இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 0139



ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே தீய
வழுக்கியும் வாயால் சொலல்

(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:139)

பொழிப்பு (மு வரதராசன்): தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம், ஒழுக்கம் உடையவர்க்குப் பொருந்தாததாகும்

மணக்குடவர் உரை: தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்க முடையார்க்கு இயலாது.

பரிமேலழகர் உரை: வழுக்கியும் தீய வாயால் சொலல் - மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்; ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லா - ஒழுக்கம் உடையவர்க்கு முடியா.
(தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொலல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.)

தமிழண்ணல் உரை: ஒழுக்கமுடையவர்களுக்குத் தீய சொற்களை மறந்தும் வாய் தவறிச் சொல்லுதல் இயலாது.
பழக்கம் காரணமாக வாய்க்கு அது இயலாதாம். கூடாது என்னாமல் இயலாது என்பதன் காரணம் தீயசொற்களைச் சொல்ல முயன்றாலும் நல்லதைப் பேசிப் பழகிய வாய்க்கு அது இயலாது என்பதாலேயாம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
வழுக்கியும் வாயால் தீய சொலல் ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே.

பதவுரை: ஒழுக்கம்-நன்னடத்தை; உடையவர்க்கு-பெற்றுள்ளவருக்கு; ஒல்லாவே-முடியாதே அல்லது பொருந்தாதே; தீய-கொடிய, தீமையானவை ; வழுக்கியும்-தவறியும்; வாயால்-வாயினால்; சொலல்-சொல்லுதல்.


ஒழுக்கம் உடையவர்க்கு ஒல்லாவே:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஒழுக்க முடையார்க்கு இயலாது;
பரிதி: ஒழுக்கமுடையார்க்கு;
காலிங்கர்: ஒழுக்கமாகிய சாரத்தினை உடையவர்க்கு இயலாவே;
பரிமேலழகர்: ஒழுக்கம் உடையவர்க்கு முடியா;

ஒழுக்கம் உடையவர்க்கு முடியா என்றபடி பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'என்றும் ஒழுக்கம் உடையார்', 'ஒழுக்கமுடையவர்களுக்கு இயலாது', 'நல்லொழுக்கத்தை விரும்புகிறவர்கள்', 'நல் ஒழுக்கம் உடையவர்க்கு' என்ற பொருளில் இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஒழுக்கம் உடையவர்க்கு இயலாது என்பது இப்பகுதியின் பொருள்.

தீய வழுக்கியும் வாயால் சொலல்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் தம்வாயாற் சொல்லுதல்.
பரிதி: கனவிலும் தீமையான வார்த்தை பிறவாது.
காலிங்கர்: தீயனவாகிய புன்சொற்களை உரை தவறியும் தமதுவாயால் சொல்லுதல் என்றவாறு. [புன்சொற்கள் - இழிந்த சொற்கள்]
பரிமேலழகர்: மறந்தும் தீய சொற்களைத் தம் வாயால் சொல்லும் தொழில்கள்.
பரிமேலழகர் குறிப்புரை: தீய சொற்களாவன: பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் முதலியனவும், வருணத்திற்கு உரிய அல்லனவும் ஆம். அவற்றது பன்மையால், சொல்லுதல் தொழில் பலவாயின. சொலல் சாதியொருமை. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார், 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு, இதனை வடநூலார் 'தாற்பரியம்' என்ப.

தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும்/தவறியும் தம்வாயாற் சொல்லுதல் என்றபடி பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர். பரிதி வழுக்கியும் என்பதற்குக் கனவிலும் என்று பொருள் கொண்டார்.

இன்றைய ஆசிரியர்கள் 'வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்றா', 'தீமை தரும் சொற்களை மறந்தும் தம் வாயால் சொல்லுதல்', 'தீய ஒழுக்கத்தைச் சேர்ந்த பேச்சுக்களை வாய் தவறிகூடப் பேச மாட்டார்கள்', 'தீய சொற்களை மறந்தும் தம் வாயால் சொல்லுதல் பொருந்தா' என்றபடி இப்பகுதிக்கு பொருள் உரைத்தனர்.

தீய சொற்களைத் தவறியும் தம்வாயாற் சொல்லுதல் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
தீய சொற்களை வழுக்கியும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாது என்பது பாடலின் பொருள்.
'வழுக்கியும்' என்பதன் பொருள் என்ன?

ஒழுக்கமுடையவர்களுக்குத் தீய சொற்கள் பேசவராது.

