இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் திறன்-0131 குறள் திறன்-0132 குறள் திறன்-0133 குறள் திறன்-0134 குறள் திறன்-0135
குறள் திறன்-0136 குறள் திறன்-0137 குறள் திறன்-0138 குறள் திறன்-0139 குறள் திறன்-0140

நல்ல ஒழுக்கமே வாழ்வில் நல்ல வழிகாட்டியாகும். அது உயர்வைத் தரும். அது அனைத்து அறங்களுக்கும் மூல விசையாகும். பிறவியின் உயர்வானது நல்ல ஒழுக்கத்தால் அடையாளப் படுத்தப்படுகிறது. எனவே, அதனை தம் வாழ்வைவிடப் பெரிதும் பாதுகாக்க வேண்டும்.
- தெ பொ மீனாட்சி சுந்தரம்

தனிமனித வாழ்வும் சமுதாய அமைப்பு முறைகளும் சீராகச் செல்லக் கடைப்பிடிக்கப்படுவன ஒழுக்கநெறிகளாகும். ஒழுக்கமுடைமை பிறப்பிற்குப் பெருமை சேர்க்கும்; ஒழுக்கக்குறைவு பிறப்பிற்கு இழிவு தரும் என்பது இவ்வதிகாரத்தில் அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. ஒழுக்கம் மக்கள் கூட்டுறவிற்குத் துணையாய் நின்று பொதுநலப்பயன் நல்குவதுமாகும். இதனாலேயே 'ஒழுக்கமுடைமை குடிமை' என்று சொன்னதோடு நில்லாமல் 'உலகத்தோ டொட்ட ஒழுகல்' எனவும் அதிகாரம் விதிக்கிறது. இக்கூட்டுறவே சமுதாயத்தை இயக்கி முன்னெடுத்துச் செல்லும். விழுப்பம் தருவதால் ஒழுக்கம் ஒருவனுக்கு உயிரைவிட மேலாகும்; அதுதான் குடிப்பிறப்பு; அதுதான் உயர்வுக்கும் தாழ்வுக்கும் காரணமாக அமைவது. அதுதான் நன்மைக்கெல்லாம் அடிப்படை; ஏட்டில் எழுதப் பெற்றது எல்லாம் ஒழுக்கமன்று; உலகத்தோடு ஒத்ததே ஒழுக்கம். இவை அதிகாரம் கூறும் செய்திகள்.

ஒழுக்கமுடைமை

இதுதான் ஒழுக்கம் என்று வரைவிலக்கணம் கூறுதல் இயலாது. குறளும் அது என்ன என்று சொல்லவில்லை. நல்லொழுக்கம் நன்னடத்தை-நன்னடக்கை என்றும் இனநன்மக்களோடும்-மேம்பாட்டோடும் இயைபுபடுத்தி ஒழுக்கம் பற்றி சிறுது வரையறை செய்து உரையாளர்கள் விளக்கினாலும் ஒழுக்கம் என்றால் என்ன என்று அவர்களில் யாரும் கூறவில்லை. ஒழுக்கம் என்பது விரிந்த இந்த உலகத்தை, உயிரினத்தை, மக்கள் தொகுதியை ஒன்றோடொன்று முரணாகாமல்-மோதாமல் வழி நடத்துவதற்கு உதவுவது; இது ஒருவனது பழக்க வழக்கங்கள், ஒழுகும் விதம், வாழ்க்கைமுறை, நடத்தை இவை தொடர்பானவை; சுருக்கமாகச் சொல்வதானால் மனிதப் பிறவிக்கேற்ப மனிதத் தன்மையுடன் நடந்து கொள்ளுதல் என்பதைக் குறிக்கும்.
ஒழுக்க நெறி ஒருவர்க்கு உயர்வைத் தருவதால் உயிரினை விடவும் மேம்பட்டதாகப் பாதுகாக்கப்பட வேண்டும்; ஒழுக்கத்தைக் கைவிடாமல் இருப்பதற்காக எவ்வளவு துன்பம் நேர்வதானாலும் வருந்தி ஏற்க வேண்டும், அதுவே ஒருவரது வாழ்விற்கு என்றும் துணை நிற்கும் என்கின்றன இவ்வதிகார முதல் இரண்டு பாடல்கள். பின்வரும் பாக்கள் ஒழுக்கமுடைமையால் ஒருவன் அடையும் மேம்பாட்டினையும் அது இல்லாவிட்டால் உண்டாகும் இழிநிலையினனயும் விளக்குகின்றன. வாய்தவறி வார்த்தைகளைக் கொட்டிவிடக்கூடாது என்று சொல்ஒழுக்கத்தையும், பல நூல்களைக் கற்றிருந்தாலும் உலகத்தோடு ஓட்டிப் பழகத் தெரியாதவர்களும் உண்டு என்று காட்டி அவர்களை அறிவில்லாதார் என்றும் இறுதிப்பாக்கள் கூறுகின்றன.

