நெருநற்றுச் சென்றார்எம் காதலர் யாமும்
எழுநாளேம் மேனி பசந்து
(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல்
குறள் எண்:1278)
பொழிப்பு (மு வரதராசன்): எம்முடைய காதலர் நேற்றுத்தான் பிரிந்து சென்றார்; யாமும் மேனி பசலை நிறம் அடைந்து ஏழு நாட்கள் ஆய்விட்ட நிலையில் இருக்கின்றோம்.
|
மணக்குடவர் உரை:
எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
பரிமேலழகர் உரை:
(இதுவும் அது.) எம் காதலர் சென்றார் நெருநற்று - எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே; யாமும் மேனி பசந்து எழுநாளேம் - அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
('நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.)
இரா சாரங்கபாணி உரை:
என் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார். ஆனால், நாம் மேனி பசந்து ஏழுநாள் உடையோம் ஆயினோம்.
|
பொருள்கோள் வரிஅமைப்பு:
எம் காதலர் நெருநற்றுச் சென்றார் யாமும் மேனி பசந்து எழுநாளேம்.
பதவுரை:
நெருநற்று-நேற்று; சென்றார்-(பிரிந்து) போனார்; எம்-எமது; காதலர்-காதலர்; யாமும்-நாமும்; எழு-ஏழு; நாளேம்-நாள்களையுடையோம்; மேனி-நிறம்; பசந்து-நிற வேறுபாடுற்று.
|
எம் காதலர் நெருநற்றுச் சென்றார்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்;
பரிப்பெருமாள்: எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்;
பரிதி: நாயகர் நம்மை நேற்றுப் பிரிந்தார்;
காலிங்கர்: தோழீ! யான் உனக்கு அங்ஙனம் குறித்து உரைத்தேன் ஒன்று முதல்நாள் இரவின்கண்; மற்று அதற்கு நெருநற்றுச் சென்றார் நம் காதலர்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) எம்காதலர் பிரிந்து போயினார் நெருநற்றே;
'எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'நேற்றுத்தான் காதலர் பிரிந்தார்', 'என்னுடைய காதலர் என்னைவிட்டு நேற்றுப் போனார்', 'எம்முடைய தலைவர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்', 'எம் காதலர் நேற்றுப் போயினார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.
எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார் என்பது இப்பகுதியின் பொருள்.
யாமும் மேனி பசந்து எழுநாளேம்:
இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது அவர் 'பிரியப்பட்ட தலைமகனை இத்துணைக் காலமும் இன்பம் துய்த்தாட்கு இன்றே இவ்வேறுபாடு வந்தது' என்று தோழி நோக்கிய குறிப்புக் கண்டு அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென்று ஏங்கி இன்புற்றிலேம் என்று தலைமகள் கூறியது.
பரிதி: எழு நாள் மேனி பசந்தது என்றவாறு.
காலிங்கர்: அஃது அறிந்து என்மேனி பசப்பு உற்று இன்று ஏழுநாள் உடையேம்;
காலிங்கர் குறிப்புரை: எனவே அன்று முதலாகக் காணாய் நீ முன்னமோடு இயையாமை உற்றது அறிந்து மெய்யுற்ற பசப்பு என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: அப்பிரிவிற்கு யாமும் மேனி பசந்து எழுநாள் உடையமாயினேம்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நெருநற்றுச் செய்த தலையளியாற் பிரிவு துணியப்பட்டது' என்பாள், 'நெருநற்றுச் சென்றார்' என்றும், அதனை ஐயுற்றுச் செல்கின்றது ஏழுநாளுண்டாகலின்,அன்றே மேனி பசந்தது என்பாள். 'மேனி பசந்து எழுநாளேம்' என்றும் கூறினாள். இவ்வாற்றான் தலைமகனது பிரிதற் குறிப்பினை உணர்த்தி நின்றது.
'யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.
