இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0471 குறள் திறன்-0472 குறள் திறன்-0473 குறள் திறன்-0474 குறள் திறன்-0475
குறள் திறன்-0476 குறள் திறன்-0477 குறள் திறன்-0478 குறள் திறன்-0479 குறள் திறன்-0480

போர் செய்யக் கருதினாலும் தொழில் தொடங்க எண்ணினாலும் கொடை செய்ய நினைத்தாலும் தன் வலிமை, மாற்றான் வலிமை, தன்னிடமுள்ள பொருள் வலிமை என எல்லாவற்றையும் எண்ணிப் பார்த்து அளந்து அறிதல்.
- தமிழண்ணல

வலியறிதல் என்பது ஆற்றலை அறிந்து கொள்ளுதலைச் சொல்வது. ஒரு செயலைத் தொடங்குமுன் அதைப்பற்றி அறிய வேண்டியவற்றையெல்லாம் ஆராய்ந்து தெரிந்து கொள்தலாம். மேற்செல்லும் செயலைச் செய்து முடிக்கும் ஆற்றல் தனக்கு இருக்கிறதா என்று தன்னுடைய வலிமையையும் செயலின் திறத்தையும் போட்டியாளர்களின் ஆற்றலையும் தனக்கும் போட்டியாளர்க்கும் துணைபோவார் வலிமையையும் அளந்து அறிந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகிறது அதிகாரம் .பொருள்வலி காக்கப்படவேண்டும் எனவும் வலிறுத்துகிறது.

வலியறிதல்

பொதுவாக வலியறிதல் போர் மேலாண்மை பற்றியதாகவே அறியப்படுகிறது. போர்க்காலத்தில் மட்டுமன்றி போர் இல்லாத காலத்தும் மற்ற துறைகளுக்குமான செயல்களுக்கும் பொருந்துவாதாகவே இவ்வதிகார்த்துப் பாடல்கள் அமைந்துள்ளன.
ஒரு செயலில் முனைப்புடன் ஈடுபட வேண்டுமென்று அறிவுரை பகர்கிறது ஒரு பாடல். வறிதே மனஎழுச்சியின் காரணமாக செயல் தொடங்கி இடையிலே முடிக்க முடியாமல் போவதாக இருக்கக்கூடாது என்று எச்சரிக்கையும் செய்கிறது இன்னொரு குறள். தன் உண்மையான வலிமை அறியாமல் தன்னை மிகையாக மதிப்பிட்டு செயலைக் கெடுக்க வேண்டாம்; மயிலிறகே ஆனாலும் மிகையாக ஏற்றினால் பாரவண்டியின் அச்சு முறிந்து போவது போல் போட்டியாளர்கள் மிகையானால் தம் வலி குறைகிறது என்று உணரவேண்டும். -நுனிக்கொம்பில் ஏறியவன் இன்னும் மேலே போக முயலக்கூடாது போல மேற்கொண்ட செயலின் முறிநிலை அறிந்து உகந்த வேளையில் நிறுத்திவிட வேண்டும் எனவும் இவ்வதிகாரத்துப் பாடல்கள் கூறுகின்றன. பொருள்வலி பற்றி நான்கு பாடல்கள் ஆய்கின்றன. கொடுப்பது கூட பொருள்நெறி அறிந்து கொடுக்க வேண்டும்; வருவாய் வரும்வ்ழியின் மேல் ஒருகண் எப்பொழுதும் இருந்துகொண்டே இருக்கவேண்டும்- வரவு மீறிய செலவினங்கள் ஆகாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிடில் எல்லாம் இருந்தன போல் தோன்றியன ஒன்றும் இல்லாமல் போய்விட்டதை உணரவேண்டியிருக்கும். ஒப்புரவே ஆனாலும் அளவறிந்து செய்யாவிட்டால் அந்த ஒப்புரவுக்கும் கூட வளம் இல்லாமல் போய்விடும். இவை இவாதிகாரம் தரும் செய்திகள்.