தனிமனிதன் தன்னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் என்பது ஒருவகை ஒழுகலாறு. தான்வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம் என்பது இன்னொருவகை. தனிமனித ஒழுக்கமே மிகையாக இவ்வதிகாரத்துள் கூறப்பட்டுள்ளது. 'உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' அதாவது உலக மானுட சமுதாயத்துடன் ஒத்து, உடன் நின்று வாழ்வதே அறிவுடைமை என்னும் சமூகத்தோடு இணைந்தொழுகும் முறைமை கூறியது ஒழுக்கம் என்பதற்குப் புது இலக்கணமாகக் கருதப்படுகிறது.

நம் பிறப்புடன் ஒழுக்கமும் பிறக்கவில்லை. ஆனால் ஒழுக்கமே பிறப்பிற்குப் பெருமை சேர்ப்பது அல்லது அது குன்றுவது இழிவை உண்டாக்குவது என்கிறார் வள்ளுவர். நல் ஒழுக்கத்தைப் பேணாது இருந்தால் அது பிறவியையே தாழ்விற்கு உள்ளாக்கும்; ஒழுக்கத்தைப் பேண மறந்து ஒழுகினால் வாழ்வு சீர்மை குன்றிக் கெடும். பெற்றோர், சூழல், நண்பர் கூட்டுறவு, கல்விப் பயிற்சி இவை ஒருவனது ஒழுக்க வளர்ச்சிக்குக் காரணங்கள் எனலாம். உயர்குலம் என்று பெயரளவில் நிற்கும் போலிஉயர்வுக்கு இடந்தராமல் ஒழுக்கம் உடையவரே உயர்ந்தவர் என்று கூறுவார் வள்ளுவர்.

ஒழுக்கமுடைமை அதிகாரம் பற்றிய புரிதல்கள்:

'எந்தக் குடியில்/குலத்தில் ஒருவன் பிறக்கின்றானோ அதற்குரிய ஒழுக்கத்திலிருந்து அவன் வழுவக்கூடாது; குறிப்பாக உயர் குடி/குலத்தில் பிறந்தவன் வழுவினால் இழிந்த குடி/குலப் பிறப்பாளனாய் வீழ்ச்சி அடைவான்' என்பது ஆரியர் தருமம். இக்கருத்தின் அடிப்படையில் 'ஒழுக்கமுடைமை' அதிகாரத்தில் ஒன்றிரண்டு பாக்கள் அமைந்திருப்பதாகச் சிலர் குறை காண்கின்றனர். பிறப்புக்கு ஏற்ற ஒழுக்கத்திலிருந்து ஒருவர் தவறினால் அதனினும் இழிந்த குடிப்பிறப்பிற்குத் தகுதி ஏற்பட்டுவிடுவர் என்று இங்கு எங்கும் கூறப்படவில்லை. ஒழுக்கம் என்பது உயர்குடிப்பிறப்பின் ஆசாரம் என்று வள்ளுவர் பார்க்கவில்லை. 'வேதத்தை மறந்தாலும் பரவாயில்லை. பார்ப்பான் அதை மீண்டும் ஓதிக் கற்றிட முடியும். ஆனால் அவன் தனது மனிதப்பிறப்பு ஒழுக்கத்திலிருந்து தவறினால் குடிப்பிறப்பு கெட்டுவிடும்' என்று வள்ளுவர் எச்சரிப்பது ஒழுக்கம் சார்ந்த பொருளில்.

