இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0480



உளவரை தூக்காத ஒப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்

(அதிகாரம்: குறள் எண்:480)

பொழிப்பு: தனக்குப் பொருள் உள்ள அளவை ஆராயாமல் மேற்கொள்ளும் ஒப்புரவு, ஒருவனுடைய செல்வத்தின் அளவு விரைவில் கெடும்

மணக்குடவர் உரை: தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது செல்வத்தினளவு விரைவிற் கெடும்.
மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.

பரிமேலழகர் உரை: உள வரை தூக்காத ஒப்புரவு ஆண்மை - தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால், வளவரைவல்லைக் கெடும் - ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.
('ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: உள்ள நிலை பாராது ஊர் நன்மை செய்தாலும் செல்வநிலை விரைவில் சீரழியும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
உளவரை தூக்காத ஒப்புர வாண்மை. வளவரை வல்லைக் கெடும்


உளவரை தூக்காத ஒப்புர வாண்மை:
பதவுரை: உள-இருக்கின்ற; வரை-அளவு; தூக்காத-ஆராயாது; ஒப்புரவு-உதவிசெய்தல்; ஆண்மை-திட்பம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தனக்கு உள்ளவளவை நினையாதே ஒப்புரவு செய்வானது;
பரிப்பெருமாள்: தன் அளவை நினையாதே ஒப்புரவு செய்வானது;
பரிதி: தனது பொருள் இவ்வளவு என்று அறிந்து அதற்குத் தக்கதாக ஒப்புரவு செய்யாதான்;
காலிங்கர்: ஒருவன் தன்க்குள்ள எல்லையைச் சீர் தூக்காத உபகார நடையும். அதற்கு மூலமாகிய செல்வத்து எல்லையும் இரண்டும்;
பரிமேலழகர்: தனக்குள்ள அளவு தூக்காமைக்கு ஏதுவாய ஒப்புரவாண்மையால்;

'தனது பொருள் இவ்வளவு என்று அறிந்து அதற்குத் தக்கதாக ஒப்புரவு செய்யாதான்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தனக்குள்ள பொருளின் அளவு பாராது அளவிறந்த பொதுநலக் கொடையால்', ' (உபகாரம் செய்வதானாலும்) தனக்குள்ள செல்வத்தின் அளவைக் கணக்குப் பார்க்காமல் செய்கிற உபகாரச் செலவுகளானும்.', ' தனக்குள்ள பொருளின் அளவினை ஆராயாது செய்த உதவியின் மிகுதிப்பாட்டால்', ' தனக்குள்ள செல்வத்தின் எல்லை ஆராயாத வகையில் செய்யும் உதவியை என்றும் கொள்கையாகக் கொண்டிருக்கும் தன்மையால்', என்ற பொருளில் உரை தந்தனர்.

தன்னிடம் உள்ள அளவைச் சீர்தூக்கி ஆராயாத உதவித் தன்மை என்பது இப்பகுதியின் பொருள்.

வளவரை வல்லைக் கெடும்:
பதவுரை: வள-செல்வத்தினது; வரை-எல்லை; வல்லைக்-விரையக்; கெடும்-அழியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: செல்வத்தினளவு விரைவிற் கெடும்.
மணக்குடவர் கருத்துரை: மேல் முதலுக்குச் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறினார்.
பரிப்பெருமாள்: செல்வத்தினளவு விரையக் கெடும்.
பரிப்பெருமாள் கருத்துரை: மேல் முதலிற் செலவு குறைய வேண்டுமென்றார். அவ்வாறு செய்யின் ஒப்புரவு செய்யுமாறு என்னை யென்றார்க்கு இது கூறப்பட்டது.. ஒப்புரவாண்மை என்று ஒப்புரவிற்கே போக்குவாரும் உளர்.
பரிதி: செல்வமும் சடுதியிலே கெடும் என்றவாறு.
காலிங்கர்: வளத்தினது பெருமை இன்றி விரையக் கெடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: வல்லைக் கெடும் என்பது விரையக் கெடும் என்றது. பரிமேலழகர்: ஒருவன் செல்வத்தின் எல்லை விரையக் கெடும்.
பரிமேலழகர் கருத்துரை: 'ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்றமையான், இதுவும் அது. இவை நான்கு பாட்டானும் மூவகை ஆற்றலுள் பெருமையின் பகுதியாய பொருள் வலியறிதல் சிறப்பு நோக்கி வகுத்துக் கூறப்பட்டது.

