இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0134



மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)

பொழிப்பு (மு வரதராசன்): கற்ற மறைப்பொருளை மறந்தாலும் மீண்டும் அதனை ஓதிக் கற்றுக் கொள்ள முடியும்; ஆனால் மறை ஓதுவானுடைய குடிப்பிறப்பு, ஒழுக்கம் குன்றினால் கெடும்.

மணக்குடவர் உரை: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.

பரிமேலழகர் உரை: ஓத்து மறப்பினும் கொளலாகும் - கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.- அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
(மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார். சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.)

வ சுப மாணிக்கம் உரை: கற்பவன் மறந்தாலும் படித்துக் கொள்ளலாம்; மானிட ஒழுக்கம் குறைந்தாலோ கெடுவான்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்.

பதவுரை: மறப்பினும்-மறந்து விட்டாலும்; ஓத்து-ஓதுதல், கற்றல், வாசித்தல்; சொல்லுதல், வேதம்; கொளல்ஆகும்-பெற்றுக் கொள்ள முடியும்; பார்ப்பான்-நூல் ஆய்வான்; பிறப்பு-மனிதப்பிறவி, மனித வாழ்க்கை; ஒழுக்கம்-நன்னடத்தை; குன்ற-தவற; கெடும்-அழியும்.


மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்:
பரிதி: வேதம் ஓதி மறந்தாலும் பின்பு சந்தத்தை விட்டு ஓதிக்கொள்ளலாம்; [சந்தம்-சந்தஸ் என்னும் வேதஇசை]
காலிங்கர்: தனது குலமரபுக்கு முதற்காரணமாகிய தான் ஓதிய வேதத்தை மறந்தானாயினும் பின்னும் அஃது ஓதிக்கொளலாயிருக்கும்;
பரிமேலழகர்: கற்ற வேதத்தினை மறந்தானாயினும் அவ் வருணம் கெடாமையின் பின்னும் அஃது ஓதிக்கொள்ளலாம்;
பரிமேலழகர் குறிப்புரை: மறந்தவழி இழிகுலத்தனாம் ஆகலின், மறக்கலாகாது என்னும் கருத்தான், 'மறப்பினும்' என்றார்.

'வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்' என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'பார்ப்பான் மறந்தாலும் வேதத்தை மீண்டும் ஓதிப் பெறலாம்', 'நூலாய்பவன் தான் கற்ற கல்வியை மறந்து போனாலும் திரும்பவும் கற்றுக் கொள்ளலாம்', 'நூல்கற்பான் கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும். (அதனால் இழுக்கொன்றும் இல்லை.)', 'நூலை ஆராய்கின்றவன் தாம் கற்ற நூலை மறந்தாலும் மீண்டும் கற்றுக் கொள்ளலாம்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும் என்பது இப்பகுதியின் பொருள்.

பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.
மணக்குடவர் குறிப்புரை: இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று.
பரிதி: ஒழுக்கம் கெட்டால் பிராயச்சித்தம் பண்ணினாலும் போகாது; செய்த தோஷம் அனுபவிக்க வேண்டும் என்றவாறு. [பிராயச்சித்தம் - பாவக்கழிவு; தோஷம் - குறை அல்லது பாவம்]
காலிங்கர்: மற்று அந்தணனது குலப்பண்பு தனது ஆசாரம் குறைபடவே கெடும் என்றவாறு.
பரிமேலழகர்: அந்தணது உயர்ந்த வருணம் தன் ஒழுக்கம் குன்றக் கெடும்.
பரிமேலழகர்: சிறப்புடை வருணத்திற்கு மொழிந்தமையின், இஃது ஏனைய வருணங்கட்கும் கொள்ளப்படும்.

'பிராமணன் ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் கெட்டால் பாவக்கழிவு இல்லை' என்று பரிதியும் 'அந்தணது குலப்பண்பு ஒழுக்கம் குறைவுபடவே கெடும்' என்று காலிங்கரும் 'ஒழுக்கம் குன்ற அந்தணது வருணம் கெடும்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஆனால் அவன் குடிப்பிறப்பு ஒழுக்கம் குறையக் கெட்டுவிடும்', 'ஆனால் ஒழுக்கம் குறைதலால், சிறந்த அவன் குடிப்பிறப்பு அழிந்து போகும்', 'அவன் ஒழுக்கத்திற் குறைவுபட்டானாயின் அவனது குடியின் சிறப்பு அழிந்து படும்', 'ஆனால் மக்கட் பிறப்புக்குரிய நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் அழிவான்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் பார்ப்பான் பிறப்பு கெட்டுவிடும் என்பது பாடலின் பொருள்.
இங்கு சொல்லப்பட்ட பார்ப்பான் யார்?

