இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1216



நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால்
காதலர் நீங்கலர் மன்

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1216)

பொழிப்பு (மு வரதராசன்): நனவு என்று சொல்லப்படுகின்ற ஒன்று இல்லாதிருக்குமானால், கனவில் வந்த காதலர் என்னை விட்டுப் பிரியாமலே இருப்பர்.

மணக்குடவர் உரை: ---------------------------------------------------------

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவென ஒன்று இல்லையாயின் - நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்; கனவினான் காதலர் நீங்கலர் - கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
('ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு.)

இரா சாரங்கபாணி உரை: நனவென்று சொல்லக்கூடிய ஒரு துன்பம் இல்லையாயின் கனவிற் கூடிய காதலர் என்னைவிட்டுப் பிரியமாட்டார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவென ஒன்றுஇல்லை ஆயின் கனவினால் காதலர் நீங்கலர் மன்.

பதவுரை: நனவு-விழிப்பு நிலை; என-என்று சொல்லப்படுகின்ற; ஒன்று-ஒன்று; இல்லைஆயின்-இல்லாவிட்டால்; கனவினால்-கனவின்கண்; காதலர்-தலைவர், கணவர்; நீங்கலர்-நீங்கமாட்டார்; மன்-ஒழியிசை (பரிமேலழகர்), மிகவும் (காலிங்கர்).


நனவென ஒன்றுஇல்லை ஆயின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: நனவு என்பது ஒன்று இல்லையாயின்;
பரிதி: நனவு என்பது ஒன்று இல்லையாயின்;
காலிங்கர்: தோழீ! நனவெனப்பெயர்பெற்றது ஒரு காலம் வேறு ஒன்று இல்லையாயின்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒன்று' என்பது, அதன் கொடுமை விளக்கி நின்றது. அஃது இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'மன்' ஒழியிசைக்கண் வந்தது. [அஃது- நனவு]

'நனவு என்பது ஒன்று இல்லையாயின்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் 'ஒன்று' என்பது நனவின் கொடுமையை விளக்கி நின்றது எனக் கூறி அதைப் பாவி எனக் குறிப்பிடுகிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விழிப்புநிலை என்பது ஒன்று இல்லையெனின்', 'இந்த விழிப்பு என்ற ஒன்று இல்லாதிருந்தால்', 'நனவென்பது ஒன்று இல்லாவிட்டால்', 'நனவு என்று சொல்லப்படுகின்ற ஒரு பாவி இல்லையாயின்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

விழிப்புநிலை என்பது ஒன்று இல்லாவிடின் என்பது இப்பகுதியின் பொருள்.

கனவினால் காதலர் நீங்கலர் மன்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
பரிப்பெருமாள்: கனவின்கண் வந்த காதலர் பிரிதல் இல்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: யாங்கள் எல்லாம் காணாது ஒழியவும் கண்டாய் ஆயின் அவரைப் பிரியவிட்டது என்னை' என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: கனவின்கண் வந்த காதலர் பிரிதல் இல்லை என்றவாறு.
காலிங்கர்: இக்கனவிடை நம் காதலர் ஒரு பொழுதும் நம்மை நீங்குவது இலர் மிகவும்.
காலிங்கர் குறிப்புரை: எனவே நனவின்கண் தனது பிரிவாற்றாமை தோன்றக் கூறினாள் என்றவாறு.
பரிமேலழகர்: கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியார்.
பரிமேலழகர் குறிப்புரை: கனவிற் பெற்று ஆற்றுகின்றமை கூறியவாறு. [ஆற்றுகின்றமை-பொறுத்துக் கொள்ளுதலை]

'கனவின்கண் வந்த காதலர் பிரிதல் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காதலர் கனவை விட்டு நீங்கலர்', 'கனவினால் என்னிடம் கொண்டு வரப்பட்ட என் காதலர் என்னை விட்டுப் போயிருக்கவே மாட்டார்', 'கனவிலே தோன்றிய காதலர் என்னைப் பிரியமாட்டார்', 'கனவின்கண் வந்து கூடிய காதலர் என்னைப் பிரியலர்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

