இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0133



ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:133)

பொழிப்பு (மு வரதராசன்): ஒழுக்கம் உடையவராக வாழ்வதே உயர்ந்த குடிப்பிறப்பின் தன்மையாகும்; ஒழுக்கம் தவறுதல் இழிந்த குடிப்பிறப்பின் தன்மையாகிவிடும்.

மணக்குடவர் உரை: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்; அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.
இது குலங்கெடுமென்றது.

பரிமேலழகர் உரை: ஒழுக்கம் உடைமை குடிமை - எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம் , இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் - அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
(பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.)

வ சுப மாணிக்கம் உரை: விடா ஒழுக்கமே உயர்ந்த குடிப்பிறப்பு; ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்.

பதவுரை: ஒழுக்கம்-(நல்ல) நடத்தை; உடைமை-உடையனாந்தன்மை; குடிமை-நற்குடித் தன்மை, உயர்ந்த குடிப்பிறப்பு; இழுக்கம்-பிழை, தவறுதல்; இழிந்த-தாழ்ந்த; பிறப்பாய்-பிறப்பாகி; விடும்-விடும்.


ஒழுக்கம் உடைமை குடிமை:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒருவன் இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாக உயர் குலத்தனாம்;
பரிதி: ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் அப்படிப் பேணிக் கொண்டு வரவும்;
காலிங்கர்: ஒருவர்க்கு ஒழுக்கமுடைமையாகிய செல்வமே குலப் பண்பாவது; [குலப்பண்பு - குலத்திற்கேற்ற குணம்].
பரிமேலழகர்: எல்லார்க்கும் தத்தம் வருணத்திற்கு ஏற்ற ஒழுக்கம் உடைமை குலனுடைமையாம்;

மணக்குடவர் 'இழிந்த குலத்தானாயினும் ஒழுக்க முடையவனாயின் உயர் குலத்தானாவான்' என்றும் பரிதி 'ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் பேணிக் கொள்ள வேண்டும்' என்றும் காலிங்கர் 'ஒழுக்கச்செல்வமுடைமையே குலப் பண்பு' என்றும் பரிமேலழகர் 'வருணாசிரமங்களுக்கு ஏற்ற ஒழுக்கம் உடைமையே குலனுடைமை' என்றும் உரை செய்தனர். வள்ளுவம் கூறும் அறத்துக்கும் வருணாச்சிரம தர்மத்துக்கும் தொடர்பே இல்லை. எனவே பரிமேலழகர் உரை பொருத்தமில்லை.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', 'உயர்ந்த குலம் என்பதே உயர்ந்த ஒழுக்கத்தினால்தான்', 'ஒழுக்கமுடைமை குடிச்சிறப்பாகும்', 'நல்ஒழுக்கம் உடைமையே நற்குடிப் பிறப்பாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம் என்பது இப்பகுதியின் பொருள்.

இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதனைத் தப்பி ஒழுகுவா னாயின், உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானாயே விடும்.
மணக்குடவர் குறிப்புரை: இது குலங்கெடுமென்றது.
பரிதி: இழுக்கம் பலருக்கும் இகழப்பட்டபடியினாலே அவன் கடையான பிறப்பு என்றவாறு. [கடையான பிறப்பு - இழிபிறப்பு]
காலிங்கர்: மற்று அவர் தமது ஆசாரத்தின்கண் இழுக்கமானது எது? அதுவே இழிந்த பிறப்பாய் விடும் என்றவாறு.
காலிங்கர் குறிப்புரை: அல்லதூஉம் செல்வமும் பிறர்க்கு ஒன்றினை ஈதலும் அற்றாராயினும் அவரைக் குடிப்பிறப்பின்கண் கூட்டிக்கொளல் ஆகும்; குடிப்பிறந்தார் தமது ஆசாரத்தின்கண் வழுவின் தன்குடியில் கூட்டிக்கொளல் அரிது.
பரிமேலழகர்: அவ்வொழுக்கத்தில் தவறுதல் அவ்வருணத்தில் தாழ்ந்த வருணமாய்விடும்.
பரிமேலழகர் குறிப்புரை: பிறந்த வருணத்துள் இழிந்த குலத்தாராயினும் ஒழுக்கம் உடையராக உயர்குலத்தராவார் ஆகலின் 'குடிமையாம்' என்றும், உயர்ந்த வருணத்துப் பிறந்தாராயினும் ஒழுக்கத்தில் தவறத் தாழ்ந்த வருணத்தராவர் ஆகலின் இழிந்த பிறப்பாய் விடும் என்றுங் கூறினார். உள் வழிப்படும் குணத்தினும் இல்வழிப்படும் குற்றம் பெரிது என்றவாறு. பயன் இடையீடு இன்றி எய்துதலின், அவ்விரைவு பற்றி அவ்வேதுவாகிய வினைகளே பயனாக ஓதப்பட்டன.

