இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1280



பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப கண்ணினால்
காமநோய் சொல்லி இரவு

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1280)

பொழிப்பு (மு வரதராசன்): கண்ணினால் காமநோயைத் தெரிவித்துப் பிரியாம லிருக்குமாறு இரத்தல், பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது என்று கூறுவர்.

மணக்குடவர் உரை: வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல், தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்.
இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.

பரிமேலழகர் உரை: (தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) காமநோய் கண்ணினால் சொல்லி இரவு - மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப - தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்.
(தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு.)

இரா இளங்குமரனார் உரை: வாயால் சொல்லாமல் தன் கண்ணினால் தாம் அடைந்த காதல் நோயைச் சொல்லித் தீர்க்குமாறு கணவனை வேண்டும் பெண்தன்மையால் பெண்மை மேலும் சிறப்புடையது என்று கூறுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெண்ணினால் பெண்மை உடைத்து என்ப கண்ணினால் காமநோய் சொல்லி இரவு.

பதவுரை: பெண்ணினால் - பெண்ணால்; பெண்மை- பெண் இயல்பு; உடைத்து- நிலைபெற்றுள்ளது; என்ப - என்று சொல்லுவர்; கண்ணினால்-கண்களினால்; காமநோய் சொல்லி - காதல் துன்பம் பற்றி உரைத்து; இரவு - இரத்தல், வேண்டுதல்.


பெண்ணினால் பெண்மை உடைத்தென்ப:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்;
பரிப்பெருமாள்: தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்.
பரிதி: பெண்ணிற்குப் பெண் இதம் சொன்னது போல;
காலிங்கர்: தோழீ! அஃதேல் கற்புடை மகளிர் காதலாகும் ஒழுக்கம் உடைமை உடைத்து என்று சொல்வர் பெண்டிரின் அறிவுடையோர் என்றவாறு.
பரிமேலழகர்: (தலைமகன் பிரியாமைக் குறிப்பினைத் தோழிக்கு அறிவுறுத்தது.) தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்.

'பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்தென்று சொல்லுவர் அறிவோர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் காதலாகும் ஒழுக்கம் உடைமை உடைத்து என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'சிறந்த பெண்தன்மை என்று சொல்லுவர்', 'பெண்மைக்கு மேலும் ஒரு பெண்மையுடையதென்று சொல்லுவார்கள்', 'பெண்டன்மையினு மிக்க அடக்கமான ஒரு பெண்குணமுடையது', 'தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் அறிந்தோர்' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

கண்ணினால் காமநோய் சொல்லி இரவு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல்.
மணக்குடவர் குறிப்புரை: இது பிரிவுணர்த்திய தலைமகள் குறிப்புக்கண்டு தலைமகற்குத் தோழி சொல்லியது.
பரிப்பெருமாள்: வாயாற் சொல்லாது கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல்,
பரிப்பெருமாள் குறிப்புரை: இதனைப் பிரிவுக்கு இடையீடாகக் கொள்ளாது சொல் வழங்க வேண்டுமென்பது கருத்து. பிரிவுணர்த்தியவழித் தலைமகள் குறிப்புக்கண்டு தோழி சொல்லியது.
பரிதி: நாயகியிடத்து நாயகன் இன்பம் வேண்டி இரந்து கொள்ளுதல் என்றவாறு.
காலிங்கர்: நீ யான் அழுங்குவித்தல் என்; அவர் செலவு அழுங்கியவாறு என்னை என்கின்றனையாயின், என் நெஞ்சில் துயரக் குறிப்பினைக் கண்ணினால் கண்டு தாமே அருளச் செலவு அழுங்கினர்;
பரிமேலழகர்: மகளிர் தம் காம நோயினைத் தோழியர்க்கும் வாயாற்சொல்லாது கண்ணினாற் சொல்லி அது தீர்க்கவேண்டும் என்று அவரை இரவாது உடன்போதல் குறித்துத் தம் அடியினை இரத்தல்; [அது - காமநோய்; அவரை இரவாது - தோழியரை இரந்து (யாசித்துக்) கேட்காமல்;
பரிமேலழகர் குறிப்புரை: தலைமகளது உடன் போதல் துணிபு தோழியால் தெளிந்தானாகலின், தன் பிரிவின்மைக் குறிப்பினை அறிவுறுப்பான், அவள் பெண்மையினைப் பிறர்மேலிட்டு வியந்து கூறியவாறு. [தெளிந்தான் ஆகலின் - அறிந்தானாதலால்]

