இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1223பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித்
துன்பம் வளர வரும்

(அதிகாரம்:பொழுதுகண்டிரங்கல் குறள் எண்:1223)

பொழிப்பு: பனி தோன்றிய பசந்த நிறம்கொண்ட மாலைப்பொழுது எனக்கு வருத்தம் ஏற்பட்டுத் துன்பம் மேன்மேலும் வளரும்படியாக வருகின்றது.

மணக்குடவர் உரை: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.

பரிமேலழகர் உரை: (ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) பனி அரும்பிப் பைதல்கொள் மாலை - காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை; துனி அரும்பித் துன்பம் வளர வரும் - இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.
(குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது. துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.)

வ சுப மாணிக்கம் உரை: நடுங்கி வருந்தும் மாலை வெறுப்பு ஊட்டிப் பிரிவுத் துன்பம் பெருகுமாறு வருகின்றது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை துனிஅரும்பித் துன்பம் வளர வரும்.


பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை:
பதவுரை: பனி- குளிர்ச்சி; அரும்பி-எய்தி; பைதல்-துன்பம்; கொள்-கொள்கின்ற; மாலை-மாலைப்பொழுது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது;
பரிப்பெருமாள்: நெருநல் எனக்கு நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது;
பரிதி: பனியிரும்பிச் செக்கர்வானம் செய்யும் மாலைப் பொழுது;
காலிங்கர்: தன் மேனி மேல் நுண்பனி அரும்பி மயங்கு உருவாகிய பைதன்மை கொண்டு மற்று இம்மாலையானது யாங்கும் ஈண்டும் அடிகொண்டு;
பரிமேலழகர்: (ஆற்றல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது.) காதலர் கூடிய நாளெல்லாம் என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை;
பரிமேலழகர் குறிப்புரை: குளிர்ச்சி தோன்ற மயங்கிவருமாலை என்னுஞ் செம்பொருள் இக்குறிப்புணர நின்றது.

'நடுக்கத்தை யுண்டாக்கித் தானும் புன்மை கொண்டிருந்த மாலைப்பொழுது' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'செக்கர்வானம் செய்யும் மாலைப் பொழுது' என்றார். காலிங்கர் 'நுண்பனி அரும்பி மயங்கு உருவாகிய பைதன்மை கொண்டு' என்றும் பரிமேலழகர் 'முன்பு என்முன் நடுக்கம் எய்திப் பசந்து வந்த மாலை' என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலரோடு கூடியிருந்தபோது நடுக்கம் தோன்றத் துன்பத்துடன் வந்த மாலை', 'கண்ணீர் அரும்பித் துன்பப்படுவதுபோலத் தோன்றுகிற இந்த மாலைப்பொழுது', 'காதலர் என்னோடிருக்கும்போது நடுக்கமடைந்து மங்கிவந்த மாலைப்பொழுது', 'காதலர் கூடிய நாள் எல்லாம் என் முன் நடுக்கம் அடைந்து பசந்து வந்த மாலை', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

குளிர்நடுக்கம் எய்தச் செய்து துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது என்பது இப்பகுதியின் பொருள்.

துனிஅரும்பித் துன்பம் வளர வரும்:
பதவுரை: துனி-உயிர் வாழ்வதில் வெறுப்பு; அரும்பி-தோன்றி; துன்பம்-துயரம்; வளர-முதிர; வரும்-வரும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இன்றும் எனக்கு வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
மணக்குடவர் குறிப்புரை: இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
பரிப்பெருமாள்: இன்றும் எனக்கு வெறுப்புத்தோற்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது முன்னை ஞான்று மாலையாலடர்ப்புண்ட தலைமகள் பிற்றைஞான்று மாலை வருவது கண்டு கூறியது.
பரிதி: துனி அரும்பித் துன்பம் பெருக வரும் என்றவாறு.
காலிங்கர்: பின்னும் இத்துன்பம் நமக்கு யாமம் எல்லாம் வளர்ந்து எடுப்பதற்கு வந்து எய்தா நின்றது; மற்று என்னை செய்வது என்றவாறு.
பரிமேலழகர்: இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம் துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிக வாராநின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: துனி - உயிர் வாழ்தற்கண் வெறுப்பு. 'அதனால் பயன் ஆற்றுமாறு என்னை'? என்பது குறிப்பெச்சம்.