'ஒழுக்கம் தப்பியவன் உயர்குலத்தினாயினும் இழிகுலத்தானே' என்று மணக்குடவரும் 'ஒழுக்கம் குறைந்தவன் கடையான பிறப்பு' என்று பரிதியும் 'ஒழுக்கம் குன்றினால் குடிப்பிறப்பாளனாகக் கூறவும் முடியாது' என்று காலிங்கரும் 'ஒழுக்கத்தில் தவறியவன் தாழ்ந்த வருணத்தராவர்' என்று பரிமேலழகரும் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் (அஃறிணையாய்) விடும்', 'ஒழுக்கத்தில் தாழ்ந்தால் குலத்திலும் தாழ்ந்தவனாகி விடுகிறான்', 'ஒழுக்கத்தில் தவறுதல் ஒருவனைத் தாழ்ந்த குலத்தினன் ஆக்கிவிடும்', 'அவ்வொழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த குடியாகும் (நல்ல ஒழுக்கமுடையவர் உயர்ந்த சாதியென்றும் தீய ஒழுக்கமுடையவர் தாழ்ந்த சாதியென்றும் கூறப்படுகின்றது)' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

ஒழுக்கத்தில் தவறுதல் தாழ்ந்த குடிப்பிறப்பாக்கிவிடும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்தபிறப்பு ஆக்கிவிடும் என்பது பாடலின் பொருள்.
'இழிந்தபிறப்பு' என்றால் என்ன?

ஒருவனது நல்லொழுக்கம் அவன் நற்குடியைச் சார்ந்தவன் என்பதை அடையாளப்படுத்தும்.

நல்லஒழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது சிறப்பான குடும்பத் தன்மையை உணர்த்தும்; ஒழுக்கம்கெடுதல் அவரைத் தாழ்ந்த குடிப்பிறப்பாக ஆக்கிவிடும்.
ஒழுக்கம் என்னும் சொல் ஒருவரது நடத்தையைக் குறிக்கும். நன்னடத்தையே ஒழுக்கம் என்று சொல்லப்படுவது, நல்லொழுக்கம் மிகுந்தவராய் ஒருவர் வாழ்வது நல்ல குடும்பத்தைச் சேர்ந்தமையை உணர்த்தும். ஒழுக்கமின்மை தாழ்ந்த குடித்தன்மையைச் சொல்லும் என்கிறார் வள்ளுவர். இவ்வாறு நற்குடியனை ஒழுக்கமான குடியிலிருந்து வருபவன் என்றும், இழிந்த குடியனை ஒழுக்கமற்ற குடும்பத்திலிருப்பவன் என்றும் வகைப்படுத்துகிறார் வள்ளுவர்.
'குடி என்னும் சொல் தலைக்கட்டு, குடும்பம், சரவடி (கோத்திரம், குலம், குடிகள் ( நாட்டினம் ) என்னும் ஐவகை மக்கட் கூட்டத்தையுங்குறிக்கும்' என்று கூறுவார் தேவநேயப்பாவாணர். பழம் ஆசிரியர்களும் பின்வந்தவர்களில் பெரும்பான்மையோரும் குடி என்பதற்குக் குலம் என்று பொருள் கொண்டனர். ஆனால் குடி என்பதற்குச் சமுதாயத்தின் அடிப்படை அலகான குடும்பம் என்னும் பொருளே பொருத்தம். குடும்பத்தன்மையே குடிமை என்பது. குடிமை என்பது விளங்கி நிற்கும் குடும்பப்பண்புகளைக் குறிக்கும்.
இழுக்கம் என்ற சொல் பிழை, வழுவுதல், தவறுதல், குற்றம் என்ற பொருள்களில் குறளில் பயன்பட்டு வந்திருக்கிறது. இழுக்கம் என்பது ஒழுக்கத்துக்கு எதிர்ச்சொல்லாக வந்தது; ஒழுக்கத்திலிருந்து வழுவுதலை அதாவது தீயொழுக்கத்தைச் சொல்வது.

