இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1221 குறள் திறன்-1222 குறள் திறன்-1223 குறள் திறன்-1224 குறள் திறன்-1225
குறள் திறன்-1226 குறள் திறன்-1227 குறள் திறன்-1228 குறள் திறன்-1229 குறள் திறன்-1230

மாலைப் பொழுது காதல் எண்ணத்தைப் பெருக்கிக் காதலனைக் கூட வேண்டும் என்னும் அவாவை மிகுதிப்படுத்தும் தன்மையது. அம்மாலை நேரத்தில் தலைவி தலைவனை நினைந்து மாலைப் பொழுதின் இயல்பைக் கூறி வருந்துகின்றாள்.
- சி இலக்குவனார்

காதல்கணவர் உடனில்லாதபோது, பகலும் இருளும் மயங்குகின்ற மாலைப்பொழுது கண்டு மனைவி வருந்துதலைச் சொல்வது. மாலை வந்தவிடத்து துணையின்றித் தனிமையிலிருக்கும் மணந்த மகளிர் பிரிவுத் துன்பந் துய்ப்பதை இவ்வதிகாரப் பாடல்கள் புலப்படுத்துகின்றன. காலையில் அரும்பும் இக்காதல் நோய் பகலெல்லாம் முதிர்ந்தஅரும்பாக-போதாக உள்ளது. மாலை வந்ததும் அது மலர்ந்து முழுஅளவில் வருத்துகிறது என்கிறது இப்பாடல் தொகுப்பு.

பொழுதுகண்டிரங்கல்

பொழுது கண்டு இரங்கலாவது மாலைப்பொழுதின் வரவு கண்டு தலைமகள் வருந்துதல். .'பொழுது' என்பது காலை, நண்பகல், மாலை என்ற மூன்றுக்கும் பொதுவென்றாலும் இங்கே அதிகாரப் பொருளை ஒட்டி, காமப் பொழுதாகிய மாலைப் பொழுதைக் குறிக்கும். பகலின் முடிவும் இரவின் தொடக்கமும் நிகழும் ஒரு குறுகிய நேரம் மாலைப்பொழுது ஆகும். பளபளவென்று இருந்த பகற்பொழுது மங்கிக் கொண்டே போய் மாலை வரும் நேரம் ஒருவகைச் சோர்வான காலமாகவே இருக்கும். தலைவரைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், காலை நண்பகல் போல் அல்லாது மாலைப்பொழுதில் காமநோய் மிகுந்த துயர் அளிக்கும்.
மாலைப்பொழுது கண்டு தலைவி வருந்துவது அடுத்து வரவுள்ள அச்சமூட்டும் இரவுப்பொழுது பற்றியே; கணவர் உடன்இல்லாத இரவு கொடுமையானது என்பதால் மாலை துன்பத்திற்கு காரணமாகின்றது.

கடமை காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவரைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணின் காதல் நோய் காலையில் குறைந்து இருக்கும்; ஆனால், மாலையில் அந்தத் துயரம் படிப்படியாக வளர்ந்துவிடுகிறது. தன் துயரம் வளர்ந்ததற்குக் காரணம் மாலைப் பொழுதுதான் என்று எண்ணி 'நீ நல்லா இரு!' என்று அவள் வாழ்த்துவது போல அதைப் பழிக்கிறாள். உயிருண்ணும் வேல், மருள்மாலை, பைதல்கொள் மாலை, கொலைக்களத்துக் கொலைஞன், நோய் செய்யும் மாலை, அழல்போலும் (நெருப்புப் போன்றது), கொல்லும் படை, மதி மருளும் மாலை என தன் வெறுப்பை அப்பொழுதின்மீது கொட்டித் தீர்க்கிறாள். தலைவர் நினைவு வந்து தவிக்கும் ஒவ்வொரு மாலையும் நான் செத்துச் செத்துப் பிழைக்கிறேன்; அவர் பொருள் சேர்ப்பதிலேயே குறியாய் இருக்கிறாரே! என இரங்கிக் கூறுகிறாள் தலைமகள்.

