இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1219நனவினால் நல்காரை நோவர் கனவினால்
காதலர்க் காணா தவர்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1219)

பொழிப்பு: கனவில் காதலர் வரக் காணாத மகளிர் நனவில் வந்து அன்பு செய்யாத காதலரை (அவர் வராத காரணம் பற்றி) நொந்துகொள்வர்.

மணக்குடவர் உரை: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) கனவினான் காதலர்க் காணாதவர் - தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்; நனவினான் நல்காரை நோவர் - தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர்.
(இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: கனவிலே காதலரைக் காணாதவர்கள், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருத்தப்படுவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
கனவினால் காதலர்க் காணாதவர், நனவினால் நல்காரை நோவர்.


நனவினால் நல்காரை நோவர்:
பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்காரை-தலையளி செய்யாதவரை; நோவர்-நொந்து கொள்வர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர்;
பரிப்பெருமாள்: நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர்;
பரிதி: நனவினால் நல்கார் என்று விதனப்படுவர்;
காலிங்கர்: நெஞ்சே! நம் காதலர் நம்மை நனவிடத்து வந்து நல்காமையைக் குறித்து இவள்மாட்டு அருளும் அன்பும் இலர் என்று இங்ஙனம் நொந்து உரைப்பர் யார் எனின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நோவர் நிற்பர்.

'தாம் அறிய நனவின்கண் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் என நொந்து உரைப்பர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'நனவில் வந்து அன்பு காட்டாத எம் காதலரைக் குறை கூறி நொந்து கொள்வர்', 'தம்முடைய காதலர் நனவில் வராததற்கு நொந்துகொள்ள வேண்டும். நான் ஏன் அவரை நோக வேண்டும்?', 'தாம் அறிய நனவில் வந்து நல்காத நம் காதலரை அன்பிலர் எனப்பழி கூறுவார்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் காதலர்க் காணாதவர்:
பதவுரை: கனவினால்-கனவின் கண்; காதலர்-காதலர்; காணாதவர்-கண்டறியாதவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
மணக்குடவர் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.
பரிதி: கனவினாலே காதலரைக் காணாத மாதர் என்றவாறு.
காலிங்கர்: இங்ஙனம் நனவிடைப் பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர். காலிங்கர் குறிப்புரை: எனவே அங்ஙனம் கூறிய அயலார் கேட்பத் தன் நெஞ்சிற்குச் சொல்லுவாளாய்ச் சொல்லினாள் என்றவாறு.
பரிமேலழகர்: தமக்கு ஒரு காதலர் இன்மையின் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்.
பரிமேலழகர் குறிப்புரை: இயற்பழித்தது பொறாது புலக்கின்றாள் ஆகலின், அயன்மை தோன்றக் கூறினாள். தமக்கும் காதலருளராய அவரைக் கனவிற் கண்டறிவாராயின், நம் காதலர் கனவின்கண் ஆற்றி நல்குதல் அறிந்து நோவார் என்பதாம்.

'கனவின்கண் அவரைக் காணாதவர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவிலும் காதலரைக் காணாதவர்கள்தாம் நேரிலே அருளாத அவரைப் பழிப்பர்', 'தம் காதலரைக் கனவிடத்துக் கண்டறியாத மகளிர்', 'கனவிற்கூடத் தம்முடைய காதலரைக் கண்டு மகிழாத பெண்கள்தாம்', 'தமக்கு ஒரு காதலர் இல்லாமையினால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கனவில் தம் காதலரைக் கண்டுஇன்புறாதவரே நேரில் வந்து அருளாத அவரைக் குறித்து நொந்து உரைப்பர்.

பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நோவர் என்பது பாடலின் பொருள்.
'நோவர்' குறிப்பது என்ன?

நனவினால் என்ற சொல்லுக்கு விழித்திருக்கும் நிலையில் என்பது பொருள்.
நல்காரை என்ற சொல் அருள் செய்யாதவரை என்ற பொருள் தரும்.
கனவினால் என்ற சொல்லுக்கு கனவில் என்று பொருள்.
காதலர் என்ற சொல் காதலரைக் குறித்தது.
காணாதவர் என்ற சொல் இங்கு காணாத காதலியர் என்ற பொருள் தருவது.

கனவிலே காதலரைக் கண்டு இன்பம் எய்தாவர்கள்தாம், நனவிலே வந்து அவர் அருள் செய்யவில்லையென்று வருந்திக் கூறுவர்.

தலைவன் கடமை காரணமாகப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவிக்கு அவனது பிரிவு பெரும் வருத்தத்தை அளிக்கிறது. பிரிவாற்றாமல் இருக்கும் அவளுக்குக் கனவு உதவுகிறது. நேரில் காண்பது போலவே கனவிலும் அவனுடனிருந்து மகிழ்ச்சி பெறுகிறாள். நனவில் உள்ளது போலவே கனவிலும் உறவாடுகிறாள். கனவு தரும் இன்பத்தைக் கிடைக்கக்கூடாத பேறு பெற்றதாக உணர்கிறாள். அப்பொழுது சொல்கிறாள் 'யாராவது பிரிந்து சென்ற காதலர் தமக்கு அருளவில்லையே என்று சொன்னால் அவர்கள் கனவில் த்ம்தம் காதலரைக் காண்பதில்லை போலும். அப்படிக் கனவு கண்டு இன்பம் எய்தியிருந்தால் நொந்து பேசமாட்டார்கள்.'
காதலர்க் காணாதவர் என்பதற்குக் காதலரின் அன்பை அறிந்திராதவர்கள் என்றும் தமக்கொரு காதலரின்மையால் அவரைக் கனவிற் கண்டறியாத மகளிர் என்றும் இன்னும் திருமணம் ஆகாத, ஆகிக் கணவனைப் பிரிந்து அறியாத இந்தப் பெண்கள் என்றும், கனவில் காதலனைக் கண்டு அறியாதவர் என்றும் பொருள் கூறினர். கனவில் காதலனைக் கண்டு இன்புறாதவர்கள் என்பது சிறந்ததாகும்.

இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது எனச் சூழல் அமைப்பர் மணக்குடவர்/பரிப்பெருமாள். தலைவி அயலார் கேட்பத் தன்நெஞ்சிற்குக் கூறியதாக்க் கொள்வர் காளிங்கர். தலைவனைப் பழித்தது பொறாது புலக்கின்றாள் தலைவி ஆதலால், அயன்மை தோன்றக் கூறினாள் என்று பரிமேலழகர் வகுப்பார்.

'நோவர்' குறிப்பது என்ன?

தாம் நேரிலே அருளாத காதலரைக் குறைகூறுவர் என்பது பொருள். இச்சொல்லுக்கு பழிப்பர் வருந்துவார், நொந்துபோவார்கள். குறை கூறி நொந்து கொள்வர், பழி கூறுவார் எனப் பொருள் கூறுவர்.

'நோவர்' என்ற சொல் நொந்து உரைப்பர் என்ற பொருள் தருவது.

பிரிந்த தம் காதலரைக் கனவிடைக் கண்டு இன்புறாதவர் நேரிலே அருளாத அவரை நொந்து கொள்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கனவில் காதலரைக் கண்டுஇன்புறத் தெரியாத பெண்களுக்காக தலைவி வருந்துவதைச் சொல்லும் கனவுநிலை உரைத்தல் பாடல்.

பொழிப்பு

கனவில் காதலருடன் இன்பம் காணாதவர்கள்தாம் நேரில் வந்து அருள் செய்யாத காதலரைப் பற்றி நொந்துரைப்பர்.