இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1104நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1104)

பொழிப்பு: நீங்கினால் சுடுகின்றது; அணுகினால் குளிர்ச்சியாக இருக்கின்றது; இத்தகைய தீயை இவள் எவ்விடத்திலிருந்து பெற்றாள்?மணக்குடவர் உரை: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.

பரிமேலழகர் உரை: (பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ - தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை; இவள் யாண்டுப் பெற்றாள் - என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்.
(கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.)

வ சுப மாணிக்கம் உரை: நீங்கினால் சுடும்; நெருங்கினால் குளிரும்; இன்ன தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?


பொருள்கோள் வரிஅமைப்பு:
நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ இவள் யாண்டுப் பெற்றாள்?


நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண் என்னும் தீ:
பதவுரை: நீங்கின்-அகன்றால்; தெறூஉம்-சுடும்; குறுகுங்கால்-நெருங்கும் போது; தண்-குளிரும்; என்னும்-என்கின்ற; தீ-நெருப்பு.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிப்பெருமாள்: தன்னை நீங்கினவிடத்துச் சுடும். குறுகினவிடத்துக் குளிரும்: இத்தன்மையாகிய தீ;
பரிதி: நாயகினிடத்திலே இன்பத்தைவிட்டு நீங்கின் சுடவும் கூடியிருக்கின் குளிர்வும். இப்படி இருக்கிற காமத்தீயை;
காலிங்கர்: நெஞ்சே! உலகத்து தீயினது இலக்கணம் தன்னை வந்து அணுகின் சுடுதலும், அகலின் மெய்தண் என்றலும் செய்யும். அதுவல்லது இங்ஙனம் சிறுது தன்னை அகலின் சுடுதலும் அணுகின் தண் என்றலும் செய்யும் இந்தத் தீ;
பரிமேலழகர்: (பாங்கற் கூட்டத்து இறுதிக்கண் சொல்லியது.) தன்னை அகன்றுழிச் சுடா நிற்கும், அணுகுழிக் குளிராநிற்கும் இப்பெற்றித்தாய தீயை;

'தன்னை அகன்றவிடத்துச்சுடும்; அணுகினவிடத்துச் குளிரும்: இத்தன்மையாகிய தீ' என்றபடி இத்தொடர்க்குப் பழம் ஆசிரியர்கள் உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தன்னை நீங்கினாற் சுடும்; நெருங்கினால் குளிரும். இவ்வியல்புடைய தீயை', 'அகன்று போனால் சுடும்; நெருங்கினால் குளிரும்; இத்தன்மை உடைய தீயை', 'நீங்கினால் சுடக்கூடியதும் நெருங்கும்போது குளிர்ச்சியை அளிக்கக்கூடியதுமான நெருப்பை', 'இந்தப் பெண்ணைவிட்டு நீங்கினால் எரிச்சலும், ஆனால், நெருங்கினால் குளிர்ச்சியும் உடைய அதிசயத் தீயை' என்றபடி உரை தந்தனர்.

'தன்னை நீங்கினாற் சுடும்; நெருங்கினால் குளிரும். இவ்வியல்புடைய நெருப்பை' என்பது இத்தொடரின் பொருள்.

இவள் யாண்டுப் பெற்றாள்:
பதவுரை: இவள்-இவள்; யாண்டுப்-எங்குப்; பெற்றாள்-அடைந்தாள்.

இத்தொடர்க்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
மணக்குடவர் குறிப்புரை: இது புணர்ச்சி உவகையாற் கூறுதலான், புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிப்பெருமாள்: எவ்விடத்துப் பெற்றாள் இவள்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இரண்டாம் கூட்டத்துக் கூடலுற்ற தலைமகன் தலைமகள் கேட்பது பயனாகத் தனது வேட்கை தோன்றச் சொல்லியது. இது புணர்ச்சி வேட்கையால் கூறுதலால் புணர்ச்சி மகிழ்தலாயிற்று.
பரிதி: எவ்விடத்திலே பெற்றாளோ இவள் என்றவாறு.
காலிங்கர்: எவ்விடத்துப் பெற்றனள் என்றவாறு.
பரிமேலழகர்: என்கண் தருதற்கு இவள் எவ்வுலகத்துப் பெற்றாள்.
பரிமேலழகர் விரிவுரை: கூடாமுன் துன்புறுதலின் 'நீங்கின் தெறூஉம்' என்றும், கூடியபின் இன்புறுதலின், 'குறுகுங்கால் தண் என்னும்' என்றும், இப்பெற்றியதோர் தீ உலகத்துக்கு இல்லையாமாகலின் 'யாண்டுப் பெற்றாள்' என்றும் கூறினான். தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்.

