இத்தளத்துள் தேட...

செல்க: முகப்பு |

குறள் எண் 1327ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலில் காணப் படும்

(அதிகாரம்:ஊடலுவகை குறள் எண்:1327)

பொழிப்பு (மு வரதராசன்): ஊடலில் தோற்றவரே வெற்றி பெற்றவர் ஆவர்; அந்த உண்மை, ஊடல் முடிந்தபின் கூடிமகிழும் நிலையில் காணப்படும்.

மணக்குடவர் உரை: ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.

பரிமேலழகர் உரை: (இதுவும் அது.) ஊடலில் தோற்றவர் வென்றார் - காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்; அது கூடலில் காணப்படும் - அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும்.
(தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம்.)

தமிழண்ணல் உரை: காதலர் இருவருள்ளும் ஊடலில் தோற்றவரே, காமத்தில் வென்றவராவார். அது தொடர்ந்து வரும் கூடலின்போது அறியப்படும். ஊடலில் எதிர்த்தலாற்றாது சாய்ந்து விட்டுக் கொடுக்க நேர்ந்தவர், மிகுந்த ஆர்வமுடையவராயிருப்பராதலால், கலவியின்போது பேரின்பம் காண்பராதலின் வென்றவர் ஆகின்றார்.


பொருள்கோள் வரிஅமைப்பு:
ஊடலில் தோற்றவர் வென்றார்; அதுமன்னும் கூடலில் காணப் படும்.

பதவுரை:
ஊடலில்-புலத்தலில்; தோற்றவர்-தோல்வியுற்றவர்; வென்றார்-வென்றவராவார்; அது-அது(அவ்வெற்றி); மன்னும்-நிலைபெறும் அல்லது பொருந்தும். மன்,உம் இரண்டும் அசைநிலைகள் என்றும் கொள்வர்; கூடலில்-புணர்ச்சியின் கண்; காணப்படும்-அறியப்படும்.


ஊடலில் தோற்றவர் வென்றார்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்;
பரிப்பெருமாள்: ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்;
பரிதி: ஊடலிலே தோற்றவரையும் வென்றவரையும்; .
காலிங்கர்: ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்;
பரிமேலழகர்: (இதுவும் அது.) காமம் நுகர்தற்குரிய இருவருள் ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்;
பரிமேலழகர் குறிப்புரை: தோற்றவர் - எதிர்தலாற்றாது சாய்ந்தவர். அவர் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்தலின் வென்றாராயினார். எதிர்தல் ஆற்றாது சாய்ந்தவர்-ஊடலில் எதிர்த்து நில்லாது பணிவாயிருந்தவர்; அவர் - ஊடலில் தோற்றவர்]

'ஊடலின்கண் தோற்றவர் வென்றாராவர்' என்ற பொருளில் பழம் ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை நல்கினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'ஊடலில் தோல்விப்பட்டவரே வென்றவர்', 'காம நுகர்ச்சிக்குரிய காதலர் இருவருள் ஊடலிலே தோற்றவர் வென்றவராவர்', 'பிரிந்திருப்பதில் (நெடுநேரம் இருப்பதால்) தோற்றவர்களாகக் காணப்படுகிறவரே (பின்) வெற்றி பெறுவார்', 'ஊடலின்கண் தோற்றவர் வென்றவர் ஆவார்' என்றபடி இப்பகுதிக்கு உரை தந்தனர்.

ஊடலிலே தோற்றவர் வென்றவராவர் என்பது இப்பகுதியின் பொருள்.

அதுமன்னும் கூடலில் காணப் படும்:

இப்பகுதிக்குத் தொல்லாசிரியர்கள் உரைகள்:
மணக்குடவர்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.
பரிப்பெருமாள்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும்.
பரிப்பெருமாள் குறிப்புரை: யான் சாய்ந்தேன் ஆயின் இப்பொழுது என்னது வெற்றி என்றவாறாயிற்று. இது தலைமகள் ஆராமைகண்டு கூறியது.
பரிதி: கூடலில் காணப்படும் என்றவாறு.
காலிங்கர்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின் கண்ணே காணலாம் என்றவாறு.
பரிமேலழகர்: அது அப்பொழுது அறியப்படாதாயினும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும். [அவரால் -ஊடலில் தோற்றவரால்]
பரிமேலழகர் குறிப்புரை: மன்னும் உம்மும் அசைநிலை. 'யான் அது பொழுது சாய்தலின், இது பொழுது பேரின்பம் பெற்றேன்' என்பதாம். [யான் அது பொழுது சாய்தலின் -யான் அவ்வூடல் காலத்துத் தோற்றமையால்]

'அவ்வெற்றியை கூடலின்கண்ணே காணலாகும்' என்ற பொருளில் பழைய ஆசிரியர்கள் இப்பகுதிக்கு உரை கூறினர்.

