இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0460நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின்
அல்லல் படுப்பதூஉம் இல்

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:460)

பொழிப்பு: நல்ல இனத்தைவிடச் சிறந்ததாகிய துணையும் உலகத்தில் இல்லை; தீய இனத்தைவிடத் துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை.

மணக்குடவர் உரை: நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை, தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.

பரிமேலழகர் உரை: நல்லினத்தின் ஊங்கு துணையும் இல்லை - ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை, தீயினத்தின் (ஊங்கு) அல்லல் படுப்பதூஉம் இல் - தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
(ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: நல்ல சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; கெட்ட சேர்க்கையினும் வேறு கேடில்லை.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்.


நல்லினத்தின் ஊங்கும் துணையில்லை:
பதவுரை: நல்-நல்ல; இனத்தின்-இனத்தைவிட; ஊங்கு-மேற்பட்ட; துணை-துணை; இல்லை-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை;
பரிப்பெருமாள்: நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை;
பரிதி: சற்புருஷர் துணைபோலே சுகம் இல்லை;
காலிங்கர்: உலகத்து ஒருவர் இணங்கும் இன வேற்றுமையான் வரும் புகழும் பழியும் இவையாகலான் நல்லினத்தின் மேலாயிருப்பதொரு துணையும் இல்லை;
பரிமேலழகர்: ஒருவற்கு நல்லினத்தின் மிக்க துணையும் இல்லை;

'நல்லினத்தின் மிக்க துணையாயிருப்பதூஉம் இல்லை' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒருவனுக்கு நல்லினத்தைக் காட்டிலும் மிக்க துணையும் இல்லை', 'மனிதருக்கு நல்ல சகவாசத்தைவிட நன்மை செய்யக்கூடிய துணையும் இல்லை', 'ஒருவனுக்கு நல்ல இனத்தைப் பார்க்கிலும் சிறந்த துணையும் இல்லை.', 'ஒருவர்க்கு நல் இனத்தைவிடச் சிறந்த துணையும் இல்லை' என்ற பொருளில் உரை தந்தனர்.

நல்லினத்தைவிட மேலானதொரு துணையும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

தீயினத்தின் அல்லல் படுப்பதூஉம் இல்:
பதவுரை: தீ-கொடிய; இனத்தின்-இனத்தைவிட; அல்லல்-துயர்; படுப்பதூஉம்-உறுவிப்பதும் இல்-இல்லை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
மணக்குடவர் குறிப்புரை: இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிப்பெருமாள்: தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது சேராமைக்குக் காரணங் கூறிற்று.
பரிதி: துற்சனா சங்காத்தம் போல துன்பம் இல்லை என்றவாறு.
காலிங்கர்: தீயினத்தின் துன்பம் தரும் பகையும் இல்லை என்றவாறு.
பரிமேலழகர்: தீய இனத்தின் மிக்க பகையும் இல்லை.
பரிமேலழகர் கருத்துரை: ஐந்தன் உருபுகள் உறழ்பொருளின்கண் வந்தன. 'ஊங்கு' என்பது பின்னும் கூட்டி உம்மை மாற்றி உரைக்கப்பட்டது. நல்லினம் அறியாமையின் நீக்கித் துயர்உறாமல் காத்தலின் அதனைத் 'துணை' என்றும், தீயினம் அறிவின் நீக்கித் துயர் உறுவித்தலின் அதனைப் 'பகை' என்றும் கூறினார். 'அல்லல் படுப்பது' என்பது ஏதுப்பெயர். இதனான் விதி எதிர்மறைகள் உடன் கூறப்பட்டன.

'தீயினத்தின் மிக்க அல்லற்படுப்பதூஉம் இல்லை' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயினத்தைக் காட்டிலும் மிக்க பகையும் இல்லை', 'கெட்ட சகவாசமாகிய சிற்றினச் சேர்க்கையைவிடத் துன்பம் உண்டாக்கக்கூடிய பகையும் இல்லை', 'தீய இனத்தைப் பார்க்கிலும் மிகுதியாகத் துன்பப்படுத்துவதும் யாதும் இல்லை', 'கெட்ட இனத்தைவிடத் துன்பம் தரக்கூடியதும் (வேறொன்றும்) இல்லை' என்றபடி பொருள் உரைத்தனர்.

தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீயினச் சேர்க்கை மிக்க துன்பம் தருவது என்னும் பாடல்.

நல்லினத்தைவிட ஊங்கும் துணை இல்லை; தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது பாடலின் பொருள்.
ஊங்கு என்றால் என்ன?

நல்லினம் எனற சொல் நல்லவர் சேர்க்கையைக் குறிக்கும்.
தீயினம் என்பது தீயவர்களின் கூட்டுறவைக் குறிக்கும் சொல்.
அல்லற்படுப்பதூஉம் என்ற சொல்லுக்கு துன்பத்தை உண்டாக்குவது என்பது பொருள்.
இல் என்பது இல்லை என்று பொருள்படும்.

ஒருவர்க்கு நல்லினத்தைவிடச் சிறந்த துணையும் இல்லை. தீய இனத்தைவிட மிக்க துன்பம் தருவது எதுவும் இல்லை.

நல்லினச் சேர்க்கை துயர் உறாமல் காக்கும். எனவே அதைவிட மேலாயிருப்பதொரு துணை இல்லை என்று சொல்லப்பட்டது. ஆனால் தீயோர் சேர்க்கை துயர் உறுவிக்கும். எனவே அது அல்லற்படுத்தூஉம் என்று சொல்லப்பட்டது.

ஊங்கு என்றால் என்ன?

ஊங்கு என்ற சொல்லுக்கு மேம்பாடான அல்லது மேலான என்பது பொருள். சிறந்த, மிக்க என்றும் இடத்துக்குத் தக்கவாறு பொருள் கூறுவர்.
பரிமேலழகர் இச்சொல்லை தீ இனத்தின் (ஊங்கும்) அல்லல் படுப்பதூஉம் இல் என்று தீஇனம் என்ற சொல்லுக்கும் கூட்டி உரை செய்வார். ஊங்கும் என்ற சொல் இத்தொடரிலுள்ள அளபெடையோடு சேர்ந்து தியினச் சேர்க்கை மிகவும் துன்பம் தருவது என்ற கருத்த்தை மிக அழுத்தமாகச் சொல்கிறது. அறத்தினூங்கு ஆக்கம் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு என்ற அறன் வலியுறுத்தல் அதிகாரத்துக் குறளின் நடையைப் போன்றது இப்பாடல்..

நல்லினத்தைவிட மேலானதொரு துணையும் இல்லை; தீயினத்தைவிட துன்பப்படுத்துவதும் வேறொன்றும் இல்லை என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

சிற்றினம் சேராமை துன்பம் நீக்கத் துணை செய்யும் என்னும் குறள்.

பொழிப்பு

நல்லினச் சேர்க்கையினும் சிறந்த துணையில்லை; சிற்றினம் சேர்தலினும் கேடு யாதும் இல்லை.