இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0474



அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:474)

பொழிப்பு: மற்றவர்களோடு ஒத்து நடக்காமல். தன் வலிமையின் அளவையும் அறியாமல், தன்னை வியந்து மதித்துக் கொண்டிருப்பவன் விரைவில் கெடுவான்

மணக்குடவர் உரை: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.

பரிமேலழகர் உரை: ஆங்கு அமைந்து ஒழுகான் - அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது, அளவு அறியான் - தன் வலியளவு அறிவதும் செய்யாது, தன்னை வியந்தான் - தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரைந்து கெடும் - விரையக் கெடும்.
(காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தன் வலிமைக்கு ஏற்பப் பொருந்தி நடவாதான் தன் வலிமையின் அளவினை அறியாதவனாய்த் தன்னைப் பற்றி மிகுதியாக நினைத்துப் பாராட்டிக் கொண்டு விரைவில் அழிவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை வியந்தான் விரைந்து கெடும்.


அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான்:
பதவுரை: அமைந்து-பொருந்தி; ஆங்கு-படி; ஒழுகான்-நடந்து கொள்ளாதவனாய்; அளவு-எல்லை; அறியான்-அறியாதவன்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே;
பரிப்பெருமாள்: அமைவுடையனாயொழுகுதலும் இன்றித் தன்வலி யளவும் அறியாதே;
பரிதி: மந்திரிகள் புத்திக்குள்ளே அடங்கி ஒழுங்காத அரசன் தன் சத்துவமறியாமல்;
காலிங்கர்: யாதானும் ஒரு பொருள் முற்றுப்பெற்றது யாங்கு; மற்று ஆங்கு அதற்கு ஏறக் கடவானுமாய் மற்றுந் தன்விதி வரம்பினை உணராதானுமாய்;
பரிமேலழகர்: அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது தன் வலியளவு அறிவதும் செய்யாது;

'அளவறியான்' என்றதற்குத் 'தன வலியை அறியாதவனாய்' என்று அனைத்துத் தொல்லாசிரியர்களும் ஒத்த பொருள் கூறினர். 'அமைந்தாங்கு ஒழுகான்' என்றதற்கு 'அமைதியாய் ஒழுகாமல்' என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற பரிதி 'மந்திரிகள் கருத்தின்படி அடங்கி நடக்காத அரசன்' என்றுரைக்கிறார். காலிங்கர் 'ஒருசெயல் முடிவுற நடந்து விடுமானால், அந்த அளவில் எல்லை கடவாமல் அடங்கி யிருப்பவனுமாய்' என்று உரை வரைந்தார். பரிமேலழகர் 'அயல்வேந்தரோடு பொருந்தி ஒழுகுவதும் செய்யாது' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் ' அமைந்தபடி நடவாதவன் அளவறியாதவன்.', 'அடக்கத்தோடு நடந்து கொள்ளானாய்த் தன் ஆற்றல் அளவையும் அறியானாய்', 'தனக்கு அமைந்துள்ள சக்திகளுக்குத் தகுந்த மட்டில் காரியத்தின் பலத்தை அளந்து கொள்ளாமல் ', 'ஏனையாரோடு ஒத்து நடவாது தன்னுடைய வலிமையின் எல்லையையும் அறியாது', என்ற பொருளில் உரை தந்தனர்.

தன் வலிமைக்கேற்ப அமைந்து நடவாதானாய் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் என்பது இப்பகுதியின் பொருள்.

தன்னை வியந்தான் விரைந்து கெடும்.:
பதவுரை: தன்னை-தன்னை; வியந்தான்-நன்கு மதித்துக் கொண்டவன்; விரைந்து-உடனே; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
மணக்குடவர் குறிப்புரை: இது மேற்கூறியவாறு செய்தார் கெடுவரென்றது.
பரிப்பெருமாள்: தன்னை மதித்தவன் விரைந்து கெடுவன்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது மேற்கூறியவாறு செய்யாதார் கெடுவரென்றது.
பரிதி: தன்னை வியந்து கொள்வானாகில் சடுதியிலே கெடுவன் என்றவாறு.
காலிங்கர்: வறிதே தன்னைப் பெரிதும் மேலாகத் தன்னை மதிக்கின்றான் யாவன் மற்று அம்மதிப்புக்குத் தக்காங்கு நடக்க வேண்டினதால் விரைந்து கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: தன்னை வியந்து அவரோடு பகைத்த அரசன், விரையக் கெடும்.
பரிமேலழகர் குறிப்புரை: காரியத்தைக் காரணமாக உபசரித்து, 'வியந்தான்' என்றார். 'விரைய' என்பது திரிந்து நின்றது. நட்பாய் ஒழுகுதல், வலியறிந்து பகைத்தல் என்னும் இரண்டனுள் ஒன்றன்றேஅயல் வேந்தரோடு செயற்பாலது, இவையன்றித்தான் மெலியனாய்வைத்து அவரோடு பகைகொண்டானுக்கு ஒருபொழுதும் நிலையின்மையின், 'விரைந்துகெடும்' என்றார். இவை இரண்டு பாட்டானும் தன்வலிஅறியாவழிப்படும் இழுக்குக் கூறப்பட்டது.