இன்றைய ஆசிரியர்கள் 'அவ்வுண்மை கூடுஞ் செய்கையில் விளங்கும்', 'அஃது அப்பொழுது தெரியாவிட்டாலும் பின் நிலைபெறும் புணர்ச்சி இடத்துத் தெரியும்', 'அது அடுத்த புணர்ச்சியில் தெரிந்துவிடும்', 'அது பின்னர் கூடும்பொழுது அறியப்படும்' என்றபடி இப்பகுதிக்குப் பொருள் உரைத்தனர்.

அது பின்னர் கூடும்பொழுது தெரியும் என்பது இப்பகுதியின் பொருள்.

நிறையுரை:
ஊடலிலே தோற்றவர் வென்றவராவர்; அது பின்னர் கூடலில் காணப்படும் என்பது பாடலின் பொருள்.
'கூடலில் காணப்படும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

ஊடலில் தோற்கிறவர் கூடலில் வெல்கிறார்.

ஊடலிலே தோற்றவரே வெற்றி பெற்றவர்; அது, ஊடல் தெளிந்தபின் காதலர் கூடி மகிழும் தன்மையிலே தெரியும்.
காட்சிப் பின்புலம்:
பணி காரணமாகப் பிரிவிற் சென்ற தலைவன் நீண்ட இடைவெளிக்குப் பின் இல்லம் திரும்பியுள்ளான். கணவன் காமமிகுதி கொண்டிருப்பான் என அறிந்தும் மனைவி அவனுடன் உடனே கலவாமல் அவன்மேல் பொய்யாகக் குற்றங்களைச் சொல்லி ஊடிக்கொண்டிருக்கிறாள். ஊடற்பூசலால் வெறுப்புற்று, காதலரது நல்லன்பு குறையவும் வாய்ப்புண்டு என்பதை தலைவி அறிந்திருந்தாலும், அச்சிறு சண்டை, சுவைக்கத்தக்கதாக உள்ளது எனவும் அவள் கூறுகிறாள். ஊடுதலைவிட சொர்க்க உலகம் இன்பம் தரவல்லதோ? என வினவும் அளவு ஊடலை இன்புற்று மகிழ்கிறாள் காதலி. தழுவவரும் காதலனை விலகிச் செல்கிறாள்; ஆயினும் அவன் தொட்டுச் சென்ற அந்தச் சிறுகணத்தில் ஊடல் கொள்வோம் என்ற அவளது மன உறுதி உடைந்து நொறுங்கிப் போவதாக உணர்கிறாள். தலைமகன் நிலை என்ன? தழுவச் சென்ற அவனை நெருங்கவிடாமல் படுக்கையில் அவள் தள்ளிச்செல்கிறாள் என்றாலும் அச்சிறு நேரம் அவளைத் தீண்டியதுவே அவனுக்கு இன்பமாகவே இருந்ததாம். உண்டது செரிமானம் ஆகும்வரை காத்திருந்து அடுத்த உணவு உண்பது எவ்விதம் இன்பம் பயக்குமோ அதுபோல் இந்த ஊடல் நீடிப்பு நல்லதுதான் செய்யப்போகிறது என்ற எண்ணம் அவனிடம் மேலிடுகிறது.

