இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1274முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1274)

பொழிப்பு (மு வரதராசன்): அரும்பு தோன்றும்போதும் அடங்கியிருக்கும் மணத்தைப் போல், காதலியின் புன்முறுவலின் தோற்றத்தில் அடங்கி இருக்கும் குறிப்பு ஒன்று உள்ளது.

மணக்குடவர் உரை: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போலப் பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு.
இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) முகை மொக்குள் உள்ளது நாற்றம்போல் - முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல; பேதை நகை மொக்குள் உள்ளது ஒன்று உண்டு - நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
(முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல். நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.)

வ சுப மாணிக்கம் உரை: மொட்டுக்குள் மணம் இருத்தல் போல இவள் சிரிப்புக்குள் ஒரு குறிப்பு உண்டு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு.

பதவுரை:
முகை - மலரும் பருவத்து ஆகிய அரும்பு; மொக்குள் - மொட்டினுள்; உள்ளது - இருப்பதாகிய; நாற்றம்போல் - மணம் போன்று; பேதை - பெண். இவ்விடத்து காதலி குறித்தது; உள்ளது ஒன்று உண்டு - இருப்பதாகிய (குறிப்பு) ஒன்று உண்டு.


முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல;
பரிப்பெருமாள்: மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல;
பரிதி: அரும்புக்கு நாற்றம்போலே;
காலிங்கர்: நெஞ்சமே! முன் அரும்புகின்ற முகையானது பின் புடைபெயர அங்ஙனம் மொக்குளித்து நின்ற மொக்குகளின் அகத்து ஒரு நாற்றம் உள்ளதுபோல;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முகையது முகிழ்ப்பினுளதாய்ப்புறத்துப் புலனாகாத நாற்றம் போல;
பரிமேலழகர் குறிப்புரை: முகிழ்ப்பு - முதிர்ச்சியாற் புடைபடுதல்.

'மொட்டின் முகிழ்ப்பின்கண் உளதாகிய நாற்றம்போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மலரப் போகின்ற மொட்டில் உள்ளதாகிய மணம்போல', '(இதழ் விரியாவிடினும்) மலரப் போகிற பூ மொட்டுக்குள் உள்ளே இருக்கிற மணம் (வெளீயிலும் வீசுவது) போல', 'இதழ் மூடிய அரும்பினுள் மணம் அடங்கியிருத்தல்போல', 'பூ மொட்டு மலரும் சமயத்தில் உள்ளிருந்து தோன்றும் நறுமணம் போல்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல என்பது இப்பகுதியின் பொருள்.

பேதை நகைமொக்குள் உள்ளதொன்று உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு.
மணக்குடவர் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்திய போது இவள் குறிப்பு நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிப்பெருமாள்: பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோ ரின்பம் உண்டு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது இரந்து பின்னின்ற தலைமகனைத் தோழி நகைசெய்து சேட்படுத்த இடத்து, இவள் குறிப்பினாள் நமக்கு இன்பம் பயக்குமென்று அவன் தன்னெஞ்சிற்குச் சொல்லியது.
பரிதி: நாயகி சிரிப்பிலே, அன்பு உண்டு அல்லது இல்லை என்று காட்டும் என்றவாறு.
காலிங்கர்: இப்பேதையாளது நகைமொக்குள் அகத்துப் புறப்படாது பொதிந்திருப்பதோர் குறிப்பு உண்டுகாண்; காலிங்கர் குறிப்புரை: எனவே யான் தன்னைப் பெரிது அளித்தமை பிறிது ஒன்றிற்கு உரித்து என்று இங்ஙனம் குறித்தனள் போலும் என்றவாறு.
பரிமேலழகர்: நின் பேதை என்னோடு நகக் கருதும் நகையது முகிழ்ப்பினுளதாய்ப் புறத்துப் புலனாகாததோர் குறிப்பு உண்டு.
பரிமேலழகர் குறிப்புரை: நகை - புணர்ச்சி இன்பத்தான் நிகழ்வது.

