இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0132பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:132)

பொழிப்பு: ஒழுக்கத்தை வருந்தியும் போற்றிக் காக்க வேண்டும்; பலவற்றையும் ஆராய்ந்து போற்றித் தெளிந்தாலும் அந்த ஒழுக்கமே வாழ்க்கையில் துணையாக விளங்கும்.

மணக்குடவர் உரை: வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒழுக்கம் ஓம்பிப் பரிந்து காக்க - ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க, தெரிந்து ஓம்பித்தேரினும் துணை அஃதே - அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இருமைக்கும். துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.
('பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது. இவை இரண்டு பாட்டானும் ஒழுக்கத்தது சிறப்புக் கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: காப்பதற்குக் கடினமானது என்றாலும் ஒழுக்கத்தை வருந்திக் காத்தல் வேண்டும். ஏனெனில் எவ்வெவ் வழிகளால் ஆராய்ந்தாலும் அவ்வொழுக்கமே நல்ல துணையாகும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
பரிந்தோம்பி ஒழுக்கம் காக்க; தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை.


பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்:
பதவுரை: பரிந்து-வருந்தி; ஓம்பி-பேணி; காக்க-காப்பாற்றுக; ஒழுக்கம்-நடத்தை.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க;
பரிப்பெருமாள்: வருந்திப் போற்றி யொழுக்கத்தினைக் காக்க;
பரிதி: ஒழுக்கமுடைமையைத் தன் பிராணனைப் போலே பாதுகாப்பான்;
காலிங்கர்: தாம் பொருள் முதலியவற்றைக் கெடாமல் காப்பதினினும் விரும்பிக் குறிக்கொண்டு பரிகரிக்க ஒழுக்கத்தினை; [குறிக்கொண்டு-இலட்சியமாகக் கொண்டு; பரிகரிக்க - காக்க] .
பரிமேலழகர்: ஒழுக்கத்தினை ஒன்றானும் அழிவுபடாமல் பேணி வருந்தியும் காக்க;
பரிமேலழகர் குறிப்புரை: 'பரிந்தும்' என்னும் உம்மை விகாரத்தால் தொக்கது.

'வருந்திப் போற்றி ஒழுக்கத்தினைக் காக்க' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர். காலிங்கர் மட்டும் பரிந்து என்பதற்கு 'விரும்பி' எனப் பொருள் கொண்டு விரும்பிக் காக்க எனப் பொருள் கூறினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவு வருந்தினாலும் ஒழுக்கமாக இரு', 'ஒழுக்கத்தைப் பேணி வருந்தியும் காக்க', 'உடல் வருந்தியாவது மிகவும் கருத்தாக ஒழுக்கம் என்னும் நன்னடத்தையை வளர்க்க வேண்டும்', 'வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் வேண்டும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

வருந்தினாலும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க என்பது இப்பகுதியின் பொருள்.

தெரிந்தோம்பித் தேரினும் அஃதே துணை:
பதவுரை: தெரிந்து-அறிந்து; ஓம்பி-மனத்தை ஒருக்கி; தேரினும்-ஆராய்ந்தாலும்; அஃதே-அதுவே; துணை-உதவி.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது
பரிப்பெருமாள்: எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இஃது ஒழுக்கங் காக்கவேண்டுமென்றது.
பரிதி: அது இம்மைக்கும் மறுமைக்கும் துணையாம் என்றவாறு.
காலிங்கர்: எங்ஙனம் எனின், தமக்கு இதனை ஒப்பது மறை முதலிய நூல்களால் மிகத் தெளிந்து குறிக்கொண்டாராயினும் பின்னும் அதுவே அதற்கு ஒப்பதாகிய துணை என்றவாறு.
பரிமேலழகர்: அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இருமைக்கும். துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும், துணையாய் முடிவது அவ்வொழுக்கமே ஆகலான்.

'எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையும் ஆராய்ந்து பார்ப்பினும் தமக்கு அவ்வொழுக்கமே துணையாமாதலால்' என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதியும் பரிமேலழகரும் இம்மைக்கும் மறுமைக்கும் துணை எனக் கூட்டி உரைத்தனர்.