இக்காட்சி:
படுக்கையறைக் காட்சி தொடர்கிறது. தலைவி முதலில் ஊடல் கொள்ள எண்ணுகிறாள். அவளது மனநிலையைப் புரிந்து கொண்ட தலைவனும் ஊடல் உணர்தல் மேற்கொள்கிறான். காதலன் காதலி இருவருமே ஊடலை விளையாட்டாகத்தான் எண்ணுகின்றனர். காதலர் இருவரும் அன்பால் ஒன்றுபட்டவர்களாதலால் இவ்வாட்டத்தில் யார் தோற்றுப்போனாலும், அதில் வருத்தப்பட ஒன்றும் இல்லை. ஒருவர் வெற்றி மற்றவரின் வெற்றியாகவும் ஒருவர் தோல்வி மற்றவரின் தோல்வியாகவும் உணர்வர். நிலத்தொடு நீரியைந்த அன்ன காதலரிடையே போட்டி பொறாமை இல்லை. அவர்களிடை பெறும் வெற்றி மேலானது அல்ல; அடையும் தோல்வியும் துன்பம் தரக்கூடியது அல்ல. அங்கே தன்மானஉணர்ச்சிக்கு இடமே இல்லை.
ஊடல், உணர்தல், புணர்தல் என்னும் மூன்றும் காமம் கூடியார் பெற்ற பயன்கள். ஊடலில் தோற்பது நல்லது. ஏனெனில், ஊடலில் தோற்றவரே காமத்தில் வென்றவர் ஆவார் என்கிறது குறள். தோற்றுப் போனவரை எப்படி வெற்றி பெற்றவராகக் கூறமுடியும்? தலைவி பொய்க்காரணத்துக்காகப் புலந்து காதலனைச் சீண்டி அவன் துன்புறுதலில் தான் இன்பம் காண்கிறாள். ஊடலின் போது, கணவன் பணிந்து, அவள் ஊடலைத் தீர்க்கிறான்; ஆதலால் மனைவி உயர்ந்தவளாகிறாள். அவள் வெற்றி பெற்றாள் எனக் கொள்ளலாமா? வணங்கியதால் அவன் தோற்றவனாகின்றானா? இரண்டுக்குமே பதில் இல்லை என்பதுதான். வெற்றி தோல்வி கூடலின்போதுதான் தெரியும் எனவும் சொல்கிறது குறள். ஊடலில் எதிர்த்து நில்லாது பணிவாயிருந்தவர் தோற்றவர் ஆகிறார். ஆனால் அவர்தான் பின்னர் கூடும்பொழுது தனது காமவலிமையைக் காண்பித்து வெற்றி பெறுகிறார். ஆகவே இந்த ஆட்டத்தில் இருவருக்கும் தோல்வி இல்லை. காதலுடையவர்களிடம் சாய்ந்து தோற்பதுதான் நிறைவான மணவாழ்க்கையின் அடித்தளம். இல்லறவாழ்வில் கணவன் மனைவியரிடையே மனவருத்தம் உண்டாகும்போது அவர்களில் ஒருவர் விட்டுக்கொடுத்து இயல்பு நிலை ஏற்பட வழி வகுக்கிறார் என்றால் குடும்ப வாழ்வின் வெற்றிக்கு அவரே காரணமாகிறார். இதனலே 'தோற்றவர் வென்றார்' என்ற முரண்கூற்று.
இவ்வதிகாரத்திலும் இதற்கு முந்தைய புலவி, புலவி நுணுக்கம் ஆகிய அதிகாரங்களில் உள்ளனபோலவே, பொய்யான காரணத்துக்காகத் தலைவி ஊடுவதாகவே காட்டப்படுகிறது. குறள் எப்பொழுதும் பொதுமையில் பேசுவதால் உலகியலுக்கும் பொருந்துமாறே பாடல்கள் அமையும். குறள்தலைவன் தவறிலனாகவே வருகிறான். உண்மை வாழ்க்கையில் சிறுசிறு சண்டையோ, பிணக்கோ இல்லாத கணவன் -மனைவி உறவினைக் காண்பது அரிது. சிலசமயம் ஒருவர் செய்த தவறு மற்றவருக்குச் சினம் உண்டாக்கலாம். அத்தகு நேரங்களில் பிணக்கைப் பெரிதாக்கி உறவில் விரிசல் விழச் செய்யாமல் விட்டுக்கொடுத்துச் செல்வது அறிவுடைமை. விட்டுக்கொடுத்தவர் தோற்றுவிட்டார் என்பதல்ல. எனவேதான் காதலர் உறவில் தோற்றவரே வென்றார் என்கிறார் வள்ளுவர். இதன் உட்பொருளைப் புரிந்துகொண்டு வாழ்க்கையைச் செம்மையாக்கிக் கொள்ளவேண்டும். ஊடலில் யார் தோற்கின்றாரோ அவரே வென்றவர் ஆவார் என்று சொல்வதன் மூலம் குறள் மற்றவர் தவற்றை மன்னித்து மறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தித் தவறுள்ளவர் திருந்தி வாழ வாய்ப்பு அளிக்கலாம் எனக் கூறுவதாகக் கொள்ளலாம்.
இக்குறளின் கருத்து இகலிற்கு எதிர்சாய்தல் ஆக்கம்....... (இகல் 858: மாறுபாட்டுக்கு எதிராது விலகிப்போதல் உயர்வுதரும்......) என்னும் நாணல்போல் சாய்ந்து வெல்வது என்னும் பாடற் கருத்து போன்றுள்ளது,

இப்பாடல் தலைமகன் தனக்குள்ளே சொல்லியது என்று கூறினார் பரிமேலழகர். ஆனால் இதை தலைவி கூற்றாகவும் கொள்ளமுடியும். அல்லது ஆசிரியர் கூற்றாகவும் கொள்ளலாம்.