கனவிலே தோன்றிய காதலர் என்னைவிட்டுப் பிரியமாட்டார் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
விழிப்புநிலை என்பது ஒன்று இல்லாவிடின் கனவிலே தோன்றிய காதலர் என்னைவிட்டுப் பிரியமாட்டார் என்பது பாடலின் பொருள்.
'ஒன்று' என்ற எண்ணுப்பெயர் குறிப்பதென்ன?

கனவே கலையாதே! என்னுடன் சேர்ந்துள்ள என் தலைவரைப் பிரித்துவிடாதே!!

விழிப்பு என ஒன்று இல்லாவிட்டால் கனவில் தோன்றிய காதலர் என்னை விட்டுப் பிரியவேமாட்டாரன்றோ.
காட்சிப் பின்புலம்:
தலைவர் பிரிந்து சென்றபின் பிரிவின் துயர் தாங்காமல் மிகவும் வருந்திக்கொண்டு அவர் வரவு நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறாள் மனைவி. எப்பொழுதும் அவர் உடன் இருக்கவேண்டும் என்று ஆசை கொள்பவள் கனவில் அவர் தோன்றி செய்தி சொல்கிறாராம்.
அதைக் கணவர் தூதொடு வந்ததாகக் கருதுகிறாள், அத்தூதினுக்கு விருந்தாக யாது செய்வேன் என அறியேனே என மனம் பூரித்து மகிழ்கிறாள்; உறங்காது வருந்திக்கொண்டிருக்கின்ற தன் கண்களை தூங்குமாறு வேண்டுகோள் விடுக்கிறாள், அப்பொழுதுதான் தான் கனவு காணமுடியும் என்றும் தான் எவ்வாறு பிழைத்துள்ளேன் என்பதை அவருக்கு எடுத்துரைக்க முடியும் என்பதால்; நனவில் அன்பு காட்டத தலைவரைக் கனவில் காண்பதாலேயே தான் உயிருடன் இருப்பதாகவும் கூறுகிறாள்; கனவு அவரைத் தேடித் தருவதனால் அதன்கண் தனக்குக் காமம் பிறக்கிறது எனவும் கூறுகிறாள்; நினைவின்கண் கண்டதுபோலேயே அவரைக் கனவில் காண்பதும் இனிமையாகவே உள்ளது;
இவ்வாறு கனவில் கணவரைக் கலந்து மகிழ்வுறுவதாகக் கூறிக்கொண்டிருக்கிறாள்.

இக்காட்சி:
தலைவர் பிரிந்து செல்வதற்கு முன் இல்லத்திலிருக்கும்போது அவரோடு கூடிக் களித்தாள் மனைவி. அந்த இன்ப நிலையைத் துய்த்தவள் இப்போது கணவர் உடனில்லாதபோது அந்த இன்ப நிகழ்ச்சிகளையெல்லாம் கனவுகளில் கண்டு் மகிழ்வாள். அவர் கனவில் வந்து தன்னைக் கூடுவதாக உணர்கிறாள். அந்தக் கனவு நிலை இன்பமாக இருந்தது. உறக்கம் கலைந்தது கனவும் மறைகின்றது. விழித்துக் கொண்டவுடன் நனவில் அவரைப் பார்க்க முடியவில்லை என்பதால் எரிச்சலுறுகிறாள். அந்த வேதனை தோன்ற 'அவருடன் கூடிய கனவுநிலை நிலைக்கக் கூடாதா? நனவு ஏன் வந்தது? கனவில் வந்த காதலர் பிரிந்துவிட்டாரே! விழிப்புநிலை என்ற ஒன்று இல்லையாயின் கனவில் தோன்றிய காதலர் என்னை விட்டுப் பிரியவேமாட்டாரே' என்கிறாள்.

