இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1330ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்குஇன்பம்
கூடி முயங்கப் பெறின்

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1330)

பொழிப்பு (மு வரதராசன்): காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதல் ஆகும்; ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால் அந்த ஊடலுக்கு இன்பமாகும்.மணக்குடவர் உரை: காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம்.
இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது) காமத்திற்கு இன்பம் ஊடுதல் - காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின் - அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.
ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க.

வ சுப மாணிக்கம் உரை: காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்; கூடித் தழுவுவதே அதற்குப் பேரின்பம்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
காமத்திற்கு இன்பம் ஊடுதல் அதற்கு இன்பம் கூடி முயங்கப்பெறின்.

பதவுரை: ஊடுதல்-புலத்தல்; காமத்திற்கு-காமநுகர்ச்சிக்கு; இன்பம்-மகிழ்ச்சி; அதற்கு-அதனுக்கு(ஊடலுக்கு); இன்பம்-பேரின்பம்; கூடி-ஒத்த காம இன்பம் உண்டாகி. தம்முள் கூடி எனவும் பொருள் கொள்வர்; முயங்க-தழுவ; பெறின்-அடைந்தால்.


ஊடுதல் காமத்திற்கு இன்பம்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்;
பரிப்பெருமாள்: காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்;
காலிங்கர்: காமத்திற்கு ஊடுதலே மிகவும் இன்பம் ஆம்;
பரிமேலழகர்: (இதுவும் அது) காமநுகர்ச்சிக்கு இன்பமாவது அதனை நுகர்தற்குரியராவார் ஆராமைபற்றித் தம்முள் ஊடுதல்; [ஆராமை - தணியாமை]

'காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'காமவுணர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்', 'காமநுகர்ச்சிக்கு இன்பமாவது காதலர் தம்முள் ஊடுதலாகும்', 'காமத்துக்கு இன்பம் தருவதே பிரிந்திருப்பதுதான்', 'பிணக்கம் காதன்மிகுதற் கேதுவாய் இன்பந் தருவது' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

காமத்திற்கு இன்பமாவது ஊடுதல் ஆகும் என்பது இப்பகுதியின் பொருள்.

அதற்குஇன்பம் கூடி முயங்கப் பெறின்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம்.
மணக்குடவர் குறிப்புரை: இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
பரிப்பெருமாள்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அவ்வூடுதற்கு இன்பமாம்.
பரிப்பெருமாள் குறிப்புரை: இது யாம் பெற்றேம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது.
காலிங்கர்: அவ்வூடுதற்கு இன்பமாவது அதன்பின் கூடிக் கலக்கப் பெற்றால் என்றவாறு.
பரிமேலழகர்: அவ்வூடுதற்கு இன்பமாவது அதனை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், அம்முயக்கம்.
பரிமேலழகர் குறிப்புரை: கூடுதல் - ஒத்த அளவினராதல். முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான். 'அவ்விரண்டு இன்பமும் யான் பெற்றேன்' என்பதாம்.
ஈண்டுப் பிரிவினை வடநூல் மதம் பற்றிச் செலவு, ஆற்றாமை, விதுப்பு, புலவி என நால்வகைத்தாக்கிக் கூறினார். அவற்றுள் செலவு பிரிவாற்றாமையுள்ளும்; ஆற்றாமை படர் மெலிந்திரங்கல் முதல் நிறையழிதல் ஈறாயவற்றுள்ளும்; விதுப்பு அவர்வயின் விதும்பல் முதல் புணர்ச்சி விதும்பல் ஈறாயவற்றுள்ளும்; புலவி நெஞ்சோடு புலத்தல் முதல் ஊடலுவகை ஈறாயவற்றுள்ளும் கண்டுகொள்க. அஃதேல், வட நூலார் இவற்றுடனே சாபத்தினானாய நீக்கத்தினையும் கூட்டிப் பிரிவினை ஐவகைத்து என்றாரால் எனின், அஃது அறம் பொருள் இன்பம் என்னும் பயன்களுள் ஒன்றுபற்றிய பிரிவு அன்மையானும், முனிவராணையான் ஒரு காலத்து ஓர் குற்றத்துளதாவதல்லது உலக இயல்பாய் வாராமையானும் ஈண்டு ஒழிக்கப்பட்டது என்க. [ஒத்த அளவினராதல் - காம நுகர்ச்சிக்கு உரியாராவார் தம்முள் அந்நுகர்ச்சியில் ஒத்த அளவினராயிருத்தல்]

'அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அவ்வூடுதற்கு இன்பமாம்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'கூடித் தழுவுவதே அதற்குப் பேரின்பம்', 'ஊடலை நீக்கித் தம்முள் கூடி முயங்கப் பெற்றால் அம்முயக்கம் ஊடுதற்கு இன்பமாகும்', 'அந்தப் பிரிந்திருப்பதற்கு இன்பம் தருவது (காதலன் காதலி இருவருக்கும்) (ஒத்த காம உணர்ச்சி) உண்டாகியபின் புணர்ந்தால்தான்', 'பிணக்கந் தீர்ந்து கூடப்பெற்றால் அது காதலை நிறைவேற்றும் இன்பமாகும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அவ்வூடுதற்கு இன்பமாம் கூடுதலைப் பெறுதல் என்பது இப்பகுதியின் பொருள்.நிறையுரை:
காமத்திற்கு இன்பமாவது ஊடுதல் ஆகும்; அவ்வூடுதற்கு இன்பமாம் கூடி முயங்கப் பெறின் என்பது பாடலின் பொருள்.
'கூடி முயங்கப் பெறின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

ஊடிக் கூடுவதே இன்பத்தில் இன்பம்.

ஊடலின்பத்திற்கு இன்பம் சேர்ப்பது கூடல் இன்பம்.
காட்சிப் பின்புலம்:
தொழில் காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் திரும்பியுள்ளான். அவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் தலைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பிணக்கம் கொண்டவளாகக் காட்டிக் கொண்டிருக்கிறாள். அவளே 'அவரிடம் ஒரு தவறும் இ்ல்லையாயினும், ஊடலால் அவருடைய முழு அன்பைப் பெற முடிகிறது; அதனால்தான் ஊடுகிறேன்' என்று தன்னிலை விளக்கமும் தருகிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறுசண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட மேலுலகம் (சொர்க்கலோக) இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் உராசிய அச்சிறுகணத்தில், ஊடாமல் கூடுவதில்லை என்ற அவளது மனஉறுதி காமநோயின் தாக்கத்தால் உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள்.
தலைவி மனநிலை இப்படியிருக்க காதலன் எப்படி உள்ளான்? தழுவச் சென்ற அவனிடமிருந்து அவள் தள்ளிச்சென்றாள் என்றாலும் அவளுடனான சிறுதீண்டலுமே அவனுக்கு இன்பமாயிருந்தது என்கிறான் அவன். முன் உண்டது செரித்தபின் அடுத்த உணவு உண்பது இனிமையாவதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் என நினைக்கிறான். அவள் என்னைத் தொடவிடாமல் தள்ளிப் போவதால் நான் தோற்றேனா? யார் வென்றார் யார் தோற்றார் என்பதைக் கூடுதலின் போது தெரிந்துகொள்வோம் நாங்கள். நெற்றி வியர்க்க அவளைக் கூடி இன்பவெற்றி பெறுவேனா? என அவன் எண்ண ஓட்டங்கள் தொடர்கின்றன. கூடல் இன்பம் பெருகுமாறு ஊடல் தொடரட்டும்! அதற்குத் துணைசெய்ய இரவே நீள்க! என இராப்பொழுதை வேண்டிக் கொண்டிருக்கிறான்.

இக்காட்சி:
கணவன் -மனைவியிடை பொய்யான அல்லது மெய்யான பிணக்கம் தோன்றுவது அவர்களுக்குள்ள காதல் மிகுவதற்கு ஏதுவாகி மிக்கமகிழ்ச்சி கொடுக்கும். ஊடல் காமத்தை ஈர்ப்புள்ளதாக ஆக்குகிறது. சேர்க்கைக்களிப்பு அதை இன்னும் இனிமையாக்குகிறது என்கிறது பாடல். ஊடலுக்குப் பின் அவர்கள் கூடித் தழுவுதலையும் பெற்றால், அது, ஊடலுக்கு மிகுந்த இன்பமாகும். காம இன்பம் என்பது ஊடுதலுவகை. கூடுதல் ஆகிய இரண்டும் குறைவற நிறைவேறுவது. காதல் இன்பத்தை ஊடலிலும் ஊடல் இன்பத்தைக் கூடலிலும் காணலாம். காதலர் ஒருவருக்கொருவர் பிணக்கம் கொண்டு இருப்பது ஊடல் எனப்படும். ஊடற்பூசல் கொள்வதே ஒரு இனிமையான அனுபவம்தான். பின் இருவரும் கூடிக் களிப்பதற்கும் அவ்வூடல் பெரிதும் துணை செய்யக் கூடியதுமாம். ஊடல் காமத்தை இனிமையாக ஆக்குகிறது. அதுதான் காதல் வாழ்க்கையைச் சுவைப்படுத்துகிறது. கூடுதல் அதை மேலும் இன்பம் உடையதாக்குகிறது. ஊடல் முடிவுற்று ஒத்தகாம நுகர்ச்சி அளவினராக காதல் கொண்டவர்களது புணர்ச்சி நிகழவேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் ஊடலின் பயனைப் பெற்று மிகுந்த இன்பம் அடைவர்.
காமஇன்பம் சிறுசண்டையால் சிறக்கும் என்பது வள்ளுவரின் திடமான கருத்து. காமத்திற்கு ஊடலும் கூடலும் இன்றியமையாதன.