பொழுதுகண்டிரங்கல் அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 1221 ஆம்குறள் மாலைப்பொழுதே, நான் காதலரோடு கூடியிருந்தபோது வந்தது நீ அல்ல; காதலரைக் கூடிய மகளிர் உயிரை உண்ணும் வேலாய் இருக்கிறாயே. வாழ்க! என்று தலைவி கூறுவதைச் சொல்கிறது.
  • 1222 ஆம்குறள் மயங்கிய மாலைப்பொழுதே, துன்பம் தோன்ற உள்ளாய்; எம் கணவரைப் போல உன் துணையுங் கொடியதோ? எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1223 ஆம்குறள் குளிர் தோன்றும் மாலைப்பொழுது இப்பொழுது எனக்கு வெறுப்பூட்டி என் துயரம் மிகும்படி வருகின்றது என்று தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1224 ஆம்குறள் கணவர் இல்லாதவிடத்து மாலைப்பொழுது, கொலைக்களத்தில் அருள் காட்டவியலாத கொலைஞர் போல, என்னுயிரைக் கொண்டுபோக வரும் என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1225 ஆம்குறள் காலைப் பொழுதுக்கு செய்த நன்மை என்னவென்று அறிகிலேனே! மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமைதான் என்னவோ? எனத் தலைவி கேட்பதைச் சொல்வது.
  • 1226 ஆம்குறள் காதலர் என்னைவிட்டு நீங்காமல் இருந்த பொழுதில் மாலைப்பொழுது இவ்வளவு வருத்தம் செய்யும் என்று அறிந்திருக்கவில்லை என்று தலைவி சொல்வதைக் கூறுகிறது.
  • 1227 ஆம்குறள் காதல் என்னும் நோய் காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றிப் பகற்பொழுதெல்லாம் மொக்குப் போல் முதிர்ந்து, மாலைப் பொழுதில் மலர்கிறது என்பதைச் சொல்கிறது.
  • 1228 ஆம்குறள் மாலைப் பொழுது நெருப்பாய் தோன்ற, தொலைவில் கேட்கும் ஆயனின் புல்லாங்குழல் ஓசை உயிர் நீக்க வரும் படைக்கருவி போலும் எனத் தலைவி கூறுவதைச் சொல்வது.
  • 1229 ஆம்குறள் மாலைப் பொழுது மயங்கிப் பரவும்போது எனக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆகிவிடுகிறது எனத் தலைவி சொல்வதைக் கூறுவது.
  • 1230 ஆவதுகுறள் பொருள் வளர்த்தலை ஓர் இயல்பாக உடைய காதலரை நினைத்துப் பிரிவைத் தாங்கிக் கொண்டு இதுவரை இறவாமல் இருந்த என் உயிர், இரவும் பகலும் மயங்குதற்குரிய மாலைப் பொழுதில், அழிகின்றது என தலைவி கூறுவதைச் சொல்வது.

பொழுதுகண்டிரங்கல் அதிகாரச் சிறப்பியல்புகள்

இந்த அதிகாரம் முழுமையும் கவிநயம் நிறைந்ததாக உள்ளது.

தலைவியை மணந்தார் என்று அழகுற அழைக்கிறது குறள் 1221. இப்பாடலில் தன் காதல் துன்பத்தை மாலைப்பொழுதிடம் சொல்லி ஆறுதல் பெறும் வண்ணம் அவள் உயிரை உண்ணும் வேலாய் இருக்கிறாயே என்று மாலையை 'வேல்' என்று உருவகப்படுத்தியதும் சிறப்பாக உள்ளது.

குறள் 1224-இல் அரசால் ஒறுக்கப்படவேண்டியவன் கட்டுண்டு கிடக்க ஓங்கிய கையில் பெரிய கத்தியுடன் விரைந்து வரும் கொலைஞனை, மாலைப் பொழுது நெருங்கி வருவதுடன் ஒப்புமைப்படுத்திக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மாலைப் பொழுதுகண்ட தலைவியின் அச்சத்தை இது நன்கு விளக்குகிறது.

காலை அரும்பிப் பகல் எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய் என்ற பாடல் (குறள் 1227) காதல் நோய் வளர்நிலைகளைத் தெளிவாகக் காட்டுகிறது.

ஒருபுறம் படர்ந்து வரும் மாலை தீயாகத் தோன்ற இன்னொரு புறம் தொலைவில் ஆயன் வீடு திரும்பும் தன் பசுக்களைக் கூட்டிக்கொள்ள எழுப்பும் புல்லாங்குழல் இசை கொல்லும் படையாக வருகிறது என்னும் காட்சி திகில் உண்டாக்கும் வண்ணம் குறள் 1228-இல் வரையப்பட்டுள்ளது.

மாலை வந்தாலே எனக்குப் பைத்தியம் பிடித்தது போல் ஆகிறது என்பதை பதிமருண்டு-மதிமருண்டு என்று சொல்விளையாட்டுடன் பொருந்தச் சொல்கிறது.

முதல் பாடலில் (குறள் 1221) 'வாழி' என்ற சொல் ஏளனக் குறிப்புடன் தலைவி சொல்வதாக இருக்க மேலும் ஒரு குறள் (1230) 'பொருளை மணந்தவர்போல் அதையே தேடிச் சுற்றிக்கொண்டிருப்பவர், இங்கே ஒருத்தி அவர் நினைவாகவே செத்துக் கொண்டிருப்பது தெரியவில்லையாக்கும்!' எனக் காதலரை பொருள் மயக்கம் கொண்டவர் என்று எள்ளிச் சொல்வது சுவையுடன் கூடியதாய் உள்ளது.




குறள் திறன்-1221 குறள் திறன்-1222 குறள் திறன்-1223 குறள் திறன்-1224 குறள் திறன்-1225
குறள் திறன்-1226 குறள் திறன்-1227 குறள் திறன்-1228 குறள் திறன்-1229 குறள் திறன்-1230