இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1107தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு

(அதிகாரம்:புணர்ச்சி மகிழ்தல் குறள் எண்:1107)

பொழிப்பு (மு வரதராசன்): அழகிய மாமை நிறம் உடைய இவளுடைய தழுவுதல், தம்முடைய வீட்டிலிருந்து தாம் ஈட்டிய பொருளைப் பகுத்துக் கொடுத்து உண்டாற் போன்றது.

மணக்குடவர் உரை: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும், அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.

பரிமேலழகர் உரை: (இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது ) அம்மா அரிவை முயக்கம் - அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்; தம்மில் இருந்து தமது பாத்து உண்டற்று - இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும். (தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று)

வ சுப மாணிக்கம் உரை: அழகிய மாநிறப் பென்ணைத் தழுவுதல் தன்வீட்டிலிருந்து தன் பங்கை உண்பது போல்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அம்மா அரிவை முயக்கு தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்.

பதவுரை:
தம்-தமது; இல்-மனை; இருந்து-இருந்து கொண்டு; தமது-தம்முடைய; பாத்து-பகுத்து, பங்கு, உரிமை போன்ற பல பொருள். பங்கு அல்லது உரிமை என்பது பொருத்தம்; உண்டு- உண்டு; அற்றால்-அத்தன்மைத்து அம்-அழகிய; மா-மாமை நிறம்; அரிவை-அழகிய மடந்தை; முயக்கு-தழுவல்.


தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்;
பரிப்பெருமாள்: தம்மிடத்திலே யிருந்து, தமது தாளாண்மையால் பெற்ற பொருளை இல்லாதார்க்குப் பகுத்து உண்டாற்போலும்;
பரிதி: தம்மிட அகத்திலே இருந்து தம்மிட அசனத்தைப் பொசிப்பதுபோல இன்பம் இல்லை;
காலிங்கர்: கேளாய் நெஞ்சே! தமக்குரிமையுடைய இல்லின்கண் இருந்து தமது தாளாண்மையால் நீதியின் தந்த பொருள் கொண்டு தாமே தனித்து உண்டு ஒழியக் கருதாது பலர்க்கும் பகுத்துண்டு வாழ்தலின் இனிமை எத்தன்மைத்து;
பரிமேலழகர்: (இவளை நீ வரைந்துகொண்டு உலகோர் தம் இல்லிருந்து தமது பாத்துண்ணும் இல்லறத்தோடு படல் வேண்டும் என்ற தோழிக்குச் சொல்லியது) இன்பம் பயத்தற்கண் தமக்குரிய இல்லின்கண் இருந்து உலகோர் தம்தாளான் வந்த பொருளைத் தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல்கட்குப் பகுத்துத் தம் கூற்றை உண்டாற் போலும்.

பழம் ஆசிரியர்களில் பரிதி தவிர்த்து அனைவரது உரையும் 'தம் இடத்திலே இருந்து முயற்சியால் பெற்ற பொருளைப் பகுத்து உண்டாற் போலும்' என்ற பொருளை உணர்த்திற்று. பரிதி பகுத்து உண்டு என்று கூறாமல் தம்முடைய பொருளை உண்பது போல என்கிறார்.

இன்றைய ஆசிரியர்கள் 'தம் இல்லத்திலிருந்து தம் முயற்சியால் ஈட்டிய பொருளைப் பலர்க்கும் பகுத்தளித்து உண்டு இன்புற்றாற் போலும்', 'தமக்கு உரிமையாம் இல்லத்தில் இருந்து, தம் உழைப்பால் வந்த உணவைப் பலரொடும் பகுத்துண்டாற் போலும் இன்பம் செய்வது', 'தனது முயற்சியால் வந்த பொருளை உரியவர் யாவர்க்கும் பகுத்துக் கொடுத்துத் தானும் தம் வீட்டிலிருந்து நுகர்வதுபோல் இருக்கிறது', 'தம்முடைய வீட்டில் இருந்து தமது உழைப்பால் வந்தவற்றைப் பிறர்க்குப் பங்கிட்டுக் கொடுத்துவிட்டுத் தமக்குரியதை உண்பதால் உண்டாகும் இன்பத்தைப் போன்றது', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு உண்டானதை உண்பதைப் போன்றது என்பது இப்பகுதியின் பொருள்.