வலியறிதல் அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 471 ஆம்குறள் முயற்சி மேற்கொள்ளும் முன்னர் அதில் தொடர்புடைய அனைத்து வன்மைக:ளையும் தெரிந்து கொள்ளச் சொல்வது.
  • 472 ஆம்குறள் தொடங்கிய செயலில் வெற்றி காண அதில் முழுமனதுடன் ஈடுபடவேண்டும் என்பதைச் சொல்வது.
  • 473 ஆம்குறள் உணர்ச்சி உந்தலால மட்டுமே எந்தச் செயலையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்துவது.
  • 474 ஆம்குறள் வலியறியாது மிகையாகத் தன்னை மதிப்பீடு செய்து கொண்டவன் விரைவில் கெடுவான் என்கிறது.
  • 475 ஆம்குறள் பகைவர் வலியைத் தொகுத்தறிதல் வேண்டும் எனச் சொல்வது.
  • 476 ஆம்குறள் தன் வலியின் எல்லை மீறி முயல வேண்டாம் எனக் கூறுகிறது.
  • 477 ஆம்குறள் ஈதல் தொடர்ந்து நடைபெற வரவு அறிந்து கொடுக்க வேண்டும் என்கிறது.
  • 478 ஆம்குறள் செலவை வரவுக்குள் கொண்டுவந்துவிட்டால் வருவாய் சிறிதானாலும் கேடு உண்டாகாது என்பதைச் சொல்வது.
  • 479 ஆம்குறள் தனது பொருள்நிலை அறியாமல் வாழ்வு நடத்துபவன் செல்வம் இழந்து, வாழ்க்கையையும் தொலைத்து நிறபான் என்கிறது.
  • 480 ஆவதுகுறள் பொதுநன்மைக்கான ஒப்புரவே என்றாலும் வளவலி எண்ணிச் செய்க என எச்சரிப்பது.

வலியறிதல் அதிகாரச் சிறப்பியல்புகள்

உவமேயம் சொல்லப்படாமல் உணர்த்தக் கருதிய கருத்தைப் பிறுது ஒரு பொருளை உவமானமாக்கி எடுத்ததுரைப்பது பிறிதுமொழிதல் அணி' யாகும். பிறிதுமோழிதலாக உரைத்தால் தெளிவும் ஆழமும் உடையதாய் ஆகிறது. இந்த அதிகாரத்தில் இரு குறட்பாக்கள் பிறிதுமொழிதலாக அமைத்துள்ளன. பீலிபெய் சாகாடும் அச்சுஇறும்.........(குறள் 475) என்ற பாடலும் நுனிக்கொம்பர் ஏறினார்.........(குறள் 476) என்ற பாடலும் பிறுதுமொழிதல் அணியாக வந்து நினைவில் கொள்ளுமாறு உள்ளன. இப்பாடல்களில் வரையப்பட்ட பாரவண்டி மயிலிறகு ஏற்றிச் செல்தல், நுனிக்கொம்பில் ஏறி நிற்பவர் என்ற காட்சிகள் நம் மனத்தில் நிலைத்து நிற்கின்றன.

அளவறிந்து ஈக- போகுஆறு அகலாக்கடை- அளவறிந்து வாழாதான் வாழ்க்கை,, உளவரை தூக்காத, -என்ற சொற்றொடர்கள் பொருள்வலியை இழக்காமல் ஈகை, ஒப்புரவு போன்றவற்றைச் செய்வதற்கு நல்ல வழிகாட்டிகளாக உள்ளன,.

குறள் திறன்-0471 குறள் திறன்-0472 குறள் திறன்-0473 குறள் திறன்-0474 குறள் திறன்-0475
குறள் திறன்-0476 குறள் திறன்-0477 குறள் திறன்-0478 குறள் திறன்-0479 குறள் திறன்-0480