இன்றைய ஆசிரியர்கள் 'எவ்வளவு ஆராய்ந்தாலும் அதுவே துணை', 'பலவகையால் நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே உயிர்க்குத் துணையாகின்றது', 'எத்துணை நூல்களைப் படித்து எவ்வளவு சிந்தனை செய்து ஆராய்ந்து பார்த்தாலும் நல்லொழுக்கந்தான் ஒருவனுக்குத் துணை புரியக்கூடியது', 'அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும், ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே நிற்கின்றது' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே ஒருவர்க்குத் துணையாகின்றது என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கத்தினைக் கெடவிடாமல் வருந்திப் பேணிக் காக்க வேண்டும். எப்படி நோக்கினாலும் அவ்வொழுக்கமே வாழ்வுக்குத் துணையாகும்.

வருந்தினாலும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க; தெரிந்தோம்பித் தேரினும் ஒழுக்கமே ஒருவர்க்குத் துணையாகின்றது என்பது பாடலின் பொருள்.
'தெரிந்தோம்பித் தேரினும்' என்பதன் பொருள் என்ன?

பரிந்து என்ற சொல்லுக்கு வருந்தி என்பது பொருள். இதற்கு விரும்பி என்ற இன்னொரு பொருளும் உண்டு.
முதலில் உள்ள ஓம்பி என்ற சொல்லுக்குப் பேணி என்றும் அடுத்துள்ள ஓம்பி என்ற சொல்லுக்கு ஒருமனப்பட்டு என்றும் பொருள் கொள்வர்.
காக்க என்ற சொல்லுக்குப் பாதுகாக்க என்று பொருள்.
ஒழுக்கம் என்றது நன்னடத்தை குறித்தது.
அஃதே துணை என்ற தொடர் அதுவே உதவி என்ற பொருளது.

வருந்தியும் ஒழுக்கத்தைப் பாதுகாத்தல் வேண்டும். பலவற்றையும் ஆராய்ந்து முடிவு காணும்போது ஒழுக்கமே துணையாக நிற்கின்றது தெரியவரும்.

ஒழுக்கம் கெட பல வழிகள் உண்டு. அவை எளியனவும் கூட. ஆனால் ஒழுக்கத்தைப் பாதுகாத்தலில் இடர்ப்பாடுகள் நிறைய உள்ளதால் அது கடினமாகத்தான் இருக்கும். அவ்விடர்களைக் களைந்து ஒழுக்கத்தைக் காப்பாற்றும்போது துன்பம் நேரிடலாம். இருப்பினும் அதை முயன்று காக்க வேண்டும் என்று குறள் கூறுகிறது. வருந்தியாயினும், நல்லொழுக்கம் காக்கப்பட வேண்டும். ஒழுக்கத்தினின்று தவறாத குணமும் கடைப் பிடிப்பும் நமக்கு நன்மையே செய்யும் என்ற நம்பிக்கையுடன் விழிப்புடன் இருந்து அக்கறையுடன் செயல்பட்டால் அது வாழ்வில் நல்ல துணையாக அமையும்.
பலவற்றையும் ஆராய்ந்து அவற்றுள் வாழ்வுக்குத் துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும் ஒழுக்கமான வாழ்வே என்ற முடிவுதான் கிடைக்கும் என்கிறது பாடல். செல்வம், பதவி போன்றவை துணை செய்யும் என்ற நினைப்பில் பலர் ஒழுக்கத்தைப் பரிந்து காப்பதில்லை. அதன் மேன்மைகளைத் தெரிந்து அதைக் கடைப்பிடிப்பதும் இல்லை. இக்குறள் நடையை நோக்கும்போது யாம் கண்டவற்றுள் ஒழுக்க வாழ்வுபோல் துணையாவது வேறொன்றும் இல்லை என்று வள்ளுவர் தன்கூற்றாகக் கூறுவதுபோல் உள்ளது. அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும் ஒழுக்கமானது இன்றியமையாத துணையாகவே நிற்கின்றது' என்று கா சுப்பிரமணியம் பிள்ளை இக்குறளை விளக்குவார்.

பரிந்து என்பதற்கு விரும்பி என்றும் வருந்தியென்றும் பொருள் கொள்ளலாம். தொல்லாசிரியர்களில் காலிங்கர் விரும்பி என பொருள் கண்டார். இக்கால ஆசிரியர்களிலும் மிகப் பெரும்பாலோர் வருந்தி என்ற பொருளே கொண்டனர். மணக்குடவர் முதலானோர் கூறும் வருந்தி என்னும் பொருள் இங்குப் பொருத்தமாகும்.

