இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1279தொடிநோக்கி மென்தோளும் நோக்கி அடிநோக்கி
அஃதாண்டு அவள்செய் தது

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1279)

பொழிப்பு (மு வரதராசன்): தன்னுடைய வளையல்களை நோக்கி, மெல்லிய தோள்களையும் நோக்கித் தன்னுடைய அடிகளையும் நோக்கி அவள் செய்த குறிப்பு காதலனைத் தொடர்ந்து செல்வதென்றதாகிய அதுவேயாகும்.மணக்குடவர் உரை: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.
அது - உடன்போக்கு.

பரிமேலழகர் உரை: (தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) தொடி நோக்கி - அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி; மென்தோளும் நோக்கி - அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி; அடி நோக்கி - பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி; ஆண்டு அவள் செய்தது அஃது - அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
(செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275) என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.)

இரா சாரங்கபாணி உரை: காதலர் பிரிந்தால் இவை நில்லா என வளையல்களை நோக்கி இவை மெலியும் எனத் தோள்களை நோக்கிப் பின் இவை நிகழாமல் அவருடன் சென்று காத்தல் வேண்டுமெனத் தன் அடிகளையும் நோக்கி அவள் ஆண்டுச் செய்த குறிப்பு உடன்போக்காகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி அஃது ஆண்டு அவள் செய்தது.

பதவுரை:
தொடி-கைவளை; நோக்கி-பார்த்து; மென்தோளும்-மென்மையான தோளும்; நோக்கி-பார்த்து; அடி-தாள்; நோக்கி-பார்த்து; ஆண்டு-அவ்விடத்து, அப்பொழுது, அங்ஙனம்; அவள்-அப்பெண்; செய்தது-செய்து காட்டியது.


தொடி நோக்கி மென்தோளும் நோக்கி அடி நோக்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி;
பரிப்பெருமாள்: தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி;
பரிதி: நாளை உடன்போக்குக்கு உடன்பட்டுத் தன் வளையைப் பார்த்தும், தோளைப் பார்த்தும், காலைப் பார்த்தும்;
காலிங்கர்: நெஞ்சே! தன் வளையை நோக்கி மற்று அவ்வளை அணிந்த மென்தோளினையும் நோக்கிப் பின் தன் சீறடியையும் நோக்கிவிட்டு;
காலிங்கர் குறிப்புரை: எனவே இற்றைநாள் நம்மோடு செறிந்திருந்த வளையே! இவர் எம்மைவிட்டு நீங்க நீங்குவை; பணைத்து நிறத்தது ஓர் தோளே! நீயும் இவர் விடப் பசுக்குவை; இறுதிக்கண் கைவிடும் நும்மை நம்புவதனினும் அவர் தம்மோடு சேறலே தலைமை; இதற்கு இனி இவ்வடியிணை செய்வது என்னை என்று அறிகிலேன் என்று இவை அவை நோக்கி நம் குறிப்பு அறிந்து அலமால் உற்ற அத்துணையே;
பரிமேலழகர்: (தலைமகள் குறிப்பறிந்த தோழி அதனைத் தலைமகற்கு அறிவித்தது.) (யான் அது தெளிவித்த வழி தெளியாது) அவர் பிரிய யான் ஈண்டிருப்பின் இவை நில்லா எனத் தன் தொடியை நோக்கி, அதற்கு ஏதுவாக இவை மெலியும் எனத் தன் மென்தோள்களையும் நோக்கி, பின் இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும் எனத் தன் அடியையும் நோக்கி;

'தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் 'அடி இணை செய்வது என்ன என்று அறியாமாட்டேன்' எனக் கலங்கி நிற்பதாகவும் பரிமேலழகர் 'இவ்விரண்டும் நிகழாமல் நீர் நடந்து காத்தல் வேண்டும்' எனவும் விளக்கம் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'வளையலையும் தோளையும் காலையும் பார்த்தாள்', '(தளர்ந்து போன) வலையல்களைப் பார்த்துவிட்டு, மெலிந்து போன தன் கைகளையும் பார்த்துவிட்டு (தலை குனிந்து கொண்டு) தன் பாதங்களைப் பார்த்தாள்', 'பிரிவினால் வளையல் கழலுமென்று வளையலை நோக்கி, தோள் மெலியுமென்று தோளைத் நீக்கித் தம்மை நீர் நடந்து காக்கவேண்டு மென்று தன் அடிகளுக்குணர்த்துவாள்போல அடிகளை நோக்கி', 'வளையல்களைப் பார்த்து, மெல்லிய தோள்களைப் பார்த்து, அடிகளைப் பார்த்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி என்பது இப்பகுதியின் பொருள்.

