இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0473



உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முரிந்தார் பலர்.

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:473)

பொழிப்பு (மு வரதராசன்): தம்முடைய வலிமை இவ்வளவு என்று அறியாமல் ஊக்கத்தால் முனைந்து தொடங்கி இடையில் அதை முடிக்க வகையில்லாமல் அழிந்தவர் பலர்.

மணக்குடவர் உரை: தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி அது முடிவதன்முன்னே கெட்டார் பலர்.
இது வலியறியாதார் கெடுவரென்றது.

பரிமேலழகர் உரை: உடைத்தம் வலி அறியார் - கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே, ஊக்கத்தின் ஊக்கி - மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி, இடைக்கண் முரிந்தார் பலர் - அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர்.
('உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படு பொருள் வருவிக்கப்பட்டது. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது.)

சி இலக்குவனார்: உரை: தம்முடைய வலியினைத் தெரிந்து கொள்ளாதவராய் மன எழுச்சியால் தம் வலிமைக்கு அப்பாற்பட்ட செயலைச் செய்வதில் ஈடுபட்டு நடுவில் அழிந்து போனவர்கள் பலராவர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி. இடைக்கண் முரிந்தார் பலர்.

பதவுரை: உடைத்தம்- (தம் உடை)தம்முடைய, தம்மிடம் இருக்கின்ற; வலி-வலிமை; அறியார்-தெரியமாட்டாராக; ஊக்கத்தின்-மனவெழுச்சியால்; ஊக்கி--வினை செய்தலைத் தொடங்கி; இடைக்கண்-இடையிலே, நடுவிலே; முரிந்தார்-கெட்டவர்; பலர்-பலர்.


உடைத்தம் வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி; [மனமிகுதி- மன எழுச்சி, உற்சாகம்]
பரிப்பெருமாள்: தம்முடைய வலியறியாது மனமிகுதியாலே வினை செய்யத் தொடங்கி;
பரிதி: தம்முடைய சத்துவத்தை அறியாமல் இடும்பினாலே ஒரு காரியத்தை எடுத்து; [இடும்பு - அகந்தை].
காலிங்கர்: நமது பொருள்வலியும் துணைவலியும் முதலிய பல வரம்பினைக் கருதாராய் வறிதே ஒரு கருமத்தை நெஞ்சி(ற்) கொண்ட ஊக்கத் தானே தாமும் அதன்மேற் சென்று;
பரிமேலழகர்: கருத்தா ஆதலையுடைய தம் வலியின் அளவறியாதே மனஎழுச்சியால் தம்மின் வலியாரோடு வினை செய்தலைத் தொடங்கி;
பரிமேலழகர் குறிப்புரை: 'உடைய' என்பது அவாய் நின்றமையின் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது.

'தம் வலியின் அளவறியாதே மனஎழுச்சியால் வினை செய்யத் தொடங்கி' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆற்றல் அறியாது ஆர்வத்தால் செய்து', 'தம்முடைய ஆற்றலின் அளவை அறியாமல் மன எழுச்சியால் முயன்று', 'தம்முடைய சக்தியை அளந்து அறிந்து கொள்ளாமல் வெறும் ஆவேசத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து', 'தமக்கியல்பாயுள்ள வலிமையின் அளவை அறியாது உள்ளக்கிளர்ச்சியால் தம் அளவிற்கு மேற்பட்டதைச் செய்யத் தொடங்கி', என்ற பொருளில் உரை தந்தனர்.

தம்முடைய ஆற்றலின் அளவை அறியாமல் உள்ளக் கிளர்ச்சியால் செயலை முயன்று என்பது இப்பகுதியின் பொருள்.