மறந்தும் ஒழுக்கம் தவறக்கூடாது. ஒழுக்கம் குன்றினால் மனித வாழ்வே சீர்மை கெட்டுப்போய்விடும்.

தான் கற்ற நூலை மறந்தாலும் நூல்ஆராய்கின்றவன் மீண்டும் கற்றுக் கொள்ளலாம். ஆனால் நல்லொழுக்கம் நீங்குமேல் அவன் பிறவியே பொருளற்றதாகிவிடுகிறது.
ஓத்து என்ற சொல் ஆரியர்களின் வேதத்தைக் குறிப்பது என்று பல உரையாளர்கள் கூறினர். தொன்றுதொட்டு ஒருவர்க்கு ஒருவரால் ஓதப்பட்டு வருவதாலும் ஓதி ஓதி உணரும் காரணத்தாலும் வேதத்திற்கு ஓத்து என்னும் பெயர் வழங்கப்படுகின்றது என்பர். பார்ப்பான் என்ற ஒருவகை இனத்தார்க்கு வேதம் ஓதுதல் மிக இன்றியமையாதது; வேதம் ஓதுதலை தமக்கே உரியதென்று அவர்கள் சொல்வர். அது அவர்களுக்கு என்று அவர்களாகவே விதித்துக்கொண்ட அறுவகை தொழில்களில் முதன்மையான ஒன்று (மற்றவை ஓதுவித்தல், வேட்டல், வேட்டுவித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன). அதனால்தான் அவர்கள் வேதியர், மறையவர் எனப் பெயர் கொண்டனர்.
வேதம் ஓதுவதைக் கைவிட்ட பார்ப்பனர்களைச் சிலப்பதிகாரக் காட்சி ஒன்று காட்டுகிறது. கண்ணகியும் கோவலனும் மதுரையை நோக்கிச் செல்லும்போது, மறைநூல்களை ஓதுவதைக் கைவிட்டு வரிப்பாடல்களைப் பாடுவதை மேற்கொண்ட அந்தணர் வாழும் ஊர் ஒன்றைக் கண்டனர் எனக் கூறப்படுகிறது.
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூன் மார்பர் உறைபதிச் சேர்ந்து
(சிலப்பதிகாரம் புறஞ்சேரியிறுத்த காதை 38-39: பொருள்: வரிப் பாட்டைப் பயிலும் கொள்கையோடு பொருந்தி வேதநூற் கொள்கையினின்றும் வழுவுதலையுடைய முப்புரிநூல் அணிந்த மார்பினையுடை யோர் வதியும் பதியைச் சேர்ந்து (வரி - காமம் கண்ணிய இசைப் பாட்டு)). அக்கால மக்கள் வரிப்பாடல்களையே பெரிதும் விரும்பியதனால் பொருள் வருவாய் கருதி அவற்றைப் பாடினர் போலும் (காமாட்சி சீனிவாசன்).
பார்ப்பானை எடுத்துக்காட்டாக்கி 'பார்ப்பனர் ஒருவர் தாம் கற்றுக்கொண்ட கல்வியை மறந்தாலும் அதை அவர் மீண்டும் கற்றுக்கொண்டுவிடலாம் ஆனால் அவருக்கென்று விதிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை மறந்தால், அவருடைய நிலையிலிருந்து தாழ்ந்த நிலைக்குப்போவர்' என்ற கருத்தை சொல்கிறது என்று ஒருசாரார் இக்குறட்பொருளை விளக்குவர். இன்னும் சிலர் பார்ப்பனராவார் வேதம் ஓதுதல், ஓதுவித்தல் என்ற தொழிலையே மேற்கொள்ள வேண்டும். பார்ப்பனக்குரிய பிறப்பொழுக்கம் குன்றியவர்களை பார்ப்பனர் என்று மதிக்கக் கூடாது. பார்ப்பனக்குரியன அல்லாத மற்றத் தொழில்கள் செய்வாராயின் அந்தந்த இனத்திலேயே அவர்களைச் சேர்க்க வேண்டும் என்பதாகக் கூறுவர்.