'தெரிந்தோம்பித் தேரினும்' என்பதன் பொருள் என்ன?

தெரிந்தோம்பித் தேரினும் என்ற தொடர் ஆராய்ந்து ஒருமனப்பட்டு தேர்தல் செய்யினும் என்ற பொருள் தரும்.
உரையாசிரியர்கள் இத்தொடர்க்கு
எல்லா வறங்களினும் நல்லதனைத் தெரிந்து அதனையுந் தப்பாமலாராய்ந்து பார்ப்பினும்
இதனை ஒப்பது மறை முதலிய நூல்களால் மிகத் தெளிந்து குறிக்கொண்டாராயினும்
அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, அவற்றுள் இருமைக்கும் துணையாவது யாதென்று மனத்தை ஒருக்கித் தேர்ந்தாலும்
மிகவும் ஆராய்ந்து கருத்தோடு தேடினாலும்
பலவகையறங்களை ஆராய்ந்து அவற்றுள் இம்மை, மறுமை இரண்டுக்கும் துணையாவது யாதென்று தேர்ந்தாலும்
எவ்வளவு ஆராய்ந்தாலும்
பலவகையால் நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும்
கல்வி கேள்விகளால் தெரிந்து ஆராய்ந்து பார்த்துத் தீர்மானித்தாலும்
எத்துணை நூல்களைப் படித்து எவ்வளவு சிந்தனை செய்து ஆராய்ந்து பார்த்தாலும்
எவ்வெவ் வழிகளால் ஆராய்ந்தாலும்
அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து, இஃது இல்லாமல் முடியுமாவென்று கழித்துக் கழித்துப் பார்த்தாலும்
நன்கு ஆராய்ந்து பல நூல்களை கற்றுத் தேர்ச்சியுற்றாலும்
எப்படி ஆராய்ந்தாலும்
அறங்கள் பலவற்றையும் ஆராய்ந்து போற்றி முடிவு காணினும்
பல வகையிலும் ஆராய்ந்து முடிவுக்கு வந்தாலும்
எப்படி ஆராய்ந்தாலும் அதுவே துணை
அறங்கள் பலவற்றையும் ஆய்ந்து, இம்மை மறுமைக்குத் துணையாவது எது எனத் தேர்வு செய்தால்
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும்
(தனக்குத்) துணையானவற்றை யெல்லாம்) அறிந்து பேணி ஆராயினும்
பல வழிகளைத்) தேடித் தேர்ந்தெடுத்துப் புரிந்து போற்றினாலும்
என்று பொருள் கூறினர்.

வாழ்வுக்குத் துணையாவதில் உள்ளவற்றில் நன்னடத்தை என்பதே சிறந்த தேர்வு என்று குறள் கூறுகிறது. துருவித்துருவி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்தபின் ஒழுக்கம் என்ற நல்ல நடத்தைதான் நமக்குத் துணைபுரியத்தக்கது என்பது முடிவாய் இருக்கும்.
'(அவன்) கல்விகலை வீரம் புகழ் செல்வம் முதலிய வாழ்க்கை மேம்பாட்டுக்குரிய மற்ற எந்தத் துறையையோ துறைகளையோ துணைகளாக நாடி, அத்துணைப் பண்புகளின் வகைதெரிந்து, தேடித் தொகுத்து, பேணி வளர்த்து, அவற்றில் வெற்றி கைவரப் பெற்றானாயினும் (அந்த ஒழுக்கம் ஒன்றே அத்துணைப் பண்புகளின் வெற்றி மேம்பாட்டுக்கு அடிப்படையான உயிர் மேம்பாட்டுப் பண்பு ஆகும் என்பதை அவன் காண்பவன் ஆவான்)' என்னும் கா அப்பாத்துரை உரை இத்தொடர்க்கான பொருளை நன்கு விளக்குகிறது.

வருந்தினாலும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க; நன்கு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே ஒருவர்க்குத் துணைநிற்கும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஒருவர்க்கு ஒழுக்கமுடைமையே பொன்றாத் துணையாய் அமைவது தெரியும்.

பொழிப்பு

வருந்தியும் ஒழுக்கத்தைப் பேணிக் காக்க; எவ்வளவு ஆராய்ந்து தேர்ந்தாலும் ஒழுக்கமே துணையாகின்றது.