இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0138நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:138)

பொழிப்பு: நல்லொழுக்கம் இன்பமான நல்வாழ்க்கைக்குக் காரணமாக இருக்கும்; தீயொழுக்கம் எப்போதும் துன்பத்தைக் கொடுக்கும்.

மணக்குடவர் உரை: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.

பரிமேலழகர் உரை: நல் ஒழுக்கம் நன்றிக்கு வித்து ஆகும். - ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும் - தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
('நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.)

இரா இளங்குமரனார் உரை: நன்மை என்னும் விளைவு பெறுவதற்காக விதைக்கப்படும் விதை நல்லொழுக்கமாகும். தீய ஒழுக்கமோ, அப்பொழுதே அன்றி எப்பொழுதும் துன்பமே தரும்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
நல்லொழுக்கம் நன்றிக்கு வித்தாகும்; தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்.


நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்:
பதவுரை: நன்றிக்கு-நன்மைக்கு; வித்தாகும்-காரணமாகும்; நல்லொழுக்கம்-நல்ல ஒழுக்கம்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்;
பரிப்பெருமாள்: முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்;
பரிதி: நல்லொழுக்கம் இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதையாம்;
காலிங்கர்: தனக்கு எல்லா நன்மைக்கும் துணைக்காரணமாகும் அது யாதோ எனின், நன்னெறியுடைய சான்றோரும் நூல்களும் நன்று என்று அவரவர்க்கு அடுப்பதாகச் சொன்னவற்றின் சாரமானது;
பரிமேலழகர்: ஒருவனுக்கு நல் ஒழுக்கம் அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும்;

நல்லொழுக்கம் முத்திக்கு விதையாகும் என்று மணக்குடவர்/பரிப்பெருமாள் கூற பரிதி இம்மை மறுமைப் பாக்கியத்துக்கு விதை என்றார். காலிங்கர் எல்லா நன்மைக்கும் துணைக்காரணமாகும் என்றார். அறத்திற்குக் காரணமாய் இருமையினும் இன்பம் பயக்கும் என்று பரிமேலழகர் இப்பகுதிக்கு உரை நல்கினார்.

இன்றைய ஆசிரியர்கள் 'நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து', 'நல்லொழுக்கம் நன்மைக்குக் காரணமாய் இன்பம் தரும்', 'நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னால் நன்மைகள் முளைப்பதற்கு அது விதை தெளிப்பதாகும்', 'நல் ஒழுக்கம் நன்மைக்குக் காரணமாகும்', என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து என்பது இப்பகுதியின் பொருள்.

தீயொழுக்கம் என்றும் இடும்பை தரும்:
பதவுரை: தீயொழுக்கம்-கொடிய ஒழுக்கம்; என்றும்-எப்போதும்; இடும்பை-துன்பம்; தரும்-பயக்கும்.

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
மணக்குடவர் குறிப்புரை: தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
பரிப்பெருமாள்: தீயவொழுக்கம் என்றும் இடும்பையைத் தரும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: தீயவொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தருமென்றவாறு. என்றும்- இருமையின்கண்ணுமென்றவாறு.
பரிதி: பொல்லா ஒழுக்கம் இம்மை மறுமைக்குத் தரித்திரம் காட்டும் என்றவாறு.
காலிங்கர்: மற்று அதனான், அதனின் நீங்கிய ஒழுக்கம் எஞ்ஞான்றும் தான் அநுபவிக்க இடும்பையைக் கொடுக்கும் என்றவாறு.
பரிமேலழகர்: தீய ஒழுக்கம் பாவத்திற்குக் காரணமாய் இருமையினும் துன்பம் பயக்கும்.
பரிமேலழகர் குறிப்புரை: 'நன்றிக்கு வித்தாகும்' என்றதனால் தீயொழுக்கம் பாவத்திற்குக் காரணமாதலும் 'இடும்பை தரும்' என்றதனால் நல் ஒழுக்கம் இன்பம் தருதலும் பெற்றாம், ஒன்று நின்றே ஏனையதை முடிக்கும் ஆகலின். இதனான் பின்விளைவு கூறப்பட்டது.

