இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0462



தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்

(அதிகாரம்:தெரிந்து செயல்வகை குறள் எண்:462)

பொழிப்பு: ஆராய்ந்து சேர்ந்த இனத்துடன் (செயலைப்பற்றி) நன்றாகத் தேர்ந்து, தாமும் எண்ணிப் பார்த்துச் செய்கின்றவர்க்கு அரிய பொருள் ஒன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்குப் பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.

பரிமேலழகர் உரை: தெரிந்த இனத்தொடு தேர்ந்து எண்ணிச் செய்வார்க்கு - தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு, அரும் பொருள் யாதொன்றும் இல் - எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.
(ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.)

இரா இளங்குமரனார் உரை: எடுத்துக் கொள்ள இருக்கும் செயலைப்பற்றி நன்கு தெரிந்த கூட்டத்தோடு ஆராய்ந்து, பலவகையாலும் தாமும் எண்ணிச் செய்பவர்க்குச் செய்தற்கு அரியது எதுவும் இல்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல்.


தெரிந்த இனத்தோடு தேர்ந்துஎண்ணிச் செய்வார்க்கு :
பதவுரை: தெரிந்த-தேர்ந்தெடுக்கப்பட்ட; இனத்தோடு-இனத்துடன்; தேர்ந்து-ஆராய்ந்து; எண்ணி-கருதி; செய்வார்க்கு-செய்பவர்க்கு .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமாத்தியர் பலருள் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல அரசர்க்கு;
பரிப்பெருமாள்: அமாத்தியர் பலருள்ளும் ஆராய்ந்து கூட்டிக்கொள்ளப்பட்ட மந்திரிகளாகிய இனத்தோடே கூடச் செய்யும் வினையை ஆராய்ந்து அதனைச் செய்யுமாறு எண்ணிச் செய்யவல்ல வல்லவனுக்கு;
பரிப்பெருமாள் கருத்துரை: இனம் என்றார் மந்திரிகள் பலர் வேண்டும்2 என்றதற்கு. இஃது எண்ணுதற்கு ஆவாரையும் கூறி, எண்ணிச் செய்யவேண்டும் என்பதும் கூறிற்று.
பரிதி: விசாரித்தால் பெரியோர்கூட விசாரித்து மேலெண்ணி யாதொன்றும் செய்வார்க்கு;
காலிங்கர்: யாதும் ஒரு கருமம் செய்யுமிடத்து அதனைத் தெரிந்து செய்யும் திறமையரேனும் மற்று அதனைக் கல்வியால் தெரிந்த நல்லினத்துடனே உசாவிக்கொண்டு தமது நெஞ்சானும் தெரியத் தேர்ந்துகொண்டு இங்ஙனம் செய்யும் அரசர்க்கு; [உசாவி- வினவியாராய்ந்து]
பரிமேலழகர்: தாம் தெரிந்துகொண்ட இனத்துடனே செய்யத் தகும் வினையை ஆராய்ந்து பின் தாமேயும் எண்ணிச் செய்து முடிக்க வல்ல அரசர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம் என்றுமாம். 'செய்வார்க்கு' என்றதனால், 'வினை' என்னும் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது.

மணக்குடவர்/பரிப்பெருமாள் அமைச்சர்கள் பலருடனும் வினையை ஆராய்ந்து எண்ணிச் செய்வார்க்கு' என்று இத்தொடர்க்குப் பொருள் கூறினர். பரிதி பெரியோரருடன் கலந்து செய்வார்க்கு என்றார். காலிங்கர் 'கருமத்தைத் தெரிந்து செய்யும் திறமையானவர்களிடம் வினாவியாராய்ந்து செய்வார்க்கு' என்றார். பரிமேலழகர் 'தெரிந்து கொண்ட இனத்துடன் என்றும் 'ஆராயப்படுவன எல்லாம் ஆராய்ந்து போந்த இனம்' என்ற இரண்டாம் பொருளும் கொண்டு ஆராய்ந்து தாமேயும் எண்ணிச் செய்வார்க்கு' என இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள 'சேர்ந்தவர்களைக் கலந்து செய்பவர்க்கு ', 'ஆராய வேண்டுவனவற்றை நன்கறிந்த இனத்தோடு ஆராய்ந்து தாமும் எண்ணிப் பார்த்துச் செயல்புரிவார்க்கு', '(அப்படி ஆராயும்போது) அந்த வேலையைப் பற்றித் தெரிந்திருக்கிற தொழிலாளிகளைத் தேடியடைந்து, அவர்களுடன் ஆலோசனை செய்து, அதன்பிறகு அதை ஆரம்பிக்கிறவர்களுக்கு ', தமக்கு நன்கு தெரிந்த நண்பர் கூட்டத்தினோடு செய்யத்தகும் செயல்பற்றி நன்கு ஆராய்ந்து தாமும் பலகால் சிந்தித்து ஒரு செயலைச் செய்து முடிக்க வல்லவர்க்கு' ',என்ற பொருளில் உரை தந்தனர்.

