இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-1101 குறள் திறன்-1102 குறள் திறன்-1103 குறள் திறன்-1104 குறள் திறன்-1105
குறள் திறன்-1106 குறள் திறன்-1107 குறள் திறன்-1108 குறள் திறன்-1109 குறள் திறன்-1110

இதனுள் ஆலிங்கனம் முதலாயின கூறாது பசுக்களைப் போலப் புணர்ச்சி மாத்திரமே கூறிவிட்டது என்னை எனின், 'கண்டு கேட்டுண்டுயிர்த் துற்றறியும் ஐம்புலனும், ஒண்டொடி கண்ணே உள' (1101) என்றாரகலின், அவையெல்லாம் இதனானே சொன்னார் என்று கொள்ளப்படும். இது காமப்பகுதி அன்றே, இதனை வடநூல் ஆசிரியர் விரித்துக் கூறியதெல்லாம் அளவும், காலமும், வேகமும் ஒவ்வாதாரை ஒப்பிக்கும் நெறியும், கைக்கிளை, பெருந்திணைப்பாற்பட்ட கன்னியரைக் கூடுந் திறனும் கணிகையர் சீலமும் கூறினார்; ஈண்டு உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின் இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்கும் ஆதலான், கூறாராயினர் என்க. [உழுவலன்பு-பிறப்புகள்தோறும் மாறாது தொடரும் சிறந்த அன்பு]
- பரிப்பெருமாள்

ஐம்புலன்களாலும் கூடல் இன்பம் என்று தொடங்கி, தாமரைக் கண்ணான் உலகே இதற்கு ஈடாகாது என்று கூறி, அவன் விரும்பியவாறெல்லாம் இன்பம் நல்கினாள் என்று தொடர்ந்து, பலவேறு வகையில் புணர்ச்சி மகிழ்ந்ததைச் சொல்லி, இறுதியில் இன்னும் எத்தனை எத்தனை இன்பம் உள்ளதோ என்ற கழிபேருவகைக் கூற்றுடன் முடிகிறது இவ்வதிகாரம்.

புணர்ச்சி மகிழ்தல்

புணர்ச்சி என்ற சொல்லுக்குக் கலத்தல், சேர்தல், இணைதல், கூடுதல் ஆகிய பல பொருள் உண்டு. இச்சொல் உடல் உறவைக் குறிப்பதாகவே பழம் நூல்களில் மிகையாக ஆளப்பட்டுள்ளது. இவ்வதிகாரமும் மெய்யுறுபுணர்ச்சி பற்றியதே.

ஒருவர் உள்ளத்தில் மற்றொருவர் முழுமையாகக் குடி புகுந்துவிட்ட செய்தியுடன் முந்தைய 'குறிப்பறிதல்' அதிகாரம் நிறைவடைந்தது. இவ்வதிகாரம் அவர்கள் ஊடியதையும், ஊடல் நீங்கியதையும் குறிப்பால் உணர்த்தி, மெய்யுறுபுணர்ச்சி அதாவது உடலுறவு கொண்டு இன்புற்றதைச் சொல்கிறது. புணர்ச்சி மகிழ்தல் என்றது களவு ஒழுக்கம் மேற்கொண்ட காதலர் இருவரும் உள்ளம் ஒன்றிக் கூடியபின் அந்த இன்பத்தை நினைத்து மகிழ்வதைச் சொல்வது. களவு ஒழுக்கம் என்பது உலகத்தார் அறியாமல் ஒருவரையொருவர் சந்தித்து, பேசி, உறவாடி, கூடி இன்புறும் காதல் வாழ்வாகும்.
இங்கு விளக்கப் பெறுவது, விலங்கிடத்தும் காணப்படும் கூடல் அன்று; ஈருடலும் ஓருயிருமாக இன்ப அன்பு நிலை எய்தியவர்கள் சேர்க்கையே. அவர்கள் நுகரும் காமநலம் சிற்றின்பமாகாது; அது பேரின்பம் என்று சொல்லப்படுவதாகும்.

இருவருமே இன்புற்றுக் களித்தனர். ஆனால் காதலி பெண்ணின் இயல்பான நாணத்தினால் வெளிப்படையாக அதைச் சொல்லமாட்டாள். காதலியிடம் தான் நுகர்ந்த அப்புதிய காம இன்பத்தை எண்ணி எண்ணி மகிழ்ச்சியுற்ற காதலன் தனக்குள் கூறிக்கொள்வதாக அதிகாரத்துப் பாடல்கள் அமைந்தன. புணர்ச்சியை மகிழ்ந்து கூறும் முறையில் யாக்கப்பட்ட பாக்களைக் கொண்ட அதிகாரமாதலால் புணர்ச்சி மகிழ்தல் என்னும் பெயர் பெற்றது.

