இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1217நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1217)

பொழிப்பு: நனவில் வந்து எமக்கு அன்பு செய்யாத கொடுமை உடைய அவர், கனவில்மட்டும் வந்து எம்மை வருத்துவது என்ன காரணத்தால்?

மணக்குடவர் உரை: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.

பரிமேலழகர் உரை: (விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) நனவினான் நல்காக் கொடியார் - ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்; கனவின்கண் வந்து எம்மைப் பீழிப்பது என் - நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
(பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும் கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம', என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: நேரிலே வந்து அன்பு செய்யாத கொடியவர் கனவிலே வந்து என்னை வருத்துவது ஏன்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் நல்காக் கொடியார் கனவினால் எம்மைப் பீழிப்பது என்.


நனவினால் நல்காக் கொடியார்:
பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; நல்கா-தலையளி செய்யாத; கொடியார்-தீயவர்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார்;
பரிப்பெருமாள்: நனவின்கண் அருளாத கொடுமையையுடையார்;
பரிதி: நனவினால் இன்பம் தராமல் பிரிந்த நாயகர்;
காலிங்கர்: நெஞ்சே! கனவின்கண் நம்மை நன்கு அளித்தருளாத கொடியவர்;
பரிமேலழகர்:(விழித்துழிக் காணளாயினாள் கனவிற் கூட்டம் நினைந்து ஆற்றாளாய்ச் சொல்லியது.) ஒரு ஞான்றும் நனவின்கண் வந்து தலையளி செய்யாத கொடியவர்;
பரிமேலழகர் குறிப்புரை: பிரிதலும், பின் நினைந்து வாராமையும் நோக்கிக் 'கொடியார்' என்றும்.

'நனவின்கண் அருளாத கொடியவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவில் தோன்றி அருள்புரியாத கொடிய காதலர்', 'நான் விழிப்பாக இருக்கும்போது வந்து எனக்கு இன்பம் தரமுடியாமல் கொடுமை செய்கிற இவர்', 'நனவிலே வந்து அருள் செய்யாத கொடியவர்', 'ஒரு பொழுதும் நனவில்வந்து அன்பு செய்யாத கொடியவர்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் என்எம்மைப் பீழிப்பது:
பதவுரை: கனவினால்-கனவின் கண்; என்-என்ன; எம்மை-எங்களை; பீழிப்பது-துன்புறுத்துவது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
மணக்குடவர் குறிப்புரை: இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது.
பரிப்பெருமாள்: கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு?
பரிப்பெருமாள் குறிப்புரை: இது தலைமகனைக் கனவகத்துக் கண்டு முன்பு நல்காமையை நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக் கூடுவதன் முன்னம் விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை.
பரிதி: கனவினால் வந்து எம்மை வருத்தம் செய்வது என்னை என்றவாறு.
காலிங்கர்: வருந்தி யாம் கண் துயிலப் பெற்றுத் துயிலின் கனவிடை எய்தியும் மற்று அவ்விடத்தும் கலந்து இன்புறாது எம்மை இடர் உறுவிக்கின்றது என்னை?
காலிங்கர் குறிப்புரை: எனவே அவ்விடத்துக் கண்டமாத்திரமே அல்லது கலந்து இன்புறாத கடுந்துயர் நினைந்து ஆற்றாளாயினாள் என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: நாள்தோறும் கனவின்கண் வந்து எம்மை வருத்துவது எவ்வியைபு பற்றி?
பரிமேலழகர் குறிப்புரை: கனவில் தோள்மேலராய் விழித்துழிக் கரத்தலின், அதனானும் துன்பமாகாநின்றது என்பாள் 'பீழிப்பது' என்றும் கூறினாள். 'நனவின் இல்லது கனவினும் இல்லை' என்பர், 'அது கண்டிலம', என்பதாம்.

'கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எதற்கு?' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவில் மட்டும் தோன்றி எம்மை வருத்துவது என்ன நினைத்து?', 'என் கனவில் மட்டும் வந்து ஏன் என்னை இப்படி வருத்தப்படுத்துகிறார்?', 'கனவிலே வந்து நம்மை வருத்துவது எதனாலே?', 'நாள்தோறும் கனவில் வந்து எம்மை வருத்துவது எந்தத் தொடர்பு பற்றி?' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவது எதனாலே? என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நேரில் வந்து அருள் செய்யாத கொடிய காதலர், கனவிலே வந்து, இன்பம் தந்துவிட்டு நீங்கி, நம்மை வருத்துவது எதனாலே?

நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் கனவில் மட்டும் வந்து என்னை பீழிப்பது எதனாலே? என்பது பாடலின் பொருள்.
'பீழிப்பது' என்ற சொல்லின் பொருள் என்ன?

நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்எம்மைப் பீழிப் பது

நனவினால் என்ற சொல்லுக்கு நனவின்கண் அதாவது விழிப்புநிலையில் என்பது பொருள்.
நல்காக் கொடியார் என்ற தொடர் தலையளி செய்யாத கொடுமையாளர் என்ற பொருள் தரும்.
கனவினால் என்ற சொல்லுக்குக் கனவின்கண் என்று பொருள்.
என் என்ற சொல் என்ன என்ற பொருளது.

நனவிலே வந்து அருள் செய்யாத கொடியவர், கனவிலே வந்து நம்மைத் துன்புறுத்துவது எதனாலே?