காதலரைக் காண இடையூறாக உள்ள இந்த நனவு என்ற ஒன்று இல்லாது போகட்டுமே என அவள் மனம் விழைகிறது. அந்தக் கனவே தொடர்ந்து இருந்து வந்தால் காதலனைக் கண்டு கொண்டே இருக்க முடியுமே. ஆகவே, கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட காலத்தை அவள் விரும்புவதில்லை. அவளுடைய காதல் வாழ்க்கை தொடர கனவுதான் உதவுகிறது; இதனால்தான் கனவு நிலைக்கு மாறுபட்ட நனவு என்று ஒன்று இல்லையானால், காதலர் அவளை விட்டு நீங்க மாட்டாரே என்கிறாள். இடையறாது கனவு காண எண்ணி 'நீங்கார்' என்றாள்.

'யாங்கள் எல்லாம் காணாது ஒழியவும் நீ கண்டாயாயின் அவரைப் பிரியவிட்டது என்னை' என்ற தோழிக்குத் தலைவி கூறியது என்ற பரிப்பெருமாளின் காட்சி அமைப்பு நயமுடைத்து.

'ஒன்று' என்ற எண்ணுப்பெயர் குறிப்பதென்ன?

ஒன்று என்ற சொல் ஒரு என்ற பொருளிலேயே வந்தது. இக்குறள்நடை தலைவி வெறுப்புடன் கூறுவதாகத் தோன்றுவதால் பல உரையாசிரியர்கள் 'ஒன்று' என்பதற்கு ஒரு பாவி, ஒரு கொடியோன், ஒரு துன்பம் எனக் கூட்டிப் பொருள் கூறினர். பிறர் ஒரு பொழுது, ஒரு காலம், ஒரு காலவேறுபாடு என்றனர். பரிமேலழகர் 'நனவு இடையே புகுந்து கனவைப் போக்கி அவரைப் பிரிவித்தது என்பதுபட நின்றமையின், 'ஒன்று' என்பது அதன் கொடுமை விளக்கி நின்றது' என்று விளக்குவார்.
‘ஒன்று’ என்பது அது பயின்று வருமிடத்திற்கேற்ப இன்பம், துன்பம், குற்றம் முதலிய பொருள்களைச் சுட்டும். அது ..தாம் வீழ்வார் மென்தோள் அகறலின் ஆங்கொன்று உடைத்து (ஊடலுவகை குறள் 1325) என்புழி இன்பத்தையும் பேதைமை என்பதொன்று யாதெனின்... (பேதைமை குறள் 831) என்புழிக் குற்றத்தையும் ....தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்றில் (நினைந்தவர் புலம்பல் குறள் 1202) என்புழித் துன்பத்தையும் சுட்டுதல் காண்க. அதுபோல ‘நனவென் ஒன்றில்லை யாயின்’ என்னும் இக்குறளில் ‘ஒன்று’ என்பது துன்பத்தைச் சுட்டுதல் காண்க. அழுக்காறென ஒரு பாவி.... (அழுக்காறாமை குறள் 168) என்பது போல பரிமேலழகர் உரை கொடுமை மிகுதி சுட்டுதலின் தள்ளத்தக்க தன்று (இரா சாரங்கபாணி).

'ஒன்று' என்றது இங்கு துன்பமிகுதி குறித்தது.

விழிப்புநிலை என்பது ஒன்று இல்லாவிடின் கனவிலே தோன்றிய காதலர் என்னைவிட்டுப் பிரியமாட்டார் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

விழிப்பு நிலை என்ற ஒன்று இல்லையானால் கணவர் பிரியமாட்டார் எனத் தலைவி தான் மகிழ்ந்த கனவுநிலை உரைத்தல்.

பொழிப்பு

விழிப்புநிலை என்ற ஒன்று இல்லையெனின், கனவிற் கூடிய தலைவர் என்னைவிட்டுப் பிரியமாட்டார்.