இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1215நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான்
கண்ட பொழுதே இனிது

(அதிகாரம்:கனவுநிலை உரைத்தல் குறள் எண்:1215)

பொழிப்பு: முன்பு நனவில் கண்ட இன்பமும் அப்பொழுதுமட்டும் இனிதாயிற்று; இப்பொழுது காணும் கனவும் கண்ட பொழுது மட்டுமே இன்பமாக உள்ளது.

மணக்குடவர் உரை: நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்; அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்.
இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) நனவினான் கண்டதூஉம் (இனிது) ஆங்கே - முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே; கனவும் தான் கண்டபொழுதே இனிது - இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
(இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது. கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.)

சி இலக்குவனார் உரை: நினைவின்கண் கண்டதும் இனிதே. அவ்வாறே கனவின்கண் கண்டபொழுதும் இனிதாயுள்ளது. (நினைவிலும் கனவிலும் அடையும் இன்பங்கள் ஒத்தனவே.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
நனவினால் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதே இனிது.


நனவினால் கண்டதூஉம் ஆங்கே:
பதவுரை: நனவினால்-விழிப்பு நிலையின் கண்; கண்டதூஉம்-பார்த்ததும்; ஆங்கேஅப்பொழுதே.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்;
பரிப்பெருமாள்: நனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழுதைக்கு இன்பம் ஆவதுபோல;
பரிதி: நனவினால் கண்டதும் இனிது;
காலிங்கர்: தோழீ! நம் காதலரை நனவிடத்துக் கண்டால் மற்று அதுவும் அவ்விடத்தே இனிது ஆகும்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) முன் நனவின்கண் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பந்தானும் இனிதாயிற்று, அப்பொழுதே;
பரிமேலழகர் குறிப்புரை: இனிது' என்பது முன்னும் கூட்டப்பட்டது.

'நனவினால் காதலரைக் கண்டதும் இனிது' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிப்பெருமாள் உரையில் ஆவதுபோல என்ற குறிப்பு உள்ளது நோக்கத்தக்கது.

இன்றைய ஆசிரியர்கள் 'நனவும் அவரைப் பார்க்கும் அப்போது இனிது', 'நனவில் அவரைக் கண்டு கூடியதும் இனியதாயிற்று', 'நனவில் அனுபவிக்கிற கலவி இன்பமும் கலவி செய்கிற சிறிது நேரத்து மட்டுந்தானே?', 'நனவிலே நுகர்ந்த இன்பம் அப்பொழுதுதான் இனிதாயிற்று', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நனவில் கண்டதும் எப்படி ஆயிற்றோ என்பது இப்பகுதியின் பொருள்.

கனவுந்தான் கண்ட பொழுதே இனிது:
பதவுரை: கனவுந்தான்-கனாவும் தான்; கண்ட-பார்த்த; பொழுதே-கணமே; இனிது-நன்றானது.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிப்பெருமாள்: கனவின்கண் கண்ட இன்பமும் அப்பொழுதைக்கு இன்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது கனவிற் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது
பரிதி: அதனினும் இனிது நாயகரைக் கனவில் காணுதல் என்றவாறு.
காலிங்கர்: இனி அக்கனவுதானும் அவ்விடத்து அவரைக் கண்ட பொழுதே பெரிதும் இனிது ஆகும் என்றதனால் இங்ஙனம் ஆயினும் எய்தப்பெறின் யாதும் வேற்றுமை இன்றி யாம் அறிதற்கு அரிது என்பது பொருள் என்றவாறு.
பரிமேலழகர்: இன்று கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் அக் கண்டபொழுதே இனிதாயிற்று. அதனான் எனக்கு இரண்டும் ஒத்தன.
பரிமேலழகர் குறிப்புரை: கனவு -ஆகுபெயர். முன்னும் யான் பெற்றது இவ்வளவே, இன்னும் அது கொண்டு ஆற்றுவல்' என்பதாம்.