காதலர்கள் கூடியதில் பெற்றது புணர்தல் (இன்பம்) என்ற ஒரு பயன். ஊடல், ஊடல் நீங்கல் என்பன அவர்கள் பெற்ற பிற பயன்கள் என்கிறது இவ்வதிகாரக் குறள் ஒன்று. மாந்தர் இருவர், எந்த சமயத்திலும் எங்காகிலும், பழகும்போது சிறு சிறு மோதல்கள் கருத்து வேறுபாடு காரணமாக நிகழ்வது இயல்பு என்று உளநூல் அறிஞர்கள் சொல்வர். ஊடல் என்னும் சிறு சண்டை உண்டாவது காதலர் வாழ்விலும் இயல்பானதே. ஊடலின் தன்மையை ஆராய்ந்து அதை நீக்க வழி தேடினால் உறவுகள் நீடித்துப் பலப்படும். இதுவே 'உணர்தல்' என்பது. இப்பொழுது அவர்கள் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொள்கின்றனர்.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

1101 ஆம்குறள் ஐம்புலன் இன்பங்களும் காதலியிடம் ஒருங்கே குடிகொண்டிருக்கும் தன்மையை உவப்பது.
1102 ஆம்குறள் காமநோய்க்கு காமமே மருந்து என்று சொல்வது.
1103 ஆம்குறள் தம்மை விரும்பும் காதலியின் தோளில் படுத்திருப்பது சொர்க்கத்தில் இருப்பது போன்றது என்று சொல்வது.
1104 ஆம்குறள் வேறெங்கும் பெறமுடியாத விந்தையான காமத்தீ இவளிடம் உள்ளது என்கிறது.
1105 ஆம்குறள் 'தன்னை முழுதாக எனக்குத் தந்தாள்' என்று அவன் கூறியது.
1106 ஆம்குறள் 'ஒவ்வொருமுறை கூடும்போதும் புத்துயிர் தருகிறாள் இவள்' என்று கூறுவது.
1107 ஆம்குறள் காதலர் சேர்க்கை உரிமை வாழ்க்கையில் பெறும் இன்பத்திற்கு நிகர் என்பது.
1108 ஆம்குறள் காதலர் அணைப்பின் இடையில் காற்று நுழையக் கூட இடமில்லை என்கிறது.
1109 ஆம்குறள் காதல் வாழ்வு கொண்டோர் பெற்ற பேறுகளைக் கூறுவது.
1110 ஆம்குறள் இதுநாள்வரை இவ்வின்பம் அறியவில்லையே; இன்னும் எத்தனை எத்தனை இன்பம் உள்ளதோ என்று காதலர் மகிழ்வது.

புணர்ச்சி மகிழ்தல் - சில புரிதல்கள்

புணர்ச்சி மகிழ்தல் பாடல்களை அகத்திணைக் கூறுகளை மனதில் கொள்ளாமலும், தோழி, பாங்கன், போன்ற அயலார்களையும் நீக்கிப் படிக்க வேண்டும்; காதலன், காதலி இருவர் மட்டும்தான் இவ்வதிகாரத்தில் வள்ளுவர் படைத்த நாடகமாந்தர் என்று கொண்டால் மட்டுமே பாடல்களின் நோக்கினை நன்கு உணர முடியும்.
புதிய காதலர்களிடமும், ஊடலும் உணர்தலும் புணர்தலுக்கு முன் உண்டு என்ற புரிதலும் வேண்டும்.

வள்ளுவர், காமத்துப்பாலில், முற்றிலுமாக தொல்காப்பிய அகத்திணை வழிகாட்டுதல்களைப் பின்பற்றவில்லை. ஆனால் சில உரையாசிரியர்கள் இவ்வதிகாரத்தை எந்தப் பிரிவில் அடக்குவது என்பதில் வேறுபட்டனர்; அகத்திணைக் கூறுகளை வலிந்து அதிகாரப் பாக்களுக்குள் திணித்தனர்; அகத்திணை நிகழ்வுகள் அவை கூறப்பட்ட நிரல்படி இல்லை என்பதால் குழப்பமுற்றனர். மேலும் தோழி, பாங்கர் என்ற மாந்தரை வள்ளுவர் மனதிற் கொண்டு அதிகாரத்துப் பாடல்களை இயற்றினார் என்பதாகச் தெரியவில்லை. ஆனால் உரையாளர்கள் இவர்களைக் குறட்காட்சிகளில் நுழைக்கின்றனர். தேவையேயின்றி வரும் இப்பாத்திரங்கள் குறட்போக்கைத் தடை செய்வதுடன் பாக்களின் கருத்துச் சுவை குன்றவும் காரணமாகின்றன.

