இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0451சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:451)

பொழிப்பு: பெரியோரின் இயல்பு சிற்றினத்தை அஞ்சி ஒதுக்கும்; சிறியோரின் இயல்பு அதையே சுற்றமாக எண்ணித் தழுவிக் கொள்ளும்.

மணக்குடவர் உரை: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்; சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது.

பரிமேலழகர் உரை: பெருமை சிற்றினம் அஞ்சும் - பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும், சிறுமை தான் சுற்றமாச் சூழ்ந்து விடும் - ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
'(தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது.)

வ சுப மாணிக்கம் உரை: பெரியவர் சிறியவரோடு பழக அஞ்சுவர்; சிறியார் சிறியாரையே உறவு கொள்வர்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பெருமை சிற்றினம் அஞ்சும்; சிறுமைதான் சுற்றமாச் சூழ்ந்து விடும்.


சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்:
பதவுரை: சிற்றினம்-சிறுமைக் குணம் கொண்டோர்; அஞ்சும்-நடுங்கும்; பெருமை-பெரியோரியல்பு; சிறுமைதான்-சிறியோரியல்புதாம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்;
பரிப்பெருமாள்: சிற்றினத்தை யஞ்சுவர் பெரியர்;
பரிதி: பெரியோர் சிறுமையுடையார்க்குப் பயப்படுவார்;
காலிங்கர்: தமது நீதி நெறிக்குத் தகாதோராகிய சிற்றினத்தை மருவுதற்கு அஞ்சுவர் பெரியோர்;
பரிமேலழகர்: பெரியோர் இயல்பு சிறிய இனத்தைச் அஞ்சாநிற்கும்,

'பெரியோர் சிற்றினத்தை அஞ்சுவர்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். பரிமேலழகர் தவிர்த்து அனைத்துத் தொல்லாசிரியர்களும் பெருமை, சிறுமை முதலிய பண்புப் பெயர்கள் அப்பண்புடையாரை ஆகுபெயரால் உணர்த்தியதாகக் கொணடு பெரியோர் சிறியோர் என்றனர். பரிமேலழகர் அவற்றிற்குப் பெரியோரியல்பு-சிறியோரியல்பு எனப் பண்பாகவே கொண்டு உரை கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் '(இனத்தியல்பதாகும் அறிவு ஆதலி,ன்) பெரியார் சிறியார் இனத்தினைச் சேர அஞ்சுவர்.', 'பெருமையடைய விரும்புகிறவர்கள் அறிவும் ஒழுக்கமும் இல்லாத அற்பர்களுடன் சேரமாட்டார்கள்', 'பெரியோர்கள் இயல்பாகவே சிற்றினஞ் சேர நடுங்குவர்', 'தீயவர்கள் கூட்டத்தைக் கண்டு அஞ்சுவது பெரியோர் இயல்பு ஆகும்' என்ற பொருளில் உரை தந்தனர்.

பெரியோர் சிறுமையுடையார்க்கு அஞ்சுவர் என்பது இப்பகுதியின் பொருள்.

சுற்றமாச் சூழ்ந்து விடும்:
பதவுரை: சுற்றமாச்-கிளைஞராய்ச்; சூழ்ந்துவிடும்-எண்ணித் துணியும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
மணக்குடவர் கருத்துரை: இது பெருமை வேண்டுவார் சிற்றினஞ் சேராரென்றது
பரிப்பெருமாள்: சிறியவர் அதனைச் சுற்றமாகக் கொண்டு விடுவர்.
பரிப்பெருமாள் கருத்துரை: இது பெருமை வேண்டுவார் கொள்ளார் என்றது
பரிதி: சிறுமையுடையோர் சிறுமையுடையோரைத் தமக்கு உறவாக்கிக் கொள்ளுவார் என்றவாறு.
காலிங்கர்: இனி மற்று அவரோடு ஒரு தன்மையாகிய சிறியோர் தமது கிளைஞராக விசாரித்து3க் கைக்கொண்டு விடுவர் என்றவாறு.
பரிமேலழகர்: ஏனைச் சிறியோர் இயல்பு அது சேர்ந்த பொழுதே அதனைத் தனக்குச் சுற்றமாக எண்ணித் துணியும்.
பரிமேலழகர் விரிவுரை: (தத்தம் அறிவு திரியுமாறும் , அதனால் தமக்கு வரும் துன்பமும் நோக்கலின், அறிவுடையார் அஞ்சுவர் என்றும், அறிவு ஒற்றுமையான் பிறிது நோக்காமையின், அறிவிலாதார் தமக்குச் சுற்றமாகத் துணிவர் என்றும் கூறினார். பொருளின் தொழில்கள் பண்பின்மேல் நின்றன. இதனான் 'சிறிய இனம் பெரியோர்க்கு' ஆகாது' என்பது கூறப்பட்டது..

