இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1227காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி
மாலை மலரும்இந் நோய்

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1227)

பொழிப்பு: இந்தக் காமநோய், காலைப்பொழுதில் அரும்பாய்த் தோன்றி, பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் வளர்ந்து மாலைப்பொழுதில் மலராகின்றது.

மணக்குடவர் உரை: இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது.

பரிமேலழகர் உரை: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) இந்நோய் - இக்காமநோயாகிய பூ; காலை அரும்பி - காலைப் பொழுதின்கண் அரும்பி; பகல் எல்லாம் போது ஆகி - பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து; மாலை மலரும் - மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.
(துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.)

வ சுப மாணிக்கம் உரை: காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாகும்; மாலையில் மலரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி மாலை மலரும்இந் நோய்.


காலை அரும்பிப் பகல்எல்லாம் போதாகி:
பதவுரை: காலை-விடியற்காலம்; அரும்பி-மொட்டாகி; பகல்-பகற்பொழுது; எல்லாம்-முழுவதும்; போதாகி-பேரரும்பு ஆய்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து;
பரிப்பெருமாள்: விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ்த்து;
பரிதி: காலை அரும்பிப் பகற்பொழுது முகிழ்த்து;
காலிங்கர்: நெஞ்சே! காலை வந்து அரும்பிப் பகற் பொழுதாகிய அளவு இறந்த நாழிகை எல்லாம் பூ வடிவுகொண்டு, விம்மி, மணம் பொதிந்து;
பரிமேலழகர்: ('மாலைப் பொழுதின்கண் இனையையாதற்குக் காரணம் என்னை'? என்றாட்குச் சொல்லியது.) காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து;

'காலைப் பொழுதின்கண் அரும்பி பகற்பொழுதெல்லாம் பேரரும்பாய் முதிர்ந்து' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலைப்பொழுதில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் மொட்டாய் முதிர்ந்து', 'காலையில் அரும்புவிட்டுப் பகல் முழுதும் சிறுகச் சிறுக முதிர்ந்து மொட்டாகி', 'காலைப் பொழுதில் அரும்புபோலத் தோன்றிப், பகற்பொழுதெல்லாம் பேரௌம்பாய் முதிர்ந்து', 'காலையில் தோன்றி, பகல் முழுவதும் உருவாகி', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விடியற்காலையில் அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து என்பது இப்பகுதியின் பொருள்.

மாலை மலரும்இந் நோய்:
பதவுரை: மாலை-மாலைப்பொழுது; மலரும்-விரியும்; இந்நோய்-இந்த (காதல்)துன்பம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.
பரிப்பெருமாள்: இக்காம நோயாகிய பூ மாலைக்காலத்தே மலரா நின்றது.
பரிப்பெருமாள் குறிப்புரை: மாலையால் வருத்தமுற்ற தலைமகள் வேறுபாடு கண்டு, 'விடியலும், நண்பகலும் ஆற்றி இப்பொழுது வேறுபட்டாய்; இதற்குக் காரணம் என்' என்ற தோழிக்குத் தலைமகள் காரணம் கூறியது.
பரிதி: காமமாகிய மலர் அந்திக்காலம் மலரும் என்றவாறு.
காலிங்கர்: யாம் உறுகின்ற இக்காம நோயானது, மற்று இம்மாலைப் பொழுதின்கண் வந்து மலராகி நிற்கும் என்றவாறு.
பரிமேலழகர்: இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: துயிலெழுந்த பொழுதாகலின் கனவின்கண் கூட்டம் நினைந்து ஆற்றுதல்பற்றி, 'காலை அரும்பி' என்றும், பின் பொழுது செலச்செல அது மறந்து பிரிவுள்ளி ஆற்றாளாதல் பற்றிப் 'பகலெல்லாம் போதாகி' என்றும் , தத்தம் துணையை உள்ளி வந்து சேரும் விலங்குகளையும் மக்களையும் கண்டு, தான் அக்காலத்தின் நுகர்ந்த இன்பம் நினைந்து ஆற்றாமை மிகுதிபற்றி 'மாலை மலரும்' என்றும் கூறினாள். 'பூப்போல இந்நோய் காலவயத்ததாகாநின்றது' என்பது உருவகத்தால் பெறப்பட்டது. ஏகதேச உருவகம்.

'இக்காமநோயாகிய பூ மாலைப் பொழுதின்கண் மலராநிற்கும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமநோயாகிய பூ மாலைப் பொழுதில் நன்கு மலர்ந்து விடும்', 'இந்தக் காமநோய் என்னும் மலர், மாலை நேரத்தில்தாம் மலராக விரிகிறது. (அதனால் தான் காலை வேளையில் இந்தக் காமத் துன்பம் வருத்துவதில்லை)', 'இந்தக் காமநோயானது மாலைப் பொழுதின்கண் மலர்கின்றது', 'இக்காதல் நோய் மாலைப்பொழுதில் மிகும். (காதல் பூ காலையில் காயரும்பாகி பகலில் பேரரும்பாகி மாலையில் மலராக விரியும்.)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

காதல் என்னும் இத்துன்பம் மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
காதல் என்னும் நோய் காலைப்பொழுதில் அரும்புபோல் தோன்றிப் பகற்பொழுதெல்லாம் மொக்குப் போல் முதிர்ந்து, மாலைப் பொழுதில் மலர்கிறது.

துன்பம் உண்டாக்கும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது பாடலின் பொருள்.
'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன?

