தலைமகள் தலைமகனைப்பற்றித் தான்கண்ட கனவுகளின் இயல்பை சொல்லுதல். தான் கனவு காண்பதற்கு வழி செய்யும் வகையில், கலக்கமுற்று இருக்கும் கண்களை உறங்குமாறு கெஞ்சுவேன் என்கிறாள் தலைவி. கனவில் காதலனைக் கண்டு, கலந்து, மகிழ்கிறாள். 'விழிப்பு ஏன் வருகிறது? கனவில் வந்த காதலர் பிரிந்துவிட்டாரே!' எனச் சொல்லி கனவுநிலை தொடரவேண்டும் என விழைகிறாள். கனவில் காதலரைக் காண அறியாதவர்தாம் நனவில் அருள் செய்யாதவரை நொந்து உரைப்பர் என்கிறாள்.
கனவுநிலை உரைத்தல்
மனம் ஒரு பொருளையே நனவில் உறுதியாக எண்ணினால் அது கனவில் தோன்றும் என்பர். தலைவி செயல் காரணமாகப் பிரிந்து சென்றுள்ள கணவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பதால் கனவில் அவர் தோன்றுகிறார். அப்படி கனவில் அவர் வந்ததால்தான் தன் உயிர் நிலைத்திருக்கிறது என்று சொல்கிறாள். நனவு போன்றே கனவிலும் தலைவருடன் இருப்பது இன்பம் தருகிறது என்று சொல்லித் பிரிவாற்றாமையைத் தணிக்க முயற்சிக்கிறாள்.
காதலர் எஞ்ஞான்றும் தனக்குக் காட்சி தரவேண்டும் என விரும்புபவள் தலைவி. அயல் சென்றுள்ள அவரைக் கனவில் காண்பதால்தான் தன் உயிர் உள்ளது எனச் சொல்கிறாள். நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர் (குறள் 1213) என்கிறது அப்பாடல்.
துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து (குறள் 1218)என்ற பாடலின் உட்கருத்து தலைவியின் கனவில் தலைவன் வந்து மெய்யுறு புணர்ச்சி கொண்டு இன்பம் தருகிறான் என்பது. அதை இடக்கரடக்கலாகக் கூறத் தோள்மேலர் என்ற தொடர் ஆளப்பட்டது. அடுத்து, தலைவி விழித்தவுடன் காதலர் விரைந்து நெஞ்சில் நிறைகிறார் என்று சொல்லி, இதை ஒரு நயமிகு கவிதையாக்கித் தந்து விட்டார் வள்ளுவர்.