'சிறுமையுடையோர் சிறுமையுடையோரைத் தமக்கு உறவாக்கிக் கொள்வர்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் சிறியார் அவ்வினத்தைச் சுற்றமாக எண்ணிச் சுற்றிக் கொள்வர்'', 'சிறுமையடைய விரும்புகிறவர்கள்தாம் அற்பர்களை உறவாகக் கொண்டாடுவார்கள்', 'சிறியோர்கள் இயல்பாகவே சிற்றினத்தைத் தமக்கு உறவாக எண்ணித் தம்மோடு சேர்த்துக்கொள்வர்', 'அக்கூட்டத்தைச் சுற்றமாகக் கருதிச் சூழ்ந்து கொள்வது சிறியோர் இயல்பு ஆகும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

சிறுமையுடையோர் சிறியோரைத் தனக்குச் சுற்றமாக எண்ணிச் சுற்றிக் கொள்வர் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
சிறியோர் சிறுமைக் குணமுடையோரிடம் இயல்பாக சுற்றம் கொள்கின்றனர் என்னும் பாடல்.

பெரியோர் சிறுமையுடையார்க்கு அஞ்சுவர்; சிறுமையுடையோர் சிறியோரைத் தனக்குச் சுற்றமாக எண்ணிச் சுற்றிக் கொள்வர் என்பது பாடலின் பொருள்.
பெரியோர் ஏன் அஞ்சுவர்?

சிற்றினம் என்ற சொல் சிறுமைக் குணம் கொண்டோர் எனப் பொருள்படும்..
அஞ்சும் என்ற சொல்லுக்குப் பயப்படும் என்று பொருள். இங்கு நெரூங்காமல் ஒதுங்கும் என்று பொருள் கொள்வர்.
பெருமை என்ற சொல் பெரியோரைக் குறித்து நின்றது.
சிறுமைதாம் என்றது சிறியோரைத்தாம் எனப் பொருள் தரும்.
சுற்றமா என்றதற்கு உறவாக என்று பொருள்.
சூழ்ந்துவிடும் என்றது சுற்றிக் கொள்ளும் என்பதைக் குறிக்கும்.

பெரியோர் சிறியோரை அஞ்சி ஒதுங்குவர் அதாவது சிறுமைக் குணம் உடையோர் தம்முடன் சேராமல் பார்த்துக் கொள்வர். ஆனால் சிறியோர் சிற்றினத்தாரை ஆராயமலே அவர்களை உறவாக எண்ணிச் சூழ்ந்து கொள்வர்.

தம் உணர்வோடும் சிந்தனையோடும் ஒத்தவர்களைச் சேர்ந்து கொள்வது பொதுவான மனித குணம். எனவே பெரியோர்கள் சிறுமைக் கொண்டோரைத் தெரிந்துகொண்டு ஒதுக்கிவைத்து விடுவர். சிறியோர் கீழ்மக்கள் என்று தெரிந்தாலும் உடன் அவர்களைச் சுற்றமாக்கிக் கொண்டாடுவார்கள்.

இனம் இனத்தோடு சேரும் என்பது உலக வழக்கு. ஆனாலும் சிறுமைக் குணம் கொண்டோர் எதையும் ஆராயமலே கீழ்க் குணம் கொண்டவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்களே என்று வள்ளுவர் வருந்திச் சொல்கிறார் என்று தோன்றுகிறது. இரண்டு எதிர் எதிரான கருத்துக்கள் உரைக்கப்படுகின்றன. பெரியோர் அஞ்சுவர் என்றும் சுற்றமாகச் சூழ்ந்து கொள்வர் என்பதும் முரணான குணங்களைத் தெளிவாக விளக்குகின்றன.

பெரியோர் ஏன் அஞ்சுவர்

இன்னார் என்று அறியப்படுவது இனத்தாலும் உண்டு என்பதால், சிறியோருடன் நட்பு பாராட்டினால தமது அடையாளம் மாறுபட்டு அதனால் பெருமைக்கு இழுக்கு நேரும் என்று பெரியோர் அவர்களிடமிருந்து விலகுவர். மேலும் சிறியோர் சேர்க்கையால் தமது சிந்தனை ஓட்டமும் திரிவுபடும் என்ற பயமும் பெரியோருக்கு உண்டு. சிறுமைக் குணம் கொண்டோர் பழக்கத்தினால் வேறுபல எதிர்பாராத துன்பங்களும் நேர வாய்ப்புண்டு. சிறியோரிடமிருந்து அஞ்சி ஒதுங்குவது என்பது ஒரு முற்படக் காக்கும் நடவடிக்கைதான்.
சிறியோர் பெருமை கொண்டோரை நெருங்கிவிட்டால் அவர்களைச் சுற்றமாகச் சூழ்ந்து அவர்களைத் தம்வழி ஒழுகவைக்க முனைவர். ஒருகட்டத்தில் பெரியோர் அவர்கள் நட்பை உதறிச் தள்ளினாலும் சிறியவர்கள் அவர்களை விடாது பற்றி நின்று அவர்கள் அழிவுவரை கூடவே இருந்து இன்னல் விளைப்பர். எனவே பெரியோர் சிறியாரை அஞ்சுவர்.

பெரியோர் சிறுமையுடையார்க்கு அஞ்சுவர்; சிறுமையுடையோர் சிறியோரைத் தனக்குச் சுற்றமாக எண்ணிச் சுற்றிக் கொள்வர் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

பெரியோர், சிறியோர் இயல்பு கூறி சிற்றினம் சேராமையை எண்ணவைக்கும் குறள்.

பொழிப்பு

பெரியோர் சிறுமைக் குணம் கொண்டோரோடு சேர அஞ்சுவர்; சிறியோர் சிறுமையுடையோரையே உறவாக எண்ணிச் சுற்றிக் கொள்வர்.