'அதுபோலக் கனவின்கண் கண்டு நுகர்ந்த இன்பமும் கண்ட அப்பொழுதைக்கு இன்பமாம்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். மணக்குடவர்/பரிப்பெருமாள் சிறப்புரையில் 'கனவில் புணர்ச்சி இன்பம் தருமோவென்ற தோழிக்குத் தலைமகள் கூறியது' எனப் புணர்ச்சி இன்பத்தைச் சேர்த்துக் கூறுகின்றனர். காலிங்கர் 'கனவிலும் அவரைக் கண்டபொழுதே இன்பம் உண்டாயிற்று' என்று கூறினார். பரிமேலழகர் 'நனவிலும் கனவிலும் பெற்ற இன்பத்தில் வேற்றுமை காணவில்லை; அது கொண்டு ஆற்றுவேன்' என்று தலைவி கூறுவதாக உரை செய்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கனவும் பார்க்கும் அப்போது இனிது', 'அதுபோலவே, கனவிலும் அவரைக் கூடியதாகக் கண்டபொழுது இனியதாயிற்று', 'கனவில் அனுபவித்த கலவியின்பம் கனவு காணும் சிறிது நேரத்துக்குத்தான் என்றால்', 'அதுபோலக் கனவிலே அவரைக் கண்ட போதுண்டான இன்பமும் இப்பொழுது இனிதாயிற்று; ஆதலாற் கனவும் நனவும் எனக்கு ஒத்தவையே' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நனவில் அவரைக் கண்டதும் எப்படி இன்பம் ஆயிற்றோ கனவிலும்தான் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நனவிலே காதலரைக் கண்டதும் இன்பம் ஆவதுபோல கனவிலேயும் அவ்வாறே அவரைக் காணும்பொழுதே இன்பம் ஆயிற்று.

நனவில் அவரைக் கண்டபடியே ஆங்கே கனவிலும்தான் அவரைக் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது பாடலின் பொருள்.
'ஆங்கே' என்ற சொல் குறிப்பது என்ன?

நனவினால் என்ற சொல்லுக்கு விழித்திருக்கும் நிலையில் என்பது பொருள்.
கண்டதூஉம் என்ற சொல் கண்ட உடனேயே என்ற பொருள் தரும்.
கனவுந்தான் என்ற சொல்லுக்கு கனவிலேயும் என்று பொருள்.
கண்ட பொழுதே என்ற தொடர் பார்த்தபொழுதே என்ற பொருளது.
இனிது என்ற சொல் இன்ப்மானது என்று பொருள்படும்.

காதலரை நேரில் பார்க்கும்பொழுது உடனேயே இன்பம் பொங்கும். அதுபோலவே கனவிலும் அவரைக் கண்டவுடன் இன்பம் உண்டாயிற்று.

தலைவன் பணி காரணமாகப் பிரிந்து சென்றபின் ஆற்றமுடியாமல் காதலி வருந்திக் கொண்டிருக்கிறாள். அச்சமயங்களில் கனவு ஒன்று ஆறுதலாக இருப்பதாக எண்ணுகிறாள். கனவே காதலரது தூதாக வருவதாகவும், கனாவிலே அவரைக் காண்பதனாலேயே தான் உயிரோடு இருப்பதாகவும், அவரைத் தேடிக் கொண்டுவந்து தரும் கனவினால்தான் இன்பம் அடைவதாகவும் கூறுகிறாள்.
இப்பொழுது மேலும் கனவு பற்றி எண்ணுகிறாள். நனவில் அவரைப் பார்க்கும்பொழுதெல்லாம் என் மனம் பெரிதும் மகிழ்ச்சியுறும். அதுபோலவே கனவிலும் அவரைக் கண்டபோது இன்பம் உண்டானது. எனக்கு ஒன்றும் வேற்றுமை தெரியவில்லையே என்கிறாள் அவள். நேரில் பார்ப்பதுபோல் கனவில் அதே இன்பம் உண்டாகாது. எனினும் தனக்குத்தானே ஆறுதல் சொல்லும் வகையில் தலைவி அதே இன்பம் பெற்று பிரிவுத் துன்பம் அகன்றது என்கிறாள்.