செயலைத் தெரிந்து செய்யும் திறமையாளர்களிடம் கலந்து பின் தாமேயும் ஆராய்ந்து செய்பவர்களுக்கு என்பது இப்பகுதியின் பொருள்.

அரும்பொருள் யாதுஒன்றும் இல்:
பதவுரை: அரும்பொருள்-எய்தற்கரிய பயன்கள்;; யாதொன்றும்-சிறிதாயினும்; இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பெறுதற்கு அரிதா யிருப்பதொரு பொருள் யாதொன்று மில்லை.
பரிப்பெருமாள்: பெறுதற்கு அரியதொரு பொருள் யாதொரு பொருளும் இல்லை.
பரிதி: அரிதான காரியம் ஒன்றும் இல்லை என்றவாறு.
காலிங்கர்: இனிச்செயற்கு அருமையுடைய பொருள் யாதொன்றும் இல்லை. மற்று இவர்க்கு யாவையும் செய்தல் எளிது என்றவாறு.:
பரிமேலழகர்: எய்துதற்கரிய பொருள் யாதொன்றும் இல்லை.
பரிமேலழகர் குறிப்புரை: வினையாவது: மேற்சேறல் முதல் வேறல் ஈறாய தொழில். பொருள்கட்கு ஏதுவாய் அதனில் தவறாமையின், அரிய பொருள்கள் எல்லாம் எளிதின் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் செய்யத்தகும் வினையும், அது செய்யுமாறும் கூறப்பட்டன.

'பெறுதற்கு அரிதாக இருப்பதொரு பொருள்/காரியம் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள்' செய்ய இயலாதது ஒன்றுமே இல்லை ' அரிய பொருள் எதுவும் இல்லை', 'முடியாத காரியம் யாதொன்று மில்லை ', அடைதற்கு அரிய பொருள் யாதொன்றும் இல்லை ' 'என்றபடி பொருள் உரைத்தனர்.

எய்துதற்கு அருமையுடையது என்றொரு செயல் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பெரியாரைத் துணைக்கொண்டு செயல் ஆற்றுவோர்க்கு எதையும் எளிதாகச் செய்ய முடியும் என்னும் பாடல்.

தெரிந்த இனத்தோடு கலந்து பின் தாமேயும் ஆராய்ந்து செய்பவர்களுக்கு எய்துதற்கு அருமையுடையது என்றொரு செயல் இல்லை என்பது பாடலின் பொருள்.
தெரிந்த இனம் எது?

தேர்ந்து என்ற சொல்லுக்கு ஆராய்ந்து என்பது பொருள்..
எண்ணி என்ற சொல் சிந்தித்து' என்ற பொருள் தரும்.
செய்வார்க்கு என்ற சொல் செயல் மேற்கொள்வார்க்கு என்ற பொருளது.
அரும்பொருள் என்றது அரிய செயல் என்பதைக் குறிக்கும்.
யாதொன்றும் இல் என்ற தொடர் எது ஒன்றுமே இல்லை எனப் பொருள்படும்.

தேர்ந்நெடுக்கப்பட்ட வல்லுநர்களுடன் கலந்து தாமும் நன்கு சிந்தித்துச் செயல் மேற்கொள்வோர்க்கு செயல்முறைக்கு இயலாச் செயல் என்று எதுவுமே இல்லை.