ஒழுக்கமுடைமை குடிமை என்ற பாடலில் உள்ள 'குடிமை' என்பதற்கு உயர்ந்த குடித்தன்மை என்பதுதான் பொருள். இந்தக் குடிமைக்கும் சாதிப் பிரிவுக்கும் எவ்விதத் தொடர்புமில்லை. உயர்ந்த குடிப்பிறப்பு என்பது வருண பேதத்தையும் சாதிப்பிரிவையும் தாண்டி நிற்பது. எனவே உயர்ந்த குடிப்பிறப்பு என்பது எந்த ஒரு குறிப்பிட்ட சாதிக்கோ வருணத்திற்கோ மட்டும் உரியதன்று என்பது அறியப்படவேண்டும். உயர்குடிப்பிறப்பு, இழிபிறப்பு என்று வேறுபடுத்துவதற்கு உரைகல் ஒழுக்கமுடைமை அல்லது ஒழுக்கமின்மை என்பதே அப்பாடல் கூறவரும் கருத்து.

ஒழுக்கமுடைமை அதிகாரப் பாடல்களின் சாரம்

  • 131 ஆம்குறள் மேன்மையைத் தரும் ஒழுக்கத்தை, தன் உயிர் கொடுத்தாவது ஒருவர் காக்க வேண்டும் என்கிறது.
  • 132 ஆம்குறள் ஒழுக்கத்தினைக் கெடவிடாமல் வருந்திப் பேணிக் காக்க வேண்டும். எப்படி நோக்கினாலும் அவ்வொழுக்கமே வாழ்வுக்குத் துணையாகும் என அறிவுறுத்துகிறது.
  • 133 ஆம்குறள் ஒழுக்கமுடைமை-ஒழுக்கமின்மை என்பதுதான் உயர்குடிச்சிறப்பு, இழிபிறப்பு என்று வேறுபடுத்துவதற்கு உரைகல் என்கிறது.
  • 134 ஆம்குறள் மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனிதப் பிறவி வாழ்க்கையே சீர்மை கெட்டுப்போய்விடும் என்று சொல்கிறது.
  • 135 ஆம்குறள் பொறாமை உள்ளவனுக்கு வளர்ச்சி இல்லாதது போல, ஒழுக்கமில்லாதவனுக்கு மேம்பாடு இல்லை என்கிறது.
  • 136 ஆம்குறள் ஒழுக்கம் தவறுவதால் குற்றம் உண்டாகப்போவதை உணர்ந்து, நெஞ்சுத் திண்மையர் ஒழுக்க நெறியைத் தளர விடமாட்டார்கள் எனச் சொல்வது.
  • 137 ஆம்குறள் ஒழுக்கத்தினால் மேன்மை அடைந்தவர் இழுக்கினால் ஒழுக்கம் தவறிய மற்றவரைவிட மிகையான பழிப்புக்கு ஆளாகி அடையக்கூடாத பழியையும் ஏற்க நேரும் எனக் கூறுவது.
  • 138 ஆம்குறள் நன்னடத்தையினால் பின்னால் நன்மைகள் விளையும். கெட்ட ஒழுக்கம் எப்போதும் தீமையே தரும் எனச் சொல்வது.
  • 139 ஆம்குறள் ஒழுக்க முடையவர் தவறியும் தீய சொற்கள் பேச மாட்டார்கள் என்பதைச் சொல்வது.
  • 140 ஆவதுகுறள் உலகத்தாரோடு பொருந்த ஒழுகத் தெரியாதவர் பல கற்றிருந்தும் அறிவு இல்லாதவரே எனக் கூறுகிறது.