காலை அரும்பி என்ற தொடர்க்குக் காலைப் பொழுதில் அரும்பாகத் தோன்றி என்பது பொருள்.
பகல்எல்லாம் என்ற தொடர் பகல் முழுவதும் என்ற பொருள் தரும்.
மாலை மலரும் என்ற தொடர்க்கு மாலைப் பொழுதில் பூவாகிவிடும் என்று பொருள்.
இந்நோய் என்பது இக் (காதல்)துன்பம் என்ற பொருளது.

காதல்நோய் காலையில் மொக்கு விட்டுப் பகற்பொழுதில் மொட்டாகி மாலையில் மலர்ந்து விடுகிறது.

தலைவனது பிரிவை ஆற்றமாட்டாமல் தலைவி மிகவும் வருந்திக் கொண்டிருக்கிறாள். அவன் நினைவால் அவளது உடல் மெலிந்து உறக்கமும் தொலைகிறது. பொழுதும் துன்பத்தை மிகுவிக்கிறது. மயங்கும் மாலை நெருங்கினால் துன்பம் தாங்காமல் துவள்கிறாள் அவள். விடியற்காலை பார்த்த தோற்றத்தில் அவள் இல்லை. நண்பகல் தோன்றியதினும் மாறுபட்டு இருக்கிறாள். மாலையில் முற்றிலும் மாறி துவண்டு போனாள். ஏன் என்பதை இப்பாடல் விளக்குகிறது.
நோய் என்று இப்பாடலில் சொல்லப்பட்டது காதல் துன்பத்தை. நோய்-துன்பம் என்னும் இடத்தில் காதல் எனக்கொண்டு அதைப் பூவின் வளர்ச்சிநிலைகளுக்கு ஒப்புமை கண்டால் குறட்கருத்து விளக்கம் பெறும். காதலின் வளர்ச்சி கூறவே பூ மலர்தல் சொல்லப்பட்டது. நிறைவு குறைதலான காமம், காலை புலரும்போது அரும்பும்; பகலில் பொழுது செல்லச்செல்ல போதாகும்; மாலையில் மலரும் அதாவது முழு அளவினதாய்த் தாக்கும் என்கிறது இச்செய்யுள். பூ காலத்தொடு பொருந்தி வளர்வதுபோலக் காம உணர்வும் காலத்தொடு பொருந்தி வளர்வதைக் குறிக்கிறது இது.காலையில் எழும்போது காதலனுடைய நினைவில் அவளுக்கு மீண்டும் காதல் நோய் அரும்பத் தொடங்கும்; அது பகல் பொழுது வளர வளர தானும் வளர்ந்து, மாலை நேரம் வந்தபிறகு மீண்டும் முழுவதுமாக மலர்கிறது. காமம் மலரைப் போல் அழகானது, இனிமையானது என்றாலும், நோயைப்போல் துன்பம் தருவதால் அதுவே மலரும் நோயுமாம்.
காலையில் சிறிதளவாக இருந்த காமமும் துன்பமும், பொழுதுசாயும் மாலையில் பெரிதாய் வளர்ந்து விடுகிறது என்பது கருத்து.

'உருவகங்கள் பெற்ற வள்ளுவரின் சொல்லாட்சிகள் அனைத்தையும் வகுத்தும் தொகுத்தும் பார்க்கும் போதுதான் அவர் மொழிநடையில் அவற்றை எத்துணை அளவு நுட்பமாகக் கையாண்டுள்ளார் என்பது தெளிவாகும்' என்று இ சுந்தரமூர்த்தி இக்குறளில் உள்ள மொழிநடை பற்றிக் கருத்துரைக்கிறார்.

'போதாகி' என்ற சொல்லின் பொருள் என்ன?

போதாகி என்றது 'போது ஆய்' என்ற பொருள் தரும்.
போதாகி என்றதற்கு முகிழ் முகிழ்த்து, முகிழ்த்து, பேரரும்பாய் முதிர்ந்து, முதிர்ந்த மொட்டாகி, மொட்டாய் முதிர்ந்து, முகை மொட்டாகி, மொக்குப் போல் திரண்டு, பேரரும்பாய் முதிர்ந்து, மலரும் பக்குவத்தில் உள்ள பேரரும்பாகி, மலரத்தக்க மொட்டாகி, மொட்டாக இருந்து என்று பொருள் கூறினர்.
காலிங்கர் விம்மி, மணம் பொதிந்து என்று இச்சொல்லுக்கு உரை கூறினார்.
பூவின் மூன்று நிலைகளான 1. அரும்பு 2. போது 3. மலர் என்பதில் இடையில் இருப்பது போது என்பது. முகைமொக்குள் உள்ளது நாற்றம்.... (குறள் 1274 பொருள்: முகை சிறுது முகிழ்க்கும் போது இன்னமும் முற்றிலும் வெளிப்படாது சிறுது தோன்றும் நறுமணம்...) என்ற தொடரில் உள்ள முகை மொக்கு என்றது 'போது' நிலையைக் குறிப்பதாக உள்ளது.

'போதாகி' என்ற சொல்லுக்கு முகைமொக்காகி அல்லது முகைமொட்டாகி என்பது பொருள்.

துன்பம் தரும் காதல், விடியற்காலையில் அரும்பி, பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து, மாலைக்காலத்தே மலராக விரிந்து நிற்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காமம் என்னும் மாலையில் பூக்கும் மலர் துன்பத்தை மிகுவிக்கிறது என்னும் பொழுதுகண்டு இரங்கல் பாடல்.

பொழிப்பு

காமம் என்னும் பூ காலையில் அரும்பும்; பகலெல்லாம் மொட்டாய் முதிரும்; மாலையில் மலர்ந்து விரியும்.