இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1105வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1105)

பொழிப்பு: மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைந்து விரும்பிய பொழுது அவ்வப்பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

மணக்குடவர் உரை: காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும், தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்.
தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.

பரிமேலழகர் உரை: (தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) வேட்ட பொழுதின் அவையவை போலுமே - மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்; தோட்டார் கதுப்பினாள் தோள் - எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினை யுடையாள் தோள்கள்.
(தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.)

கா சுப்பிரமணியம் பிள்ளை உரை: புதிது புதிதாக விரும்பிய பொருள்கள் புதிது புதிதாக இன்பஞ் செய்வனபோலப், பூக்கள் நிறைந்த கூந்தலையுடைய இவளது தோள்கள் எப்பொழுதும் புதுமையான இன்பத்தைத் தருகின்றாள். (விரும்பிய பொருள்கள் விரும்பியவுடனே கிடைத்தால் எப்படி இனபந் தருமோ அப்படி இவளுடைய தோளும் இன்பந்தருவது என்பதும் ஒன்று.)


பொருள்கோள் வரிஅமைப்பு:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே தோட்டார் கதுப்பினாள் தோள்.


வேட்ட பொழுதின் அவையவை போலுமே:
பதவுரை: வேட்ட-விருப்பம் கூர்ந்த; பொழுதின்-நேரத்தின் கண்; அவையவை-அவைகள்; போலுமே-ஒத்திருக்குமே.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்;
பரிப்பெருமாள்: காதலித்தபொழுது காதலிக்கப்பட்ட அவ்வப்பொருள்களைப் போலும்;
பரிதி: ஆயிரம் யாகம் வேட்ட இன்பத்துக்கு அளவு என்றாலும் அதற்கு அகப்படா இன்பந்தான்;
காலிங்கர்: நெஞ்சமே! உலகத்து யாதானும் ஒரு பொருளை விரும்பினால் விரும்பின பொழுதிலே அவை அவை எய்தி இன்புறல் யார்க்கும் அரிது. அவ்வாறன்றி அவை அவை விரும்பிய பொழுது எளிதாக எய்தி இன்புறும் இனிமை போலும்;
பரிமேலழகர்: (தோழியிற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது) மிக இனியவாய பொருள்களைப் பெறாது அவற்றின்மேல் விருப்பங்கூர்ந்த பொழுதின்கண் அவையவை தாமே வந்து இன்பஞ்செய்யுமாறு போல இன்பஞ் செய்யும்;

'விரும்பிய பொருள்களை விரும்பிய பொழுது எளிதாக எய்தி இன்புறும் இனிமை போலும்' என்று பழம் ஆசிரியர்கள் உரை அமையும். பரிதி மட்டும் தொடர்பில்லாத பொருளில் ஓர் உரை கூறியுள்ளார்.

இன்றைய ஆசிரியர்கள் 'விருப்பமான பொருள்களை நினைத்தபோது அவ்வப் பொருள்கள் போலவே இன்பம் செய்கின்றன.', 'என் காதலியின் புணர்ச்சியில் நான் மனத்தில் எந்தெந்தப் பொருளை விரும்பி நினைக்கிறேனோ அந்தந்தப் பொருளாகவே அவளுடைய அங்கங்கள் எனக்கு இன்பமளிக்கின்றனவே!', 'விரும்பிய பொழுதில் விரும்பப்பட்ட பொருள்களைப் போல இன்பம் தரும்', 'விரும்பியபோது விரும்பிய பொருள் ஆகியவை' என்றபடி உரை தருவர்.

'எவ்வெவ்வப் பொருளை விரும்பினேனோ அவ்வப்பொருளை அதே வேளையில் அடைந்தது போலவே' என்பது இத்தொடரின் பொருள்.