'செல்வத்தின் எல்லை விரையக் கெடும்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் ' ஒருவனது செல்வத்தின் அளவு விரைந்து கெடும்.', ' உள்ளதெல்லாம் விரைவில் இல்லாது போய் வறுமை வந்துவிடும்', ' ஒருவனது செல்வத்தின் எல்லை விரைவில் குறைந்துபோம்', 'செல்வம் விரைவில் அழிந்து விடும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

வளத்தின் எல்லை விரைந்து கெடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
பொதுநன்மைக்கான ஒப்புரவே என்றாலும் வளவலி எண்ணிச் செய்க என்னும் பாடல்.

தன்னிடம் உள்ள அளவைச் சீர்தூக்கி ஆராயாத உதவித் தன்மை வளத்தின் எல்லை விரைந்து கெடும் என்பது பாடலின் பொருள்.
ஒப்புரவிறகா அளவு செய்கிறது குறள்?

உள என்ற சொல்லுக்கு உள்ள அதாவது இருக்கும் என்பது பொருள்.
முதலில் உள்ள வரை என்ற சொல் அளவு என்றும் இரண்டாவது உள்ள வரை என்ற சொல் எல்லை என்றும் பொருள் தரும்.
தூக்காத என்ற சொல்லுக்கு சீர்தூக்கி ஆராய்ந்து பாராத என்று பொருள்.
ஒப்புரவாண்மை என்றது உதவித் தன்மை குறித்தது..
வள என்றது வளங்கள் எனப்படுவது.
வல்லை என்ற சொல் விரைவில் என்ற பொருளது.
கெடும் என்றது கேடுறும் அல்லது அழியும் என்பதைக் குறிக்கும்.

பிறர்க்கு உதவுகிற செயல்களைச் செய்பவனும்கூட தன் பொருள்வலி கருதாவிட்டால், அவனது வளங்களை விரைவில் இழப்பான்.

ஒருவன் தனக்குள்ள எல்லையைச் சீர் தூக்காத உபகார நடையும். அதற்கு மூலமாகிய செல்வத்து எல்லையும் இரண்டும் வளத்தினது பெருமை இன்றி விரையக் கெடும்' என்ற காலிங்கர் உரை இப்பாடலுக்குப் பொருத்தமாக உள்ளது.
இவரது உரை அளவைச் சீர் தூக்காத உதவித் தன்மை, பொருளின் அளவு இரண்டும் வளத்தினது பெருமை இன்றி விரைவில் கெடும் என்பது.

தனிப்பட்டவருக்கு கொடுப்பது ஈகை என்றும் பொதுநலத் தொண்டுக்கு உதவி செய்வது ஒப்புரவு என்றும் சொல்வர். செல்வம் மட்டுமின்றி நேரம், பிற ஆற்றல்கள் இவற்றை வழங்குவதையும் ஒப்புரவு என்று கருதலாம். இங்கு சொல்லப்பட்ட வளஎல்லை என்பது இவற்றையும் உள்ளிட்டதாம். ஒப்புரவே யானாலும் தன் எல்லையை எண்ணிப் பார்த்துச் செய்யவேண்டும். இல்லையானால் ஒருவரது மற்ற வளங்களுடன் அந்த ஒப்புரவாண்மையும் கெடும் என எச்சரிக்கிறது இப்பாடல்.

ஒப்புரவிறகா அளவு செய்கிறது குறள்?