மற்றொரு சாரார், இங்கு சொல்லப்பட்ட ஓத்து என்ற சொல் வேதத்தைக் குறிக்காது என்றும் அச்சொல்லுக்கு கற்று என்ற நேர்பொருளே கொள்ளவேண்டும் என்பர். 'ஓத்து மறப்பினும்' என்பதற்கு படித்ததை யெல்லாம் மறந்து போனாலும் என்றும். தினந்தினம் தவறாமல் ஓதவேண்டிய நேரங்களில் ஓத மறந்து விட்டாலும் என்றும் இவர்கள் பொருளுரைப்பர்.
பார்ப்பான் என்ற சொல்லுக்கு நூலை ஆராய்பவன் என்றும் ஒரு பொருள் உண்டு. அப்பொருளிலேயே அச்சொல் இப்பாடலில் ஆளப்பட்டது என்பவர்கள் ஓத்து என்பதற்கு கற்று என்றும் பார்ப்பான் என்பதற்கு நூலை ஆராய்பவன் என்று பொருள் கொண்டு நூலை ஆராய்ந்து பார்ப்பான் மறப்பினும் மீட்டும் கற்றுக் கொள்ளலாம்; ஆனால் 'பார்ப்பானது பிறப்பு, ஒழுக்கம் குன்றக் கெடும்' என விளக்கம் செய்வர். ஒழுக்கம் குன்றின் அவனது பிறப்பு -மனிதப் பிறப்பே கெடும் அதாவது வாழ்க்கையே கெடும் என்று இவர்கள் பொருள் உரைப்பர்.
இரா சாரங்கபாணி "வள்ளுவனார் பார்ப்பான் வேதம் ஓதுதலை மறக்கலாகாது என்னும் கருத்துக்குச் சிறப்பளிக்கவில்லை. அதனை மறந்தாலும் மீண்டும் கற்கலாம்; ஆனால் அதனினும் ஒழுக்கமே சிறப்புடையது; அது கெட்டால் மக்கட்பிறப்பே கெடும் என ஒழுக்கத்தின் விழுப்பத்தை இக்குறளில் வலியுறுத்திக் காட்டுவர். வேதம் ஓதுதலினும் ஒழுக்க நெறி நிற்றல் விழுமிது என்பதனை வலியுறுத்துதலால் ஒருவகை இனத்தாரின் கொள்கையை மறுத்துத் தமிழர்க்குரிய ஒழுக்க நெறியை நாட்டியது தெரிகிறது. ‘நல்லா றெரினும் கொளல் தீது’ என்ற குறளும் ஆரியக் கொள்கையைக் குறிப்பான் மறுத்தல் காணலாம். ஒவ்வாத பிறர்தம் கொள்கைகளை மறுத்தல் வள்ளுவர் இயல்பு என்பதனை ‘மழித்தலும் நீட்டலும் வேண்டா’ (280) என்னும் குறளானும் அறியலாம். ‘பார்ப்பான் பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்’ என்பதற்குப் பார்ப்பானது பிறப்புக்குரிய ஒழுக்கம் என வருணாசிரம தன்ம முறையில் பொருள் கொள்ளாமல் பார்ப்பான் பிறப்பு மக்கட்குரிய ஒழுக்கம் குன்றக் கெடும் எனக் கொள்வதே குறள் நெறிக்கு இயல்பாகும்" என்று இக்குறள் பற்றிக் கருத்துரைப்பார். இவ்விளக்கம் சிறப்பாக உள்ளது.

மணக்குடவர் தனது சிறப்புரையில் 'இஃது ஒழுக்கம் கல்வியிலும் வலிதானவாறு கூறிற்று' என்கிறார். இதன் பொருள் 'ஓதிக் கற்கின்ற கல்வியைக் காட்டிலும், ஒழுக்கமே சாலச் சிறந்தது' என்பது. இதுவே இக்குறள் கூறும் செய்தி. ஓதியதை யாரும் மறக்கவே கூடாது; மறந்தால் அதுவும் ஓர் ஒழுக்கக் குறைவாம் என்பதையும் இப்பாடல் உணர்த்துவதாக உள்ளது.

இங்கு சொல்லப்பட்டுள்ள பார்ப்பான் யார்?