இடைக்கண் முரிந்தார் பலர்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது முடிவதன்முன்னே கெட்டார் பலர்.
மணக்குடவர் குறிப்புரை: இது வலியறியாதார் கெடுவரென்றது.
பரிப்பெருமாள்: அது முடிவதன்முன்னே கெட்டார் பலர்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வலியறியாதார் கெடுவரென்றது.
பரிதி: எடுத்த காரியமும் முடிக்க மாட்டாமல் நடுவே கெட்டபேர் பலருண்டு என்றவாறு.
காலிங்கர்: பின்பு அக்கருமம் முடிக்கமாட்டாது இடையிலே தொடங்கிய கருமத்தை முரிந்து ஒழிந்தார் இவ்வுலகத்து அனேகர் என்றவாறு.
பரிமேலழகர்: அவர் அடர்த்தலான் அது செய்து முடிக்கப் பெறாது இடையே கெட்ட அரசர் உலகத்துப் பலர். [அடர்த்தலான் - நெருக்குதலால்]
பரிமேலழகர் :குறிப்புரை. மூவகை ஆற்றலுள்ளும் சிறப்புடைய அறிவு உடையார் சிலராதலின், 'முரிந்தார் பலர்' என்றார். அதனால் தம் வலியறிந்தே தொடங்குக என்பது எஞ்சி நின்றது. [மூவகை யாற்றல்-அறிவு, ஆண்மை, பெருமை]

'அது முடிவதன்முன்னே கெட்டார் பலர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இடையிலே நொடித்தவர் மிகப் பலர்', 'பின் தொடர்ந்து முடிக்கப் பெறாமல் நடுவிலே கெட்டார் பலர்', '(அதை முடிக்க முடியாமல்) இடையில் விட்டுவிட்டுக் கெட்டுப் போனவர்கள் உலகத்தில் பலர் உண்டு', 'முயற்சி முடிவதற்கு முன் இடையிலே கெட்டவர் உலகத்தில் பலர்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதை முடிக்க முடியாமல் இடையிலே நொடித்தவர் பலர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தம்முடைய ஆற்றலின் அளவை அறியாமல் ஊக்கத்தின் ஊக்கி அதை முடிக்க முடியாமல் இடையிலே நொடித்தவர் பலர் என்பது பாடலின் பொருள்.
'ஊக்கத்தின் ஊக்கி' என்றால் என்ன?

உணர்ச்சி உந்தலால் மட்டுமே எந்தச் செயலையும் மேற்கொள்ள வேண்டாம்.

தம்முடைய வலிமையை அறியாதவராய், உள்ளக் கிளர்ச்சி தூண்ட முயற்சி மேற்கொண்டு அதை முடிக்காமல் இடைநடுவே சோர்ந்து கெட்டவர் பலர்.
'உடைத்தம் வலி’ என்பதனை, 'உடை' என்ற சொல்லைத் ‘தம்’முடன் இயைத்து, 'தம் உடை வலி' என முன்பின்னாக முறை மாற்றிப் பொருள் கொள்வது இயல்பாம். ‘உடைத்தம்’ என்பதனை உடைத்து, தம் எனப்பிரித்து தம்வலி உடைத்து அறியார் என்பதற்குத் 'தம்மிடமுள்ள வலிமையை உணராதார் என்றும் பொருள் கூறினர். முரிதல் என்னுஞ்சொல் முறிதல் என்னும் வடிவும் கொள்ளும் என்பார் தேவநேயப் பாவாணர்.
தம்முடைய வலி என்றதனுள் பொருள் வலி, துணைவலி ஆகியவையும் அடங்கும். வலியின் வரம்பினைக் கருதாமல் வறிதே ஒரு செயலை நெஞ்சிற் கொண்ட ஊக்கத்தால் மட்டுமே ஒருவர் தொடங்கும் முயற்சி, நடுவிலே தோன்றும் எதிர்பாராத இடையூறுகளாலும், பலவகையில் முன்னேறிச் சென்றாலும் எதிராளிகளின் நெருக்குதல்களைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், தோல்வியில்தான் முடியும்.
முரிந்தார் பலர் என்று சொல்லப்பட்டதால் வெற்றி பெற்றார் சிலரே என்பது பெறப்படும்.
உணர்ச்சி வேகத்தில் தொடங்குபவர்கள் செயலின் இன்றியமையாக் கூறுகளைக் கருத்தில் கொள்வதில்லை. எனவே அது சூதாடுவது போல் ஆகி தொழில் முடங்கிப் போவதற்கான வாய்ப்புக்களே மிகை. முயற்சி முற்ற முடிக்கப்படவேண்டுமானால் தன் ஆற்றலறிந்து திட்டமிட்டுப் பதட்டமின்றிச் செயல்படவேண்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் எனச் செயலாற்றக் கூடாது. தம்முடைய வலிமையின் வகைகளை அளந்தறிந்து கொள்ளாமல் ஊக்கம் காரணமாக மட்டுமே வினை மேற்செல்லவேண்டாம் என்பது கருத்து.