அம்மா அரிவை முயக்கு:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.
பரிப்பெருமாள்: அழகிய மாமை நிறத்தினையுடைய அரிவை முயக்கம்.
பரிப்பெருமாள் கருத்துரை: உணவினும் அதனின் மிக்க இன்பம் தருவது இல்லை. புணர்ச்சியின் இதனின் மிக்க இன்பம் தருவது இல்லை என்று அதன் இனிமை கூறியது.
பரிதி: அதனினும் பெரியது அரிவை முயக்கம் என்றவாறு.
காலிங்கர்: மற்று அத்தன்மை உடையது யாதோ எனில், இவ்வரிவையை யாம் ஒருபொழுது இடைவிடாது முயங்கப்பெறும் முயக்கின் தன்மை என்றவாறு.
பரிமேலழகர்: அழகிய மாமை நிறத்தையுடைய அரிவையது முயக்கம்;
பரிமேலழகர் குறிப்புரை: தொழில் உவமம். 'இல்லறஞ்செய்தார் எய்தும் துறக்கத்து இன்பம் எனக்கு இப்புணர்ச்சியே தரும்' என வரைவு உடன்படான் கூறியவாறாயிற்று

'அரிவை முயக்கம்' என்று இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரை கூறினர். அம்மா என்ற சொல்லுக்கு அம்+மா என்று கொண்டு அழகிய மாமை நிறம் கொண்டவள் என்று மணக்குடவர், பரிப்பெருமாள், பரிமேலழகர் ஆகியோர் பொருள் கூறினர். பரிதியும் காலிங்கரும் இதற்கு ஒரு விளக்கமும் கூறவில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'அழகிய மாநிற மங்கையின் புணர்ச்சி இன்பம்', 'அழகிய மாந்தளிர் நிறம் அமைந்த என்னவளின் தழுவுதல்', 'மாநிறமுடைய இவ்வழகிய மங்கையினது சேர்க்கை', 'அழகிய மாமை நிறத்தினையுடைய பெண்ணினது கூட்டுறவால் வரும் இன்பம்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அம்மா இளம்பெண்ணைத் தழுவுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம் வீட்டில் இருந்துகொண்டு தமதுபாத்து உண்பதைப் போன்றது அம்மா இளம்பெண்ணைத் தழுவுதல் என்பது பாடலின் பொருள்.
'தமதுபாத்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

காதலர் பெற்ற சேர்க்கை இன்பம் உரிமை வாழ்க்கையில் பெறும் மகிழ்ச்சிக்கு நிகர்.

களவொழுக்கம் மேற்கொண்ட காதலர்கள் ஒருவரையொருவர் புரிந்துகொண்டபின் புணர்ச்சியில் ஈடுபட்டார்கள். கலவியால் தான் பெற்ற இன்பத்தின் தன்மை குறித்துக் காதலன் எண்ணிக் களித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள் முயக்கத்தில் பெற்ற இன்பம் எத்தகையது என்பது இங்கு சொல்லப்படுகிறது.
தன்னுடைய வீட்டிலிருந்து தான் ஈட்டிய பொருள் கொண்டு வாழ்வு நடத்துவது தனி இன்பம்தான். சிறியதோ பெரியதோ, வசதிகள் கொண்டதோ அற்றதோ, தனது இல்லத்தில் உறைவதற்கு ஈடு இல்லை. அதுபோல தன் முயற்சியில் ஈட்டிய பொருள்மீது அவன் கொள்ளும் உரிமை பெருமையுள் பெருமையாகும். ஒருவன் தனது வீட்டில் இருந்துகொண்டு தனக்கு உரிமையான பொருளை நுகர்வதில் பெருநிறைவு அடைவான். இந்த இன்பம் காதலில் வெற்றி கண்டு, மனம் ஒன்றிய காதலர் இருவரும் உரிமையுடன் ஒருவரையொருவர் தழுவிக் கொள்ளும்போது பெறும் இன்பத்திற்கு இணையானது என்கிறது இக்குறள். உரிமை என்பது இங்கு இரண்டு இன்பங்களுக்கும் இணைப்புச் சொல் ஆகும். தமக்கு மட்டுமே உரிமையானவர் என்று காதலியும் தனக்கு மட்டுமே உரிமை உடையவள் என்று காதலனும் எண்ணும் உரிமைக் காதல் வாழ்வில் மகிழ்ச்சி அளவற்றதாக இருக்கும். அப்படிப்பட்ட காதலர் இருவர் முயக்கம் பேசப்படுகிறது.