வள்ளுவர் இந்த ஒரு குறளில் மட்டும்தான் பார்ப்பான் என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்.
நச்சினார்க்கினியர் கலித்தொகை உரையில் 'வேதாந்தத்தையே பொருள் என்று மேற்கொண்டு பார்ப்பார்' என்று சொல்விளக்கம் கூறுகிறார்.
'பார்ப்பார் என்பது ஆரியப்பார்ப்பனரையும் குறித்தல் இயல்பானது' என்பார் இரா சாரங்கபாணி.
'பார்ப்பான்: பார்த்தான், பார்க்கிறான், பார்ப்பான் எனப் பார்த்தல் தொழிலின், கால அடைவு வழி வந்த சொல்லே பார்ப்பான் என்னும் சொல். அது இந்நாள் கூறுவதுபோல் ஒரு குலப்பெயரன்று; நூல் கற்பார்க்கு வாய்ந்த பெயர் 'ஓதுவார்' என்பது போலப் பொதுமை சுட்டும் பெயரே; 'பொச்சாப்புப் பார்ப்பார் (285) என்பதில் வந்துள்ள 'பார்ப்பார்' என்ன பொருளைத் தருமோ, அதே பொருளையே 'பார்ப்பான்' என்பதும் (134) தரும். நூல் (பொத்தகம்) படிப்பவன், கணியம் பார்ப்பவன், ஏடு பார்ப்பவன், தொடுகுறி பார்ப்பவன் என்பன போல ஆசிரியத் தொழில் பார்ப்பவனைக் குறித்தது' என்பது இளங்குமரன் தரும் விளக்கம்.
ரா பி சேதுப்பிள்ளை 'இக்குறளில் அமைந்திருக்கின்ற பார்ப்பான் என்னும் சொல்லிற்கு வேதியன் என்று உரையாசிரியர் பொருள் கொண்டுள்ளளர். ஆனால் வள்ளுவர் காலத்தில் அந்தணன், பார்ப்பான் என்ற சொற்களெல்லாம், சாதிப் பெயரை உணர்த்தாமல், காரணப் பெயர்களாகவே விளங்கின என்பது மொழிநூல் ஆராய்ச்சியாளர்கள் கருத்து. அழகிய செந்தண்மை பூண்டு ஒழுகிய அறவோன் அந்தணன் என்று அழைக்கப்பட்டாற்போல, நூல்களைப் பார்த்து பரிசீலனை செய்பவர் 'பார்ப்பார்' என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இவ்விரு சொற்களும் ஒரு சாதியைக் குறிக்கும் பெயர்களாய் அமைந்தன. இவ்வுண்மையை மனத்தில் கொண்டு மேற்கூறிய குறளின் பொருளை ஆராய்தல் இன்றியமையாததாகும்' எனக் குறித்துள்ளார்.
'பார்ப்பான்' என்ற சொல்லுக்குக் கற்பவன் என்று வ சுப மாணிக்கமும், நூல்கற்பான் என்று கா சுப்பிரமணியம் பிள்ளையும் நூலை ஆராய்கின்றவன் என்று சி இலக்குவனாரும் நூல்களை ஆராய்ந்து பார்ப்பவன் என்று குழந்தையும் தலைமை வேளாண் மரபுவழி நின்று தமிழ் மந்திரம் ஓதுபவர் எனக் கா அப்பாத்துரையும் பொருள் உரைத்தனர்.
ஆரிய பிராமணர் தம்மைப் பார்ப்பான் என அழைக்கப்படுவதை விரும்புவதில்லை; அதை இழிவு என வெறுக்கின்றனர் என்ற பார்வையும் உள்ளது.

இங்குள்ள 'பார்ப்பான்' என்ற சொல்லுக்கு நூலை ஆராய்கின்றவன் என்பது பொருள்.

கற்றதை மறந்து விட்டாலும், மீண்டுங் கற்றுக் கொள்ளுதல் கூடும்; ஒழுக்கம் தவறினால் கற்பவன் வாழ்வு கெட்டுவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

கற்றலினும் ஒழுக்கமுடைமை மேம்பாடானது.

பொழிப்பு

கற்றதை மறந்தாலும் மீண்டும் படித்துக் கொள்ளலாம்; பார்ப்பான் ஒழுக்கம் தவறினால் பிறப்பு கெட்டுவிடும்.