இத்தொடர்க்கு 'எவ்விடத்துப் பெற்றாள் இவள்' என்று பழைய ஆசிரியர்கள் உரை தந்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இவள் எங்குப் பெற்றாள்?', 'அவள் எவ்வுலகத்திலே பெற்றாள்?', 'இவள் எங்கு அடைந்தாள்?', 'இவள் எங்கிருந்து பெற்றாள்?' என்றபடி உரை கூறினர்.

'எங்குப் பெற்றாள் இவள்?' என்பது இத்தொடரின் பொருள்.நிறையுரை:
காதலியிடம் உள்ள காமத்தீ வேறெங்கும் பெறமுடியாத விந்தையானது என்கிறான் களிப்பு மிகநிரம்பிய காதலன்.

இக்குறளில் உள்ள 'தெறும்' (தெறூஉம் என்பது அளபெடை) என்ற சொல்லுக்குச் சுடும் என்பது பொருள். இச்சொல்லுக்குக் 'காய்ச்சுதல்' என்றும் பொருள் உண்டு என்பர். சி இலக்குவனார் 'வருத்தும்' என்று பொருள் கொள்கிறார்.

காதலரின் களவுப் புணர்ச்சி தொடர்கிறது. கூடல் முடிந்து இயல்பு நிலைக்கு வந்த நிலையில், தான் அனுபவித்த கலவி இன்பத்தை மீண்டும் நெஞ்சத்திற்குள் கொண்டுவந்து மகிழ்ந்து போய் தன் உணர்வை இவ்விதம் வெளிப்படுத்துகிறான் காதலன்:
"புணர்வில் விலகிச்சென்றால் சுடுகிறாள்; நெருங்கிச் சென்றால் குளிர்விக்கின்றாள். இத்தகைய புதுமையான நெருப்பை இவள் எங்கிருந்து பெற்றாளோ?"
கூடும் முன்னரும் பிரியும்போதும் துன்புற்றுதலால் 'நீங்கின் தெறூஉம்' என்றும், நெருங்கும் போதும் கூடும்போதும் இன்புறுதலால் 'குறுகுங்கால் தண்ணென்னும்' என்றும் இத்தகைய தீ உலகில் இல்லையாதலால் 'எங்கே பெற்றாள் இத்தீயை' என்றும் கூறினான்.
'தன் காமத்தீத் தன்னையே அவள் தந்தாளாகக் கூறினான், அவளான் அது வெளிப்படுதலின்' என்பது பரிமேலழகரின் நயவுரை.
கூடும்பொழுதும் நீங்கினபோதும் காமத்தீ எரிந்து கொண்டிருந்தலால் இரண்டுவேளையிலும் தீ ஆயிற்று.

புணர்ச்சி இன்பத்தை விளக்குவதே இப்பாடலின் நோக்கம். புணர்வில் இருவரும் விலகுவதையும் அதிலே அணுகுவதையும் 'நீங்கின்', 'குறுகின்' என்ற சொற்கள் குறிக்கும்.
காதலி சற்று விலகியிருந்தால் சுடுகின்ற நெருப்பாகவும் நெருங்கி இருந்தால் குளிர்ச்சி வழங்குபவளாக விளங்குகிறாள்; இத்தகைய விந்தை மிகும் தீயை எங்கிருந்து பெற்றாள்?' என்று காதலன் கூறுவதாக உள்ளது இக்குறள்.

அதிகார இயைபு

தீயின் இலக்கணமே மாறி புதுமையான நெருப்பாக வந்த காதலியிடம் புணர்ச்சி மகிழ்தல் எய்திய காதலனின் கூற்று.

பொழிப்பு

விலகினால் சுடும்; நெருங்கினால் குளிரும், தீயை இவள் எங்கிருந்து பெற்றாள்?