இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0451 குறள் திறன்-0452 குறள் திறன்-0453 குறள் திறன்-0454 குறள் திறன்-0455
குறள் திறன்-0456 குறள் திறன்-0457 குறள் திறன்-0458 குறள் திறன்-0459 குறள் திறன்-0460

கீழ்மக்களுடன் சேராதிருத்தல். ஒருவனது அறிவு, அவன் மனத்துளதா? சாரும் இனத்துளதா? இவ்வாறு ஆராயின் மனத்திலுள்ளது போல் தோன்றினாலும் சாரும் இனத்தினால் அது மாறும் தன்மையுடையதென்பது புலப்படும். அதனால் கீழ்மக்களோடு சேராதே என எச்சரிக்கப்படுகிறது.
- தமிழண்ணல்

சிற்றினம் சேராமை என்பது சிறிய இனத்தாரை இணங்காமையாகும். இனம் என்ற ஆட்சியால் இது பலபேரைக் கலந்து வாழ்தலைக் குறித்தலைத் தெளியலாம். சிறிய இனம் என்பது சிறுமைப் பண்புகள் அதாவது தீய குணமும் தீயொழுக்கமும் கொண்டவர்களைக் குறிக்கும். சேரும் இனத்தினது நலம் சேர்ந்தவரின் மனநலத்தை வெகுவாகப் பாதிக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் இனநலம் சொல்லவந்த இவ்வதிகாரம் மனநலம் பற்றி நிறையப் பேசுகிறது. சிற்றினச் சேர்க்கை துன்பம் உறுவிப்பதால் சேரும் இனத்தின் தன்மையை ஆய்ந்து ஒருவர் அதில் தன்னை இணைத்துக் கொள்ளாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்கிறது இத்தொகுதிப் பாடல்கள். நல்லின உறவு கொள்ளல் சிற்றினம் சேர்தலுக்கு எதிர்மறையாக இருத்தலால், சிற்றினம் சேராமை என்பது நல்லினம் சேர்தலை அறிவுறுத்துவதாகிறது.. .

சிற்றினம்:

ஒவ்வொரு காலகட்டத்திலும் தனிப்பட்ட ஒத்த ஒழுக்கங்கள், பழக்கங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் போன்றவை கொண்ட கூட்டங்கள் தானாகவே தோன்றிவிடுகின்றன. சில வழிமுறையாகத் தொடர்கின்றன. சில மறைந்து விடுகின்றன. நல்ல சிந்தனைகளுக்கான குழுக்கள் அமைவது போல, வன்முறை, வஞ்சனை, மூடநம்பிக்கைகள் இவை போன்றவற்றில் நம்பிக்கை கொண்டவர்கள் என்றவாறும் குழுக்கள் அமைந்துவிடுகின்றன. குழுக்கள் சீரமைந்ததாகவோ அல்லது அமைப்பு ஒழுங்கிlல்லாத சமுதாயமாகவோ இருக்கலாம். இன்று மின்னணு ஊடகங்கள் வளர்ச்சியால் கரவுக் குழுக்கள் உண்டாகின்றன. மின்னஞ்சல், வாட்ஸப் (WhatsApp) போன்றவை கணினி, கைபேசி இவற்றின் ஊடாகக் குழுக்கள் அமைவதற்குப் பெரிதும் உதவுகின்றன. இத்தகைய குழுவையே இனம் என்று குறள் குறிப்பிடுகிறது. இக்குழுவுடன் பழகத் தொடங்கியபின் ஒருவர் அதன் சுற்றம் ஆகிவிடுகிறார். ஒருவருடைய ஒழுக்கமும் உயர்வுகளும் திறன்களும் அவருடைய சூழ்நிலையைப் பொறுத்தவை ஆதலால். இச்சுற்றம் ஒருவரது சிந்தனை, சொல், உணர்வு நிலைகள் மற்றும் செயல்களில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றது,