'ஊக்கத்தின் ஊக்கி' என்றால் என்ன?

'ஊக்கத்தின் ஊக்கி' என்ற தொடர்க்கு மனமிகுதியால் வினை செய்யத் தொடங்கி, இடும்பினாலே ஒரு காரியத்தை எடுத்து, ஒரு கருமத்தை நெஞ்சிற் கொண்ட ஊக்கத் தானே தாமும் அதன்மேற் சென்று, மனஎழுச்சியால் வினை செய்தலைத் தொடங்கி, மனவுற்சாகத்தினாலே பகையைச் செய்துகொண்டு, ஊக்கத்தால் முனைந்து தொடங்கி, மன எழுச்சி தூண்ட ஒரு காரியத்தைத் தொடங்கி, தம்முடைய எழுச்சியின் காரணமாக மட்டுமே செயல்களைத் தொடங்கி, ஆர்வத்தால் செய்து, மன எழுச்சியால் முயன்று. வெறும் ஆவேசத்தில் ஒரு காரியத்தை ஆரம்பித்து, ஏதோ ஓர் மன எழுச்சியால் ஒரு செயலைத் தொடங்கி, உள்ளக்கிளர்ச்சியால் செய்யத் தொடங்கி, மன எழுச்சியால் செயலைச் செய்வதில் ஈடுபட்டு, தமக்குள்ள ஊக்கத்தின் மிகுதியால் ஒரு செயலைச் செய்ய முன்வந்து தொடங்கி, உணர்ச்சி வசத்தால் செயலை மேற்கொண்டு என்றவாறு உரையாளர்கள் பொருள் கூறினர்.

இத்தொடரை ஊக்கத்தின் நூக்கி எனவும் பிரிக்கலாம் என்பார் இரா சாரங்கபாணி. இது ஊக்கத்தினால் தூண்டப் பெற்று என்ற பொருள் தருவது.
'ஊக்கத்தின் ஊக்கி' என்ற தொடர் முயற்சியின் தன்மையையோ மற்றும் அது தொடர்பான வலிமை இவை எவற்றையும் எண்ணாமல் மனத்தூண்டல் ஒன்றே காரணமாக முயற்சி மேற்கொள்வதைக் குறிப்பது. அங்ஙனம் தொடங்கிய தொழில் பெரும்பாலும் தோல்வியில்தான் முடியும். ஊக்கம் கொள்ள வேண்டாம் என்று சொல்லப்படவில்லை. வலியறிந்து ஊக்கம் மேற்கொள்க என்பது அறிவுரை. இக்குறள் போர் ஆயத்தத்திற்கு மட்டுமன்றி, தொழில் முயற்சி, அரசியல் முயற்சி முனைவு போன்றவற்றிற்கும் பொருந்துமாறு உள்ளது.

'ஊக்கத்தின் ஊக்கி' என்றதற்கு ஊக்கத்தால் முனைந்து தொடங்கி என்பது பொருள்.

தம்முடைய ஆற்றலின் அளவை அறியாமல் உள்ளக் கிளர்ச்சியால் செயலை முயன்று அதை முடிக்க முடியாமல் இடையிலே நொடித்தவர் பலர் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

வலிஅறிதல்இல்லாத உள்ளுணர்வுஊக்கம் தோல்வியையே தரும்.

பொழிப்பு

தம்முடைய ஆற்றல் என்ன அளவு என்பதை அறியாமல் மன எழுச்சியால் செயலை முயன்று பின் தொடர்ந்து முடிக்கப் பெறாமல் நடுவிலே நொடித்தவர் பலர்.