'கண்ணினாலே காமநோயைச் சொல்லி வேண்டிக்கோடல்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி: நாயகியிடத்து நாயகன் இன்பம் வேண்டி இரந்து கொள்ளுதல் என மாறுபாடாக உரைக்கின்றார். காலிங்கரும் 'என் நெஞ்சில் துயரக் குறிப்பினைக் கண்ணினால் கண்டு தாமே அருளச் செலவு அழுங்கினர்' எனச் சற்று வேறுபாடான பொருள் கூறினார். பரிமேலழகரும் 'தம் அடியினை இரத்தல்' எனச் சொல்லி வேறுபடுவார்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோயைக் கண்ணாற் சொல்லி வேண்டுதல்', 'வாயினால் வெளிப்படையாகக் கூறாமல் கண்ணினாலே காம நோயினைக் குறிப்பினாற் சொல்லி இரந்து வேண்டிக் கொள்ளுதல்', 'தலைவி கண்ணினால் தமது காமநோயைத் தெரிவித்துக் குறிப்பினாலே அதைத் தீர்க்க வேண்டுமென்று இரத்தல்', 'கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டுதல்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் பெண்ணினால் பெண்மை உடைத்து என்று சொல்லுவர் என்பது பாடலின் பொருள்.
'பெண்ணினால் பெண்மை உடைத்து' என்றதன் பொருள் என்ன?

கண்களால் தனது தவிப்பை வெளிப்படுத்தினாள் மனைவி.

கண்ணினாலே தலைவி காமநோயைத் தெரிவித்து இரந்தது அவளது பெண்மையை மேம்படுத்துவதாக இருந்தது.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாக நெடுநாட்கள் பிரிந்து சென்றிருந்து திரும்பி வந்துள்ள கணவன், கண்ணுக்கு மையெழுதி, மணிமாலை யணிந்து, கைநிறைய வளைஏந்தி, புன்னகை பூத்த முகத்துடன், பெண்மை நிறைந்த பொலிவுடன் விளங்கும் தலைவியின் அழகைக் குறிப்புகளால் பாராட்டுகிறான். அவளும் புன்னகை, வளையல்ஒலி, தோள், தாள், கண் இவற்றின்வழி காதல் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள். அவர்கள் கூடி இன்பம் துய்க்கத்தான் போகிறார்கள். ஆனாலும் அவன் மறுபடியும் அன்பற்று பிரிந்து விடுவானோ என்ற அச்சம் அவளுக்கு உள்மனத்தில் உண்டாகிவிட்டது. தலைவி தொடிநோக்கி, தோள்நோக்கி, பின் அடி நோக்குவதை - தலைவன் எங்குள்ளானோ அங்கு நான் இருக்கவேண்டும்; அவனின்று நீங்கி என்னால் வாழமுடியாது- பிரியின் உடன்வருவேன் என்ற செய்தியை அவள் குறிப்பால் உணர்த்துவதை அவன் அறிந்து கொள்கிறான்.

இக்காட்சி:
இவ்வளவு நாட்கள் பிரிவின் துயரத்தை அனுபவித்தவள் ஆதலால் காதல் ஏக்கம் மனைவியிடம் உண்டு. ஆனாலும் அதை வாய்விட்டு அவனிடம்-கணவன் என்றாலும் கூட- சொல்லப் பெண்மைக்கே உரித்தான நாண் தடுக்கிறது. எனவே தன் காதல்விருப்பத்தைக் கண்களால் சொல்லி இறைஞ்சுகிறாள். இவ்வாறு அவள் தன் காமநோயினைத் தீர்க்குமாறு, வாயால் சொல்லாமல் கண்களால் குறையிரக்கும் குறிப்பு, இயல்பாகிய பெண்மைக்கு மேலும் ஒரு பெண்மை சேர்ப்பதுபோல இருந்ததாம்.