தோட்டார் கதுப்பினாள் தோள்:
பதவுரை: தோட்டு-பூவிதழ்; ஆர்-அணிந்த; கதுப்பினாள்-கூந்தலையுடையவள்; தோள்-தோள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்.
மணக்குடவர் குறிப்புரை: தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து அசைந்து தாழ்ந்த கூந்தல்.
பரிப்பெருமாள்: தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்.
பரிப்பெருமாள் விரிவுரை: தோட்டாழ்கதுப்பு- புணர்ச்சிக்காலத்து தாழ்ந்து அசைந்த கூந்தல். இதனை ஒழியப் பிறிதொன்று தோற்றுகின்றது; இல்லை என்று கூறியதன்றி, யாம காதலிக்கப்பட்ட பொருள்கள் அக்காலத்தே முயலாமல் பெற்றதனோடு ஒத்த உவகையை முகுக்கும் என்றும் ஆம்.
பரிதி: நாயகியாள் ஆயது என்றவாறு.
காலிங்கர்: இதழ் ஆர்ந்த கரிகுழலினாள் தோள் நமக்கு என்றவாறு.
பரிமேலழகர்: எப்பொழுதும் பெற்றுப் புணரினும், பூவினை அணிந்த தழைத்த கூந்தலினையுடையாள் தோள்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: தோடு: ஆகுபெயர். இயற்கைப்புணர்ச்சி, இடந்தலைப்பாடு,பாங்கற்கூட்டத்துக்கண் முன்னரே நிகழ்ந்திருக்க, பின்னரும் புதியவாய் நெஞ்சம் பிணித்தலின், அவ்வாராமை பற்றி இவ்வாறு கூறினான். தொழிலுவமம்.

பழைய ஆசிரியர்களில் மணக்குடவர்/பரிப்பெருமாள் இருவரும் தோட்டார் என்பதை தோள்+தாழ் என்று கொண்டு 'தோளின்கண் தாழ்ந்த கூந்தலினையுடையவள் தோள்' என்று உரை சொன்னார்கள். காலிங்கரும் பரிமேலழகரும் தோட்டு(பூவிதழ்)+ஆர்(அணிந்த) என்று கொண்டு பூச்சூடிய கூந்தலையுடையவள் தோள் என்றனர். கதுப்பினாள் என்றதற்கு காலிங்கர் கரிய கூந்தலுடையாள் என்று கொள்ள பரிமேலழகர் தழைத்த கூந்தலினையுடையாள் என்று உரை செய்தார்.

இன்றைய ஆசிரியர்கள் 'பூங்கொத்து நிறைந்த கூந்தலவள் தோள்கள்', 'மலரணிந்த கூந்தலை உடையவளின் தோள்கள்', 'மலரின் இதழினைப்போல அருமையான மணமும் மென்மையுமுள்ள கன்னங்கள்', 'பூவினை அணிந்த தாழ்ந்த கூந்தலினையுடையாளின் தோள்கள்' என்றவாறு உரை கூறினர்.

'மலரணிந்த தாழ்ந்த கூந்தலை உடையவளின் தோள்கள்' என்பது இத்தொடரின் பொருள்.

நிறையுரை:
'தன்னை முழுதாக எனக்குத் தந்தாள்' என்று காமஇன்பம் பெற்ற மகிழ்ச்சியில் காதலன் கூறியது.

'அவையவை' என்ற அடுக்குத் தொடர்க்கு 'அந்தந்த' என்பது நேர் பொருள். வேட்ட என்ற சொல்லுடன் சேர்த்து வாசித்தால் விருப்பப்படும் எதுவும் அந்த "அவை" யில் அடங்கும்.
தோட்டார் என்ற சொல்லுக்கு மணக்குடவர் தோள்+தாழ் என்று குறித்து (புணர்ச்சிக்காலத்து) 'அசைந்து தாழ்ந்த' என்ற விளக்கமும் தருகிறார். இதையே பரிப்பெருமாள் (புணர்ச்சிக்காலத்து) 'தாழ்ந்து அசைந்த' என்று மாற்றி அமைக்கிறார். காலிங்கரும் பரிமேலழகரும் தோடு+ஆர் (பூ)இதழ் அணிந்த என்று கொண்டு 'பூ அணிந்த' அதாவது 'பூச்சூடிய' எனக் கொள்கின்றனர். சிலப்பதிகாரத்திலும் 'தோட்டார் குழலி' (மதுரைக் காண்டம்: அடைக்கலக் காதை:198) என்ற தொடர் 'மலரணிந்த கூந்தல்' என்ற பொருளில் பயின்று வந்துள்ளது. தோள் என்ற சொல் மறுபடியும் இப்பாடலில் வருவதால் 'மலரணிந்த' என்ற பொருளே சிறக்கும்.
கதுப்பு என்ற சொல்லுக்கு கூந்தல் என்றும் கன்னம் என்றும் பொருள் கொள்ளமுடியும். மலரணிந்த என்று சொல்லப்பட்டதால் கூந்தல் என்பதே பொருத்தம்.