மக்கள் தம்முள் ஒருவரோடொருவர் பிணக்கமுறும் வேளைகளில் குடிமையில் உயர்வுதாழ்வு கற்பித்து தகாதனசெய்வர். இக்குறளில் குடிமை என்ற சொல்லுக்கு விளக்கம் தந்து தெளிவுபடுத்துகிறார் வள்ளுவர். குடிச்சிறப்புக்கு அடிப்படை ஒழுக்கமே எனக்கூறியதோடு நில்லாமல் இழுக்கம் இழிந்த பிறப்பாகவும் ஆகிவிடும் என்று அழுத்தம் திருத்தமாகவும் கூறுகிறார். ஒழுக்கமுடைமையே அதாவது நல்ல நடத்தையே ஒருவரது குடியின் உயர்வுக்கும் தாழ்வுக்கும் அளவுகோலாகும் என்பது கருத்து.
ஒழுக்கமாய் இருக்கும்வரை ஒருவருக்கு 'நல்ல குடும்பத்தில் உள்ளவன்' என்ற புகழ் கிடைக்கும். அதுபோல் ஒழுக்கம் கெடும்போது அதனால் உண்டாகும் இழிவும் குடும்பத்தைச் சார்கிறது. தன் குடும்பப் பெருமையை இழக்க யாரும் விரும்பமாட்டார்கள். தன் குடிச்சிறப்பு காக்கப்படவேண்டுமானால் ஒருவன் ஒழுக்கமாக நடக்க வேண்டும்.

வ சுப மாணிக்கம் 'மக்கட்பிறப்பிற் கேற்ற ஒழுக்கமுடைமை குடிமையாம்' என்று குடிமைக்குப் பொருள் கூறினார். 'குடிமை -citizenship. குடிமைக்குரிய நல்லொழுக்கம் பரந்த நாட்டுச் சமுதாயத்துடன் இணக்கமாக வாழ்தல்; நல்லொழுக்கமுடைமையே நாட்டின் உறுப்பாகிய குடிமகனுக்குரிய இலக்கணம்; உரிமை' என்பார் குன்றக்குடி அடிகளார்.
இக்குறளுக்கான பரிதி உரை 'ஒழுக்கமுடைமையைப் பேணி வைக்கிறாப்போலே ஒழுக்கத்தையும் அப்படிப் பேணிக் கொண்டு வரவும்.' என்கிறது. இது ஒழுக்கமுடைமை வேறு ஒழுக்கம் வேறு என்று எண்ணச் செய்கிறது. இவ்வுரையை விளக்கும்போது தண்டபாணி தேசிகர் 'ஒழுக்கம் உடைமையும் ஒழுக்கமும் ஒரே நோக்குடையன அல்ல. ஒழுக்கம் என்பது பெரிதும் செயல்தளம் சார்ந்தது. தனிமனித வாழ்வுக்கும் சமுதாய வாழ்வுக்கும் உரிய தொடர்பினை அது காட்டுகிறது. ஒழுக்கம் உடைமை மனப்பண்பைக் காட்டுகிறது' என்னும் குறிப்புரை தருகிறார். அதாவது ஒழுக்கமுடைமை மனப்பண்பு, ஒழுக்கம் செயற்பண்பு என்றவாறு.

'இழிந்தபிறப்பு' என்றால் என்ன?