பலரது கூட்டு முயற்சி இல்லாமல் அரிய செயல்களை ஆற்ற இயலாது. எனவே தொழிலில் நல்ல பயிற்சியும் தேர்ச்சியும் உள்ளவர்களைத் துணைக் கொள்ளல் வேண்டும். இவர்கள் அவரவர் துறையின் நுட்பங்களை ஆய்ந்து அறிந்தவர்கள் ஆவர். அதாவது ஒருசெயல் பலவாறாகச் செய்வதானால் அவற்றுள் ஆவது அறிந்தவர்கள். இத்தகையோரைக் கூடி மேலும் செய்திறன் கூறுகளான பொருள், கருவி, காலம், வினை, இடம் போன்றவற்றை ஆராய்ந்து பல்வேறு வகையான கருத்துருவாக்கங்களை ஏற்படுத்திச் செயலில் இறங்க வேண்டும். செயல் நிறைவேற்றுவதில் பல வகைப்பட்ட சிக்கல்கள் எழக்கூடுமாதலால் ஒருவருடைய ஆற்றலுக்குள் அவை அடங்குவதில்லை. பல துறைகளின் பின்னலாக அமைந்த இச்சிக்கல்களைத் தக்க வல்லுனர்கள் கொண்ட குழுவின் துணையின்றித் தீர்க்க முடியாது. இவை தவிர்த்து தனது நெஞ்சானும் தெரியத் தேர்ந்துகொள்ள வேண்டும். அதாவது தாம் அச்செயல்பர்றி நிறைவான எண்ணம் அடைய வேண்டும் என்பதும் இன்றியமையாதது. இவ்வாறு திட்டமிட்டு ஆற்றல் மிக்காரின் துணையுடன் தானும் உள்ளடங்கி செயல்படுவோர்க்கு எந்தச் செயலும் எளிதாகி விடும் .என்கிறார் வள்ளுவர்...

தெரிந்த இனம் எது?

தெரிந்த இனம் என்பதற்கு 'அமைச்சர்கள் தெளிந்த குழு', 'கல்வியால் தெரிந்த நல்லினம்;, 'ஆராயப்படுவன வெல்லாம் ஆராய்ந்து போந்த இனம்',, 'நன்றாகத் தெரிந்த நண்பர்கள் கூட்டம்', 'காரியம் அறிந்து செய்விக்கத்தக்க இனம்', 'எடுத்த செயல் பற்றித் தெரிந்த பெரியோர்', 'முன்பே செய்து அனுபவம் பெற்ற நல்லினம்,' 'தாம்: தக்கவர் என்று தெரிந்துகொண்ட இனம்'-, என்று பலவாறாக உரை கூறினர்.

,இனம் என்றதால் பலபேரைக் குறித்தலை அறியலாம் இனத்தோடு என்றது குழுவோடு என்று பொருள்படும். தெரிந்த என்ற சொல்லுக்கு தெளிந்த அதாவது தேர்ந்தெடுக்கபட்ட எனவும் அறிந்த எனவும் இரு பொருள் உண்டு. 'பலருடன் சேர்ந்து இவரே. இதற்குரியவர்; எனத் தெளிந்து கூட்டிக்கொண்ட அதாவது தேர்ந்தெடுக்கப்பட்டு சேர்த்துக் கொள்ளப்பட்ட இனம்' என்றும் தாம் மேற்கொள்ளும் செயலைத் தெரிந்த இனம் என்றும் இருதிறத்ததாக பொருள்கள் காணப்படுகின்றன.
இவற்றுள் தெரிந்து செய்யும் திறமைபெற்றோர் அல்லது அந்தந்தத் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த அறிவுடைய பெரியோர்கள் என்ற பொருள் பொருத்தமகும். இவர்கள்தாம் பெரியாரைத் துணைக்கோடல் அதிகாரத்திலும் குறிப்பிடப்படுபவர்கள்..

செயல்பற்றி நன்கு அறிந்தவர்கள் கொண்ட குழு என்பது இத்தொடரின் பொருள்.

செயலைத் தெரிந்து செய்யும் திறமையாளர்களிடம் கலந்து பின் தாமேயும் ஆராய்ந்து செய்பவர்களுக்கு எய்துதற்கு அருமையுடையது என்றொரு செயல் இல்லை என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

திறமையர் குழுவோடு திட்டமிட்டுச் செயல்புரிவோர் வெற்றி காண்பது எளிது என்னும் தெரிந்து செயல்வகை பாடல்.

பொழிப்பு

ஆய்ந்து அறிந்த பெரியார்களுடன் கலந்து எண்ணிச் செயல்புரிவார்க்கு செய்ய இயலாதது என்று ஒன்றுமே இல்லை