அஃது ஆண்டு அவள் செய்தது:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.
மணக்குடவர் குறிப்புரை: அது - உடன்போக்கு.
பரிப்பெருமாள்: அவள் அவ்விடத்துச் செய்த குறிப்பு அதுவாயிருந்தது.
பரிப்பெருமாள் குறிப்புரை: அது - உடன்போக்கு. இஃது யான்பிரிவு உணர்த்தியவழி, இருப்பேம் ஆயின் தோள் மெலிந்து வளை கழலும் என்று நினைத்துப் போவளாகக் கருதி நடக்கவல்ல ஆகவேண்டும் என்று அடியைப் பார்த்தாள்; ஆதலால் உடன்போதல் கருதினள் என்று தோழி தலைமகற்குக் கூறியது
பரிதி: செய்தால் பாலையில் பரல் கடக்க வேண்டும் என்னும் குறிப்பு என்றவாறு.
காலிங்கர்: அத்துணையே அவ்விடத்து அவள் செய்த கருமம் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: நெஞ்சே! யாம் ஒன்று குறித்த இடத்து அவள் செய்த கருமம் இவை என்று எண்ணிச் செலவு அழுங்குவனாவது பயன் என அறிக.
பரிமேலழகர்: அங்ஙனம் அவள் செய்த குறிப்பு உடன் போக்காயிருந்தது.
பரிமேலழகர் குறிப்புரை: செய்த குறிப்பு-செய்தற்கு ஏதுவாய குறிப்பு. 'அஃது' என்றாள், 'செறிதொடி செய்திறந்த கள்ளம்' (குறள். 1275) என்றானாகலின். பிரிதற்குறிப்புண்டாயின், அஃது அழுங்குதல் பயன்.

'அவ்விடத்துச் செய்த குறிப்பு அதுவாயிருந்தது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். 'அது' என்பதற்கு மணக்குடவர், பரிப்பெருமாள், பரிதி ஆகியோர் உடன்போதல் குறித்தது என்றனர்; காலிங்கரும் பரிமேலழகரும் அஃது அழுங்குதல் பயன் என்றனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இது பிரிவு சொன்னபோது அவள் செய்தது', 'அவ்வளவுதான் அப்போது அவள் செய்தது', 'அவ்விடத்து உடன்போக்கைத் தலைவி குறிப்பித்தாள்', 'அவள் அங்கே செய்தது அது. (உடன் போக்குக்கு உடன்பட்டாளாகக் குறிப்புச் செய்தாள்.)' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு என்பது பாடலின் பொருள்.
'குறிப்பு' எதை உணர்த்திற்று?

பிரிவினால் வளையல்கள் கழலும் என்று உணர்த்த அவற்றை நோக்கியும், அவளுடைய தோள்களும் மெலியும் என்ற கருத்தால் அவற்றை நோக்கியும், அவை தம்மைக் காக்கக் காதலருடன் நடக்க வேண்டிவரும் என்பதற்காகத் தன் அடிகளையும் நோக்கினாள்; இக்காட்சியைக் கண்ணுற்று 'அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு' என்று தலைவன் கூறினான்.
தொழில் காரணமாக நெடுந்தொலைவு சென்றிருந்த கணவன் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டான். நீண்டநாட்கள் பிரிந்திருந்தவன் வந்ததால் காதலி மிகுந்த மகிழ்ச்சி அடைந்தாள். பிரிந்த நாள் முதல் அவனையே எண்ணி உடல் மெலிந்து தூக்கம் தொலைத்து கனவில் மட்டுமே அவனைப் பார்த்து ஆற்றிக்கொண்டு இருந்தாள். இதோ இப்பொழுது இவள் எதிரில் அவன் இருக்கிறான். கண்ணுக்கு மையெழுதி, மணிமாலை அணிந்து, அடுக்கிய வளை பூண்டு, புன்னகை பூத்து, புத்துணர்ச்சி பெற்றவளாய் பெண்மைப் பொலிவுடன் இருக்கிறாள் இவள். மற்றவர்களும் இல்லத்தில் இருந்ததால் அவர்கள் இன்னும் நெருக்கமாகச் சந்திக்க முடியவில்லை; குறிப்புக்களாலேயே பேசிக்கொள்கின்றனர். இதற்கிடையில் அப்பேதைக்கு அவன் மறுபடியும் பிரிந்து சென்றுவிடுவானோ என்ற அச்சமும் தோன்றியது. அவன் பிரிந்துவிட்டதாகவே கற்பனை செய்துகொண்டு தன் உடல் மெலிந்து வளை கழன்று விட்டது என்றும் ஒருநாள் பிரிவுக்கே ஏழுநாட்கள் பசப்பு உடலில் ஒட்டிக்கொண்டது என்றும் எண்ணத் தொடங்கினாள். அவன் நீங்கிவிடக்கூடாதே என்ற மனநிலையில் எழுந்தது இது. அப்பொழுது அவள் ஒன்று செய்தாள் - கணவன் பார்வை படும்படி இருக்கும்போது கைவளையல்களை நோக்கினாள்; அடுத்து தன் மெல்லிய தோள்களைப் பார்த்தாள். பின் தன் தாள்களை நோக்கினாள். தலைவியின் இச்செயல் தரும் குறிப்பு என்ன? அவன் பிரிந்தால் வளையல்கள் கழலும் தோள் மெலியும் என்று தலைமகனுக்குத் தெரிவிக்கிறாள்; இனியும் அவனை நீங்கித் தன்னால் வாழமுடியாது என்பதையும் அப்படி தலைவன் பிரிந்தே ஆகவேண்டியிருந்தால் தானும் உடன் போதலே செய்வது என்பதையும் அறிவிக்கத் தன்னையும் அழைத்துச் செல்லுங்கள் என்பாள் போலத் தன் சீறடிகளை நோக்கினாள். இதுவே அவள் செய்த குறிப்புக்கள்.

