இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0472ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:472)

பொழிப்பு: தனக்குப் பொருந்தும் செயலையும், அதற்காக அறிய வேண்டியதையும் அறிந்து அதனிடம் நிலைத்து முயல்கின்றவர்க்கு முடியாதது ஒன்றும் இல்லை

மணக்குடவர் உரை: தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின் அவர்க்கு இயலாதது இல்லை.
இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது

பரிமேலழகர் உரை: ஒல்வது அறிவது அறிந்து - தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து, அதன்கண் தங்கிச் செல்வார்க்கு - எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு; செல்லாதது இல்- முடியாத பொருள் இல்லை.
('ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம். இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.)

இரா சாரங்கபாணி உரை: தமக்கியலும் செயலையும் அது குறித்து அறிய வேண்டிய வலிமையையும் அறிந்து அச்செயலில் முழுமூச்சாய் ஈடுபட்டு வினைமேற் செல்பவர்க்கு நடைபெறாதது ஒன்றில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச் செல்வார்க்குச் செல்லாதது இல்..


ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்:செல்வார்க்கு:
பதவுரை: ஒல்வது-இயல்வது; அறிவது-தெரிவது; அறிந்து-தெரிந்து அதன்கண்-அதனிடத்தில்; தங்கி-வைத்து; செல்வார்க்குச்-போகுபவர்க்குச்; .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தமக்கியலும் வினைக்கு அறிய வேண்டுவதாய திறம் இதுவென அறிந்து அதன் பின்பு அவ்வளவிலே நின்று ஒழுகுவராயின்;
பரிப்பெருமாள்: தமக்கியலும் திறன் இதுவென அறிக; அறிந்த பின் அவ்வளவில நின்றொழுகுவனாயின்;
பரிதி: தன் சத்துவம் அறிந்து மந்திரி வார்த்தைகள் கேட்டு நடப்பானாகில்;
காலிங்கர்: உலகத்து வேந்தரானோர் தாம் யாதானும் ஒரு கருமம் செய்யுமிடத்துத் தமக்கு இயல்வது அறிந்து மற்று அக்கருமநிலை விளங்குமாறு செய்யத் துணிந்தபின் அதனைச் சோரவிடாது அதன்கண்ணே நிலைநின்று மற்று அது முடியுமாறு அங்ஙனம் சென்று முடிப்பார்க்கு; ஒல்வது என்பது இயல்வது என்றது.
பரிமேலழகர்: தமக்கியலும் வினையையும் அதற்கு அறிய வேணடுவதாய வலியையும் அறிந்து எப்பொழுதும் மன, மொழி, மெய்களை அதன்கண் வைத்துப் பகைமேல் செல்லும் அரசர்க்கு;
பரிமேலழகர் குறிப்புரை: 'ஒல்வது' எனவே வினை வலி முதலாய மூன்றும் அடங்குதலின் ஈண்டு 'அறிவது' என்றது துணைவலியே ஆயிற்று. எல்லாப் பொருளும் எய்துவர் என்பதாம்.

'தமக்கு இயல்வது அறிந்து மற்று அக்கருமநிலை விளங்குமாறு செய்யத் துணிந்தபின் அதனைச் சோரவிடாது அதன்கண்ணே நிலைநின்று மற்று அது முடியுமாறு அங்ஙனம் சென்று முடிப்பார்க்கு' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'இயலும் செயலையும் அறிவையும் தெரிந்து நடப்பார்க்கு', ' தம்மால் எவ்வளவு முடியும் என்பதை அறிந்து கொண்டு அந்த அளவோடு நின்று செய்கிறவருக்கு', 'இயலக் கூடியதை அறிய வேண்டும். அறிந்ததைச் செய்ய முயற்சியின்கண் தமது மனத்தினை வைத்து மேற்செல்வார்களுக்கு', 'தன்னால் செய்து முடிக்கக் கூடியதையும் அதன்பொருட்டு தான் அறிய வேண்டியதனையும் அறிந்து அவ்வினையின் (செயலின்) கண் உள்ளம் , உரை, செயல்களைச் செலுத்திக் கருமத்தின் மேல் செல்வார்க்கு. ', என்ற பொருளில் உரை தந்தனர்.

முடிக்கக் கூடிய செயலைத் தெரிந்து அச்செயலின் திறன்களை அறிந்த பின்பு அச்செயலிலேயே தன் மனம் முழுவதையும் செலுத்தி, அதுவே கண்ணும் கருத்துமாய் நடப்பார்க்கு என்பது இப்பகுதியின் பொருள்.

செல்லாதது இல்.:
பதவுரை: செல்லாதது-முடியாதது; இல்-இல்லை..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவர்க்கு இயலாதது இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது
பரிப்பெருமாள்: அவனுக்கு இயலாததில்லை என்றவாறு.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது வலியறிந்தாலும் அமைந்தொழுக வேண்டுமென்றது
பரிதி: அவன் நினைத்த காரியம் முடியாதது இல்லை.
காலிங்கர்: செல்லப்படாதது யாதும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: முடியாத பொருள் இல்லை.
பரிமேலழகர்ன் குறிப்புரை: இவை இரண்டு பாட்டானும் வலியின் பகுதியும், அஃது அறிந்து மேற்செல்வார் எய்தும் பயனும் கூறப்பட்டன.

'இயலாதது இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' நடவாதது இல்லை', 'நடக்காத காரியம் ஒன்றுமில்லை', 'முடியாத காரியம் இல்லை', ' முடியாதது ஒன்றும் இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

முடியாதது ஒன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தொடங்கிய செயலில் வெற்றி காண அதில் முழுமனதுடன் ஈடுபடவேண்டும் என்பதைச் சொல்லும் பாடல்.

