இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0452



நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு

(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:452)

பொழிப்பு: சேர்ந்த நிலத்தின் இயல்பால் நீர் வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையுடையதாகும்; அது போல் மக்களுடைய அறிவு இனத்தின் இயல்பினை உடையதாகும்

மணக்குடவர் உரை: நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல, மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.

பரிமேலழகர் உரை: நிலத்து இயல்பான் நீர் திரிந்து அற்றாகும் - தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம், மாந்தர்க்கு இனத்து இயல்பு அறிவு (திரிந்து) அதாகும் -அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.
(எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.)

சி இலக்குவனார் உரை: தான் அடைந்த நிலத்தினது தன்மையால் நீரினது தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மையை உடையதாகும். அது போல மக்கட்குத் தாம் அடைந்த கூட்டத்தினது தன்மையைப் பொறுத்து அறிவு உண்டாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு.


நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும்:
பதவுரை: நிலத்து-பூமியினது; இயல்பான்-தன்மையால்; நீர்-நீர்; திரிந்து-வேறுபட்டு; அற்று ஆகும்-அத்தன்மைத்து ஆகும். .

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மைத்தாவது போல;
பரிப்பெருமாள்: நிலத்தின் இயல்பாலே நீர் நிறம் திரிந்து நிலத்தின் நிறம் ஆகுமாறுபோல;
பரிப்பெருமாள் குறிப்புரை: நீர் திரிந்து ஆகும் அற்று1 என்று கூட்டுக.
பரிதி: நிலத்திற்குத் தக்க குணம் நீர் காட்டினாற்போல;
காலிங்கர்: நிலத்தின் நிறம் முதலிய வேறுபாட்டுத் தன்மையால் நீரானது தன் தன்மை வேறுபட்டு, மற்று அந்நில இயல்பினை உடைத்தாம். அதுபோல;
பரிமேலழகர்: தான் சேர்ந்த நிலத்தினது இயல்பானே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாம்;

'தான் சேர்ந்த நிலத்தினது இயல்பாலனே நீர் தன் தன்மை திரிந்து அந்நிலத்தின் தன்மைத்தாவது போல' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'மழை தான்விழுந்த மண்தன்மையைப் பெறும்', 'தான் சேர்ந்த நிலத்தியற்கையால் நீர் தன் தன்மை மாறுதல் போல.', 'தண்ணீர் எந்த நிலத்தோடு சேர்ந்திருக்கிறதோ அந்த நிலத்தின் சாரமுள்ளதாக மாறிவிடும்.', 'அது நீரானது தான் சேர்ந்த நிலத்தின் தன்மையினாலே தன் இயல்பு மாறி அந்நிலத்தின் தன்மையை அடைவது போலும்.' என்ற பொருளில் உரை தந்தனர்.

நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல என்பது இப்பகுதியின் பொருள்.

மாந்தர்க்கு இனத்தியல்பது ஆகும் அறிவு:
பதவுரை: மாந்தர்க்கு-மக்களுக்கு; இனத்து-இனத்தினது; இயல்பு-தன்மை; அது-அஃது; ஆகும்-ஆம்; அறிவு-அறிவு.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: மக்கட்கு அறிவு இனத்தின் தன்மையதாய் வேறுபடும்.
பரிப்பெருமாள்: மாந்தர்க்குத் தமக்கியல்பாகிய அறிவும் தாம் சேர்ந்த இனத்திற்கியல்பாகிய அறிவுமாம் என்றவாறு.
பரிப்பெருமாள் கருத்துரை: இது தமது அறிவு திரியும் என்றது.
பரிதி: இனத்துக்குத் தக்கதாக அறிவு உண்டாம் என்றவாறு.
காலிங்கர்: அதுபோல உலகத்து வாழும் மக்களுக்கும் தத்தம் இனத்தின் தன்மையதாகும் தமது அறிவு என்றவாறு.
பரிமேலழகர்: அதுபோல மாந்தர்க்குத் தாம் சேர்ந்த இனத்தின் இயல்பானே அறிவும் தன் தன்மை திரிந்து அவ்வினத்தின் தன்மைத்தாம்.
பரிமேலழகர் கருத்துரை: எடுத்துக்காட்டுவமை: விசும்பின்கண் தன் தன்மைத்தாய நீர் நிலத்தோடு சேர்ந்த வழி, நிறம், சுவை முதலிய பண்புகள் திரிந்தாற்போல, தனி நிலைக்கண் தன் தன்மைத்தாய அறிவு, பிறஇனத்தோடு சேர்ந்தவழிக் காட்சி முதலிய தொழில்கள் திரியும் என, இதனான் அதனது காரணங் கூறப்பட்டது.

மக்களுக்கும் தத்தம் இனத்தின் தன்மையதாகும் தமது அறிவு என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அறிவு சேர்ந்த குழுத்தன்மையைப் பெறும்', 'தாம் சேர்ந்த இனத்தின் இயல்பினால் மக்கள் தம் அறிவுநிலை மாறுவர்', '. அதுபோல இயற்கையாக நல்ல புத்தியுடையவர்களும் அற்பபுத்திக்காரகளுடன் சேர்ந்தால் கெட்டுப் போவார்கள்', 'மனிதர்க்கு அறிவு தன் தன்மை மாறிச் சேரும் கூட்டத்தாரின் தன்மையை அடையும்' என்றபடி பொருள் உரைத்தனர்.

மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தன் சூழலால் பெறும் அறிவையே ஒருவர் பெரிதும் கொண்டிருப்பர் என்னும் பாடல்.

நிலத்தின் தன்மையால் நீர்திரிந் தற்றாகும்; மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது பாடலின் பொருள்.
நீர்திரிந் தற்றாகும் என்றால் என்ன?

நிலத்தியல்பால் என்ற சொல்லுக்கு நிலத்தின் தன்மையால் என்று பொருள்.
மாந்தர்க்கு என்பது மக்களுக்கு என்று பொருள்படும்.
இனத்தியல்பதாகும் என்றது கூட்டத்தின் தன்மையாகும் என்பதைக் குறிக்கும்

நிலத்தோடு சேர்ந்த நீரின் குணம் நிலத்தியல்பாக மாறுவது போல மக்களது அறிவு அவர்கள் பழகும் கூட்டத்தின் தன்மையாக மாறும்.
மனிதன் சாரந்தவண்ணமாக இருக்கும் இயல்புடையவன். ஆதலால், நிலத்தொடு நீர் இயைந்தது போல தான் கலக்கும் இனத்துக்குரிய அறிவு அவனுள் கலந்துவிடுகிறது. சேர்ந்த அவ்வினத்தின் தன்மையதாக ஒருவனது வாழ்க்கை ஆக்கம் பெறும் அல்லது கெடும். அதாவது தாம் பழகும் கூட்டத்தாரைப் பொறுத்து, காணுதல், நினைத்தல், ஒழுகுதல் ஆகியவற்றில் மாற்றம் உண்டாகிறது. சிற்றினத்தோடு சேர்ந்தால் நல்லோர் அறிவும் திரிவுபடும் என்பதால் சிறுமைக் குணம் கொண்ட கூட்டத்தில் இணைய வேண்டாம் என்ற செய்தி சொல்லப்படுகிறது.

நீர்திரிந் தற்றாகும் என்றால் என்ன?

திரிந்து என்ற சொல்லுக்கு 'வேறுபட்டு' என்பதும் அற்று என்பதற்கு 'போல' என்பதும் பொருள். 'நீர் திரிந் தற்று ஆகும்' என்ற தொடர்க்கு 'நீர் வேறுபட்டது போல ஆகும்' என்பது பொருள்.
ஒரே பகுதியில் உள்ள கிணற்று நீர்கூட ஒரே சுவையாக இருப்பதில்லை. ஓரிடத்தில் இனிமையாக இருக்கும். பிறிதோரிடத்தில் உப்புச் சுவையுடையதாக இருக்கும். இவ்வாறு ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு வகையான சுவையுடையதாக நீர் இருப்பதற்குக் காரணம், அந்தந்த இடத்தில் உள்ள மண்ணின் இயல்பேயாகும். நிலத்தின் மண்வளத்தைப் பொறுத்து நன்னிலம், களர்நிலம் (உவர்நிலம்), களிப்புமண் பூமி,, செம்மண்நிலம், சதுப்பு நிலம் என்று பலவகையாகப் பெயரிட்டு அழைப்பர். மண்ணீரோ (ஊற்றுநீரோ) அல்லது விண்ணீரோ (மழைநீரோ) எந்த நிலத்தில் ஊறுகிறதோ/பாய்கிறதோ/வீழ்கிறதோ அந்நிலத்தின் தன்மையை ஏற்று அதன் நிறம், சுவை, பயன் (துய்ப்பதற்க்கேற்றது/ வேளாண்மைக்குகந்தது) ஆகிய தன்மைகளில் திரிவுபடும் அதாவது அந்நிலத்தின் தன்மையதாய் மாறிவிடும்.
போப்பையர் தமது உரையில் வெள்ளம் வரும்போது ஆற்றின் நீரைக் காண்பார் இவ்வுவமைப் பொருளைத் தெளிவாக உணர்வர் எனக் கூறியுள்ளார். வெள்ளம் எல்லாவகையான நிலத்து நீரையும் பெருக்கிச் செல்வதால் வேறுபட்ட பலவகையான நிலம்-நீர் திரிந்திருத்தலை அவ்வெள்ளத்தில் காணலாம் என்கிறது இவ்வுரை..
நீரின் தன்மை திரிவுபடுவது போல' என்பது இத்தொடரின் பொருள்.

நிலத்தின் தன்மையால் நீர் தன் தன்மை வேறுபட்டு அந்நிலத்தின் தன்மை உடைத்தாவது போல, மக்கட்கு அறிவு தாம் சேர்ந்த இனத்தின் தன்மையதாய் வேறுபடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

அறிவு திரிவுபடும் என்பதால் சிற்றினம் சேராமையை அறிவுறுத்தும் குறட்பா.

பொழிப்பு

தான் சேர்ந்த நிலத்தியற்கையால் நீரின் தன்மை மாறுதல் போலத் தாம் சேர்ந்த கூட்டத்தின் இயல்பினால் மக்கள் தம் அறிவுநிலையில் மாறுவர்.