'தன்னை மதிக்கின்றான் விரைந்து கெடுவன்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' தன்னைப் புகழ்ந்தவன் சடுதியிற் கெடுவான்', 'தன்னை மதித்து வியந்து கொள்பவன் விரைந்து கெடுவான்', ' தன்னுடைய பலத்தை அதிகாமாக் மதிப்பிட்டுக் கொண்டு தன்னைத்தானே புகழ்ந்து கொள்ளுகிறவன் விரைவில் கெட்டுப்போவான்', ' தன்னைப் பெரிதும் புகழ்ந்தவன் விரைவாகக் கெட்டுப் போவான்' என்றபடி பொருள் உரைத்தனர்.

தன்னைப் பெரிதும் மேலாக மதிக்கின்றவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
வலியறியாது மிகையாகத் தன்னை மதிப்பீடு செய்து கொண்டவன் விரைவில் கெடுவான் என்னும் பாடல்.

அமைந்தாங்கு ஒழுகான் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் தன்னைப் பெரிதும் மேலாக மதிக்கின்றவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது பாடலின் பொருள்.
'அமைந்தாங்கு ஒழுகான்' யார்?

அளவறியான் என்ற சொல்லுக்கு அளவை அறியாதவன் என்பது பொருள்.
தன்னை வியந்தான் என்ற தொடர் தன்னைப்பற்றி பெரிதும் உயர்வாக எண்ணி மகிழ்பவன் என்ற பொருள் தரும்.
விரைந்து கெடும் என்ற்து விரைவில் கெடுவான் எனப் பொருள்படும்.

போட்டியாளர்களோடு பொருந்தியமுறையில் நடவாமல், தன் வலிமையையும் அளந்தறியாமல். தன்னைத்தானே மிகைபட எண்ணிப் பெருமை பேசிக் கொள்பவன் விரைவில் கெடுவான்.

தன் வலிமைக்கேற்ப பொருந்தி அடக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும். தன் ஆற்றல் அளவு இது எனத் தெரிந்து அதற்குத்தக பிறருடன் அளவளாவத் தெரிந்திருக்க வேண்டும் தன்னைப் பற்றி மிகப் பெரிதாக எண்ணி- எல்லாரினும் தன்னைச் சிறந்தவனாக மதித்து- தன் முதுகில் தானே தட்டிப் பாராட்டிக் கொள்ளாமல் இருக்கவேண்டும். இத்தகைய பண்புகள் இல்லாதவன் தன்வலி யறியாமல் விரைவில் கெட்டழிவான் என்கிறது இப்பாடல்.

.

இக்குறளுக்கான காலிங்கர் உரை புதுமையாக உள்ளது. ஒரு செயல் நல்ல முறையில் நிறைவேறி முடிந்தால் மற்றச் செயல்களும் அவ்விதமே நிறைவேறும் எனத் தன்னம்பிக்கை கொண்டு அதனால் செருக்குற்று நடக்கக்கூடாது எனச் சொல்கிறது அது. இவர் கருத்துப்படி மேற்கொள்ளும் ஒவ்வொரு செயலுக்கும் பொருந்துமாறு, அளவறிந்து செயல்பட வேண்டும். .

'அமைந்தாங்கு ஒழுகான்' யார்?

அமைந்தாங்கு ஒழுகான்' என்றதற்கு அமைவுடையனாய் ஒழுகாமல், அமைச்சர்கள் கருத்துப்படி அடங்கி ஒழுகாதவன்,, எல்லை கடவாமல் அடங்கி யிருப்பவன், அயல் வேந்தரோடு கலந்து பழகுதல் செய்யாதவன், மற்றவர்களுடன் பொருந்தி அந்த நட்பமைதிக்கு ஏற்ப நடந்து கொள்ளாதவன், தனக்கமைந்தூள்ள அளவோடு செய்யாதவன், 'அமைதியோடு ஒரு செயலைச் செய்யாதவன், அயலாரோடு ஒத்து நடவாதவன், ,துணையுடனும் மாற்றருடனும் அமைந்தொழுகாதவன் என்று பல பொருள்கள் கூறப்பட்டன.
அடக்கத்தோடு செய்பவன் அல்லது ஆரவாரமின்றி செயல்படுபவன் என்பது அமைந்தாங்கு ஒழுகான்' என்பதற்கு சிறந்த விளக்கமாகும்.

தன் வலிமைக்கேற்ப அமைந்து நடவாதானாய் தன் ஆற்றலின் அளவையும் அறியாதவனாய் தன்னைப் பெரிதும் மேலாக மதிக்கின்றவன் விரைவில் கெட்டுப்போவான் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தன்வலிக்குப் பொருந்தி ஒழுகாமல் தன்னைத் தானே பாராட்டிக் கொள்பவன் விரைவில் கேடுறுவான் என்னும் வலி அறிதல் பாடல்.

பொழிப்பு

அடக்கத்தோடு நடவாதவனாய்த் தன் ஆற்றல் அளவையும் அறியானாய்த் தன்னைத்தானே மிகையாக மதிப்பீடு செய்து வியத்து கொள்பவன் விரைவில் கெடுவான்.