புதுக் காதலர் இடை ஊடல், உணர்தல் உண்டாகுமா?
பிரிவால் எழுவதுவே ஊடல், அந்தப் பிரிவும் பரத்தையர் பிரிவால் அமைவதே சுவைத்தற்குரியது என்ற போக்கில் சில பாடல்களின் உரைகள் அமைந்தன. புதுக் காதலரிடை பரத்தையர் பிரிவும், அதன் விளைவான ஊடலும் தோன்றக் காரணமில்லை என்று உரையாசிரியர்கள் எண்ணியிருப்பார்கள் போலும். எனவே 'இது இயற்கைப் புணர்ச்சி பற்றியது. கூடுவதற்குமுன் பிரிவு எப்படி ஏற்படும்? ஊடல் ஏது?' என்ற ஐயங்கள் முன்வைக்கப்பட்டன. புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்திலோ குறளில் வேறு எங்கேயுமோ பரத்தையர் பிரிவு இல்லவே இல்லை. மேலும் புதுக் காதலர் இடையிலும் பரத்தையர் பிரிவு அல்லாத ஊடல் உண்டாவதும் பின் அது நீங்குவதும் இயல்பே என்பதைப் புரிந்து கொண்டால் உரையாசிரியர்கள் கொண்ட ஐயங்கள் நீங்கித் தெளிவு ஏற்படும். ஆகையால் இந்த அதிகாரத்தில் ஊடுதல், உணர்தல் பற்றிச் சொல்லப்படுவதற்குத் தடை ஏதும் இல்லை.

புணர்ச்சி மகிழ்தல் அதிகாரச் சிறப்பு

'வடநூலார் இடக்கர்ப் பொருளவாகச் சொல்லிய புணர்ச்சிச் தொழில்களும் ஈண்டு அடக்கிக் கூறப்பட்டன' என்கிறார் பரிமேலழகர். இடக்கர் என்பது நன்மக்கள் இடையில் அல்லது மேடையில் சொல்லத்தகாத சொல் அல்லது பொருள் குறித்தது. இடக்கரடக்கல் என்பது அவ்வாய்பாடு மறைத்து(அடக்கி) பிறவாய் பாட்டால் சொல்லும் ஒரு பண்பாடாகும். புணர்ச்சித் தொழில்கள் என்பன நகிலை வருடல், ஆடை நெகிழ்த்தல், இறுகத்தழுவல், இதழ் சுவைத்தல் முதலியன. பரிமேலழகர் சொல்வதுபோல் வடநூலாரிலுள்ள விரசம் இங்கு இல்லை.
புணர்ச்சியின் வருணனை ரொம்ப நாகரிகமாக உள்ளது. பால் உறுப்புக்கள் பற்றிக் குறிப்பிடப்படவே இல்லை. பிற அதிகாரங்களில் பேசப்படும் முலை என்ற சொல் கூட இங்கு காணப்படவில்லை. பெண்ணின் தோள் மட்டும் ஒரு குறிப்பு உணர்வோடு கூறப்பட்டுள்ளது.

அறிதோறும்.... (1110) என்று தொடங்கும் குறள் ஒரு பொருளை அறிய அறிய முன்னைய அறிவு அறியாமையாகத் தோன்றுகிறது எனக் குறிப்பிடும். அறிய அறிய அறியாமை தோன்றுகிறது என்னும் இக்குறளில் வரும் உவமைக் கருத்தைப் பொருளோடு பொருத்திப் பார்த்தால் தலைவியோடு தொடங்கும் இல்லறம் தலைமகனுக்குப் பலப்பலப் புதிய வாழ்க்கை அனுபவங்களை, புதுக் கூறுகளைக் காட்டும் என்பது புலனாகும்; திருமணத்திற்குப் பின் தலைவன் வாழ்க்கைக் கல்வி பெற்று நிறைமாந்தனாக மலர்கிறான்; ஆகவே, இல்வாழ்க்கை இன்பத்தை மட்டுமன்றி அறிவின்பத்தையும் நல்க வல்லது என்பதனைக் குறிப்பிற் காட்டுவது இக்குறள் நோக்கமாகும் என்பர்.

தாம்வீழ்வார் மென்தோள் துயிலின் இனிதுகொல் தாமரைக் கண்ணான் உலகு (1103) என்னும் பாடலில் தன்னை வேட்கையோடு விரும்பும் பெண்ணின் மென்மையான தோள்களில் உறங்குவதாகிய இன்பத்தைக் காட்டிலும் தாமரை மலர் போன்ற கண்களையுடைய திருமாலின் சொர்க்க உலகம் கூட இனியதாக இருக்கமுடியுமா? என்று தலைவன் தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறான். மாந்தரிடை நிகழும் காதல்இன்பமும் தேவர்கள் உறையும் சொர்க்க உலக இன்பமும் இங்கு ஒப்பிடப்பட்டு மனிதக் காதலே சிறந்தது என்று சொல்லப்பட்டது என்றும் இதை விளக்குவர்.




குறள் திறன்-1101 குறள் திறன்-1102 குறள் திறன்-1103 குறள் திறன்-1104 குறள் திறன்-1105
குறள் திறன்-1106 குறள் திறன்-1107 குறள் திறன்-1108 குறள் திறன்-1109 குறள் திறன்-1110