இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0477ஆற்றின் அளவறிந்து ஈக அதுபொருள்
போற்றி வழங்கும் நெறி

(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:477)

பொழிப்பு: வருவாய் அளவு அறிந்து கொடுக்கவேண்டும்; அதுவே பொருளைப் போற்றி வாழும் வழியாகும்.

மணக்குடவர் உரை: பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க; பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.
இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஆற்றின் அளவு அறிந்து ஈக - ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக, அது பொருள்போற்றி வழங்கும் நெறி - அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
(ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார். பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.)

வ சுப மாணிக்கம் உரை: முறைப்படி பொருள்நிலை அறிந்து கொடுக்க; அதுவே மேன்மேலும் கொடுக்கும் நெறியாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஆற்றின் அளவறிந்து ஈக அது பொருள்.போற்றி வழங்கும் நெறி-வழி.


ஆற்றின் அளவறிந்து ஈக
பதவுரை: ஆற்றின்-வழியால்; அளவுஅறிந்து-எல்லை தெரிந்து; ஈக-கொடுக்க;.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளை அளவறிந்து கொடுக்கும் வழியாலே கொடுக்க;
பரிப்பெருமாள்: வருவாய் அளவறிந்து கொடுக்க;
பரிதி:அரசன் இவர்கள் தனக்கு உதவியாவார் என்று அறிந்து பொருள் கொடானாகில்;
காலிங்கர்: பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு அரசர் யாவர்க்கும் ஈந்து ஒழுக;
பரிமேலழகர்: ஈயும் நெறியாலே தமக்கு உள்ள பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக,
பரிமேலழகர் விரிவுரை: ஈயும் நெறி மேலே இறைமாட்சியுள் 'வகுத்தலும் வல்லதரசு' குறள்.385) என்புழி உரைத்தாம் . எல்லைக்கு ஏற்ப ஈதலாவது, ஒன்றான எல்லையை நான்கு கூறாக்கி ,அவற்றுள் இரண்டனைத் தன் செலவாக்கி, ஒன்றனை மேல் இடர் வந்துழி அது நீக்குதற்பொருட்டு வைப்பாக்கி நின்ற ஒன்றனை ஈதல். பிறரும்,'வருவாயுள் கால் வழங்கி வாழ்தல்' (திரிகடுகம்.21) என்றார்.

'பொருளின் எல்லையை அறிந்து அதற்கு ஏற்ப ஈக' என்று மணக்குடவரும் பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'ஏற்பவர் தமக்கு உதவுவாரா மாட்டாரா என் அறிந்து கொடுக்க'.என உரைத்தார். பரிப்பெருமாளும் காலிங்கரும் 'வருவாய் அளவறிந்து ஈந்து ஒழுகுக' என்று பொருள் கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப ஒருவன் கொடுப்பானாக', '(தானம் கொடுப்பதிலும்) உன்னுடைய பொருளாதாரத்தின் அளவை அறிந்து அதற்குத் தக்கபடி கொடு', 'பொருள் வருவாயின் அளவினை அறிந்து அதற்குத் தக்கபடி கொடுத்தல் வேண்டும்', 'தனக்குப் பொருள் வரும் வழியின் அளவினை அறிந்து அதற்கு ஏற்பக் கொடுத்தல் வேண்டும்.', என்ற பொருளில் உரை தந்தனர்.

பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப கொடுக்க! என்பது இப்பகுதியின் பொருள்.

அது பொருள் போற்றி வழங்கும் நெறி:
பதவுரை: அது-அது; பொருள்-சொத்து; போற்றி-காத்து; வழங்கும்-ஒழுகும்; நெறி--வழி..