தீய ஒழுக்கம் என்றும்/ இருமையினும் துன்பம் பயக்கும் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'தீயொழுக்கத்தால் எந்நாளும் துன்பமே', 'தீயொழுக்கம் தீமைக்குக் காரணமாய்த் துன்பம் தரும்', 'ஆனால் தீய ஒழுக்கத்தால் உடனேயும் துன்பமுண்டாகும். பின்னாலும் துன்பம் வரும்', 'கெட்ட ஒழுக்கம் எப்பொழுதும் துன்பத்தையே தரும்' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தீயொழுக்கம் எந்நாளும் துன்பம் தரும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
நன்னடத்தையினால் பின்னால் நன்மைகள் விளையும். கெட்ட ஒழுக்கம் எப்போதும் தீமையே தரும்.

நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து; தீயொழுக்கம் எந்நாளும் துன்பம் தரும் என்பது பாடலின் பொருள்.
வித்து என்ற சொல்லாட்சி குறிப்பதென்ன?

நன்றிக்கு என்ற சொல்லுக்கு இங்கு நன்மைக்கு என்பது பொருள்.
நல்லொழுக்கம் என்ற சொல் நல்ல நடத்தை என்ற பொருள் தரும்.
தீயொழுக்கம் என்றது தீய ஒழுக்கம் குறித்தது.
என்றும் என்ற சொல்லுக்கு எந்நாளும் அல்லது எப்போதும் என்று பொருள்.
இடும்பை தரும் என்ற தொடர் துன்பத்தைக் கொடுக்கும் என்ற பொருளது.

நன்மைகள் விளைய நல்லொழுக்கம் விதை ஆகிறது. தீயொழுக்கம் எப்போதுமே துன்பங்களையே தரும்.

மக்கள் ஒழுக்கத்தால் மேன்மை அடைவார்கள் என்றும் ஒழுக்கக் கேட்டால் பெரும்பழி அடைவார்கள் என்றும் வள்ளுவர் கூறியிருந்தாலும் உண்மையில் ஒழுக்கம் உடையவர்களை யாரும் தெரிந்துகொள்வதில்லை; செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் மேன்மைக்கும் வறுமையாளர்கள் பழிக்கும் காரணமாக விளங்குவதாக பலர் உணர்கிறார்கள். அவர்களைப் பார்த்து வள்ளுவர் சொல்கிறார்: 'நல்லொழுக்கத்தால் நன்மை உடனே கிடைக்காவிட்டாலும் அது பின்னால் வரப்போகிற நன்மைகளுக்கெல்லாம் வித்தாகிறது. தீயொழுக்கம் எப்போதுமே இடும்பையே தரும். எனவே நல்லொழுக்கத்தைக் கைவிடாதீர்கள்' என்று.
நல்லொழுக்கம் பின்விளையும் நன்மைக்கெல்லாம் விதையாகும்; நல்ல நடத்தையினால் உடனே நன்மைகள் கிடைக்காவிட்டாலும் பின்னாட்களில் அதிலிருந்து நன்மைகளே விளையும். அமைதியான வாழ்வு, நோயற்ற உடல்நலம், சமூகத்தில் மேன்மையான இடம், இவற்றால் உண்டாகும் இன்பம். போன்றவை நல்லொழுக்கத்தால் உண்டாகும் நன்மைகளாகலாம். ஆனால் கெட்ட நடத்தை உடனேயும் பிற்காலத்திலும் தொடர்ச்சியாகத் துன்பமே உண்டாவ்தற்கும் காரணமாகும். தீயொழுக்கத்தால் இன்பம் ஏற்படுவது போல் தோன்றினாலும் அது மெய்யானதல்ல; அது தொடர்வதில்லை. அது எக்காலத்திலும் துன்பத்தையே தரும்.

வித்து என்ற சொல்லாட்சி குறிப்பதென்ன?

வித்து என்றதற்கு விதை, காரணம், துணைக்காரணம், உயிர்விதை எனப் பொருள் கூறினர்.
விதையை உவமமாகக் கொண்டு இக்குறள் கூறும் செய்தியை விளக்கலாம். விதை தெளிக்கிறவனுக்குத் தெளிக்கிற காலத்திலே அவனுக்குதவி செய்யாது போனாலும் அறுவடை காலத்தில் நல்ல பலன் கொடுக்குமாற்போல, நன்னடைத்தை உடனடியாக நன்மை செய்யாவிட்டாலும் பின்னாளில் நல்ல பயனைக் கொடுக்கவே செய்யும்.

நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து; தீயொழுக்கம் எந்நாளும் துன்பம் தரும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

இன்று கடைப்பிடிக்கும் ஒழுக்கமுடைமை வரும் நாளில் பயன் தரும்.

பொழிப்பு

நல்லொழுக்கம் நன்மைக்கெல்லாம் வித்து; தீயொழுக்கம் எந்நாளும் துன்பம் தரும்.