இக்குறளின் கருத்தைக் கம்பர் அப்படியே அன்னங்களின் அன்பு வாழ்க்கையில் ஏற்றிக் கூறுகிறார்:
உள்நிறை ஊடலில் தோற்ற ஓதிமம்
கண்ணுறு கலவியில் வெல்லக் கண்டவன்
தண்நிறப் பவளவாய் இதழை தன் பொதி
வெண்நிற முத்தினால் அதுக்கி விம்மினான்.
(கம்ப இராமாயணம், யுத்த காண்டம், வீடணன் அடைக்கலப் படலம் 6523 பொருள்: பெண் அன்னத்தின் உள்ளத்தில் நிறைந்த ஊடலில் தோற்று பணிந்த ஆண் அன்னம் இரண்டு உடம்பும் ஒன்று பட்டு மகிழ்ந்த கலவி இன்பத்திலே ஆணன்னம் வெற்றி கொண்டதைக் கண்ட ராமபிரான் குளிர்ந்த பவளம் போன்ற தனது வாயின் உதடுகளை அந்த இதழ்களால் மறைக்கப் பட்டுள்ள வெண்மையான முத்துப் போன்ற பற்களால் மெல்ல அழுத்தி விம்மினான்) இந்த ஊடல்தோல்வி-கூடல்வெற்றிக் காட்சியைக் கண்ட இராமன் தனது தனிமைத் துன்பத்தை எண்ணிக் கவலையுற்று விம்மினானாம்.

'கூடலில் காணப்படும்' என்ற தொடர் குறிப்பதென்ன?

'கூடலில் காணப்படும்' என்றதற்குக் கூடலின்கண்ணே காணலாகும், பின்னைப் புணர்ச்சியின்கண் அவரால் அறியப்படும், தொடர்ந்து வரும் கூடலின்போது அறியப்படும், கூடிமகிழும் நிலையில் காணப்படும், பின் நிலைபெறும் புணர்ச்சி இடத்துத் தெரியும், அடுத்த புணர்ச்சியில் தெரிந்துவிடும், அவர்கள் கூடும்போதில் நன்கு விளங்கிவிடும், புணர்ச்சியுட் காணப்படும், பின்னர் கூடும்பொழுது அறியப்படும், பின் ஆவேசமாகக் கூடுதலில் புலனாகும் என்றவாறு உரையாசிரியர்கள் பொருள் கூறினர்.

ஊடலில் தோற்று அடிபணிந்தவரே தொடரும் புணர்ச்சிக்கண் பேரின்பம் எய்துவார் ஆதலின் வென்றவராகிறார்.
ஊடல் நீண்டு செல்லவும் வேண்டும் என்றும், ஊடல் கொள்ளும்போது விரைந்து கூடுதற்குரிய நிலைக்குத் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்ளவும் வேண்டும் என்றும் காதலர் இருவரும் விரும்புவர். இவர்களில் ஒருவர் ஊடல் நீங்கக் காரணமாயிருந்து அதை முடிவுக்குக் கொண்டு வருவார். அவர் எதிராது பணிந்து செல்பவராகவே இருப்பார். அவரே புணர்ச்சியில் கூடுதல் இன்பம் காண்பார். ஊடலில் தோற்றவராதலால் அதற்கு 'வஞ்சம்தீர்க்கும்' மனப்பான்மையில் கூடலில் வேகம் காட்டுவதலால் அவர் பெறும் இன்பம் மிகையாம்.

'கூடலில் காணப்படும்' என்ற தொடர் புணர்ச்சியில் காட்டப்படும் விரைவு குறித்தது.

காதலர் இருவருள் ஊடலிலே தோற்றவர் வென்றவராவர்; அது பின்னர் கூடும்பொழுது தெரியும் என்பது இக்குறட்கருத்து.அதிகார இயைபு

ஊடலுவகையின் பயன் கூடலிற் காணப்படும்.

பொழிப்பு

ஊடலில் தோற்றவர் வென்றவராவர்; அது கூடும்போது தெரியும்.