சிறுமைப் பண்பு கொண்ட மக்கள் ஒரு குழுவாக இருந்தால் அது சிற்றினம் எனப்படும். சிற்றினம் என்று கூறுகையில் அதில் அடங்கும் மக்கள் எந்த வேறுபாடுகளிலிருந்து வந்து இணைந்தாலும், இயல்பாலும் நோக்கத்தாலும் சிற்றினம் சேர்ந்தவராகக் கருதப்படுவர்.
சிறுமைக் குணம் கொண்டவர்கள் யாவர்? கொலைசெய்வோர், கொள்ளையில் ஈடுபடுவோர், காமுகர்கள், சூதாடிகள், கட்குடியர்கள், பொய்யர்கள் முதலியோரும் வன்முறையாளர், வஞ்சனைநிறைந்தோர், மூடநம்பிக்கை வளர்ப்போர், புறம்பேசுவோர், உழைக்காமல் உண்போர், கடமையைப் புறக்கணிப்போர், வீணேபொழுதுகழிப்போர் போன்றோரும் சிற்றின மாந்தர்க்கு எடுத்துக்காட்டுக்கள்.
கொலை, கொள்ளை, குடி, சூது என்று வாழ்பவர்களின் சூழலில் வளரும் ஒருவனின் சிந்தனையும், அன்பு, உறவு, நட்பு ஒழுக்கம், தொண்டு, என வாழ்க்கை நடாத்துபவர்களின் சூழலில் இருக்கும் ஒருவனின் எண்ண ஓட்டங்களும் ஒரே நிலையில் இருக்க முடியாது. சிற்றினம் சேர்தல் அல்லல் படுத்தும் தன்மையது. எனவே அக்கூட்டுறவை நீக்குக என்று அதிகாரப்பாடல்கள் குறிப்பால் உணர்த்துகின்றன. சிற்றினம்' கடின முயற்சிகளின்றியும் கிடைக்கக் கூடிய ஒன்று ஆகையால் சிற்றினம் சேராமலிருக்க வலிய முயற்சி தேவை. இனநலம் ஆய்ந்து உறவு மேற்கொள்க என அறிவுறுத்துவது இவ்வதிகாரம்.
நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லை' என்போர்க்கு இனன் ஆகிலியர்!
(புறநானூறு. 29 )
{பொருள்: நல்வினையினது நன்மையும் தீவினையினது தீமையும் இல்லையென்று சொல்லுவோர்க்கு இனமாகா தொழிவாயாக). என்ற சங்கப்பாடலை இவ்வதிகார விளக்க உரையில் பரிமேலழகர் மேற்கோள் காட்டி அதில் சுட்டப்பட்ட இனம் சிற்றினம் என்கிறார். இச்செய்யுளில் கூறப்படும் குணம் கொண்டோர் நாத்திகரைக் (agnostic) குறிப்பதாகப் பரிமேலழகர் கொள்வதால் இங்ஙனம் சொல்லப்பட்டது. ஆனால் செய்யுள் பகுத்தறிவாளரைப் (Rationalist) பற்றிப் பேசுவதாகத் தெரிகிறது. பகுத்தறிவாளர் சமய மறுப்பாளர் (atheist) ஆக இருக்கலாம்; அவர் கடவுள் மறுப்பாளராக இருக்க வேண்டியதில்லை.

சிற்றினம் சேராமை அதிகாரப் பாடல்களின் சாரம்:

  • 451 ஆம்குறள் சிறியோர் சிறுமைக் குணமுடையோரிடம் இயல்பாக சுற்றம் கொள்கின்றனர் என்கிறது.
  • 452 ஆம்குறள் தன் சூழலால் பெறும் அறிவையே ஒருவர் பெரிதும் கொண்டிருப்பார் என்பது.
  • 453 ஆம்குறள் ஒருவன் தான் இணைந்து கொண்ட கூட்டத்தைப் பொறுத்து உலகத்தாரிடம் அடையாளம் காணப்படுகிறான் என்பதைச் சொல்கிறது.
  • 454 ஆம்குறள் பழகும் கூட்டத்தின் அறிவே ஒருவனை ஆதிக்கம் செய்யும் என்பதைச் சொல்வது.
  • 455 ஆம்குறள் பழகும் கூட்டச் சூழல் ஒருவனது மனநலத்திற்கும் செயல்திறத்திற்கும் துணையாக வரும் என்கிறது.
  • 456 ஆம்குறள் நல்ல கூட்டத்தைச் சேர்ந்தவர் செய்யும் எல்லாமே நல்லதாய் அமையும் எனக் கூறுகிறது.
  • 457 ஆம்குறள் உள்ளத்தைத் தூய்மையாக வைத்து நல்லவர்களுடன் பழகினால் புகழுக்குக் குறைவில்லை என்று சொல்கிறது.
  • 458 ஆம்குறள் நல்ல சேர்க்கை சான்றோர்க்குக்கூட பாதுகாப்பு அளிக்கும் எனச் சொல்வது.
  • 459 ஆம்குறள் மறுமை பெறுதற்கு இனநலம் உறுதியளிக்கிறது என்று குறிக்கிறது.
  • 460 ஆவதுகுறள் தீயினச் சேர்க்கை மிக்க துன்பம் தருவது என எச்சரிப்பது.

