இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1106உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்கு
அமிழ்தின் இயன்றன தோள்

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1106)

பொழிப்பு: பொருந்தும்போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

மணக்குடவர் உரை: சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால் பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) உயிர் உறுதோறு தளிர்ப்பத் தீண்டலால்- தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்; பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன - இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
(ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான். தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.)

இரா சாரங்கபாணி உரை: முயங்கும் போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படி அவள் தீண்டுதலின் அப்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன


பொருள்கோள் வரிஅமைப்பு:
உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால் பேதைக்குத் தோள் அமிழ்தின் இயன்றன.


உறுதோறு உயிர்தளிப்பத் தீண்டலால்:
பதவுரை: உறு(ந்)தோறு-பொருந்தும் போதெல்லாம்; உயிர்-உயிர்; தளிர்ப்ப-இன்பத்தால் தழைக்க; தீண்டலால்-தொடுதலால்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால்;
பரிப்பெருமாள்: சாருந்தோறும் என்னுயிர் தழைப்பச் சார்தலால்;
பரிதி: தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் சரீரம் தளிர்க்கையினாலே;
காலிங்கர்: நெஞ்சமே! யாம் இங்ஙனம் இருந்தவள் மெய்யோடு மெய்யுறுதோறும் ஒருகாலைக்கு ஒருகால் நமது உயிர் தளிர்த்து ஏமுறுமாறு மயங்கிச் சேறலான்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) தன்னைப் பெறாது வாடிய என்னுயிர் பெற்றுறுந்தோறும் தளிர்க்கும் வகை தீண்டுதலான்;
பரிமேலழகர் பதவுரை: தளிர்த்தல் - இன்பத்தால் தழைத்தல்.

'தழுவும்போதெல்லாம் என் உயிர் தளிர்க்குமாறு தீண்டுதலால்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இத்தொடர்க்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால்', 'முயங்கும் போதெல்லாம் உயிர் தளிர்க்கும்படி அவள் தீண்டுதலின்', 'சேருந்தோறும் வாடிய உயிர் தளிர்க்கும்படியாகத் தீண்டுதலால்', 'அடையும்தோறும் உயிர் தழைக்குமாறு தொடுதலால்' என்றபடி உரை தந்தனர்.

'சேரும் பொழுதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தொடுதலால்' என்பது இத்தொடரின் பொருள்.

பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்:
பதவுரை: பேதைக்கு-பெண்ணுக்கு; அமிழ்தின்-அமிழ்தத்தால்; இயன்றன-செய்யப்பட்டன; தோள்-தோள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
மணக்குடவர் கருத்துரை: சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
பரிப்பெருமாள்: பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்.
பரிப்பெருமாள் கருத்துரை: சாராதகாலத்து இறந்துபடுவதான உயிரைத் தழைக்கப் பண்ணுதலான் அமுதம் போன்றதென்றவாறு. இது கூடிய தலைமகன் மகிழ்ந்து கூறியது.
பரிதி: நாயகிக்கு அமுதினால் பண்ணின தோள் என்றவாறு.
காலிங்கர்: இப்பேதையாட்கு அமிழ்தினான் அமைத்தன போலும் இத்தோள்களானவை என்றவாறு.
பரிமேலழகர்: இப்பேதைக்குத் தோள்கள் தீண்டப்படுவதோர் அமிழ்தினால் செய்யப்பட்டன.
பரிமேலழகர் குறிப்புரை: ஏதுவாகலான் தீண்டல் அமிழ்திற்கு எய்திற்று. வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல் பற்றி, 'அவை அமிழ்தின் இயன்றன' என்றான்.

'பேதைக்குத் தோள்கள் அமுதினால் செய்யப்பட்டனவாக வேண்டும்' என்று பழைய ஆசிரியர்கள் இத்தொடர்க்குப் பொருள் சொன்னார்கள்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆயவை', 'அப்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன', 'இம்மாதினுக்குத் தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டன', 'இளநங்கைக்குத் தோள்கள் அமிழ்தத்தினால் செய்யப்பட்டன (போலும்)' என்றபடி பொருள் உரைத்தனர்.