ஒழுக்கமுடைமை அதிகாரச் சிறப்பியல்புகள்

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் (குறள் 133) என்ற பாடல் மூலம் சமுதாயம் ஒழுக்கத்தின் வழி நின்று, பிறப்பிற்குப் பெருமை வந்து எய்துமாறு வாழ்ந்திடல் வேண்டும் என்பதுடன், ஒழுக்கத்தினின்று தவறினால், பிறப்பே இழிவாகும் என்று உறுதிபடக் கூறுவதிலிருந்து வள்ளுவர் ஒழுக்கமுள்ள சமுதாயத்தை எந்த அளவு விரும்பினார் என்பதை அறியலாம்.

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி (137) என்ற குறள் ஒழுக்கத்துக்காக மேன்மைப் படுத்தப்பட்டவர்கள் ஒழுக்கம் கெட்டு நடந்து விட்டால் மிகப் பெரிய குற்றமாகப் பழிக்கப்படும். ஒருமுறை குற்றஞ் செய்துவிட்டால், அதுபோன்ற குற்றத்தை வேறுயார் செய்தாலும் அவர்மேல் ஏற்றப்படுவது இயல்பாதலால் அவரிடத்து இல்லாத குற்றத்தையும் உள்ளதாய்ப் பார்க்கப்படும்; எனவே அவர்கள் பன்மடங்கு விழிப்புடன் இருந்து பழி வராமல் காத்துக் கொள்ள வேண்டும் எச்சரிக்கும் உலகியல் நடைமுறைக் கருத்துக்கள் அடங்கிய பாடலாக உள்ளது இது.

விதை தெளிக்கிறவனுக்குத் விதைக்கிற காலத்திலே அவனுக்குப் பயன் கிட்டாமல் போனாலும் பின்னாள் அறுவடைகாலத்தில் பலன் கிடைப்பதுபோல, நன்னடத்தை உடனடியாகப் பயன் தராவிட்டாலும் பின்னால் நன்மைகள் கிடைக்கச் செய்யும் எனச் சொல்லும் நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் (138) என்ற பாடல் இவ்வதிகாரத்தின்கண் உள்ளது.

நூலறிவு வேறு; உலக அறிவு வேறு. மனிதன் ஒருவேளை கற்ற நூற்கருத்துப்படி வாழ இயலாமற் போயினும் குற்றமன்று. ஆனால் உலக இயல்பறிந்து வாழ்ந்தாக வேண்டும். அப்படி வாழாவிட்டால் அவன் அறிவில்லாதவனாகக் கருதப்படுவான் என்று உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும் கல்லார் அறிவிலா தார் (குறள் 140) என்று கூறும் பாடல் இங்குள்ளது. உலகத்தோடு ஒழுகக் கற்றலையும் நூல் கற்றலையும் வெவ்வேறாகக் கூறி உணர்த்தியதும் அறியப்படவேண்டியது. உலக மக்களுடன் கலந்து பழகி நடப்பதுதான் அறிவுடைமை என்பது ஓர் புதிய பொருள். பண்டை அறநூல்கள் கூறும் நெறிமுறைகளே வழக்கு என்றும் அவற்றைக் கடைப்பிடிப்பதே ஒழுக்க நெறி என்ற மரபான விளக்கத்திலிருந்து இது வேறுபடுகிறது.




குறள் திறன்-0131 குறள் திறன்-0132 குறள் திறன்-0133 குறள் திறன்-0134 குறள் திறன்-0135
குறள் திறன்-0136 குறள் திறன்-0137 குறள் திறன்-0138 குறள் திறன்-0139 குறள் திறன்-0140