இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1225காலைக்குச் செய்தநன்று என்கொல் எவன்கொல்யான்
மாலைக்குச் செய்த பகை

(அதிகாரம்:பொழுதுகண்டு இரங்கல் குறள் எண்:1225)

பொழிப்பு: யான் காலைப்பொழுதிற்குச் செய்த நன்மை என்ன? (என்னைத் துன்புறுத்துகின்ற) மாலைப்பொழுதிற்குச் செய்த பகையான தீமை என்ன?மணக்குடவர் உரை: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ? அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த நன்று என் - யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது? மாலைக்குச் செய்த பகை எவன் - மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
(கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: காலையும் மாலையும் அவரை முயங்கிய காலத்து உள்ளனபோல் இன்பம் செய்யாது வேறுபட்டுத் துன்பம் செய்கின்றன. அவற்றுள் காலைக்கு நான் செய்த நன்மை என்ன? மாலைக்குச் செய்த தீமை என்ன?


பொருள்கோள் வரிஅமைப்பு:
யான் காலைக்குச் செய்த நன்று என்கொல்? மாலைக்குச் செய்த பகை எவன்கொல்?


காலைக்குச் செய்தநன்று என்கொல்:
பதவுரை: காலைக்கு-காலைப் பொழுதுக்கு; செய்த-இயற்றிய; நன்று-உதவி; என்கொல்-யாதோ?

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ?
பரிப்பெருமாள்: காதலர் பிரிவதன் முன்னம், பிரிவரென்று அச்சத்தைத் தந்த காலைப்பொழுது பிரிந்தபின்பு வருத்தாது ஒழிதற்கு யான் செய்த நன்மை யாதோ?
பரிதி: காலைப் பொழுதுக்குச் செய்த நன்றி ஏது?
காலிங்கர்: நெஞ்சே! மற்று யாம் காலைக்குச் செய்த நன்மைதான் என்கொலோ?
பரிமேலழகர்: (இதுவும் அது.) (காலையும், மாலையும், அவர் கூடிய ஞான்று போலாது இஞ்ஞான்று வேறுபட்டு வாராநின்றன; அவற்றுள்) யான் காலைக்குச் செய்த உபகாரம் யாது?

யான் காலைக்குச் செய்த நன்மை யாது? என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காலைப் பொழுதுக்கு நான் செய்த நலம் என்ன?', 'காலை வேளைக்கு நான் செய்த உபகாரம் என்ன', 'காலையும் மாலையும் வெவ்வேறு வகையாக வருகின்றன. காலைக்கு நான் செய்த நன்மை யாது?', 'நான் காலைப் பொழுதுக்குச் செய்த நன்மை என்ன?', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்னவோ? என்பது இப்பகுதியின் பொருள்.

எவன்கொல்யான் மாலைக்குச் செய்த பகை:
பதவுரை: எவன்கொல்-யாதோ? யான்-நான்; மாலைக்குச்-மாலைப்பொழுதுக்குச்; செய்த-இயற்றிய; பகை-அபகாரம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
மணக்குடவர் குறிப்புரை: இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: அவரோடு இன்பம் நுகர்தற்கு நட்பாயிருந்த மாலைப்பொழுது பிரிந்த பின்பு வருத்துவதற்கு யான் செய்த பகைமை யாதோ?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மாலையது பண்பின்மையை உட்கொண்டு தலைமகள் கூறியது.
பரிதி: மாலைப் பொழுதுக்குச் செய்த குற்றம் யாதோ என்றவாறு.
காலிங்கர்: அஃது அன்றி மற்று இம்மாலைக்கு, யாம் செய்த பகைதான் என்கொலோ? காலிங்கர் குறிப்புரை: எனத்தன் மாட்டு ஒரு பிழை செய்யாதவை பேரிடர் செய்கின்ற இது பெரும்பாவி என்றவாறு.
பரிமேலழகர்: மாலைக்குச் செய்த அபகாரம் யாது?
பரிமேலழகர் குறிப்புர: கூடிய ஞான்று பிரிவர் என்று அஞ்சப்பண்ணிய காலை, அஃது ஒழிந்து இஞ்ஞான்று கங்குல் வெள்ளத்திற்குக் கரையாய் வாராநின்றது என்னும் கருத்தால், 'நன்று என்கொல்' என்றும், 'கூடிய ஞான்று இன்பம் செய்து வந்த மாலை அஃது ஒழிந்து இஞ்ஞான்றும் அளவில் துன்பஞ் செய்யாநின்றது' என்னும் கருத்தால், 'பகை எவன்கொல்'? என்றும் கூறினாள். பகை - ஆகுபெயர். தன்னோடு ஒத்த காலைபோலாது மாலை தன் கொடுமையால் துன்பம் செய்யாநின்றது என்பதாம்.

மாலைக்குச் செய்த பகை யாது? என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பகை என்ற சொல்லுக்குப் பரிதி குற்றம் என்றும் பரிமேலழகர் அபகாரம் என்றும் பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமை என்ன?', 'இந்த மாலை வேளைக்கு நான் செய்துவிட்ட அபகாரம் என்னவோ தெரியவில்லை!', 'மாலைக்கு நான் செய்த தீமை யாது?', 'மாலைக்குச் செய்த தீமை என்ன?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நான் மாலைப் பொழுதிற்குச் செய்த தீமைதான் என்ன? என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
காலைப் பொழுதுக்கு செய்த நன்மை என்னவென்று அறிகிலேனே! மாலைப் பொழுதுக்கு நான் செய்த தீமைதான் என்னவோ?

