறுதல் செய்து விரும்பிக் கூடுவதில் அரிதாக ஆற்றியிருந்து அவரது அன்பின்மையை நினைக்கும் தன்மை உடையது.