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி அதுவாதலால்.
மணக்குடவர் கருத்துரை: இது பொருளினது வலியறிந்து அதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்று கூறிற்று
பரிப்பெருமாள்: பொருள் உண்டாக்கும் நெறி அது ஆதலான் என்றவாறு.
பரிப்பெருமாள் க்ருத்துரை: இனிப் பொருளினது வலியறிதல் கூறுகின்றார். ஆதலின் முதற்குத்தக்க செலவுசெய்ய வேண்டுமென்றது
பரிதி: அப்பொருளும் கெடும். மனிதரும் கூடார் என்றவாறு.
காலிங்கர்: மற்று அங்ஙனம் செய்யின், அஃது அப்பொருளினைக் காக்கும் இடம் காத்து வழங்கும் வழி வழங்கும் முறைமையாவது;
காலிங்கர் கருத்துரை: எனவே யாவரும் தத்தம் பொருள் வரலாற்றுக்குத் தக்காங்குக் காக்குமிடம் காத்தும் ஈயுமிடம் ஈத்தும் சேறலே கடன் என்றவாறு.
பரிமேலழகர்: அங்ஙனம் ஈதல் பொருளைப் பேணிக் கொண்டொழுகும் நெறியாம்.
பரிமேலழகர் கருத்துரை: பேணிக்கொண்டு ஒழுகுதல்: ஒருவரோடு நட்பிலாத அவனைத் தம்மோடு நட்புண்டாக்கிக் கொண்டு ஒழுகுதல். முதலில் செலவு சுருங்கின் பொருள் ஒருகாலும் நீங்காது என்பதாம்.

'பொருளையுண்டாக்கி வழங்கும் நெறி' என்றபடி மணக்குடவரும் பரிப்பெருமாளும் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி 'பொருளும் கெடும் மனிடரும் கூடார்' என்றார். காலிங்கர் 'அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி' என உரை வரைவார். பரிமேலழகர் 'அது பொருளைப் பேணி ஒழுகும் நெறி' என்றார்.

இன்றைய ஆசிரியர்கள் 'அக்கொடையே பொருளைப் பாதுகாத்து வழங்கும் முறையாகும்', 'அதுதான் செல்வத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வழி.', ' அது பொருளைப் பேணி ஒழுகும் முறையாகும்.', '.அங்ஙனம் கொடுத்தாலே பொருளைக் காத்துக்கொண்டு கொடுத்து வாழும் நெறியாகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஈதல் தொடர்ந்து நடைபெற வரவு அறிந்து கொடுக்க என்னும் பாடல்.

ஆற்றின் அளவு அறிந்து அதற்கேற்ப கொடுக்க அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி என்பது பாடலின் பொருள்.
ஆற்றின் அளவு எது?

அறிந்து என்பது தெரிந்து என்பதைக் குறிக்கும்.
ஈக என்ற சொல் கொடுக்க என்ற பொருள் தரும்.
பொருள்போற்றி என்ற தொடர் செல்வத்தைக் காத்து எனப் பொருள்படும்.
வழங்கும் நெறி என்றதற்குக் கொடுக்கும் முறை என்பது பொருள்.

வருவாய் நிலை தெரிந்து கொடுக்க! அதுதான் செல்வத்தைக் காத்து கொடுத்தல் தொடர்வதற்கும் வழிவகை செய்யும்.

இக்குறளுக்கான உரைகளுள் காலிங்கர் உரை அதிகாரஇயைபுடன் அமைந்து குறட்பொருளை நன்கு உணர்த்துகிறது. அவர் உரைப்படி: 'பொருள் வரலாற்றினது சிறுமை பெருமை அளவு அறிந்து அதற்குத் தக்காங்கு ஈந்து ஒழுக, அது அப்பொருளினைக் காக்கும் இடம் காத்து, வழங்கும் வழி வழங்கும் முறைமையாவது; எனவே யாவரும் தத்தம் பொருள் வரலாற்றுக்குத் தக்காங்குக் காக்குமிடம் காத்தும் ஈயுமிடம் ஈத்தும் சேறலே கடன்'.