இன்றைய ஆசிரியர்கள் 'அதற்குள் ஏழு நாள் அளவு பசலை அடைந்து விட்டேன்', 'இன்றைக்கு அவர் பிரிந்து ஏழு நாட்கள் ஆகிவிட்டது போல் என் மேனி நிறம் அவ்வளவு பசந்துவிட்டது', 'எமக்கு மேனி நிறவேற்றுமைப்பட்டு ஏழுநாளாயின', 'நாமும் மேனி பசப்புற்று ஏழு நாள் உடையம் ஆயினோம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.
அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது இப்பகுதியின் பொருள்.
|
நிறையுரை:
எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது பாடலின் பொருள்.
'எழுநாளேம்' என்பதன் பொருள் என்ன?
|
தலைவர் பிரிந்து ஒருநாள்தான் ஆயிற்று; ஆனால் எவ்வளவோ நாட்கள் ஆயின போன்று என் உடலெங்கும் பசலை பரவிவிட்டதே என்கிறாள் தலைவி.
இப்பொழுதுதான் நீண்ட நாட்கள் பிரிவுக்குப் பின் கடமையிலிருந்து கணவன் வீடு திரும்பியுள்ளான். அவன் வந்ததில் பெரு மகிழ்வு கொண்டாலும் அவன் மறுபடியும் பிரிந்து விடுவானோ என்ற எண்ணமும் அவள் மனதில் உடன் தோன்ற ஆரம்பித்து விட்டது. தலைவன் திரும்பி வந்ததையே அவன் தலையளி செய்ததுபோல் அவள் உணர்ந்தாள். ஆனால் அதுவே அவளுக்கு அவன் பிரியப்போகிறான் என்ற எண்ணத்தையும் தோற்றுவித்தது; அவன் பிரிந்து சென்று விட்டதாகவே நினைக்கத் தொடங்கி விட்டாள் தலைவி. சென்ற குறளில் தலைவன் மனதால் பிரிந்ததாக எண்ணி வளையல்கள் கழன்றுவிட்டன என்றாள். மேலும் பிரிவு அச்ச எண்ணம் மேலோங்கிய மனநிலையில் தலைவி 'என் தலைவர் நேற்றுத்தான் என்னை விட்டுப் பிரிந்தார். ஆனால், அவர் பிரிவை உணர்ந்து என் உடல் பசந்து ஏழுநாள்களாகிவிட்டன' என்கிறாள்.
காதலன் உடன் இருக்கும் போதே பிரிவான் என்ற குறிப்பால் நிகழ்ந்ததாக அமைந்த காட்சி இது.
|
'எழுநாளேம்' என்பதன் பொருள் என்ன?
'எழுநாளேம்' என்றதற்கு ஏழுநாளுடையம், எழு நாள், இன்று ஏழுநாள் உடையேம், ஏழுநாள்களாகிவிட்டன, ஏழு நாட்களானது போல, ஏழு நாள்கள் ஆய்விட்டன, ஏழுநாளாயின, ஏழுநாள் ஆகிவிட்டது போல், பல நாட்கள் ஆயின, எழுநாட் கழிந்த நிலையில் இருக்கின்றேம் என்று உரையாளர்கள் பொருள் கூறினர்,
இவற்றுள் ஏழுநாள் ஆகிவிட்டது போல் என்ற பொருள் பொருத்தம்.
'எழுநாளேம்' என்பதற்கு ஏழுநாள் ஆகிவிட்டது போல் என்பது பொருள்.
|
எம் காதலர் நேற்றுத்தான் பிரிந்து போயினார்; அதற்குள் ஏழு நாள் அளவு மேனி நிறவேற்றுமை அடைந்து விட்டேன் என்பது இக்குறட்கருத்து.
காதலன் பிரிவான் என்ற குறிப்பறிவுறுத்தல் உணர்ந்து தலைவி கூறியது.
நேற்றுத்தான் காதலர் பிரிந்து சென்றார்; அதற்குள் ஏழு நாள் அளவு நிறவேற்றுமை உண்டாயிற்று.
|