இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0478ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:0478)

பொழிப்பு: பொருள் வரும் வழி (வருவாய்) சிறியதாக இருந்தாலும், போகும் வழி (செலவு) விரிவுபடாவிட்டால் அதனால் தீங்கு இல்லை

மணக்குடவர் உரை: பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்; அது போம்வழி போகாதாயின்.
இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடு இல்லை - அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்: போகு ஆறு அகலாக் கடை - போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
('இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன. முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: வருவாய் அளவாக இருப்பினும் கேடில்லை; செலவு மட்டும் விரிதல் கூடாது.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆகு ஆறு அளவு இட்டிது ஆயினும் கேடில்லை.போகு ஆறு அகலாக் கடை


ஆகாறு அளவிட்டிது ஆயினும் கேடில்லை:
பதவுரை: ஆகு-வருகின்ற; ஆறு-நெறி; அளவு-வரையறை; இட்டிது-சிறியது; ஆயினும்-ஆனாலும்; கேடு- அழிவு; இல்லை-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்;
பரிப்பெருமாள்: பொருள் வரும்வழி சிறிதாயினும் கேடில்லையாம்;
பரிதி: ஆதாய வகை அற்பமாயினும்1 நிருவாகம் பண்ணிக்கொள்ளலாம்;.
காலிங்கர்: பொருள் தமக்கு உளதாகின்ற வழியினது அளவு பெரிதும் சிறிதேயாயினும் அதனான் வருவதொரு கேடில்லை;.
பரிமேலழகர்: அரசர்க்குப் பொருள் வருகின்ற நெறியளவு சிறிதாயிற்றாயினும் அதனால் கேடு இல்லையாம்;
பரிமேலழகர் கருத்துரை::'இட்டிது' எனவும் 'அகலாது' எனவும் வந்த பண்பின் தொழில்கள் பொருள் மேல் நின்றன. 'பொருள் என்பது அதிகாரத்தான் வருவித்து, 'அளவு' என்பது பின்னும் கூட்டி உரைக்கப்பட்டன.

'பொருள் வரும்வழியளவு சிறிதாயினும் கேடில்லையாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' பொருள் வரும் வழி (வருவாய்) அளவு சிறுதானாலும் ஒருவனுக்குக் கெடுதி வாராது', ' ஒருவனுக்கு வரும்படி குறைவாக இருந்தாலும் பாதகமில்லை', 'பொருள் வரும் வழி சிறிதாயிருந்தாலும் அதனால் கெடுதி இல்லை ', 'பொருள் உண்டாகும் வழி (வருவாய்) குறைந்த அளவினையுடையதாயிருப்பினும் கெடுதலில்லை ', என்ற பொருளில் உரை தந்தனர்.

பொருள் வரும் வழி அளவு சிறிதாயினும் கெடுதி இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

போகாறு அகலாக் கடை:
பதவுரை: போகு-செலவழியும்; ஆறு-நெறி; அகலாக்கடை-பெருகாத இடத்து.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அது போம்வழி போகாதாயின்.
மணக்குடவர் கருத்துரை: இது முதலுக்குத் தக்க செலவு செய்ய வேண்டுமென்றது.
பரிப்பெருமாள்: அது போம்வழி பெருகாதாயின்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது முதலுக்குச் செலவ்ய் குறைய வேண்டும் என்றது.
பரிதி: செலவு மிகுதியில்லாதபோது என்றவாறு.
காலிங்கர்: என்னோ எனின் மற்று அப்பொருள்தான் வினியோகப்படுதலும் பிறர்க்கு உபகரித்தலும் ஆகப்போகிற வழியான் அதனை விட்டு அகலாத இடத்துத் தனக்கு வலியாகியது சிறிதே பொருளாயினும் அதுவே அமையும் என்றவாறு. [உபசரித்தல் - உதவுதல்]
பரிமேலழகர்: போகின்ற நெறிஅளவு அதனின் பெருகாதாயின்.
பரிமேலழகர் கருத்துரை: முதலும் செலவும் தம்முள் ஒப்பினும் கேடு இல்லை என்பதாம்.

'போகின்ற வழி அளவு அதனின் பெருகாதாயின்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் போகும் வழி (செலவு) பெருகாவிட்டால்', 'செலவுமட்டும் வரவுக்கு அதிகப்படாமல் இருந்தால் கெடுதி வராது.', 'அதுபோகிற வழி அளவு விரிந்து பெரிதாகாவிட்டால்', 'பொருளினைச் செலவு செய்கின்ற விதம் வருவாயைக் கடந்து செல்லாமல் இருப்பின்,' என்றபடி பொருள் உரைத்தனர்.

செலவு அளவு விரிந்து பெரிதாகாவிட்டால்' என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
செலவை வரவுக்குள் கொண்டுவந்துவிட்டால் வருவாய் சிறிதானாலும் கேடு உண்டாகாது என்னும் பாடல்.