'வெறுப்புத்தோன்றி வருத்தம் மிகும்படியாக வாரா நின்றது' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பிரிந்த இந்நாள் எனக்கு வெறுப்புத் தோன்றித் துன்பம் மிக வந்துள்ளது', 'எனக்கு அச்சமும் துன்பமும் அதிகரிக்கச் செய்யத்தான் வருகிறது', 'இப்பொழுது எனக்குக் கவலையைத் தோற்றுவித்து என் துன்பம் மிகும்படி வருகின்றது', 'இந்நாள் எனக்கு இறந்துபாடு வந்து தோன்றி அதற்கு உளதாம். துன்பம் ஒரு காலைக்கு ஒருகால் மிகவாரா நின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

எனக்குக் கவலையைத் தோற்றுவித்துத் துன்பம் பொழுதுக்குப் பொழுது மிகும்படி வருகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நடுக்கம் தரும் குளிர் உண்டாக்கிய மாலைப்பொழுது இப்பொழுது எனக்குக் கவலையைத் தோற்றுவித்து என் துயரம் மிகும்படி வருகின்றது.

குளிர்நடுக்கம் எய்தச் செய்து துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது எனக்குக் கவலையைத் தோற்றுவித்துத் துன்பம் பொழுதுக்குப் பொழுது மிகும்படி வருகின்றது என்பது பாடலின் பொருள்.
'பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை' என்ற தொடர் குறிப்பது என்ன? ?

துனிஅரும்பி என்ற தொடர்க்கு வெறுப்புத் தோன்றி என்பது பொருள்.
துன்பம் என்ற சொல் துயரம் என்ற பொருள் தரும்.
வளர என்ற சொல்லுக்கு மிகும்படி என்று பொருள்.
வரும் என்றது வருகிறது என்ற பொருளது.

பனியின் குளிர்தந்து வருத்தமுறச் செய்த மாலைப்பொழுது இப்பொழுது வெறுப்பை மனதில் கொள்ளச்செய்து ஒவ்வொரு மாலைப்பொழுதும் உயிர் வாழ்தற்கண் வெறுப்பை மிகச் செய்ய வருகிறது என்கிறாள் தலைவி.

பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கும் கணவரை நினைத்து அவர் எப்பொழுது திரும்பி வருவாரோ என்ற ஏக்கத்துடன் தலைவி காத்துக் கொண்டிருக்கிறாள். மாலைப்பொழுது வந்தால் காதல் நோய் கூடிவிடுகிறது. பனி பரவத் தொடங்குகிறது. அதனால் மாலைநேரம் குளிர்ச்சியாக இருக்கும். பகல்நீங்கி சுற்றிலும் ஒளிகுறைகிறது. இன்றும் குளிர்ச்சி தோன்ற மயங்கிவருகிறது மாலை நேரம்; காமவேதனை வாட்டப் போகிறதே என்று நடுங்குகிறாள் அவள்; வாழ்வே வெறுத்துப் போகிறது அவளுக்கு. காதலர் உடன் இருந்தால் கார்காலப் பனி பெருமகிழ்வு எய்தத் துணை செய்யும். அவர் இல்லாததினால் குளிர் மாலைப்பொழுதால் வெறுப்பும் துன்பமும்தான் கொள்கிறாள் தலைமகள்.

'பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை' என்ற தொடர் குறிப்பது என்ன?

'பனியிரும்பிச் செக்கர்வானம் செய்யும் மாலைப் பொழுது' என இத்தொடர்க்கு உரை கூறினார் பரிதி. நாமக்கல் இராமலிங்கம் கண்ணீர் அரும்பத் துன்பப்பட்டுக் கொண்டு என் முன் வரும் மாலைப் பொழுது என உரை செய்கிறார். இதுவும் ஏற்புடையதே. மற்றவர்கள் குளிர்ச்சி தோன்றி/நடுக்கம் தோன்றி பசலை அதாவது பசுமை கொண்ட/ துன்பம் கொள்ள வரும் மாலைப்பொழுது என்று உரை கூறினார்.

'பனிஅரும்பிப் பைதல்கொள் மாலை' என்பதற்குக் குளிர்ச்சி தோன்ற துன்பம் கொண்ட மாலை என்பது பொருள்.

குளிர்நடுக்கம் எய்தச் செய்து துன்பம் உண்டாக்கும் மாலைப்பொழுது எனக்குக் கவலையைத் தோற்றுவித்துத் துன்பம் பொழுதுக்குப் பொழுது மிகும்படி வருகின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்பம் தந்த குளிர் இப்பொழுது துன்பம் பெருகக் காரணமாகியது என்று தலைவி கூறும் பொழுதுகண்டிரங்கல் பாடல்.

பொழிப்பு

குளிர் நடுக்கம் எய்தத் துன்பத்துடன் வந்த மாலை எனக்கு வெறுப்புத் தோன்ற காதல் துன்பம் மிகுவிக்க வந்துள்ளது