'காமத்திற்கு இன்பம்' என்ற தொடர் காமத்தினையும் இன்பத்தினையும் வேறுபடுத்துகின்றது. காமம் என்பது காதல் அன்பு. அதன் பயன் இன்பம். இன்னொருவகையில் சொல்வதானால் காமம் காரணம்; இன்பம் காமத்துய்ப்பின் பயன்.
'காமத்திற்கு இன்பம்' என்றதைத் தொடர்ந்து வரும் 'அதற்கின்பம்’ என்பது எதைக் குறிக்கிறது? 'அதற்கின்பம்' என்பதற்கு ஊடுதற்கு, காமவுணர்ச்சிக்கு, காதலை நிறைவேற்றும் இன்பம், அதனினும் உயர்ந்த இன்பம் என்றவாறு பொருள் கூறினர். அதற்கு என்ற சொல்லுக்கு ஊடுதற்கு என்று பொருள் கொள்வதே பொருத்தம். அதாவது 'அதற்கின்பம்' என்பது 'ஊடுதற்கு இன்பம்' எனப் பொருள்படும்.

மணக்குடவர், பரிப்பெருமாள், காலிங்கர் ஆகிய மூன்று தொல்லாசிரியர்களும் புலத்தலிற் புத்தேள் நாடுண்டோ... (1323) என்ற பாடலை இறுதிக் குறளாகக் கொள்ள அவர்களுக்குப் பின்வந்த பரிமேலழகர் 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்னும் இப்பாடலைக் குறளின் இறுதிச் செய்யுளாகக் கொள்கிறார். இதைக் கடைசிக் குறளாக அமைத்ததற்கு பரிமேலழகர் விளக்கம் எதுவும் தராவிட்டாலும் குறளறிஞர்கள் அந்த அமைப்பில் ஒரு பெருநோக்கம் உண்டு என்கின்றனர்: ''அகர'த்தில் தொடங்கும் முதற்குறள் கொண்ட நூலுக்கு னகரத்தில் முடியும் குறள் நிறைவுக் குறளாக வைக்கப்பட்டது' என்பது அது.

'கூடி முயங்கப் பெறின்' என்ற தொடர் குறிப்பது என்ன?

'கூடி முயங்கப் பெறின்' என்றதற்குக் கலக்கப் பெற்றால், ஊடலை அளவறிந்து நீங்கித் தம்முள் கூடி முயங்குதல் கூடுமாயின், ஊடல் முடிந்தபின் கூடித் தழுவப்பெற்றால், கூடிக்கலவி பெறுவார்களாயின், கூடித் தழுவுவதே, ஊடலை நீக்கித் தம்முள் கூடி முயங்கப் பெற்றால், ஒத்த காம உணர்ச்சி உண்டாகியபின் புணர்ந்தால்தான், ஊடியவரை வயப்படுத்திக் கூடித் தழுவுதல், பிணக்கந் தீர்ந்து கூடப்பெற்றால், ஊடல் நீங்கிக் கூடுதலைப் பெறுதல் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்,

