இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1214கனவினான் உண்டாகும் காமம் நனவினால்
நல்காரை நாடித் தரற்கு

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1214)

பொழிப்பு: நனவில் வந்து அன்பு செய்யாத காதலரைத் தேடி அழைத்துக்கொண்டு வருவதற்காகக் கனவில் அவரைப் பற்றிய காதல் நிகழ்ச்சிகள் உண்டாகின்றன.

மணக்குடவர் உரை: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவினான் நல்காரை நாடித்தரற்கு - நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்; கனவினான் காமம் உண்டாகும் - இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
(காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.)

இரா சாரங்கபாணி உரை: நனவில் வந்து அன்பு காட்டாதவரைத் தேடிக்கொண்டு வருவதற்குக் கனவு உதவுவதால் அக்கனவினிடத்தே எனக்கு இன்பம் தோன்றும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் நல்காரை நாடித் தரற்கு கனவினான் காமம் உண்டாகும்.


கனவினான் உண்டாகும் காமம்:
பதவுரை: கனவினான்-கனவின்கண்; உண்டாகும்-உளதாகும்; காமம்-இன்பம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
பரிப்பெருமாள்: அக்கனவின் கண்ணே எனக்கு இன்பம் உண்டாகும்.
பரிதி: இன்பமாகப் பெற்றது கனவிலே கூடினமுறையால் என்றவாறு.
காலிங்கர்: நெஞ்சே! கனவின் கண்ணும் எனக்கு உண்டாகா நின்றது ஓர் ஆசை என்றவாறு.
பரிமேலழகர்: (இதுவும் அது.) இக் கனவின்கண்ணே எனக்கு இன்பம் உண்டாகா நின்றது.
பரிமேலழகர் குறிப்புரை: காமம் - ஆகுபெயர். நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது.

'கனவின் கண்ணே எனக்கு இன்பம்/ஆசை உண்டாகும்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவில் காமம் உண்டாகின்றது', 'கனவினாலும் காம இன்பம் கிடைக்கிறது', 'அக்கனவின்பால் எனக்கு அன்புண்டாகிறது', 'கனவின் கண்ணே எனக்கும் இன்பம் உண்டாகின்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

கனவினிடத்தே எனக்கு இன்பம் உண்டாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நனவினால் நல்காரை நாடித் தரற்கு:
பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின்கண்; நல்காரை-தலையளி செய்யாதவரை; நாடி-தேடி; தரற்கு-தருதலால்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிப்பெருமாள்: நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கண்டாற் பயனென்னை? காம நுகர்ச்சியில்லையே என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.
பரிதி: நனவினாலே நல்காரைப் பிரிந்தாரைப் பிரிந்தேன் என்ற துன்பம் விட்டு.
காலிங்கர்: நனவினிடத்து நல்காது பிரிந்த நம் காதலரைத் தேடிக் கொணர்ந்து தருதற்கு.
பரிமேலழகர்: நனவின்கண் வந்து தலையளி செய்யாதாரை அவர் சென்றுழி நாடிக் கொண்டு வந்து கனவு தருதலான்.
பரிமேலழகர் குறிப்புரை: நான்காவது மூன்றன் பொருண்மைக்கண் வந்தது. 'இயல்பான் நல்காதவரை அவர் சென்ற தேயம் அறிந்து சென்று கொண்டு வந்து தந்து நல்குவித்த கனவால் யான் ஆற்றுவல்' என்பதாம்.

'நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவில் அருளாதாரைத் தேடிக் காட்டுதற்குக', 'நனவில் வந்து எனக்கு இன்பம் தராத காதலரைத் தேடிப்பிடித்து என்னிடம் கொண்டுவந்து விடுவதனால்', 'நனவிலே வந்துஅருள் செய்யாதவரைக் கனவானது தேடிக் கொண்டு வந்து கொடுத்தலால்', 'நினைவின்கண் வந்து அன்பு செய்யாதாரைத் தேடித் தருவதனால்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நனவில் அருள் செய்யாத தலைவரைத் தேடித் தருவதனால் கனவு மீது எனக்குக் காதல் உண்டு என்று தலைவி சொல்கிறாள்.

நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் கனவினிடத்தே எனக்குக் காமம் உண்டாகின்றது என்பது பாடலின் பொருள்.
'காமம்' என்ற சொல் குறிப்பது என்ன?

கனவினான் என்ற சொல்லுக்கு கனவின்கண் என்பது பொருள்.
உண்டாகும் என்ற சொல் உண்டாகிறது என்ற பொருள் தரும்.
நனவினால் என்ற சொல் நனவின்கண் என்ற பொருளது.
நல்காரை என்ற சொல்லுக்கு அருள் செய்யாதவரை என்று பொருள்.
நாடித்தரற்கு என்றது தேடிக் கொண்டு வந்து தருவதற்கு எனப் பொருள்படும்.

நனவில் அன்பு பாராட்டாதவரைத் தேடி கொண்டு வந்து என்னிடம் தருவதால் கனவு காண்பதில் காதல் உண்டாகின்றது.

பணி காரணமாகப் பிரிந்து சென்றிருக்கும் தலைவரை எப்பொழுதும் நினைத்துக் கொண்டு துயருறுகிறாள் தலைவி. தன்னுடன் அவர் இல்லையே- அவரைக் காணமுடியவில்லையே என்பதை அவளால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. அவரைக் கண்பதற்கு மாற்றுவழி ஒன்று உளது. அதுதான் கனவு. கனவிலே வந்து அவர் காட்சி தருவதாலேயே அவள் உயிர் நிலைத்து நிற்கிறது என்கிறாள். கனவு அவளை ஆற்றுப்படுத்துவதாக உள்ளது. தன் தலைவரை கனவினால் உலகில் எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து தன்னிடம் கொண்டுவந்து சேர்ப்பிப்பதனால் அக்கனவு மீது காதல் கொள்ளத் தொடங்கிவிடுகிறாள்.

நனவின்கண் நமக்கு அருளாதவரைக் கனவு தேடித் தருதலால், கனவின்கண்ணே காமம் உண்டாகும் என்று ஒருசாராரும், கனவு நிலையில் காதலருடன் கூடுவதால் காமத்தால் வரும் இன்பம் உண்டாகும் என்று மற்றொரு சாராரும் இக்குறளுக்குப் பொருள் கூறினர். காம நுகர்ச்சிக்குக் கனவு துணை செய்கின்றது என்பதைவிட கனவின்கண்ணே காதல் உண்டாகும் என்ற பொருள் சிறப்பாக இருக்கிறது.

'காமம்' என்ற சொல் குறிப்பது என்ன?

இக்குறளில் குறிக்கப்பட்டுள்ள காமம் என்றதற்கு இன்பம், ஆசை, இன்ப நிகழ்ச்சிகள், அன்பு, காம இன்பம், ஆவல், எனப் பொருள் கூறினர். இவற்றினும் காதல் என்ற பொருள் நன்கு.

‘காமம்’ என்ற சொல்லுக்கு காதல் என்ற பொருள் பொருத்தமானது.

நனவில் அருளாதாரைத் தேடித் தருவதனால் கனவினிடத்தே எனக்குக் காதல் உண்டாகின்றது என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கனவில் அவரைக் காணமுடிவதால் அக்கனவுமீது எனக்குக் காதல் உள்ளது எனத் தலைவி கனவுநிலை உரைத்தல்

பொழிப்பு

நனவில் வந்து அன்பு காட்டாதவரைத் தேடிக்காட்டுவதால் கனவினிடத்தே எனக்குக் காதல் உண்டாகிறது.