மாமைநிறம் பெற்ற காதல் இளம்பெண்ணை அவளது காதலன் தழுவிக் கொள்வதை 'அம்மா அரிவை முயக்கு' என்ற தொடர் உணர்த்திற்று.
இக்குறளிலுள்ள அம்மா என்ற சொல்லுக்கு இரண்டு வகையான விளக்கங்கள் காணக் கிடக்கின்றன. பெரும்பான்மையர் அம்+மா என்று பிரித்து அழகிய மாமை நிறம் என்று பொருள் கூறுவர். மாமை என்பதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட பொருள் உண்டு. மாந்தளிர், இளங்கருப்பு, மஞ்சள் என்று ஒன்றுக்கொன்று மாறுபட்ட நிறம் குறிப்பதாகக் கூறுவர். பொன்னிறம் என்று குழந்தையுரை சொல்கிறது. 'மாமைக் கவின்' எனவும் 'செய்ய மாமை' என்றும் இந்நிறத்தைச் சங்கப்பாக்கள் சிறப்பிக்கின்றன. மாமை என்றது மாந்தளிர் நிறத்தைக் குறித்ததாகலாம்.
'அம்மா' வியப்பு இடைச்சொல் ஆகும் என்பது மற்றொரு சாரோர் விளக்கம். அரிவையின் முயக்கு தரும் இன்பம் விரித்துரைக்க இயலாத அளவானது என்பதைச் சொல்ல “அம்மா!” அல்லது 'அம்மம்மா!' என்ற ஒரு வியப்புச் சொல் சேர்க்கப்பட்டது என்பர் இவர்கள். அம்மா என்பது 'தோழி நீ கேள் என்றும் ஆம்' என்று விளிச்சொல்லாகவும் கொள்கிறது பழைய உரை ஒன்று. அதிகாரம் நோக்கி அம்மம்மா என்ன இன்பம் என்ற பொருள்படும்படி வியப்புச் சொல்லாகக் கொள்வது சிறக்கலாம்.
அரிவை என்ற சொல் இளம்பெண்ணைக் குறிப்பது. பொதுவாக இது 20 - 25 வயதுள்ள பெண்டிரைக் குறிக்கும். அரிவை என்பது இங்குப் பருவங் குறியாது பெண்மை மாட்டுங் குறித்து நின்றது என்பார் தேவநேயப்பாவாணர்.
'அம்மா அரிவை' என்ற சொற்றொடர் நற்றிணைப் பாடல் எண் 120, குறுந்தொகை பாடல் எண் 63 ஆகிய சங்கச் செய்யுள்களில் பயின்று வந்துள்ளது.
முயக்கு என்பது தழுவலைக் குறிக்கும். முயக்கால் வரும் இன்பம் முயக்கு எனச் சொல்லப்பட்டது

தம் இல் தமது உண்டன்ன சினைதொறும் தீம் பழம் தூங்கும் பலவின் (குறுந்தொகை 83 பொருள்: .....தமது வீட்டின்கண் இருந்து, தம்முடையதை உண்டாற் போன்ற இன்சுவையைத் தரும், கிளைதோறும் தொங்குகின்ற, இனியபலாமரங்களையுடைய..... ) என்ற சங்கப்பாடல் இக்குறட்கருத்தை ஒத்ததாக உள்ளது.

'மனம் ஒன்றிய நிலையில், தலைவன்-தலைவி ஒருவரையொருவர் தழுவிக் கொண்டது, தம்மில் இருந்து தமக்கு உரிமையான பொருளை, குற்ற உணர்ச்சி ஏதுமின்றி, நுகர்தல் போன்று விரித்துரைக்க இயலாத அளவான இன்பமாய் இருந்தது' என்பது இப்பாடலின் பொருள்.

'தமதுபாத்து' என்ற தொடர் குறிப்பது என்ன?

பாத்துண்டல் என்பது பாத்து+உண்டல் என்று பிரிக்கப்படும். 'பாத்து' என்ற சொல்லுக்குப் பகுத்து என்றும் பங்கு என்றும் பொருள் கொள்வர். எனவே இதை 'பகுத்து உண்டல்' என்றும் 'பங்கை உண்டல்' என்றும் விரிவு படுத்தமுடியும். இன்று வழக்கில் உள்ள 'பாத்தியப்பட்டது' என்ற சொல்லுக்கு உரிமையுள்ளது என்பது பொருள். பாத்து என்றது என்ற 'பாத்தியப்பட்டது' சொல்லிலிருந்து வந்திருக்கலாம். இல்லாவிட்டாலும் பங்கு என்பதும் உரிமைப்பொருளைத்தான் குறிக்கும். எனவே தமது பாத்து என்பதற்கு 'தமது உரிமையான' என்றும் பொருள் கூறலாம். பழைய (உ வே சா) உரை 'பாத்து-சோறு' என மற்றொரு பொருள் கூறியது.