பேதையுடைய நகைமுகிழ்ப்பின்கண்ணே உள்ளதோர் இன்பம்/குறிப்பு உண்டு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பெண்ணின் சிரிப்பு முகிழ்ப்பில் உள்ளதாகிய ஒரு குறிப்பு உண்டு. (குறிப்பு-புணர்ச்சிக் குறிப்பு)', '(பல் தெரியாமல்) குவிந்திருக்கிற இப்பேதையின் உதடுகளின் உள்ளே (சிரிப்பு) இருக்கிறது (எனக்குத் தெரிகிறது)', 'இவளது சிரிப்பாகிய முகிழ்ப்பினுள் அடங்கியிருக்கும் ஒரு குறிப்பு உண்டு', 'இப் பெண் சிரிக்க விரும்பும் சமயத்தில் தோன்றும் ஒரு குறிப்பு உண்டு' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

இப்பெண்ணினது நகைமுகிழ்ப்பில் ஒரு குறிப்பு உண்டு என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமொக்குள் ஒரு குறிப்பு உண்டு என்பது பாடலின் பொருள்.
'நகைமொக்குள்' குறிப்பது என்ன?

மலரும் பருவத்திலுள்ள மொட்டினுள்ளே இருக்கும் மணம் போல, காதலியின் உள்ளத்தில் இருக்கும் மறைபொருளான எண்ணம் ஒன்றினை அவளது புன்முறுவல் என்னும் நகைக் குறிப்புத் தெரிவிக்கின்றது.
பிரிவிற் சென்றிருந்த கணவன் திரும்பி வந்துவிட்டான். தலைவன் இன்னநாளில் வீடு திரும்புகிறான் என்ற செய்தி கேள்விப்பட்டதிலிருந்தே அதுவரை தளர்ந்திருந்த தலைவியின் மனநிலை முற்றிலும் மாறி இன்று பூரித்து உள்ளாள். அவனும் இப்பொழுது இல்லம் வந்துவிட்டான். கண்ணுக்கு மையெழுதி மணிமாலை அணிந்து அவனை எதிர்கொள்ள நிற்கின்றாள். வீடு திரும்பிய தலைவனும் காதலியும் நெருக்கமாகச் சந்திக்க இயலவில்லை. அதனால் பலவகைக் குறிப்பு மொழிகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். இங்கு தோன்றும் காட்சியில், அச்சமும் நாணும் முந்துறுத்தலால், அவனை நோக்கி மெல்லிய புன்னகையை முகிழ்க்கின்றாள் தலைவி. அப்புன்னகையில் அவளது உள்ளக் குறிப்பை உணர்ந்து கொள்கிறான். என்ன குறிப்பு அது? அவள் தலைவன்மீது அளவு கடந்த காதல் கொண்டிருக்கிறாள் என்பது அந்தக் குறிப்பு. வாய்விட்டு வெளிப்படையாய்ச் சொல்லவியலாக் கூட்ட இன்பத்தை விரும்பும் தலைவியின் உள்ளக் கிடக்கையை உணர்ந்து அதை மறைந்திருக்கும் நறுமணத்திற்கு ஒப்பாக்கி 'ஒன்று' என அதைத் தலைவன் இப்பாடலில் குறிக்கிறான்.

தலைவியின் உள்ளம் காதலைச் சொல்ல விழைகிறது; ஆனால் அவளது அகத்தே விளங்கும் நாணம் வீறுபெற்றிருப்பதால் சொற்கள் எழவில்லை. இது பெண்களுக்குண்டான காதல் போராட்டம். அவள் பேசாமல் பேசிக் காதலனைப் பிணிக்கிறாள். தலைவன் மீதுள்ள காதல் உணர்வை கள்ளமாக மறைத்து ஒரு குறுநகை மூலம் அதை வெளிப்படுத்துகிறாள். அரும்பினுள்ளே இருக்கும் நறுமணம் எப்படிப் புறத்துப் புலனாவதில்லையோ அது போன்று தலைவியின் முறுவலில் புறத்தே புலனாகாத காதல்ஆசைகள் முகிழ்த்து உள்ளன.