இழிந்த பிறப்பு என்ற தொடர் இழிவான பிறப்பு என்ற பொருள் தருவது.
ஒருவரது ஒழுக்கவாழ்வுதான் அவர் வாழுங்காலத்தில் சிறப்பு/இழிவு சேர்ப்பதற்குக் காரணமாக அமைவது. அவருடைய குடும்பப் பெருமையும் அவரது நற்பண்புகளாலும், நன்னடத்தைகளாலும் அறியப்படும். ஒவ்வொருவரும் அவரவர் வாழ்நாளில் அப்பிறப்பின் பெருமையைக் காப்பாற்றி, தம்முடைய வழித்தோன்றல்களுக்கு விட்டுச் செல்லும் பொறுப்பில் இருக்கிறார்கள். நற்குடிப்பிறந்தார் என்றறியப்பட நன்னடத்தையராக இருத்தல் வேண்டும். அது தவறும்போது, தானும் கீழ்க்குடிக்குத் தன்னைத் தள்ளிக்கொண்டுபோய், தன் வழிமுறைக்கும் அவ்விழுக்கினை விட்டு செல்வராவர்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு பண்பு இருக்கும். அப்பண்பிலிருந்து அக்குடும்பத்துக்கான ஒழுக்கம் உருவாகும். ஓழுக்கமுடைமையே நல்ல குடிப்பிறப்பின் அடையாளமாகக் கருதப்படும். ஒருவனது தனிப்பட்ட ஒழுக்கத்தின்பால் ஏற்படும் களங்கம் அவன் பிறந்து வாழும் வாழ்க்கைக்கு இழுக்கையும் ஏற்படுத்தும். குடிப்பழி நாணுவோர் ஒழுக்கத்திலிருந்து வழுவமாட்டார். ஒருவன் ஒழுங்கீனமாக நடந்தால் அவனை 'என்ன பிறப்போ! இப்படி இருக்கிறானே!' என்று திட்டுவர். அதுபோன்றதுதான் 'இழிபிறப்பாய்விடும்' என்று சொல்லப்பட்டதும். அது இனம் சார்ந்த பிறப்பு பற்றியது அல்ல.
ஒழுக்கமும் வாய்மையும் நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார் (குடிமை 952 பொருள்: நற்குடியில் பிறந்தவர் ஒழுக்கமும் வாய்மையும் நாணமும் ஆகிய இம் மூன்றிலிருந்தும் தவறார்) என்று பின்வரும் அதிகாரத்துக் குறள் ஒன்றிலும் ஒழுக்கத்துக்கும் குடிப்பிறப்பும் உள்ள தொடர்பு கூறப்படும். வ சுப மாணிக்கம் 'ஒழுக்கத்தை விடுவது விலங்குப் பிறப்பு அதாவது ஒழுக்கத்தினின்றும் வழுவுதல் மக்கட்பிறப்பில்லாத விலங்கு முதலிய இழிந்த பிறப்பாய்க் கருதி இகழப்படும்; மண்ணோடியைந்த மாந்தரனையர்.... (குறள் 576), விலங்கொடு மக்களனையர்..... (குறள் 410) என்ற குறள்களான் இழிந்த பிறப்புச் சுட்டப்படுதல் காண்க; ஒழுக்கம் இல்லாதாரை அஃறிணைப்படுத்திக் கூறப்பட்டது' என உரைத்தார். ஒழுக்கத்தின் வழுவுதல் இழிபிறப்பாய் அதாவது அஃறிணையாய் விடும் எனப் பாடல் அமைந்தது.

பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் என்ற கருத்துடைய வள்ளுவர் இழிந்த பிறப்பு என்கிறாரே இங்கு? அப்படியென்றால் பிறப்பிலே இழிவு/உயர்வு உண்டுதானே? என்று சிலர் ஐயவினா எழுப்புகின்றனர்.
பிறவி என்ற சொல்லுக்கு பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் (கடவுள்வாழ்த்து 10) என்ற பாடலில் உள்ளதுபோல் பிறப்பு-இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் உள்ள உயிர் வாழ்க்கை என்று பொருள் கொள்வது தெளிவு பயக்கும். ஒருவன் ஒழுக்க இழுக்கமான வாழ்க்கை மேற்கொண்டால், அது அவனது பிறப்பையே தாழ்மைப்படுத்தி இழிந்த பிறப்பாய் ஆக்கி விடும்; அதாவது அவனது வாழ்வு இழிந்ததாகிவிடும்.
'இழிந்தபிறப்பு' என்பது இழிவான வாழ்க்கை எனப்படும்.

ஒழுக்கமுடைமை நற்குடித் தன்மையாம்; ஒழுக்கத்தில் தவறுதல் இழிந்தபிறப்பு ஆக்கிவிடும் என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

ஒழுக்கமுடைமை ஒருவனது பிறப்புக்கு மேன்மை தரும்.

பொழிப்பு

ஒழுக்கம் உடைமை நற்குடித் தன்மையாகும்; ஒழுக்கத்தின் தவறுதல் தாழ்ந்த குடிப்பிறப்பாக்கிவிடும்.