கடமை காரணமாகத் தலைவர் அயல் சென்றிருக்கிறார். பிரிவுத் துயர் தலைவியை வாட்டுகிறது. இன்னும் அவர் திரும்பிவரவில்லையே என்று அவளுக்கு சினம் வருகிறது. இதனால் காதற் கொழுநரைக் கொடியவர என்கிறாள். சொற்கள் அவ்வகையில் வெளிவந்தாலும் உள்ளத்தில் அவர்மேல் தீராக் காதல் கொண்டவள் அவள். நேரில் பார்க்க முடியாத காதலரைக் கனவு மூலம் கண்டு இன்பம் கொள்கிறாள். மனதை ஆற்றிக் கொள்ளவும் செய்கிறாள். ஆனாலும் அவனை நேரில் காணவேண்டும் என்ற விருப்பம் மேலோங்கி நிற்கிறது. தலைவன் கனவில் வந்து இன்பம் அளித்துவிட்டு நனவில் மறைந்து விடுவதனால், உற்ற இன்பம் நிலைக்காமையால் வருத்தம் பெரிதாகிறது. கனவில் காதலரை அவள் கண்டதால் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறாள். ஆனால் விழிப்புவந்தவுடன் மறைந்து துன்புறுத்துகிறாரே! என்று ஊடுவது போன்ற நிலையில் சிறிது சினம் கொண்டு எண்ணுகிறாள்.

நேரில் வந்து அருள் செய்யாத தலைவன் கனவில் வந்து தொல்லைப்படுத்துகிறான் என்ற சூழலைத் தொல்லாசிரியர்கள் எப்படி விளக்கினர்?
மணக்குடவர்: 'விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது'.
பரிப்பெருமாள்: 'தலைமகனைக் கனவகத்துக் கண்டு முன்பு நல்காமையை நினைத்து ஊடல் உற்றுழி அதனை உணர்த்திக் கூடுவதன் முன்னம் விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது'. மேலும் இவர் பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை என்ற விளக்கமும் தந்தார்.
காலிங்கர்: 'தலைவி வருந்தி கண் துயிலப் பெற்றுத் துயிலின் கனவிடை எய்தியும் மற்று அவ்விடத்தும் கொடியவர் கலந்து இன்புறாது அவளுக்கு இடர் விளைக்கின்றது என்னை? எனவே அவ்விடத்துக் கண்டமாத்திரமே அல்லது கலந்து இன்புறாத கடுந்துயர் நினைந்து ஆற்றாளாயினாள் என்பது பொருள்' என்றார்.
பரிமேலழகர் 'கனவில் தோள் மேலராய் இருந்தவர் விழிப்பால் திடுமென மறைந்ததால் பெருந்துன்பம் உற்றாள் தலைவி' என விளக்கினார்.

'பீழிப்பது' என்ற சொல்லின் பொருள் என்ன?

'பீழிப்பது' என்ற சொல்லுக்கு துன்பம் உறுத்துவது, துன்பப்படுத்துவது, வருத்துவது, வருத்தி துன்பம் தருவது, வருத்தப்படுத்துவது, அலக்கழிப்பது, கடுந்துயரில் ஆழ்த்துவது, துயரைப் பெரிதாக்குவது என உரையாசிரியர்கள் பொருள் கூறினர். இவை அனைத்துமே வருத்தப்படுத்துவது என்ற பொருள் தருவதுதான்.
இச்சொல் வரலாற்றுக்கு செ வை சண்முகம் தரும் விளக்கமாவது: பீழி (வருத்து) என்ற வினைச்சொல்லும் பீழை (வருத்தம்) என்ற தொழிற்பெயரும் குறளில் முதன்முதலாக வந்துள்ளன.
அறிவிலார் தாம்தம்மைப் பீழிக்கும் பீழை செறுவார்க்கும் செய்தல் அரிது (குறள் 843)
முடிந்தாலும் பீழை தரும் (குறள் 658)
நனவினால்.....................பீழிப்பது (குறள் 1217)
பீழை என்பது வருத்தம் துன்பம் என்ற பொருள் தருவதால் தேவை கருதி கடனாளாமல் நாகரிகம் கருதி கடனாண்ட சொல் என்பது தெளிவு. அப்படிப்பட்ட சொற்கள் சங்க இலக்கியத்திலும் காணப்படுகின்றன. இது வடமொழியில் பீடா (pida) என்றும் பாலி பிராகிருத மொழிகளில் பீளா என்றும் உள்ளது. எனவே பாலி அல்லது பிராகிருத மொழியிலிருந்து கடனாளப்பட்டிருக்கலாம்.

'பீழிப்பது' என்ற சொல்லுக்கு துன்பம் உறுத்துவது என்பது பொருள். என்ன துன்பம் உற்றாள்? காதலர் கனவில் தோன்றி இன்பம் நல்கிவிட்டு விழித்தவுடன் மறைந்துவிட்டது துன்புறுத்துகிறது என்கிறாள் தலைவி.

நேரில் தோன்றி அருள்புரியாத கொடியவர் கனவில் மட்டும் வந்து என்னை வருத்துவது எதனாலே? என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கனவில் தோன்றி, நனவில் மறைந்து, கண்ணீர் வரவழைக்கிறாரே இவர் எனத் தலைவி கூறும் கனவுநிலை உரைத்தல் பாடல்.

பொழிப்பு

நேரில் வந்து அருள்புரியாத கொடிய காதலர் கனவில் மட்டும் தோன்றி என்னை வருத்துவது எதனால்?