இக்குறள் காட்சிதரும் தலைவர் தரும் இன்பம் பற்றியது அதாவது அவரை நேரில் பார்ப்பதால் பெறுவது, கனவில் அவரைக் காண்பதால் எய்தும் மகிழ்ச்சி இவை இரண்டும் வேற்றூமைய்யின்று ஒன்று போலவே உள்ளது எனச் சொல்வது. குறள் நடையும் அப்படித்தான் உள்ளது. ஆனால் உரையாளர்களில் சிலர் இப்பாடல் புணர்ச்சி இன்பம் பற்றியதாக எண்ணி நனவில் பெறும் புணர்ச்சி இன்பம் கனவில் பெறும் புணர்ச்சி இன்பம் என்ற ஆராய்ச்சியில் இறங்கினர். இன்னும் சிலர் புணர்ச்சி இன்பம் பெற்ற காலம் பற்றியும் எழுதினர்; நனவில் நுகர்ந்த இன்பமும் கனவில் அவரைக் கண்டு நுகர்ந்த இன்பமும் அந்தந்த நேரத்தில் இனியவைதான் என்றனர். கனவில் அனுபவித்த கலவியின்பம் கனவு காணும் சிறிது நேரத்துக்குத்தான் என்றால், நனவில் அனுபவிக்கிற கலவி இன்பமும் கலவி செய்கிற சிறிது நேரத்து மட்டுந்தானே? என்றபடி சொல்லப்பட்டன. நனவிற் பார்த்த இன்பமும், மீண்டும் கனவில் கிடைக்கும் இன்பமும் அப்போதைக்குத்தான் காணும் அந்த நேரத்திற்கு மட்டுமே இன்பம் என்பன போன்ற உரைகள் நயமற்றவை; இயைபு இல்லாதன.

'ஆங்கே' என்ற சொல் குறிப்பது என்ன?

ஆங்கே என்றதற்கு நேர்பொருள் அப்பொழுதே அல்லது அவ்விடத்தே என்பது. இங்கும் விரைவுப் பொருள் குறிப்பதாக அமைந்துள்ளது. உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. (குறள் நட்பு 788; பொருள்: உடை நெகிழ்ந்தவனுடைய கை, உடனே உதவிக் காப்பது போல், அப்பொழுதே சென்று துன்பத்தைக் களைவது நட்பு), பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து உள்வேர்ப்பர் ஒள்ளி யவர் அறிவுடையவர் (குறள் காலமறிதல் 487; பொருள்: பகைவர் தீங்கு செய்த அப்பொழுதே உடனே புறத்தில் சினம் கொள்ளமாட்டார்; காலம் பார்த்து அகத்தில் சினம் கொள்வர்.) என்ற இடங்களிலும் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

'ஆங்கே' என்ற சொல்லுக்கு அப்பொழுதே என்பது பொருள்.

நனவில் அவரைக் கண்டதும் எப்படி ஆயிற்றோ கனவிலும்தான் கண்டபொழுதே இனிது ஆயிற்று என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

கனவில் வந்து அதே இன்பம் தருவதால் காதலன் நேரில் இல்லாதது பெரிய இழப்பு ஒன்றும் இல்லை என்று தலைவி தன்னைத்தானே ஆற்றிக்கொள்ளும் கனவுநிலை உரைத்தல் பாடல்.

பொழிப்பு

நனவில் காதலரைப் பார்த்தவுடனே எப்படி இன்பம் உண்டாயிற்றோ அப்படியே கனவிலும் அவரைப் காணும்பொழுதே இனிதாயிற்று.