இக்குறட்கு விளக்கம் தருவது போல் அமைந்துள்ள பாடல் ஒன்று சீவகசிந்தாமணியில் உள்ளது. அது:
காதன்மை கண்ணுளே யடக்கிக் கண்ணெனும்
தூதினால் துணிபொருள் உணர்த்தித் தான்தமர்க்கு
ஏதின்மை படக்கரந் திட்ட வாட்கணோக்கு
ஓதநீர் அமுதமும் உலகும் விற்குமே
(சீவகசிந்தாமணி கேமசரியார் இலம்பகம் 74 பொருள்: தன் வேட்கையையெல்லாம் தன் கண்ணுள்ளே கிடத்தி, அக் கண்ணென்கின்ற தூதாலே தான் எண்ணிய பொருளை எனக்கு அறிவித்துதான் தன் சுற்றத்தார்க்கு வேட்கை யாகிய காரணம் தோன்றாதவாறு மறைத்திட்ட கேமசரியின் நோக்கம் கடலில் தோன்றிய அமுதத்தையும் உலகையும் தனக்கு விலையாகக் கொள்ளும்)

தலைமகள் காமத்துன்பம் சொல்லி இரங்குவது, அடுத்து வரும் 'புணர்ச்சி விதும்பல்' அதிகாரத்துக்குத் தோற்றுவாய் போல அமைந்தது.

'பெண்ணினால் பெண்மை உடைத்து' என்றதன் பொருள் என்ன?

'பெண்ணினால் பெண்மை உடைத்து' என்றதற்குத் தமது இயல்பாகிய பெண்மையோடே பின்னையும் ஒரு பெண்மையுடைத்து, பெண்ணிற்குப் பெண் இதம், கற்புடை மகளிர் காதலாகும் ஒழுக்கம் உடைமை உடைத்து, தமக்கு இயல்பாகிய பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து, பெண்தன்மைக்கு மேலும் பெண் தன்மை உடையது, பெண்மைப்பண்பில் சிறந்த பெண்மையையுடையது, சிறந்த பெண்தன்மை, பெண்மைக்கு மேலும் ஒரு பெண்மையுடையது, பெண்ணால் தான் பெண் இனத்துக்கே பெருமை உண்டாகிறது, பெண்தன்மையால் பெண்மை மேலும் சிறப்புடையது, பெண்டன்மையினு மிக்க அடக்கமான ஒரு பெண்குணமுடையது. பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து, பெண்மையின் உச்சியான பெரும்பண்பு என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

காம உணர்வுகள் மாந்தரிடம் ஆண்-பெண் வேறுபாடின்றி அனைவர்க்கும் எழுவது இயல்பு என்றாலும் காமத்தால் தாம் துன்புறுவதை பெண்கள் வெளிப்படையாகச் சொல்வதில்லை. அவளது இயல்பான நாண்குணம் அப்படிச் சொல்வதைத் தடுத்து நிறுத்தும். இங்கு தலைவி தன் காதல்நோயைத் தெரிவிக்கிறாள். ஆனால் நாண் மிகக்கொண்டு தனது காதல் எண்ணங்களை வாய் திறவாமல் கண்களால் புலப்படுத்துகிறாள். குறிப்பால் காதலை உணர்த்தல் பெண்களின் தனி ஆற்றலாகும். தலைவி தன் கண்களின் குறிப்புக்களால் காட்டப்பட்ட காதலைத் தலைவன் மிகவும் சுவைக்கிறான். மகிழ்ச்சி மிக, பெருமித உணர்வுடன். இவ்விதம் வாயாற்சொல்லாது குறிப்பால் காமத்தை வெளிப்படுத்துவதை 'பெண்மைக்கு மேலும் ஒரு பெண்மையுடையதென்று சொல்லுவார்கள்' என்கிறான். பெண்மையே சிறப்புடையது. அதற்கு மேலும் சிறப்புச் செய்வது இச்செயல். தன் உரிமைக் கணவனிடம் கூட, தன் காமநோயினைத் தீர்க்குமாறு, மனைவி கண்ணால்தான் இறைஞ்சுவாள். அவ்விதம், கண்களாலேயே தம் குறையைக் கூறி, வாய்ச்சொற்கள் இன்றியே அதனைத் தீர்க்க வேண்டுமென்று வேண்டும் அச்செயல் பெண்மையினும் சிறந்த பெண்மை யாகும்; அது பெண்மைக்கு இன்னும் பெருமை சேர்ப்பதாகும் என்கிறது இப்பாடல்.

கண்களினால் காதல் துன்பத்தைச் சொல்லி வேண்டிக்கொள்ளல் பெண்மை மேலும் ஒரு பெண்மை உடைத்து என்று சொல்லுவர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

காதல்துன்பத்தைத் தீர்க்கக் கண்வழி குறிப்பறிவுறுத்தல் செய்கிறாள் தலைவி.

பொழிப்பு

காமத்துன்பத்தைக் கண் குறிப்பினாற் சொல்லி வேண்டுதல் பெண்மைக்கு மேலும் ஒரு பெண்மையுடையது என்று சொல்லுவர்.