'இவளுக்குத் தோள்கள் அமுதால் செய்யப்பட்டன' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
ஒவ்வொருமுறை கூடும்போதும் புத்துயிர் தருகிறாள் இவள் என்று காதலன் கூறுவதாக அமைந்த பாடல்.

உடல் அணையுந்தோறும் உயிர் தழைத்தலால் இப்பெண்ணுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன என்பது இக்குறட்கருத்து.
காமக்கூட்டம் எப்படி உயிர் தளிர்த்தலைச் செய்யும்?

உறுதல் என்பதற்கு பொருந்துதல், சாருதல், படுதல் (தொடுதல்) என்பன பொதுவான பொருள். அடைதல் என்ற பொருளுமுண்டு.
தளிர்த்தல் என்ற சொல் மரம்/செடி தளிர்த்துக்கொண்டே இருப்பது போல என்ற பொருளில் ஆளப்பட்டது.
அமிழ்தம் என்ற சொல் அமுதம் என்றும் அமிர்தம் என்றும் அறியப்படும். வான் உறைவோர் அதாவது தேவர்கள் அமுதம் உண்டு வாழ்பவர்; அமுதம் உண்டவர்கள் சாவாது இருப்பர் என்று தொன்மக் கதைகள் கூறும்.

காதலரிடை புணர்ச்சி பழகுதல் தொடர்கிறது.
காதலியின் உடல் என் உடலோடு சாரும் ஒவ்வொரு தடவையும் அது புதுப்புது துடிப்பை உயிருக்கு உண்டாக்குகிறது. இதனால் அவள் அமுதினால் செய்யப்பட்டவள் என்று காதலன் உவகை மிகக் கூறுகிறான். இந்தப் பெண்ணின் உடம்பில் அமிழ்தம் இருக்கிறது. இவளைகத் தீண்டிக் கூடும் பொழுதெல்லாம் அச்சேர்க்கை தெவிட்டாத இன்பத்தைக் கொடுத்துத் காதலனின் உயிர் தளிர்க்கச் செய்கிறது. வான்சிறப்பு அதிகாரத்தில் மழையை அமிழ்து என்று கூறினார் வள்ளுவர். இங்கு மழைபெய்து மரம்/செடி தளிர்ப்பது போல் காதலர் கூடும்போது காதலன் உயிர் தளிர்க்கின்றது.
பரிதி இதைச் சிறிது கவிதை கலந்த சொற்களால் கூறுகிறார்: 'தென்றற் கொடுமையாலும் சந்திரன் கொடுமையாலும் வற்றின சரீரத்தை நாயகி தீண்டச் சரீரம் தளிர்க்கையினாலே நாயகிக்கு அமுதினால் பண்ணின தோள்'. இதையே பரிமேலழகர் 'வாடிய உயிரைத் தளிர்ப்பித்தல்' என்று தன் உரையில் கூறுகிறார்.
மெய்யுறுபுணர்ச்சி காதலரது மனஇறுக்கத்தை நெகிழச் செய்து புத்துணர்ச்சி பெற்று மகிழும்படி இன்பம் தருதலையும் குறிப்பதாகக் கொள்ளலாம்.

'சேரும் பொழுதெல்லாம் உயிர் தளிர்க்கும்படியாகத் தொடுதலால் இவளுக்குத் தோள்கள் அமுதால் செய்யப்பட்டன' என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

காதலர் கூடுதல், உடல்இன்பத்துடன், உயிர்களுக்குப் புத்துணர்ச்சியும் தருகிறது என்னும் புணர்ச்சி மகிழ்தல்அதிகாரத்துப் பாடல்.

பொழிப்பு

உடல் சேருந்தோறும் உயிர் தழைத்தலால் இவளுக்குத் தோள்கள் அமிழ்தால் ஆகியன.