செய்து முடிக்கக் கூடியதை அறிந்து அச்(செயலின் திறன்களைத் தெரிந்த பின்பு அதன் கண்தங்கிச் செல்வார்க்கு முடியாதது ஒன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
'அதன் கண்தங்கிச் செல்வார்க்கு' என்றால் என்ன?

ஒல்வது என்ற சொல்லுக்கு இயல்வது என்பது பொருள்.
அறிவதுஅறிந்து என்ற தொடர் அறியவேண்டிய (திறங்களை) தெரிந்து என்ற பொருள் தரும்.
செல்லாததுஇல் என்ற தொடர் முடியாதது ஒன்றும் இல்லை எனப் பொருள்படும்.

செய்ய இயலும் தொழிலைத்தான் மேற்கொள்ள வேண்டும். அச்செயலை முடிப்பதற்கான திறங்களை ஆராய்ந்து கொள்ளவேண்டும். அதன் பின்பு அச்செயலிலே முழு சிந்தனையையும் நிறுத்தி முனைப்புடன் ஈடுபட்டால் ஒருவரால் இயலாத செயல் என்பது ஒன்று இல்லை.

ஒருவராலோ அல்லது ஒரு நிறுவனத்தாலோ எல்லாச் செயலையும் செய்ய இயலாது. ஒவ்வொருத்தrர் ஆற்றலுக்கும் வரம்பு உண்டு. எனவே தம்மால் எவ்வளவு முடியும் என்பதையும் அதற்கு எவ்வளவு ஆற்றல் வேண்டும் என்பதையும் தெரிந்து அதற்குத் தக செயலை மேற்கொள்ளவேண்டும்.
தெரியப்பட்ட செயலுகுத் தேவையான திறங்களையும் அறிந்து அவை தம்மிடம் உளவா அல்லது அவற்றைப் பெறமுடியுமா என்பதையும் அறிய வேண்டும்.
அதன்பின் செயலில் கண்ணும் கருத்துமாக சோர்வில்லாமல் முழுமூச்சுடன் செயல்பட வேண்டும். அப்படிப்பட்ட வினைமேற்கொள்வார்க்கு நடவாதது என்று ஒன்றுமே இல்லை. எல்லாமே வெற்றியாகும்..

ஒல்வதற்கு அறிவது அறிந்து' எனக்கூட்டித் தமக்கு இயலும் வினைக்கு அறிய வேண்டிய அறிந்து' என மணக்குடவரும் ஒல்வதும் அறிவதும் அறிந்து' எனக் கூட்டித் தமக்கு இயலும் வினையையும் அதற்கு அறிய வேண்டுவதாகிய வலியையும் எனப் பரிமேலழகரும் உரை செய்வர் இருவரது பொருளும் ஒரே கருத்துடையனவே. ’ தம் ஆற்றலுக்கு இசைந்த ஒரு செயலை மேற்கொண்டு அச்செயலிலேயே கருத்தூன்றி முயற்சி செய்வார்க்கு இயலாத ஒன்றில்லை. 'செல்லாதது இல்' என்ற தொடர் வெற்றி உறுதி என்பதைக் குறிக்கும்.

'அதன் கண்தங்கிச் செல்வார்க்கு' என்றால் என்ன?

எடுத்துக்கொண்ட செயலில் கருத்தூன்றிச் செயல்பட்டு வினையை முடிக்க வேண்டும் என்பது இக்குறள் தரும் செய்தி. அப்படிச் செய்து செயல் நிறைவேற்றுவாரை 'அதன்கண் தங்கிச் செல்வார்' என அழைக்கிறது பாடல்.
அதன் கண்தங்கிச் செல்வார்க்கு என்ற தொடர் அச்செயலின் கண்ணே தன்மனத்தை நிலைநிறுத்தி ஈடுபட்டிருப்பாருக்கு என்ற பொருள் தரும்.

அதன்கண் தங்கி', அவ்வளவிலே நின்று' என்னும் மணக்குடவர் உரை அறிவதறிந்த பிறகும் ஐயத்தாலோ அச்சத்தாலோ இயலும் என்று எடுத்த வினையை விடலாகாது; அறிந்த அளவில் உறுதியாக நிற்கவேண்டும் என்னும் கருத்தைச் சொல்கிறது. இதையே 'சோரவிடாது அதன் கண்ணே நின்று' என்று காளிங்கர் உரை கூறுகிறது. ' நாமக்கல் இராமலிங்கம் தன்னால் முடிவதை அறிவதும் அப்படி அறிந்து கொண்ட அதன் அளவுக்குள் அதாவது எல்லைக்குள் நின்று கொண்டு காரியத்தை நடத்துகின்றவர்களுக்கு'' என உரை வரைவார்.

அதன்கண் தங்குதலாவது மேற்கொண்ட செயலின் மேல் கண்ணுங்கருத்துமாக இருத்தல் ஆகும்

செய்து முடிக்கக் கூடியதை அறிந்து அச்(செயலின் திறன்களைத் தெரிந்த பின்பு அச்செயலிலேயே தன் மனம் முழுவதையும் செலுத்தி, அதுவே கண்ணும் கருத்துமாய் நடப்பார்க்கு முடியாதது ஒன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வலி அறிந்து, தொடங்கியதில் தொய்வு ஏற்படாமல் செயல் ஆற்றுபவர்களுக்கு வெற்றி உறுதி என்னும் வலி அறிதல் பாடல்.

பொழிப்பு

இயலும் செயலையும் அதன் திறங்களையும் தெரிந்து பின் அதில் கருத்தூன்றிச் செல்பவர்க்கு நடவாதது ஒன்று இல்லை.