'குறிப்பு' எதை உணர்த்திற்று?

காதலன் தன்னைக் காணும்போது தன் வளைகளைப் பார்க்கிறாள். தன் தோள்களைப் பார்க்கிறாள்; பின்னர் தன்னுடைய அடிகளை நோக்குகிறாள். தலைவி அரங்கேற்றிய இந்த ஊமை நாடகம் தரும் செய்தி என்ன?
'அது-உடன்போக்கு' என்று மணக்குடவர் உரைத்தார். இதே பொருளிலேயே பின் வந்த பழைய ஆசிரியர்களும் இன்றைய ஆசிரியர்களும் உரை கண்டனர். சிலர் உடன்போதல் இல்லாவிட்டால் செலவுஅழுங்கல் (செல்வதை நிறுத்துதல்) என்று கூட்டி உரைத்தனர்.
உடன்போக்கு என்பதற்கு உடன்செல்லுதல் என்று பொருள். தலைவன் பிரிவில் செல்லும்போது தன்னையும் கூட்டிச் செல்லுமாறு தலைவி வேண்டுவதாக இக்குறட்கருத்தை விளக்குவர். உடன்போக்கு என்பது களவியலுக்குரியது என்று கருதப்படுவது. களவில் காதலனும் காதலியும், மணவினைக்கு முன், பெற்றோர்க்கு அறிவிக்காமல் இல்லத்திலிருந்து இடம்பெயர்ந்து செல்வதை உடன்போதல் என்பர். உடன்போக்கு களவுக்குரியது என்ற பொதுவான கருத்தால் இக்குறட்பாவையும் இவ்வதிகாரத்து மற்றப் பாடல்களையும் களவிற்குரியதாகக் கொண்டு சிலர் உரை செய்ததால் குழப்பம் உண்டாயிற்று. அதிகாரப் போக்கு தடைபெற்றது.
ஆனால் உடன்போதல் கற்பியலிலும் உண்டு என்று சொல்பவர்களும் உண்டு. கற்பியலில் உடன்போதல் படிப்பதற்குச் சுவையாக இருக்காது என்பதால் பொதுவாக அங்கு பாடப்படுவதில்லை. மேலும் கடமை காரணமாகச் செல்லுமிடத்தில் மனைவியையும் கூட்டிச் செல்லுதல் - அன்றும் சரி இன்றும் சரி - மரபு அன்று. அது முறையும் இல்லை. இவ்வதிகாரம் கற்பியலுக்கு உரியதுதான். உடன்போதலைத்தான் தலைவி குறிப்பிட்டாள்.
பிரிவின் துயரம் பட்டது போதும்; இனி ஒருபொழுதும் தலைவன் தன்னுடன் இல்லாமல் தன்னால் ஆற்றியிருக்க முடியாது என்பது குறிப்பின் பொருள்.

'தலைவன் எங்குள்ளானோ அங்கு நான் இருக்கவேண்டும்; அவனின்று நீங்கி என்னால் வாழமுடியாது' என்பது தலைவியின் செய்தி.

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி அது அவ்விடத்து அவள் செய்த குறிப்பு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

மறுபடியும் தலைவன் பிரியநேரிட்டால் அதற்கான தீர்வைக் குறிப்பறிவுறுத்தலாகக் காதலி செய்தது.

பொழிப்பு

வளையலைப் பார்க்கிறாள்; தோளைப் பார்க்கிறாள்; அடிகளைப் பார்க்கிறாள். அவ்வளவே அவள் செய்தது.