பொருள் வரும் வழி அளவு இட்டிது ஆயினும் கெடுதி இல்லை, செலவு அளவு அகலா இடத்து என்பது பாடலின் பொருள்.
'இட்டிது' 'அகலா' இவை குறிப்பன என்ன?

ஆகாறு என்றது ஆகு + ஆறு என விரியும். இதற்கு ஆகும் வழி என்று பொருள். இது பொருள் வருகின்ற வழியைக் குறிக்கும்.
ஆயினும் என்ற சொல்லுக்கு ஆனாலும் என்பது பொருள்.
கேடில்லை என்பது கேடு ஒன்றும் இல்லை என்ற பொருள் தருவது.
போகாறு என்ற சொல் போகு + ஆறு என விரிந்து செலவில் செல்லும் வழி எனப் பொருள்படும்.

தனக்கு வரும் ஊதியம் குறைவானாலும் கேடு நேராது, செலவு மிகுந்து ஊதியத்தைவிட பெரிதாகாமல் இருந்தால்.

ஒருவர்க்கு உண்டான வருவாயை விட செலவு குறைவாக இருக்கும் வரை கேடில்லை. சென்ற குறள் முதல்பொருள் காக்கப்படவேண்டும் என்றது. இங்கு ஊதியத்திற்கு மேல் செலவில்லாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் எனச் சொல்லப்படுகிறது.

அரசு ஆனாலும், நிறுவனங்கள் ஆனாலும் குடும்பம் ஆனாலும் பொருள்வலியை நிலைநிறுத்த, நிதித் திட்டங்கள், செலவுக் கட்டுப்பாடுகள், கையிருப்புப் பணம் இம்மூன்றையும் நாளும் மேற்பார்வை செய்து கொண்டிருக்க வேண்டும் இவை பொருளாதார நிலையைத் தாக்க கூடியனவாதலால் கட்டுக்குள் இல்லை என்றால் கேடு நேரலாம். இக்குறள் இதே கருத்தையே வலியுறுத்துகிறது.
வருவாயைப் பெருக்குவது உடனடியாக முடியாததாக இருக்கலாம்...ஆனால் என்ன, எவ்வளவு செலவு செய்யவேண்டும் என்பதை விரைவில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இயலும். எனவே .வருவாய்க்கேற்றவாறு செலவினங்களைக் கூட்டியோ குறைத்தோ மாற்றிக்கொண்டால கெடுதி நேராமல் தடுக்கலாம்.

'இட்டிது' 'அகலா' இவை குறிப்பன என்ன?

இட்டிது என்ற சொல்லுக்கு குறுகலானது என்றும் சிறுது என்றும் பொருள் கூறினர். அளவு இட்டிது என்பது சிறிய அளவு அல்லது குறுகலான அளவு என்று பொருள்படும். அகலா என்ற சொல்லுக்கு பெருகா அல்லது அகாலமாகா என்பது பொருள். இப்பாடலில் பொருள்வலி சொல்லப்படுவதால் இட்டிது அகலாது என்பன பொருள் மேல் நின்றன. அதாவது பொருள் வரும் வழியின் அளவு சிறிதாக இருந்தாலும் அப்பொருள் போகும் வழி விரியாமல் இருக்கும்வரை கெடுதி இல்லை என்ற பொருள்படும்படி அவை ஆளப்பட்டன.
உரையாளர்கள் இக்கருத்தை ஓடுநீர் கொண்டு விளக்குவர். ஒரு நீர்த்தேககத்திற்கு நீர் வரும் வழிகளான )வாய்க்கால், குழாய் போன்றவை) சிறியனவாக இருந்தாலும் நீர் வெளியேறும் வழிகளான (வடிகால், குழாய் போன்றவை) அதைவிட அகலமாக இல்லாமல் இருந்தால், நீர் தேக்கமுற்றுத் தேவையான காலத்துப் பயன்படுத்தலாம். நீர்வரவு குறைந்துபோனால் வெளியேறும் வழியைச் சுருக்கிக் கொண்டு நீர் தேக்கலாம்.
வருமானம் குறைந்து போனால் செலவினத்தைச் சுருக்கிக் கொள்ளவேண்டும் என்பது கருத்து.

வருவாய் வரும் வழியின் அளவு சிறிதாயினும் கெடுதி இல்லை, செலவாகும் வழியின் அளவு விரிந்து பெரிதாகாவிட்டால் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

வருவாய்க் கோட்டினைத் தாண்டிச் செலவு செல்லாதிருந்தால் பொருள்வலி நிற்கும் என்னும் வலி அறிதல் பாடல்.

பொழிப்பு

பொருள் வரும் வழி அளவு சிறிதானாலும் ஒருவனுக்குக் கெடுதி இல்லை,. பொருள் போகும் வழி பெரிதாகாவிட்டால்