தம் இல்லத்தில் இருந்துகொண்டு தாம் ஈட்டிய பொருளைப் 'பலருடன் பகுத்து உண்பதைப்' போன்றது காதலியின் தழுவல் என்பது இன்று அனைவராலும் இப்பாடலுக்கான உரையாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
"இக்குறள் காமஇன்பம் இன்னதென்று சொல்லும்போது 'எப்படி வாழவேண்டும்?' என்ற வழியையும் காட்டியது' என்றும் 'உண்ணுதல் உயிர்ப்பசி நிறைதல்; காம இன்பம் உடற்பசித் தீர்வு' என்றும் 'இக்குறளால் பகுத்துண்பதால் பெறும் இன்பம் காமத்துப்பாலிலும் சிறப்பிக்கப்படுகிறது. தழுவி உவக்கும் இன்பமும் பாத்துண்ணும் இன்பத்தின் தன்மையதே; பகுத்துண்டலின் சிறப்புக் கருதித் தலைமக்களுக்கு அவ்வறத்தைக் குறிப்பினால் உணர்த்தினார்' என்றும், பகுத்துண்டல் மகிழ்ச்சியையும் காமப்புணர்ச்சி இன்பத்தையும், இயைபுபடுத்தினர் உரையாசிரியர்கள்.
இவை போன்ற விளக்கங்கள் பகுத்துண்டல், புணர்ச்சியின்பம் ஆகிய இரண்டு இன்பங்களும் ஒப்புமையாகும் என்பதை முழுமையாக விளக்கக்கூடியனவாக இல்லை. இளம் காதலர்களின் காமஇன்பத்துக்குப் பகுத்துண்ணும் அறஇன்பம் நேர் என்பது அத்துணைப் பொருத்தமாகப் படவில்லை.

தொல்லாசிரியர்கள் ஐவரில் மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர், பரிமேலழகர் ஆகிய நால்வரும் 'இல்லாதார்க்கும்/பலர்க்கும் பகுத்து உண்டாற்போலும்' என உரை வரைந்தனர். பழம் ஆசிரியர்களில் பரிதி ஒருவரே 'தம் அகத்திலே இருந்து தம் உணவை உண்பது' என்று பகிர்ந்து உண்டல் பற்றிக் கூறாமல் உரை எழுதினார். பிற்கால உரையாசிரியர்களில். வ சுப மாணிக்கம் போன்ற ஓரிருவர் 'தமதுபாத்து' என்ற தொடர்க்குப் பகுத்துண்டு என்று பொருள் கொள்ளாமல் 'தன் பங்கை உண்பது போல்' அல்லது 'சோறு' என்றவாறு பொருள் கொள்கின்றனர். அதாவது அன்றிலிருந்து இன்றுவரை பெரும்பான்மையர் 'பகுத்துண்டல்' என்ற பொருளையே கொண்டனர்.
பலருக்கும் பகுத்துக் கொடுத்தலைச் சீரிய அறமாக பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும் தீப்பிணி தீண்டல் அரிது (227), பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை. (322) என்னும் குறட்பாக்கள் வற்புறுத்துகின்றன. இவற்றிலுள்ள பாத்தூண், பகுத்துண்டு என்ற சொற்றொடர்களை நினைவில் இருத்தி இக்குறளிலுள்ள 'பாத்து உண்டற்றால்' என்ற தொடர்க்கும் அவற்றின் பொருளையே கொண்டிருக்கலாம்.
தனக்குள்ள வீட்டில் இருந்துகொண்டு, தனது உணவைப் பிறருடன் பகிர்ந்து வாழ்வதன் இன்பம் என்பது நல்ல இல்லற ஒழுக்கக் கருத்துத்தான். ஆயினும் இது காமத்துப் பாலில் அதுவும் புணர்ச்சி மகிழ்தலில் ஒப்பு நோக்கத் தக்கதாகத் தோன்றவில்லை. 'பகுத்துண்டல்' என்ற பொருள் இப்பாடலுக்குப் பொருந்தி வரவில்லை.
பகுத்துண்டல் இல்லையென்றால் பங்கு அல்லது உரிமைப்பொருள் என்றிவற்றுள் ஒன்றாக இருக்கவேண்டும். இவற்றுள் உரிமை என்பது மிகப்பொருத்தம்.

தமது பாத்து என்பதற்கு 'தமக்கு உரிமையானது' என்பது பொருள்.

தம் வீட்டில் இருந்துகொண்டு தமக்கு தமக்கு உண்டானதை உண்பதைப் போன்றது அம்மா இளம்பெண்ணைத் தழுவுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

உரிமையுள்ளவர்களின் புணர்ச்சி மகிழ்தல் கூறும் பாடல்.

பொழிப்பு

இந்த இளம்பெண்ணைத் தழுவுதல் தம் இல்லத்திலிருந்து தமக்கு உரியதைத் துய்த்தாற் போலும்.