இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1271கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண்
உரைக்கல் உறுவதொன்று உண்டு

(அதிகாரம்:குறிப்பறிவுறுத்தல் குறள் எண்:1271)

பொழிப்பு (மு வரதராசன்): நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக்கூடிய செய்தி ஒன்று இருக்கின்றது.

மணக்குடவர் உரை: .............................................................

பரிமேலழகர் உரை: (பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) கரப்பினும் - நீ சொல்லாது மறைத்தாயாயினும்; ஒல்லா கை இகந்து - அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து; நின் உண்கண் உரைக்கலுறுவது ஒன்று உண்டு - நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக.
(கரத்தல் - நாணால் அடக்குதல், தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.)

இரா சாரங்கபாணி உரை: நீ சொல்லாது நாணத்தால் மறைத்தாலும் அதற்கு உடன்படாமல் உன்னைக் கடந்து உன் மையுண்ட கண்களே எமக்குச் சொல்லக் கூடியதொரு காரியம் ஒன்று உள்ளது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கரப்பினும் கையிகந்து ஒல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன்று உண்டு.

பதவுரை:
கரப்பினும்-மறைத்தாலும் அதாவது ஒளித்தாலும்; கையிகந்து- கைமீறி; ஒல்லா- இயலாத; நின் -உன்னுடைய; உண்கண்- மை உண்ட கண்; உரைக்கல்- சொல்லல்; உறுவது-பெறுவது; ஒன்று உண்டு- ஒரு செய்தி உண்டு.


கரப்பினும் கையிகந்து ஒல்லா:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ..............................................................
பரிப்பெருமாள்: நீ மறைக்கவும் நின்னைக் கைகடந்து மறைத்தற்கு இசையாவாய்;
பரிதி: ஒளிக்கினும் ஒளிக்கப்படாது;
காலிங்கர்: கேளாய்! நின் நெஞ்சிற் குறித்தது நீ எம்மைக் கரப்பினும் தாம் எமக்கு நல்ல ஆகலான் நின் நிலைமையைக் கடந்து மற்று அதனைக் கரத்தல் ஒல்லாவாய்;
பரிமேலழகர்: (பிரிந்து கூடிய தலைமகன் வேட்கை மிகவினாற் புதுவது பன்னாளும் பாராட்டத் தலைமகள் இது ஒன்று உடைத்து என அஞ்சியவழி, அதனை அவள் குறிப்பான் அறிந்து, அவன் அவட்குச் சொல்லியது.) நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்கு உடம்படாதே நின்னைக் கை கடந்து;
பரிமேலழகர் குறிப்புரை: கரத்தல் - நாணால் அடக்குதல்,

'நீ மறைத்தாலும் அதற்கு உடம்படாதே உன்னைக் கை கடந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நீ மறைத்தாலும் மீறி', 'நீ மறைத்தாலும் அதை ஒத்துக்கொள்ளாமல்', 'நீ மறைப்பினும், உன் கை கடந்து மறைத்தற்கு உடன்படாது', 'நீ சொல்லாது மறைத்தாலும் அதற்கு உடம்படாது நின்னைக் கடந்து', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நீ மறைத்தாலும் அதற்கு உடன் படாது உன்னையும் மீறி என்பது இப்பகுதியின் பொருள்.

நின் உண்கண் உரைக்கல் உறுவதொன்று உண்டு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: .............................................................
பரிப்பெருமாள்: நின் கண்கள் சொல்லுவது ஓர் அருள் உண்டு என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகள், 'இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று' என்று வினாவிய தோழிக்குச் 'சுனை ஆடினேன்' என்று தலைமகள் மறைத்த இடத்து அவள் நாணம் நீங்குதல் பொருட்டுப் புணர்ச்சி உண்மை அறிந்தமை குறிப்பினால் தோழி சொல்லியது. இவ்வாறு ஒருபுறம் தோன்றச் சொல்லாக்கால் நாணத்தாலே இறந்துபடும்.
பரிதி: விரக மகிழ்ச்சி கண் பார்வையில் காட்டும் என்றவாறு.
காலிங்கர்: (ஒண்கண் பாடம்) நினது ஒண்கண்ணானவை எனக்குச் சொல்லல் உறுவது ஒரு நீர்மை. உண்டு. காலிங்கர் குறிப்புரை: எனவே இங்ஙனம் இவள் தலைவற்குக் கண்ணினால் தன்குறிப்பு அறிவுறுத்தச் செலவு அழுங்கியமை பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: நின்கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியமுண்டாய் இராநின்றது, இனி அதனை நீயே தெளியச் சொல்வாயாக.
பரிமேலழகர் குறிப்புரை: தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான் அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு.

'நினது மையுண்டகண்ணானவை எனக்குச் சொல்லல் உறுவது ஒரு அருள்/நீர்மை/காரியம் உண்டு' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உன் கருங்கண்கள் ஏதோ ஒன்றைச் சொல்லுகின்றன', 'உன்னுடைய மையுண்ட கண்கள் உன்னை மீறி (என்னிடத்தில்) சொல்ல வரும் சேதி ஒன்று இருக்கிறது. (அதை அறிந்து கொண்டேன்)', 'நின் மையுண்ட கண்கள் என்னிடம் சொல்ல விரும்புவது ஒன்றிருக்கின்றது. நீ அதைத் தெளிவாய்ச் சொல்லுக', 'நின் மையுண்ட கண்களே எனக்குச் சொல்லல் உறுவதொரு காரியம் இருக்கின்றது' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாது உன்னையும் மீறி உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்பது பாடலின் பொருள்.
அவளது கண்கள் சொல்லும் செய்தி என்ன?