'நகைமொக்குள்' குறிப்பது என்ன?

'நகைமொக்குள்' என்ற தொடர்க்கு நகைமுகிழ்ப்பின்கண்ணே, சிரிப்பிலே, நகையது முகிழ்ப்பினுள் (முகிழ்ப்பு -முதிர்ச்சியாற் புடைபடுதல்), புன்முறுவலின் தோற்றத்தில், மலரும் நிலையிலுள்ள புன்னகையாகிய மொட்டுக்குள், சிரிப்புக்குள், சிரிப்பு முகிழ்ப்பில், பல் தெரியாமல் இதழ் குவிந்திருக்கிற வாயின், சிரிக்க விரும்பும் சமயத்தில், புன்னகை மொட்டுக்குள் புன்சிரிப்பில், புன்முறுவலுக்குள், நகை யரும்பும் முறுவலுக்குள், மொட்டாக இருக்கும் புன்னகையிலும், மலர்ந்த முகத்தில் உண்டாகும் புன்சிரிப்பிலே, புன்முறுவலுக்குள்ளே, சிரிப்பாகிய முகிழ்ப்பினுள் என உரையாளர்கள் பொருள் கூறினர்,

அரும்பிலிருந்து மலராகி உதிர்வது வரை பதிமூன்று படிநிலைகள் இருக்கின்றன என்கின்றனர்:
(1) அரும்பு – அரும்பும் நிலை
(2) நனை – அரும்பு வெளித்தெரியும் நிலை
(3) முகை – முத்துப்போன்ற வளர்ச்சி நிலை
(4) மொக்குள் – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
(5) முகிழ் – மணத்துடன் முகிழ்த்தல்
(6) மொட்டு – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
(7) போது – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
(8) மலர்- மலரும் பூ
(9) பூ – பூத்த மலர்
(10) வீ – உதிரும் பூ
(11) பொதும்பர் – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
(12) பொம்மல் – உதிர்ந்து கிடக்கும் புதுப் பூக்கள்
(13) செம்மல் – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம்பெற்றழுகும்நிலை
கணவன் திரும்ப வந்தபின் தலைவியின் எண்ணத்தில் காதல் விம்மி நிற்கிறது. உளம் நிறைந்த மகிழ்ச்சியில் அவள் முழுவதுமாக நகைக்காமல் புன்னகை மட்டும் காட்டுகிறாள். அது நகைமொக்குள் என்று அழைக்கப்பட்டு அரும்பு மணத்துடன் முகிழ்ப்பதற்கு முன்னால் உள்ள நிலையுடன் ஒப்பிடப்பட்டது. காதல் எண்ணங்கள் அவள் நகைக்கின்ற தோற்றத்தில் அடங்கிக் கிடக்கின்றன.
அரும்பு முகிழ்த்திருப்பது புன்முறுவலையும், அரும்பினுள் இருக்கும் மணம் தலைவியின் மனத்தில் நிறைந்திருக்கும் இன்ப உணர்ச்சிகளையும் குறித்து நின்றன.

மலரப் போகின்ற மொட்டில் இருக்கும் மணம்போல இப்பெண்ணினது நகைமுகிழ்ப்பில் ஒரு குறிப்பு உண்டு என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

தலைவியின் குறுநகையிலும் ஒரு குறிப்பறிவுறுத்தல் உண்டு.

பொழிப்பு

மலரப் போகின்ற மொட்டில் இருப்பதான மணம்போல, இப்பெண்ணின் புன்சிரிப்பு முகிழ்ப்பில் உள்ளதாகிய ஒரு குறிப்பு உண்டு.