நல்லொழுக்கம் உடையவர்க்குத் தீய சொற்களைத் தவறியும் சொல்வது இயலாதது.
ஒழுக்கம் என்பது மறந்தும் மற்றவர்களுக்கு எவ்வகையினும் தீமை ஏதும் விளைவிக்காதிருத்தலே ஆகும். இது ஒருவர் பேசும் பேச்சுக்களுக்கும் பொருந்தும். நெஞ்சிற் கிடக்கும் சிந்தனை-உணர்வுகளுக்கு ஏற்பவே சொற்கள் அமையும். உள்ளத்தில் நல்லெண்ணம் இருப்பின் சொற்களும் நல்லனவாக அமையும். ஆதலால், ஒழுக்கம் என்பதை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டுமானால் சிந்தனை, சொல், செயல் அனைத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். ஒழுக்கத்திலே பயிற்சி பெற்று அது இயல்பாக அமைந்துவிட்ட பண்புள்ளவர்களுக்குத் தம்மையறியாமல் தவறியும்- நாக்குத் தவறியோ அல்லது வாய் குழறியோ- தீயனவாகிய புன்சொற்களை உரைத்தல் இயலாது. அவர்கள் முயன்றாலும் அவர்களால் சொல்ல முடியாது. அது அவர்கள் தம் ஒழுக்கப் பயிற்சியால் உண்டானது. அப்படி அவர்கள் தவறிச் சொன்னாலும் அவை பிறர்க்கு நன்மையை உண்டாக்கும் சொற்களாகவே அமையும். தீய சொற்களாவன: வசைச்சொற்கள், இழிந்த சொற்கள், கோள்மூட்டும்சொற்கள், பிறர்க்குத் தீங்கு பயக்கும் பொய் போன்றன.
மனத்தை அளந்தறிவதற்கு வாய்ச்சொல் ஒரு கருவியாக உள்ளது. வாயில் பிறக்கும் சொற்களின் நன்மை தீமையைக் கொண்டு ஒருவனுடைய ஒழுக்கம் இன்னதென்று அறியலாம். ஒழுக்கமுடைய நன்மக்கள், தவறியும் தீய சொற்களை வாயால் சொல்ல முடியாது. தீய சொற்கள் ஒருவரது வாயிலிருந்து வருவதற்கான வாய்ப்பே இல்லை என்னும்போது நல்லொழுக்கம் அவரது ஆளுமையை எந்த அளவுக்கு செம்மைப்படுத்தி இருக்கிறது என்பதை உணரலாம். ஒழுக்கமில்லாதவர்கள் ஒரு சிறுது மெலிதாகச் சீண்டினாலே அவர்களின் உள்ளியல்பு வெளிப்பட்டு தீய சொற்களால் சுடுவர். சிலரிடம் மற்ற நற்பண்புகள் நிறைய இருந்தாலும், பேசும்போது, மற்றவர்களைக் காயப்படுத்தும் வகையில் வன்சொற்களை அறிந்தோ அறியாமலோ பயன்படுத்துவர். மறந்தும் கூட சுடுசொல் பேசக்கூடாது; அதுவே ஒழுக்கமுடையாரின் தன்மை என்கிறது குறள். பேச்சில் மென்மையும் இனிமையுமாகப் பேச ஒழுக்கமுடையார்க்கு மட்டுமே இயலும்.
ஒல்லா என்பதற்கு முடியா என்பதுதான் நேர்பொருள். சிலர் பொருந்தா என்ற பொருள் கொண்டும் உரை கூறினர். இது தீய சொற்கள் பேசுதல் ஒழுக்கமுடையோர்க்கு அழகல்ல; அது பொருந்தாது என்ற பொருள் தரும். இதுவும் சிறப்பாகவே உள்ளது.

சொல்வது என்பதே வாயால் கூறுவதைத்தான் குறிக்கும். 'வாயால்' என்று சேர்த்துச் சொன்னது ஒரு தேவையற்ற மிகைச்சொல்லாகவே இக்குறளில் இருக்கிறது. சொல் எனவே அமைந்திருக்க வாயால் என வேண்டாது கூறினார்; 'நல்ல சொற்கள் பயின்றது' எனத் தாம் வேண்டியதன் சிறப்பு முடித்தற்கு என இம்மிகையை பரிமேலழகர் விளக்குவார்.

'வழுக்கியும்' என்பதன் பொருள் என்ன?

வழுக்கியும் என்ற சொல்லுக்கு மறந்தும், கனவினும், உரை தவறியும், வாய்தவறியாயினும், மறந்தாற்போலக்கூட, வாய்தவறிக்கூட, தம்மையறியாமல் தவறியும் தப்பித்தவறிக்கூட, தவறிப் போய்க்கூட என்று உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

பிறர் அறிதல் கூடாது என்று மறைத்த நிகழ்ச்சிகளும் கனவில் வெளிவரக்கூடும். ஆதலால் 'வழுக்கியும்-கனவிலும்' என்றார் பரிதியார். மறந்தும் என்ற உரையே பலர் கண்டது. வாய் தவறியாயினும், மறந்தாற்போல என்ற உரைகள் உலகியல் வழக்கான உண்மையுரைகள் (தண்டபாணி தேசிகர்). வாயாற் சொலல் என வள்ளுவர் கூறியதற்கேற்ப உரை தவறியும் என்ற பொருள் இயைபுடைத்தாய் உள்ளது.

'வழுக்கியும்' என்பதற்குத் தவறியும் என்பது பொருள்.

தீய சொற்களைத் தவறியும் தம்வாயாற் சொல்லுதல் ஒழுக்கம் உடையவர்க்கு இயலாது என்பது இக்குறட்கருத்து.



அதிகார இயைபு

புன்சொற்கள் பேசாதிருத்தல் சிறந்த ஒழுக்கமுடைமை.

பொழிப்பு

ஒழுக்கம் உடையார் வாயிலிருந்து தவறியும் தீய சொற்கள் தோன்ற முடியாது.