'நீ மறைத்தாலும் உன் மையுண்ட கண்கள் ஏதோ சொல்லவருகிறாய் என்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது' என்கிறான் தலைவன்.
கடமை காரணமாகப் பிரிவிற் சென்ற காதலன் திரும்பி வந்துவிட்டான். சென்ற அதிகாரத்தின் பாடல் ஒன்று தலைவன் வரும்சமயம் அவனை எப்படி வரவேற்பது என்பதை எண்ணி -ஊடுவேனோ? தழுவுவேனோ? அவனுடன் கலந்து விடுவேனோ? - தலைவி குழம்பி நின்றதைச் சொன்னது. இப்பொழுது அவன் கண் முன்னால் நிற்கின்றான். அவனிடம் சொல்ல எவ்வளவோ இருக்கின்றன. எதைச் சொல்வது? இருப்பினும் அவள் மனதில் ஒரு செய்தி மேலோங்கி நிற்கின்றது. அதைச் சொல்ல நாண் தடுக்கின்றது. ஆனால் அவனுக்குத்தான் அவளது அகமும் புறமும் முழுக்கத் தெரியுமே. அச்செய்தியை அவள் கண்களிடம் வாசித்துவிடுகிறான். அவற்றைப் பார்த்த உடனேயே தலைவன் புரிந்துகொண்டான்- அவள் ஏதோ சொல்லவிரும்புகிறாள். ஆனாலும் அதை அடக்கி வைக்க முயற்சிக்கிறாள் என்பதை. பின் அவன் மனதுக்குள் சொல்கிறான்: 'நீ என்னதான் மறைத்தாலும் உன்னையும் மீறி உன் கண்கள் சொல்லிவிட்டன; அது என்னவென்று எனக்குத் தெரியும்' என்று.

இப்பாடலைக் கற்புத் துறையாகப் பல உரையாளர்களும் களவுத் துறையாகச் சிலரும் கொண்டனர். கற்பியலுக்குரியதாகக் கொள்வதே ஏற்கும்.

அவளது கண்கள் சொல்லும் செய்தி என்ன?

நெடுங்காலப் பிரிவிற்குப் பின் வந்த தலைவனை ஆவலுடன் அள்ளிப்பருகுபவள் போல் பார்க்கிறாள் தலைவி. அவள் உள்ளத்து நிகழ்ந்த மெய்ப்பாட்டினை அவளது கண்வழி அவன் அறிந்துகொண்டான். அவன் அறிந்த செய்தி என்ன என்பதற்கு உரையாளர்கள் கூறியவற்றில் சில:
'இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகளை இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று என வினவ தோழிக்குச் சுனையாடினேன் என்று தலைமகள் மறைத்தவிடத்து அவள் நாணம் நீங்குதற் பொருட்டுப் புணர்ச்சி உண்மை அறிந்தமை குறிப்பினால் தோழி சொல்லியது' என்பார் பரிப்பெருமாள். பரிதி 'விரக மகிழ்ச்சி கண் பார்வையில் காட்டும்' என்றார். காலிங்கர் 'இவள் தலைவற்குக் கண்ணினால் தன்குறிப்பு அறிவுறுத்தச் செலவு அழுங்கியமை' என உரைத்தார். பரிமேலழகர் 'தன்கண் பிரிதற் குறிப்புள்ளதாகக் கருதி வேறுபட்டாளது வேறுபாடு குறிப்பான அறிந்து அவட்குத் தன் பிரியாமைக் குறிப்பு அறிவுறுத்தவாறு' என அது பிரிதற் குறிப்பு எனச் சொன்னார்.
மற்றவர்கள் 'ஏதோ ஒன்றைச் சொல்லுகின்றன', 'இணைவிழைச்சு, கூடி மகிழ விரும்புவது', 'பெண்மை நுட்பமாய் மறைக்கும் காம உணர்வு' என்பதாக மொழிந்தனர். பெரும்பான்மையினர் தலைவியானவள் தலைவனை நோக்கி 'நீ பிரிந்து செல்வதை என் உள்ளம் பொறாது, அதனால் மீண்டுமொரு முறை பிரிந்து செல்லாதே' என்பதை உணர்த்தினாள் என்று பொருள் கூறியுள்ளனர்.

'என்னைவிட்டு நீங்காமல் என்னுடனேயே நீ எப்பொழுதும் இருக்கவேண்டும்' என்பது தலைவியின் கண்கள் சொல்லும் செய்தியாகும்.

நீ மறைத்தாலும் அதற்கு உடன் படாது உன்னையும் மீறி உன் மையுண்ட கண்கள் சொல்ல வருவது ஒன்றிருக்கின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

திரும்பி வந்த தலைமகனுக்குக் கண்ணால் குறிப்பறிவுறுத்தல் செய்கிறாள் காதலி.

பொழிப்பு

நீ மறைத்தாலும் அதற்கு உடன்படாமல் கைமீறி உன் மையுண்ட கண்கள் சொல்லக் கூடிய செய்தி ஒன்று உள்ளது.பின்னூட்டங்கள் இட்டவரது தனிப்பட்ட கருத்துக்கள் ஆகும், குறள்.திறன் அவற்றிற்கு பொறுப்பேற்காது.
கருத்துரைகள் சீர்மைப்படுத்த பின்னர் பதிப்பிக்கப்படும்.