இத்தொடரிலுள்ள கூடுதல், முயங்கல் என்ற இருசொற்களும் புணர்தல் என்ற பொருள் தரத் தக்கவை. எனவே கூடுதல் என்ற சொல்லுக்குக் 'காமநுகர்ச்சியில் ஒத்த அளவாதல்' எனவும் முயங்கல் என்ற சொல்லுக்கு முயங்குதல் எனவும் பரிமேலழகர் பொருள் கொள்கிறார். தேவநேயப் பாவாணரும் நாமக்கல் இராமலிங்கமும் கூடுதல் என்பதற்குக் கருத்தொத்தல் அதாவது இருவருக்கும் ஒத்த காமஇன்பம் உண்டாவது என்றும் முயங்கல் என்பதற்குப் புணர்தல் என்றும் கூறுவர். கூடி முயங்கப் பெறின் என்பது 'காதல் கொண்ட கணவன் -மனைவி இருவரும் ஒத்த காமஇன்பம் பெற்று புணரக்கூடுமாயின்' எனப் பொருள்படுவதாகிறது.
'பெறின்' அதாவது பெற்றால் என்ற பொருள் கொண்ட சொல்லாட்சி ஊடலுக்குப்பின் கூடி முயங்கும் இன்பம் அடைதல் அருமை என்பதை உணர்த்த வந்தது. முன்னர் உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது மிக்கற்றால் நீள விடல் (புலவி 1302) என்று சொல்லப்பட்டது. இதன் பொருள்: காதலிரிடை காமவின்பம் சற்றுச் சுவை குறையும்போது அதை நிறைத்தற்குப் ஊடுதல் வேண்டும்; அது உணவிற்கு உப்பிடுவது போன்றது; ஊடல் முற்றிவிட்டால் அது துன்பத்தில் முடியத்தக்க. துனி நிலையைக் குறிக்கும்; துனி உணவில் உப்பு மிகுவது போன்றது; உப்பு மிகையால் உணவின் சுவை கெடுவதுபோல் துனியால் இன்பம் கெடுமாதலால் அந்நிலையை அடையாதவாறு - ஊடுதல் மிக நீளாதவாறு - தடுத்துவிட வேண்டும். அதாவது அளவறிந்து ஊடலைத் தக்க நேரத்தில் தீர்க்கவேண்டும். அக்குறட்கருத்தை இங்கு பொருத்திப் பார்க்கலாம். கூடுதலில் முடியாத ஊடுதல் மனம் முறிவதாகிவிடும் என்பது குறிப்பு.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் (புணர்ச்சிவிதும்பல் 1289 பொருள்: காமம் மலரைவிட மென்மையானது; அதன் செவ்வியைப் பெறுவார் சிலரே) என்ற முன்அதிகாரத்துப் பாடலும் இங்கு நினையத்தக்கது. இதனை மனத்துட்கொண்டே மணக்குடவர் 'காம இன்பத்தை அதன் செவ்வியறியாமல் பெறமுடியாது' என்ற பொருள்பட இக்குறளுக்கு விளக்கவுரை தந்தார். காமத்தின் செவ்வி அறிந்தவர்க்கே அதன் பயன்களான ஊடல், கூடல் இன்பங்களை எய்த இயலும் என்பது இதன் கருத்து.
'கூடி முயங்கப் பெறின்' என்றதற்குப் பரிமேலழகர் தனது விரிவுரையில் 'முதிர்ந்த துனியாயவழித் துன்பம் பயத்தலானும், முதிராத புலவியாயவழிக் கலவியின்பம் பயவாமையானும், இரண்டற்கும் இடையாகிய அளவறிந்து நீங்குதல் அரிது என்பதுபற்றி, 'கூடிமுயங்கப்பெறின்' என்றான்' எனக் கூறுகிறார். இதுவும் மணக்குடவர் சொன்னது போலவே காமத்தின் செவ்வியை உணர்த்துவதாகும்.
ஊடல் நிகழ்வுகள் எல்லாம் இன்பமானவை; அளவறிந்து ஊடலை நீக்கிக் கூடிமுயங்கப் பெற்றால், ஊடலின்பத்தின் பயனாக, கலவி பேரின்பம் கிடைக்கச் செய்யும். இவை இக்குறள் கூறும் செய்திகள். 'கூடி முயங்கப் பெறின்' என்று முடிகிறது பாடல். கூடினார்களா இல்லையா என்பது சொல்லப்படவில்லை. ஆனால் கூடி முயங்கினால் அது ஊடலுக்கு இன்பம் என்ற பொருளில் முடிகிறது குறள். ஊடலின்பம் கூடலின்பத்தைக் மிகுவிப்பவதால் கூடும்போது இருவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி பெருக்கெடுக்கும்.

காமத்திற்கு இன்பமாவது ஊடுதல் ஆகும்; அவ்வூடுதற்கு இன்பமாம் கூடித் தழுவுதலைப் பெறுதல் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊடலுவகை கலவியின்போது மேலும் உணரப்படும்.


பொழிப்பு

காமநுகர்ச்சிக்கு ஊடுதல் இன்பம்; கூடுதலில் முடிந்தால் ஊடுதற்கு இன்பம்.