இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1226



மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
காலை அறிந்தது இலேன்

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1226)

பொழிப்பு: மாலைப்பொழுது இவ்வாறு துன்பம் செய்யவல்லது என்பதைக் காதலர் என்னைவிட்டு அகலாமல் உடனிருந்த காலத்தில் யான் அறியவில்லை.

மணக்குடவர் உரை: மாலைப்பொழுது நோய் செய்தலை என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.

பரிமேலழகர் உரை: ('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) மாலை நோய் செய்தல் -முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை; மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன் -காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன்.
('இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: மாலைக்காலம் நோய் செய்யும் என்பது காதலர் பிரியாதபோது எனக்குத் தெரியாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்.


மாலைநோய் செய்தல்:
பதவுரை: மாலை-மாலைப்பொழுது; நோய்-துன்பம்; செய்தல்-இயற்றல்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மாலைப்பொழுது நோய் செய்தலை;
பரிப்பெருமாள்: மாலைப்பொழுது நோய் செய்தலை;
பரிதி: மாலைக்காலம் நம்மை நோய் செய்கிற வகைக்கு;
காலிங்கர்: தோழீ! மாலைப் பொழுதானது எம்மை இப்படி இடர் செய்தலை;
பரிமேலழகர்: ('இன்று இன்னையாகின்ற நீ, அன்று அவர் பிரிவிற்கு உடம்பட்டது என்னை'? என்றாட்குச் சொல்லியது.) முன்னெல்லாம் எனக்கு நட்பாய் இன்பஞ்செய்து போந்த மாலை இன்று பகையாய்த் துன்பஞ்செய்தலை;

'மாலைப்பொழுது நோய் செய்தலை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலைப்பொழுது துன்பம் செய்தலை', 'இந்த மாலைப்பொழுது எனக்குத் துன்பம் உண்டாக்கின்றதில்லையே', 'மாலைப்பொழுது துன்பஞ் செய்யு மென்பத்தை', 'மாலைப்பொழுது இன்று துன்பம் செய்தலை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை என்பது இப்பகுதியின் பொருள்.

மணந்தார் அகலாத காலை அறிந்தது இலேன்:
பதவுரை: மணந்தார்-மணந்தவர்; அகலாத-பிரியாத; காலை-வேளை; அறிந்தது-அறியப்பெற்றது; இலேன்-நான் இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
மணக்குடவர் குறிப்புரை: அறிந்தேனாயின், இது நோய் செய்யுமென்று கூறியிருப்பேன். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
பரிப்பெருமாள்: என்னோடு கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: அறிந்தேனாயின், அது நோய் செய்யுமென்று கூறலாம். இது மாலையால் வருத்தமுற்ற தலைமகள் தலைமகனை நினைந்து கூறியது.
பரிதி: கூடிய நாயகர் இருக்கையிலே பிரிந்தவர்க்கு மாலைப் பொழுது இல்லை என்று கெட்டேன் என்றவாறு.
காலிங்கர்: எம்மைக் கைகலந்த காதலர் கைய்கலாது உடன்வாழ்காலத்துச் சிறுதும் யான் அறிந்தததோ இல்லேன் என்றவாறு.
பரிமேலழகர்: காதலர் பிரிதற்கு முன்னே அறியப் பெற்றிலேன்.
பரிமேலழகர் குறிப்புரை: 'இங்ஙனம் வேறுபடுதல் அறிந்திலேன்: அறிந்தேனாயின், அவர் பிரிவிற்கு உடம்படேன்', என்பதாம்.

'கூடினவர் பிரியாத காலத்தே அறியப் பெற்றிலேன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்னை முயங்கிய காதலர் பிரியாதபோது அறிந்தேன் இல்லை', 'என் காதலர் என்னை விட்டுப் பிரியாமல் என்னுடன் இருக்கிற காலங்களில்', 'காதலர் பிரியாத காலத்து நான் தெரிந்துகொள்ளவில்லை', 'என்னை மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு நீங்காத பொழுதில் அறியப் பெற்றிலேன்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதலர் என்னைவிட்டு நீங்காமல் இருந்த பொழுதில் மாலைப்பொழுது இவ்வளவு வருத்தம் செய்யும் என்று அறிந்திருக்கவில்லை.

மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை மணந்தார் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது பாடலின் பொருள்.
'மணந்தார்' யார்?

மாலைநோய் செய்தல் என்ற தொடர்க்கு மாலைப் பொழுது துன்பம் செய்தலை என்பது பொருள்.
அகலாத காலை என்ற தொடர் பிரியாத பொழுது என்ற பொருள் தரும்.
அறிந்தது இலேன் என்ற தொடர்க்கு தெரிந்து வைத்திருக்கவில்லை என்று பொருள்.

அவர் என்னை விட்டு பிரிந்து செல்வதற்கு முன் இனிதாய் இருந்த மாலைப்பொழுது இப்படி கொல்லும் வகை துன்புறுத்துமென்று அப்பொழுது தெரியாமல் போயிற்று.

மணம் செய்து கொண்டவர் இப்போது கடமை ஆற்றுவதற்காகப் பிரிந்து சென்றுள்ளார். பிரிவு தாங்கமுடியாமல் தலைவி வருந்தி சோர்வுறுகிறாள். ஒவ்வொரு மாலைப்பொழுதும் கொல்வது போல் துன்புறுத்துகிறது. மயங்கும் மாலையில் காதல்நோய் மிகுகிறது. காதலன் பிரிவதற்கு முன் உடன் வாழ்ந்த காலத்திலும் மாலைப் பொழுது வந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் அந்நாட்களில் இவ்வாறு மாலைக்காலம் என்னை வருத்தியது இல்லையே! அவர் இருக்கும்வரை மாலைப்பொழுது இந்த அளவு தீங்கு செய்ய வல்லது என்பதை அறியாதிருந்தேன். இப்போதுதான், அவர் நீங்கிய பிறகுதான் தெரிகிறது அது எவ்வளவு கொடியது; முன்பே தெரிந்திருந்தால் அதற்கு தீர்வு தேடி ஆற்றியிருந்திருப்பேன். என்று தலைவி கூறுகிறாள்.

'மணந்தார்' யார்?

மணந்தார் என்ற சொல்லுக்கு மணந்து கொண்ட காதலர், மணந்த கணவர், காதலர், மணந்த என்னுடைய அன்பர் எனப் பொருள் கூறினர். மணக்குடவர் என்னோடு கூடியவர் என உரைக்கின்றார். இதற்குச் சான்றாக .....குருகு முண்டுதான் மணந்த ஞான்றே (குறுந்தொகை 25) என்றவிடத்தில் தலைவன் தன்னைக் 'களவில் மணந்த' காலத்தில் அதாவது கூடிய காலத்தில் என்ற பொருளில் வந்துள்ளதை இரா சாரங்கபாணி சுட்டுக் காட்டுவார்.

'மணந்தார்' என்ற சொல்லுக்கு மணந்து கொண்ட காதலர் என்பது பொருள்.

மாலைப்பொழுது துன்பம் உண்டாக்குதலை மணந்து கொண்ட காதலர் என்னை விட்டு பிரியாத காலத்து தெரிந்திருக்கவில்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

பிரிவில்தான் தெரிகிறது மாலை எவ்வளவு கொடியது என்று தலைவி கூறும் பொழுதுகண்டு இரங்கல் பாடல்

பொழிப்பு

மாலைப்பொழுது துன்பம் செய்யும் என்பதை காதலர் பிரிவதற்கு முன் அறிந்திருந்தேன் இல்லை.