காதலரின் களவு உறவு நீடிக்கிறது. அவர்கள் மெய்யுறுபுணர்ச்சியின் வேடிக்கை விளையாட்டுகளில் திளைத்துக் களிப்புறுகின்றனர். விரும்புவது எப்பொழுது தேவைப்படுகிறதோ அவ்வப்பொழுது முயற்சியின்றி எளிதாகக் கிடைத்தால், எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்குமோ, அது போன்று மலரணிந்த கூந்தல் தழையும் தோள் கொண்ட என் காதலி எனக்கு இன்பம் அளிப்பாள் என்கிறான் காதலன்.

இச்செய்யுள்ளிலுள்ள தோள் என்றது இடக்கரடக்கல் என்றார் தேவநேயப்பாவாணர். இதை விளக்கிய தண்டபாணி தேசிகர் தோள் என்பது முலையினை உணர்த்தும் இடக்கரடக்கல் என்று எழுதினார். நாமக்கல் இராமலிங்கம் 'தோள்' என்பது உடல் முழுவதையும் குறிக்கும் என்கிறார். அதுபோலவே 'அவையவை' என்ற சொல்லும் இடக்கரடக்கல் ஆகும்; காதலியிடமிருந்து பெறும் ஐம்புல இன்பத்தையும் கூடும்இன்ப வகைகளையும் (காமநூல் அறுபத்து நான்கு கூறும்) இது உள்ளடக்கும்.

காலிங்கர் உரை தெளிவானது; 'உலகத்து யாதானும் ஒரு பொருளை விரும்பினால் விரும்பின பொழுதிலே அவை அவை எய்தி இன்புறல் யார்க்கும் அரிது. அவ்வாறன்றி அவை அவை விரும்பிய பொழுது எளிதாக எய்தி இன்புறும் இனிமை போலும் கரிகுழலினாள் தோள்'. பின்வந்த பரிமேலழகர் 'விரும்பியதைப் புரிந்துகொண்டு அவையவை தாமே வந்து இன்பம் கொடுக்கும்' என்று சொல்லி நயம் சேர்க்கிறார். சுருங்கச் சொன்னால் காதலன் விரும்பியவாறெல்லாம் காதலி இன்பத்தைக் கொடுத்தாள் என்பது பொருள்.

இக்குறட் கருத்தை ஒட்டிய பாடல் ஒன்று சீவக சிந்தாமணியில் உள்ளது. அது:
..............................மென்றோட்
வேட்டார்க்கு வேட்டனவே போன்றினிய வேய்
பூட்டார் சிலைநுதலாட் புல்லா தொழியேனே.
(சீவகசிந்தாமணி குணமாலையார் இலம்பகம் 1042)
(பொருள்: பூட்டப்பட்ட வில்லனைய புருவத்தாளின், விரும்பினார்க்கு விரும்பினவை போல, இனிமையான, மூங்கில் அனைய மெல்லிய தோள்களை, தழுவாமல் விலகுவேனோ?)

எவற்றை விரும்பினேனோ அவ்வவற்றை அவ்வப்பொழுது அடைந்தாற் போலவே, மலரணிந்த தாழ்ந்த கூந்தலை உடையவளின் தோள்கள் இன்பம் அளித்தன என்பது இக்குறட்கருத்து.

அதிகார இயைபு

காதலி எனக்கு இன்ப ஊற்றாக இருக்கிறாள் என்று புணர்ச்சி மகிழ்தலாகக் காதலன் கூறியது.

பொழிப்பு

மலரணிந்த கூந்தலவளது தோள், விரும்பிய எதுவோ அதுவாக உடன் ஆனது.