முன்னர் அறத்துப்பாலில், ஒப்புரவறிதல் அதிகாரத்தில் ஒப்புரவி னால்வரும் கேடெனின் அஃதொருவன் விற்றுக்கோள் தக்கது உடைத்து. குறள் 220) என்று ஒப்புரவினால் வரும் கேட்டைத் தன்னை விற்றாவது பெற்றுக்கொள் என்று சொன்ன வள்ளுவர் இங்கு தனக்குள்ள பொருளின் அளவினை ஆராயாது செய்த உதவியின் மிகுதிப்பாட்டால் ஒருவனது செல்வத்தின் எல்லை விரைவில் குறைந்துபோகும் என்கிறார். .ஏன்?
ஆற்றின் அளவறிந்து ஈக.... (குறள் 477) என்ற குறட்பாவிலும் இதே போன்ற கேள்வி எழுந்தது. அதற்கு விளக்கம் தந்த தண்டபாணி தேசிகர் ஈகையை அறம்சார்ந்த ஈகை, அரசியல் ஈகை என்று பிரித்து அப்பாடல் அரசியல் ஈகை பற்ற்றியடு எனக் கூறினார். அதுபோல் இக்குறளுக்கும் அறம்பாற்பட்ட ஒப்புரவு அரசியல் ஒப்புரவு என்று பகுத்து 'ஈண்டுக் கூறிய ஒப்புரவும் அறப்பாற்பட்ட ஒப்புரவாகாது. அறப்பாற்பட்ட ஒப்புரவு தன்னளவில் உலக நடையை அறிந்து செய்தல். இங்குக் கூறிய ஒப்புரவு வென்ற படைகட்கும் உயிரிழந்தார் சுற்றத்திற்கும் புன்வாய்ப்புச் சொன்னகணிக்கும் கனம்பாடிய புலவனுக்கும் மகிழ்ச்சியைக் கொண்டாடும் மக்களுக்குமாக வழங்கல் இது எல்லை கடந்துபோம் ஆதலின் இதனை அளவறிந்து செய்க என்கிறார். அறப்பாற்பட்ட ஒப்புரவை தன்னை விற்றாவது செய்க என்றார். இவ்வேறுபாடும் அதற்குக் கட்டுப்பாடும் இன்றியமையாதது என்ற நியதியும் அறிந்தின்புறத்தக்கன' என மேலும் விளக்கம் தருவார் அவர்.
தேவநேயப்பாவாணர் ''தனிப்பட்ட பெருஞ்செல்வர்க்கு ஒப்புரவு தருமமென்றும், பொறுப்பு, வாய்ந்த பெருநிலவரசர்க்கு அளவறிந்து வாழ்வதே கடமை யென்றும், முடிவு செய்யலாம்' என்று விளக்குவார்..
'அறத்துப்பால பாடலில் (குறள் 220) புகழை நோக்கியும் ஈண்டுப் பொருளை நோக்கியும் அருளியதாதலால் அமையும்' என்பது திருக்குறள் குமரேச வெண்பா ஆசிரியர் கருத்து..

வளங்களோடு ஒப்புரவாண்மையும் கெடும் என்பதுதான் இக்குறட்கருத்து. வளவலி குறைந்தால் ஒப்புரவு செய்ய இயலாமல் போய்விடும் எனவே ஒப்புரவை வள எல்லைக்குள் வைத்திருக்கச் சொல்கிறார் வள்ளுவர். எனவே குறள் 220-உடன் இப்பாடல் முரணாது. அறத்தில் ஒப்புரவின் இன்றியமையாத் தன்மை வலியுறுத்தப்பட்டது. இங்கு ஒப்புரவு இடையறாது நடைபெற வழி கூறி வள வலியறிதல் விளக்கப்பட்டது.

ஒப்புரவே ஆயினும் மிகலாகாது' என்பதுதான் இக்குறட்கருத்து..

தன்னிடம் உள்ள அளவைச் சீர்தூக்கி ஆராயாத உதவித் தன்மை வளத்தின் எல்லை விரைந்து கெடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

தனது வளவலி இழக்காமல் ஒப்புரவு ஆளவேண்டும் என்னும் வலி அறிதல் பாடல்

பொழிப்பு

உள்ள அளவு எண்ணாது செய்யும் உதவித் தன்மை வளத்தின் எல்லை விரைந்து கெடும்