தன் முதல் பொருளைக் காத்து ஊதியம் தொடர்ந்து பெற்று மேலும் கொடுக்க வழி காண்பது சிறந்த நிதி மேலாண்மை நடைமுறை ஆகும். . செல்வம் பெருவலி கொண்டது. பொருள் வைத்திருப்போர் வலிமையானவர்கள். பொருள்வலி கூடினால் தன்வலியும் கூடியிருப்பதாக அவர்கள் உணர்வர். அவ்வலியை நிலைநிறுத்த முறைப்படி திட்டமிட்டு வருவாய் தொடர்ந்து வருமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்; இருக்கும் செல்வத்தின் அளவிற்கு ஏற்ப கொடுப்பதற்கான செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.. பொருட்செல்வம் வளர்ந்தால்தான் மேன்மேலும் கொடுக்கமுடியும். எனவே வருவாய் அளவறிந்து கொடுக்க அறிவுறுத்தப்படுகிறது. வருவாயின் அளவை அறிந்து கொடுத்தால் அதுவே செல்வத்தைப் பாதுகாத்துப் பயன்படுத்திக் கொள்ளும் வழியாகும் என்று இக்குறள் சொல்கிறது. அளவறிந்து கொடுத்து முதற்பொருளைக் காத்து ஊதியம் கொண்டு வழங்குதலே உரிய நெறியாகும். முதற்பொருள் போற்றற்கு உரியது; ஊதியம் வழங்கற்கு உரியது. முதலீட்டுப் பணத்திலிருந்து செலவு செய்யாதவரை ஒருவரது பொருள்வலி குறையாது. .
உலகுக்கு ஒட்டக்கூடிய ஒழுக்க வரைமுறை பேசப்படுகிறது. தம்மையே அழித்துக் கொண்டும் ஈதல் செய்க என்ற நெறி கூறாமல் பொருள் காத்து ஈக என்கிறது பாடல்.

'ஈக' என்று இக்குறளில் சொல்லப்படுவது இல்லார்க்கு ஈதலோ இரப்போர்க்கு ஈதலோ அல்லது ஒப்புரவும் ஆகாது என்று சொல்லி அது. ஆட்சியின் சூழ்ச்சியாக ஒற்றர்க்கும் தூதர்க்கும் வீரர்க்கும் ஈதலாம்; இந்த ஈகையின் பயன் புகழன்று; வெற்றியும் பொருளாக்கமுமே என்பார் தண்டபாணி தேசிகர். இவர் கருத்துப்படி இங்கு கூறப்பட்டது அரசியல் ஈகையாகும். ஆயினும் குறட்கருத்து அறம் சார்ந்த ஈகைக்கும் மிகவும் பொருந்துமாறே உள்ளது.. அறம் சார்ந்த ஈகையானாலும் பொருள் காத்து ஈவதே நல்லது.

பொருள்வலி நிலைநிறுத்திக் கொள்ளப்பட வேண்டும் என்பது கருத்து.

ஆற்றின் அளவு எது?

இப்பாடலில் சொல்லப்பட்டுள்ள ஆற்றின் என்ற சொல்லுக்கு வருவாய் வழியின் என்றும் ஈயும் நெறியால் என்றும் பொருள் தந்தனர். அதிகாரம் வலி அறிதல் என்பதால் வருவாய் வழியின் என்பது பொருத்தமாகப் படுகிறது. ஆற்றின் அளவு என்பது 'வருவாய் வழியின் எல்லை' குறித்தது..
செலவு செய்யும்போது வருமானத்தின் அளவை மனத்தில் இறுத்திக் கொள்ளவேண்டும் என்கிறது பாடல். 'ஆற்றின் அளவானது' உலகு ஒட்டும் பொருளொழுக்கம் என்பார் வ சுப மாணிக்கம். மேலும் இவர் 'அளவறி ஈகையே வள்ளுவம். அனைத்தும் ஈக' என்று பொறுப்பின்றிச் சொல்லிமொழியாது, 'அளவறிந்து ஈக' என நினைந்து சொல்லளந்து மொழிந்தார் அனைத்தையும் ஒடுக்கிச் சுருட்டித் தன்னையழித்தும் அறவினை செய்' என்று அஞ்சும் அறம் சாற்றாது, 'ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே செல்லும் வாயெல்லாம் செயல் (39) என அறஞ்செய்வானும் வாழ அறமும் வாழ வழிவகுத்தனர். 'என விளக்கம் செய்தார்..
முதல் பொருள் (மூலதனம்) இருந்தால்தான் ஊதியம் கிடைக்கும். ஊதியத்திலிருந்துதான் கொடுத்தலும் நுகர்தலும் செய்யப்படவேண்டும்.
ஆற்றின் அளவு என்பது வரவின் அளவு ஆகும்.

பொருள் வரும் வழியின் அளவு தெரிந்து அதற்கேற்ப கொடுக்க அதுவே பொருளைக் காத்து வழங்கும் நெறி என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பொருளின் வலி குறையா வண்ணம் கொடுக்க என்னும் வலி அறிதல் பாடல்.

பொழிப்பு

பொருள் வரும் வழியின் அளவு அறிந்து கொடுக்க; அதுவே பொருளைப் பாதுகாத்து வழங்கும் நெறியாகும்.