அதிகாரப் பெயர்

அதிகாரத்து முதற்பாடலிலும் இறுதிப்பாடலிலும் சிற்றினம், நல்லினம் எனக் குறிக்கப் பெற்றுள்ளன. மற்றப்படி, சிற்றினஞ்சேரலாகாது என்றும் கூறாமல் நல்லினம் சேர்தல் வேண்டும் என்றும் கூறாமல் இனம் பற்றிப் பொதுமையிலேயே பாடல்கள் பெரிதும் அமைந்துள்ளன. குறட்பாக்கள் பெரும்பாலும் நல்லினம் சேர்தலின் பயன் கூறுவதாக உள்ளதால் அதிகாரத்திற்குச் 'சிற்றினம் சேராமை' என்று பெயர் இருப்பது அவ்வளவாகப் பொருத்தமில்லை என்று சொல்வர்.
'இனம்சேர்தல்' என்ற பெயர் ஏற்கலாம்.

சிற்றினம் சேராமை அதிகாரச் சிறப்பியல்புகள்

இயற்கை அறிவு (இயல்பான அறிவு), கல்வி அறிவு, கேள்வி அறிவு இவை தவிர, புறவுலகத்தில் கலப்பதுவும், சமுதாயச் சூழலும் மாந்தர்க்கு கிடைக்கப் பெற்றுள்ள அறிவின் வாயில்கள் ஆகும்,. இனச்சேர்க்கையால் கிடைக்கப்பெறும் அறிவு உள்ள அறிவைத் திரிக்கும் ஆற்றல் கொண்டது ஆதலால் அவ்வாயில்கள் வழி சிறுமை உள்ளத்துள்ளே வராமல் காத்துக்கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த எழுந்தது இவ்வதிகாரம்..

மனம், அறிவு, இனம் இவற்றிற்கிடையே உள்ள தொடர்பு ஆராயப்படுகிறது. அதிகாரத்துப் பத்துக் குறள்களில் ஏழில் மனம்’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.. மனநலம்-இனநலம் என்ற கூட்டியைபு மிகவும் பேசப்பட்டது. இனச்சேர்க்கை மனநலத்தில் பெரிதும் தாக்கம் உண்டாக்கக்கூடியது என்றும் இனத்து இயல்பதாகும் அறிவு, இனத்துளது ஆகும் அறிவு என்றும் முடிவு காணப்படுகிறது.

மனத்துளது போலக் காட்டி ஒருவற்கு இனத்துளது ஆகும் அறிவு என்ற சிந்தனைக்குரிய வரி கொண்ட குறள் (454) இவ்வதிகாரத்தின்கண் உள்ளது.
மனநலம் மன்னுயிர்க்கு ஆக்கம் (குறள் 457) என்ற பொருள் பொதிந்த வரி வள்ளுவரின் தனிநடைத் தொடராகிச் சிறப்புப் பெற்றது.
இனத்தானாம் இன்னான் எனப்படும் சொல்' (குறள் 453) இன்னார் என்று ஒருவர் அடையாளம் காட்டப்படுவதற்கு இனம் பயன்படுகிறது. நற்பெயர் உண்டாவதும் கெட்டபெயர் அடைவதும் இனச்சேர்க்கை பொறுத்து அமையும் என்ற கருத்தைச் சொல்லும் பாடல் கொண்ட அதிகாரமிது.


குறள் திறன்-0451 குறள் திறன்-0452 குறள் திறன்-0453 குறள் திறன்-0454 குறள் திறன்-0455
குறள் திறன்-0456 குறள் திறன்-0457 குறள் திறன்-0458 குறள் திறன்-0459 குறள் திறன்-0460