நான் காலைப் பொழுதிற்குச் செய்த நன்மை என்னவோ? நான் மாலைப் பொழுதிற்குச் செய்த தீமைதான் என்ன? என்பது பாடலின் பொருள்.
பொழுது என்ன நன்மை, என்ன தீங்கு செய்யமுடியும்?

காலைக்கு என்ற சொல்லுக்குக் காலைப் பொழுதிற்கு என்பது பொருள்.
செய்தநன்று என்ற தொடர் செய்த நலம் என்ற பொருள் தரும்.
என்கொல் என்றது என்னவோ? எனப்பொருள்படும்.
யான் என்ற சொல் நான் என்ற பொருளது.
மாலைக்கு என்ற சொல் மாலைப் பொழுதிற்கு என்ற பொருள் தருவது.
செய்த பகை என்ற தொடர் செய்த பகைமைச் செயல் எனபதை உணர்த்துவது.
எவன்கொல் என்ற தொடர் என்னவோ? எனப்படும்.

துன்பம் தந்த இரவு நீங்க உதவிய காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மை என்னவோ? முன்பு இன்பம் தந்த மாலைப்பொழுது, காதலர் பிரிந்த இப்பொழுது, துயரம் தருவதற்கு, அதற்கு நான் செய்த பகைசெயல்தான் என்ன?

கடமை காரணமாகக் காதலர் பிரிந்து சென்றிருக்கிறார். தனித்து இருக்கும் தலைவிக்குக் காலைப்பொழுது அவ்வளவாக வருத்துகின்றதில்லை; மாலைப்பொழுதில் காதல் நோய் துயர் உண்டாக்குகின்றது. 'துன்பம் தருகின்ற இரவுப்பொழுதை முடிவுக்குக் கொண்டுவருகின்ற காலைப் பொழுதுக்கு யான் செய்த நன்மை என்ன? காதலர் உடனிருந்த காலமெல்லாம் இனிமையாய்க் காட்சி தந்த மாலைப்பொழுது, அவர் பிரிந்துள்ள இப்பொழுது தாங்கவொண்ணா துன்பம் தருவதற்கு, அதற்கு நான் என்ன தீங்கு செய்தேனோ?' என்று அவள் தனக்குத்தானே புலம்புகிறாள்.

தலைவனோடு கூடியிருந்தபோது தலைவி காலைப்பொழுது வாராமல் இருக்கவேண்டும், பிரியாமல் இருக்கலாம் என்று கருதுபவள் மாலைப் பொழுது எப்பொழுது வரும் காதலரோடு கூடி வாழலாம் என்று எண்ணுவாள். ஆனால் தலைவனைப் பிரிந்துள்ள இந்நிலையில் ஏன்தான் மாலைப்பொழுது வருகிறதோ என்று வருத்தம் கொள்கிறாள். வந்த மாலையும் நீண்டு இருப்பதுபோல் தோன்றுகிறது. அதுவும் துன்பத்திற்குக் காரணமாகித் தீமை செய்கிறது. எப்பொழுதும் காலைப்பொழுதாகவே இருக்கவேண்டுமென்றும் தலைவி கருதுகிறாள். 'காலைப் பொழுதில் தலைவன் பற்றிய நினைப்பு என்னை வருத்துவதில்லை. ஆனால் மாலைப்பொழுதில் அவனைப் பற்றிய நினைப்பு எனக்கு அளவற்ற துன்பம் தருகிறதே! காலைக்கு நான் செய்த நன்மை எதுவும் இல்லையே! என்னைத் துன்புறுத்தும் மாலைக்கு நான் தீமை எதுவும் செய்தோனோ? தெரியவில்லையே!' என்று காமநோய் வருத்தப் பிதற்றுகிறாள்.

பொழுது என்ன நன்மை, என்ன தீங்கு செய்யமுடியும்?

நன்மையும் தீமையும் மாறிமாறி வருவதாக உணர்கிறாள் தலைவி. காதலர் உடன் இருந்த போது பகல் விரைவில் வந்து, எங்கள் இன்பத்தைக் தொலைத்தது. இப்போது அது தோன்றும் நேரம் நீண்டு இருக்கிறது. தோன்றிய பகற்பொழுது இப்பொழுது தீங்கு செய்வதில்லை; அந்நாள் மாலையை எதிர்நோக்கிக் காத்திருந்த காதலிக்கு இப்பொழுதெல்லாம் மாலைப்பொழுது நீண்டு தன்னைக் கொல்வது போன்ற கொடுமை புரிவதுபோல் தோன்றுகிறது. பகலும் இரவும் வழக்கம்போல்தான் வருகிறது; போகிறது. அது இவளது நன்மைக்காகவோ துன்பத்திற்காவோ வந்து போவதில்லை. ஆனால் காதலன் உடனிருப்பதும் இல்லாதிருப்பதும் இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ தருவதாகத் தெரிகிறது. காதல் நோயால் பாதிக்கப்பட்ட அவளது உள்ள உணர்ச்சிகளே மாறிமாறி நன்மையோ தீங்கோ செய்கின்றன.


அதிகார இயைபு

பிரிவில் மாலைப்பொழுது தீயது என உணர்வதாகத் தலைவி கூறும் பொழுதுகண்டு இரங்கல் பாடல்.

பொழிப்பு

காலைக்கு நான் என்ன நலம் புரிந்தேன்? மாலைக்கு என் மேல் ஏன் பகை?